• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"என்ன சொன்னீங்க..?".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (15)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடனின் அகன்ற முகத்தில் வியப்பு வரிகள் ஒடி மறைந்தன. ஆதிகேசவனை ஒரு குழப்பத்தோடு ஏறிட்டார்.

" என்ன சொன்னீங்க.... ஃப்ளாட் நெம்பர் 144 ஆ ..... ? "

" ஆமா....... "

" அமேஸிங் மீ...... மர்மமான முறையில் இறந்து போன ஆறு பேர்களில் உங்க மாப்பிள்ளையைத் தவிர மீதி அஞ்சு பேருமே ஃப்ளாட் நெம்பர் 144ல்தான் தங்கியிருந்தாங்களா..... ?"

" ஆமா....... "

" ஒண்ணாவா ..... ?"

" ஒண்ணா எப்படி ஸார் தங்க முடியும்....... ? வருஷத்துக்கு ஒருத்தர் போய் தங்கியிருக்காங்க. முதல் மரணம் டி.வி. நடிகை சொர்ணரேகா இறந்து போன அடுத்த மூணு மாசத்திலேயே ஒரு புரோக்கர் மூலமா ஏர் ஹோஸ்டஸா வேலை பார்க்கிற தர்ஷினி அந்த ஃப்ளாட்டுக்கு வந்தா. சொர்ணரேகா மரணம் இயற்கையான மரணம்ன்னு தெரிஞ்சுதால அங்கே தைரியமா ஸ்டே பண்ணினா. அதுவும் இல்லாமே அந்தப் பொண்ணு வாரத்துக்கு ஒரு தடவை சனி ஞாயிறு வருவா. ரெண்டு மூணு ஃப்ரண்ட்ஸா இருப்பாங்க. பேச்சும் சிரிப்புச் சத்தமும் தூக்கலாய் இருக்கும். அந்தப் பொண்ணுக்கு அப்பா அம்மா கிடையாது. ரொம்பவும் ஜோவியல் டைப். இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எல்லா குழந்தைகளோட பெயர்களும் அத்துப்படி. வெளிநாடுகளில் இருந்து வாங்கிட்டு வர்ற சாக்லெட்களை அந்தப் பொண்ணுக்கு அள்ளி அள்ளி தர்றதைப் பார்க்கும் போது ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கும். கல்யாணம் பண்ணிகிட்டு நல்லபடியாய் வாழ வேண்டிய பொண்ணு "

flat number 144 adhira apartment episode 15

சந்திரசூடன் குறுக்கிட்டு கேட்டார்.

" அந்தப் பொண்ணு தர்ஷினியோட மரணம் ஏற்பட்டது ராத்திரி நேரத்திலயா.... இல்லை பகல் நேரத்துலயா..... ? "

" பகல் நேரத்துலதான். அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. அந்தப் பொண்ணுக்கு வீக் ஆப். காலையில் பத்து மணி சுமார்க்கு டி.வியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு இருந்திருக்கா. மேட்ச்சைக் கைதட்டி ரசித்து பார்த்துகிட்டு இருக்கும்போதே சோபாவில் மயங்கி விழுந்திருக்கா "

" தர்ஷினி மயங்கி விழுந்ததைப் பார்த்தது யாரு ..... ? "

" வீட்டை சுத்தம் பண்ணிட்டிருந்த வேலைக்காரி. அவ சத்தம் போட்டு கத்தவும்தான் விஷயம் பக்கத்து ஃப்ளாட்காரர்களுக்கு தெரிஞ்சுது....... "

" சரி.... தர்ஷினி இறந்த பிறகு அந்தப் ஃப்ளாட்டுக்கு குடிவந்தது தமிழ்ப் பேராசிரியை நப்பின்னைன்னு சொன்னீங்க. தர்ஷினியோட மரணத்துக்குப் பின்னாடி ஒரு சில மாதங்கள் அந்த ஃப்ளாட் வேக்கண்டாய் இருந்திருக்கலாம். அந்த ஃப்ளாட்டுக்கு நப்பின்னை குடி வந்த போது அவங்க கிட்ட இந்த ஃப்ளாட்ல குடியிருந்த ரெண்டு பெண்கள் அடுத்தடுத்து இறந்து போனதைப் பத்தி அவங்ககிட்ட சொன்னீங்களா ..... ? "

" எஸ்.... சொன்னோம்... அப்ப இந்த அப்பார்ட்மெண்ட் அஸ்ஸோஷியேனுக்கு ஒரு வெல்ஃபேர் க்ரூப் இருந்தது. கமிட்டி மெம்பர்ஸ் மொத்தம் 14 பேர். எல்லாரும் நல்லாப் படிச்சவங்க. அந்த க்ரூப்போட தலைவர் ஒரு எக்ஸ் சர்வீஸ்மேன். ராணுவத்தில் ஒரு நல்ல போஸ்டில் இருந்துட்டு ரிடையராகி இந்த அப்பார்ட்மெண்டில் 32 K ஃப்ளாட்டை வாங்கி இந்த ஏரியாவிலேயே இருந்து ஒய்வெடுக்க நினைத்தவர் "

" அவரோட பேர் என்ன..... ? "

" ராவ்டே பிந்தர் "

" ஆறு வருஷமாய் இந்த அப்பார்ட்மெண்ட்டில்தான் இருக்காரா ..... ? "

" ஆமா ..... "

" அந்த ராவ்டே பிந்தர்தான் நப்பின்னைக்கு ஃப்ளாட் நெம்பர் 144க்கு குடி போக வேண்டாம்ன்னு அட்வைஸ் பண்ணினார் "

" அவர் சொன்ன புத்திமதிக்கு நப்பின்னையோட ரியாக்சன் என்ன..... ? "

" நப்பின்னை காட்டிய ரியாக்சன் வித்தியாசமாய் இருந்தது "

" என்ன வித்தியாசம் ..... ? "

" அந்த அம்மா தன்னோட மணிபர்ஸில் வைத்திருந்த பெரியார் படத்தை எடுத்து காட்டினாங்க. எங்க ஒட்டு மொத்த குடும்பமும், ஐந்தாறு தலைமுறைகளாய் பெரியார் கொள்கை வழி வந்தவங்க. எந்த மதத்தையும் சாமியையும் நம்பாதவங்க. நல்ல நேரம், கெட்ட நேரம் போன்ற விஷயங்களிலும் சரி எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்த 144 நெம்பர் ஃப்ளாட்டில் இரண்டு பெண்களோட மரணங்கள் நடந்து இருப்பதாகவும், நடந்த அந்த ரெண்டு மரணங்களுமே இயற்கையான முறையில் நிகழ்ந்தவைன்னும் நீங்களே சொன்னீங்க. எனக்கு நீங்க சொன்ன இதுவே எனக்குப் போதுமானது. ஒருவேளை அந்த மரணங்கள் கொலைகளாய் இருந்து போலீஸ் புலன் விசாரணை நடைபெற்றுகிட்டு இருந்தாலும் கூட பரவாயில்லை. அதையெல்லாம் பார்த்து பயப்படற பெண் இந்த நப்பின்னை கிடையாது. இந்த ஃப்ளாட்ல தங்கறதா முடிவு பண்ணி ஃப்ளாட் ஒனர்க்கு அட்வான்ஸ் அமெளண்டை நேற்றைக்கு காலையில் ஆர்.டி.ஜீ. எஸ். பண்ணிட்டேன். இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு மேல் நான் இந்த வீட்டுக்கு குடி வர்றேன். பால் காய்ச்சற பத்தாம் பசலி வழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. வீட்டுக்கு வந்து ஒரு டீ போட்டு சாப்டுட்டு டி.வி.பார்ப்பேன்னு சொன்னா. நாங்க எவ்வளவு எடுத்துச் சொல்லியும் நப்பின்னை பிடிவாதமாய் இருக்கவே அதுக்கப்புறம் நாங்க அவளை வற்புறுத்தறதை விட்டுட்டோம் "
சந்திரசூடன் இடைமறித்துக் கேட்டார்.

" அந்த 144 ஃப்ளாட் யார்க்குச் சொந்தம் ..... ? "

" அவர் பேரு கன்ஷிராம். பூர்வீகம் நாக்பூர். ஆரம்ப காலத்துல சென்னையில் புரோக்கராய் இருந்தவர். சினிமா நடிகர் நடிகைகளுக்கு பெரிய பெரிய சொத்துக்களை வாங்கிக் கொடுத்து லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கினார். அந்த கமிஷனை வெச்சு தானும் சில நிலங்களை வாங்கி அங்கே வாடகைக்கு வீடுகளைக் கட்டினார். கடந்த 15 வருஷ காலத்துல மனுஷன் ஒரு நல்ல நிலைமைக்கு போயிட்டார். சென்னையைச் சுற்றிச் சுற்றி கட்டிய வீடுகளிலிருந்து இன்னிக்கு மாசம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேலே வாடகை வாங்கறார் "

" இங்கே அவர் வர்றது உண்டா ..... ? "

" வர்றது ரொம்பவும் ரேர். கடந்த ஆறு வருஷ காலத்துல ரெண்டு அல்லது மூணு தடவைப் பார்த்திருப்பேன் "

" ஃப்ளாட்ல இப்படியொரு பிரச்சினை இருக்கிறது அவர்க்குத் தெரியுமா ...? "

" தெரியும் "

" அதுக்கு அவர் என்ன பதில் சொல்றார் ..... ? "

" அது ஒரு பிரச்சினையே இல்லையேன்னு சொல்றார். இந்த உலகத்துல யார் பிறந்தாலும் என்னிக்காவது ஒரு நாள் அவங்க இறந்து போக வேண்டியவங்கதான். என்னோட ஃப்ளாட்ல வந்து தங்கினவங்களுக்கு உடம்பு ரீதியாய் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்து இருக்கலாம். ஃப்ளாட் வாங்கின புதுசுல நான் கூட ஒரு மூணு மாசம் தங்கியிருந்துட்டுதான் என்னோட பழைய வீட்டுக்கு மறுபடியும் குடி போனேன். நான் ஃப்ளாட்ல இருந்த மூணு மாசத்துல திருநின்றவூரில் ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினேன். மயிலாப்பூரில் ஒரு பங்களா வாங்கினேன். என்னைப் பொறுத்தவரைக்கு இது ரொம்பவும் ராசியான ஃப்ளாட் ஸார் இதுன்னு சொல்லி எங்களோட வாயை அடைச்சுட்டார் "

ஆதிகேசவனின் பேச்சை செவிமடுத்துவிட்டு சில விநாடி நேரம் மெளனமாய் இருந்த சந்திரசூடன் தொண்டையை செருமிவிட்டு சற்றே கவலையான குரலில் கேட்டார்.

" நப்பின்னை அந்த ஃப்ளாட்டுக்கு குடிவந்த பிறகு எத்தனை மாசம் உயிரோடு இருந்தாங்க ..... ? "

" சரியா நாலு மாசம். விடியற்காலையில் யாரையோ எக்மோர் ஸ்டேஷன்ல ரிஸீவ் பண்றதுக்காக அலாரம் வெச்சு சீக்கிரம் எந்திரிச்சு குளிச்சுட்டு அறையைப் பூட்டிகிட்டு வெளியே வந்து இருக்காங்க. பார்க்கிங் அண்டர் க்ரெளண்ட் போகிறதுக்காக லிஃப்ட் பட்டனை அழுந்திட்டு காத்திட்டு இருக்கும்போது தலை சுத்தி கீழே விழுந்துட்டாங்க. அதுக்கப்புறம் உடம்பில் ஒரு அசைவில்லை "

" இது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது ..... ? "

" அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களில் தெளிவாய் பதிவாகியிருந்தது "

" இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடக்கும்போது அப்பார்ட்மெண்ட்ல சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது ஸார். அதுக்கப்புறம்தான் பராமரிப்பும், சரியான ஆப்ரேட்டரும் இல்லாமே போனதாய் காமிராக்கள் ஃபங்க்சன் ஆகலை "

கபிலன் தயங்கியபடி சொல்ல சந்திரசூடன் எரிச்சலான குரலில் கத்தினார்.

" ஒரு அப்பார்ட்மெண்ட்ல இவ்வளவு மோசமான விஷயங்கள் நடந்துட்டிருக்கும்போதுதான் லேட்டஸ்டான சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு என்ன நடக்குதுன்னு பார்த்து இருக்கணும். ஆனா எல்லாரும் சேர்ந்து ஒரு அப்பார்ட்மெண்ட்டையே நாசம் பண்ணி வெச்சிருக்கீங்க..... ? இங்கே இருக்கிறவங்க எல்லாருமே படிச்சவங்கதானே ..... ? "

" மோஸ்ட் ப்ராப்பலி படிச்சவங்கதான். ஆனா இங்கே இருக்கிறவங்க கிட்டே ஈகோ அதிகம் ஸார். ஒற்றுமை கிடையாது "

" அந்த ஒற்றுமையில்லாமே போனதுக்கு காரணமே அவங்க படிச்சதுதான்.... நாலு எழுத்து படிச்சுட்டு ஒரு கவர்ன்மெண்ட் வேலையில் போய் உட்கார்ந்துட்டா போதும். நாட்டுக்கே ஜனாதிபதியாயிட்ட மாதிரி ஒரு தலைக்கனம் "

ஆதிகேசவனும், கபிலனும் எதுவும் பேசாமல் தலைகளைத் தாழ்த்திக் கொண்டு நிற்க, சந்திரசூடன் அந்த அறையில் கோபமாய் ஒரு நடை போட்டு விட்டு பெருமூச்சோடு கேசவமூர்த்தியை நெருங்கினார்.

" அந்த 144 நெம்பர் ஃப்ளாட்டுக்கு நாலாவதா குடிவந்த பெண்ணோட பேர் என்ன ..... ? "

" வான்மதி ஸார் "

" ஒர்க்கிங் உமனா ..... ? "

" ஆமா ஸார் "

" எங்கே ..... ? "

" ஒரு ஐ.டி.கம்பெனியில் "

" கம்பெனியோட பேர் ? "

" தெரியலை ஸார் "

" அந்தப் பொண்ணு வான்மதியோட ஃபேமிலி பேக் க்ரவுண்ட் பற்றி ஏதாவது தெரியுமா ..... ? "

" கிராமத்து பொண்ணுன்னு கேள்விப்பட்டிருக்கேன் "

" சரி..... அந்தப் பொண்ணு வான்மதி ஃப்ளாட் 144க்கு குடிவந்து எத்தனை மாசம் உயிரோடு இருந்தா ..... ? "

" இறந்துபோன பெண்களில் அவதான் அதிக நாட்கள் உயிரோடு இருந்தா ஸார். கிட்டத்தட்ட ஒன்பது மாசம். இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் உயிரோடு இருந்திருந்தா வான்மதி அபார்ட்மெண்டை விட்டு பத்திரமா வெளியே போயிருப்பா"

" என்ன சொல்றீங்க? ஒரே ஒரு நாள் மட்டும் உயிரோடு இருந்திருந்தா வான்மதி அபார்ட்மெண்டை விட்டு வெளியே போயிருப்பாளா ..... ? "

" ஆமா ஸார்.... வான்மதி ஏப்ரல் 30ம் தேதி அதிரா அபார்ட்மெண்ட் 144 ஃப்ளாட்டை காலி பண்ணிட்டு அடுத்த நாள் மே மாசம் ஒண்ணாம்தேதி திருவெற்றியூரிலி இருக்கிற வேற ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு குடிபோக முடிவு பண்ணி, சாமான்களை எல்லாம் லாரியில் அனுப்பிவிட்டு இவளும் டாக்ஸியில் புறப்பட்டுப்போக தயார் பண்ணிட்டிருந்தா. அடுத்த ஒரு மணி நேரத்துல டாக்ஸி வரும்ன்னு சொன்னதாலே சிட் அவுட்டில் உட்கார்ந்து வெயிட் பண்ணிகிட்டே செல்போன்ல பேசிட்டிருந்தா. வாசல்ல டாக்ஸி வந்து நின்னப்ப வான்மதி உயிரோடு இல்லை. தரையில் மல்லாந்து விழுந்து உயிரை விட்டிருந்தா. மத்தவங்க இறந்த மாதிரியே நேச்சுரல் டெத். அந்த கொஞ்ச நேரத்துக்கு முன்னே என்ன நடந்ததுன்னு இதுவரைக்கும் மர்மமாகவே இருக்கு ஸார் "

சந்திரசூடன் முதல் தடவையாக நிலை தடுமாறி வியர்த்த முகமாய் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

(தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 15) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X