• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வேண்டாம் தம்பி"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (13)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

கபிலனின் கைப்பிடியிலிருந்து தன்னுடைய கையை உருவிக் கொள்ள முயன்றார் ஆதிகேசவன்.

" வேண்டாம் தம்பி..... உங்க ஃப்ளாட்டுக்கு என்னை கூட்டிட்டுப் போக வேண்டாம். கோபிகா ஏசிபி கிட்டே பேசிட்டு போகட்டும்.... நான் அப்புறமா வந்து அவரைப் பார்க்கிறேன் "

" உங்க பொண்ணைப் பார்த்து ஏன் பயப்படறீங்க..... ? "

" இது பயம் இல்லை தம்பி. கோபிகா எனக்குத் தெரியாமே ஏசிபியைப் பார்க்க வந்திருக்கா. அதுல அவளுக்கு ஒரு வகையான சந்தோஷம் கிடைச்சிருக்கும். அந்த சந்தோஷத்தை ஏன் கெடுப்பானேன்னு பார்க்கிறேன். வேற ஒண்ணும் இல்லை "

flat number 144 adhira apartment episode 13

" நீங்க இப்ப சொன்னது என்னோட மனசுக்கு சரியான காரணமாய் படலை ஸார்..... நீங்க உங்க பொண்ணை ரெட்ரோக்ரேட் பேஷண்ட்ன்னு சொன்னீங்க.... அவங்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறதாகவும் சொன்னீங்க.... இப்ப உங்க டாட்டர் கோபிகா ஏசிபியோடுதான் பேசிட்டு இருக்காங்க... இந்த நேரத்துல நீங்களும் நானும் போனா அவங்க ரியாக்சன் எப்படி இருக்கும்ன்னு நான் பார்க்க விரும்பறேன். ப்ளீஸ் கம் வித் மீ....... "
கபிலன் அவருடைய கையை விடாப்பிடியாய் பற்றிக்கொண்டு தன்னுடைய ஃப்ளாட்டுக்கு வந்து வெறுமனே சாத்தியிருந்த வாசல் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான்.

ஃப்ளாட்டுக்குள் அசாத்திய நிசப்தம். ஏற்கனவே சந்திரசூடனும், கோபிகாவும் பேசிக்கொண்டு இருந்த அறையை எட்டிப்பார்த்தான் கபிலன்.

அறையில் யாருமில்லை.

மனசுக்குள் ஒரு பயரேகை ஒட கபிலன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

" இருவரும் எங்கே போனார்கள்? "

கபிலன் குழப்பமாய் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அந்த அறையின் கார்னரில் இருந்த டாய்லட் கதவைத் திறந்தபடி சந்திரசூடன் வெளிப்பட்டார். ஆதிகேசவனைப் பார்த்ததும் முகம் மாறினார். ஈரக்கையை கர்ச்சீப்பால் துடைத்தபடி " கபிலன்..... ஸார் யாரு...... ? ஏதோ கீழ் ஃப்ளாட்டில் இருக்கிற மார்வாடி ஃபேமிலிகிட்ட பேசப்போறதா சொன்னீங்க. அந்த ஃபேமிலியை சார்ந்தவரா இவர் ? "

அவருடைய கேள்வியைப் பொருட்படுத்தாத கபிலன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சந்திரசூடனை நெருங்கி கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

" கோபிகா எங்கே ஸார் ? "

" அதோ ஃப்ளாட்டோட பின்பக்க சிட்அவுட்டில் உட்கார்ந்துகிட்டு போன் பேசிகிட்டிருக்கா. ஐந்து நிமிஷமா பேசறா.... "

" போன்ல யாரு? "

" அவளோட ஹஸ்பெண்ட் "

சந்திரசூடன் இப்படி சொன்னதும் கபிலனும், ஆதிகேசவனும் ஒரு அவசர பார்வை பார்த்துக் கொண்டார்கள்.
சந்திரசூடன் அவர்கள் பார்த்துக்கொண்ட பார்வையை ஒரு நொடிக்குள் கவனித்துவிட்டு கேட்டார்.

" என்ன ரெண்டு பேர் முகமும் சரியில்லையே ..... ? "

கபிலன் சில விநாடிகள் பேசத் தயங்கிவிட்டு குரலை வெகுவாய் தாழ்த்தினான்.

" ஸார்.... கோபிகாவுக்கு வெளியில் இருந்து போன் வந்ததா.... இல்லை கோபிகாவே யார்க்காவது போன் பண்ணினாளா ..... ? "

சந்திரசூடன் சில விநாடிகள் யோசித்துவிட்டு தலையை மையமாய் ஆட்டிக்கொண்டு சொன்னார்.

" வெளியில் இருந்து தான் போன் வந்ததாய் நினைக்கிறேன் "

" ஆர் யூ ஷ்யூர் ஸார் ..... ? "

சந்திரசூடன் கபிலனை ஒரு ஆச்சர்யப் பார்வையால் நனைத்தார்.

" ஏன் அப்படி கேட்கறீங்க.... நானும் கோபிகாவும் பேசிட்டு இருக்கும்போது அவ திடீர்ன்னு தன்னோட கையிலிருந்த செல்போனைப் பார்த்துவிட்டு லேசாய் சந்தோஷப்பட்டா. என்னைப் பார்த்து " ஸார்..... என்னோட கணவர் போன் பண்றார். ஒரு நிமிஷம் பேசிட்டு வந்துடறேன்" என்று சொல்லிட்டு ஃபளாட்டுக்குப் பின்புறமாய் இருக்கிற சிட்அவுட்டுக்குப் போனா. கடந்த அஞ்சு நிமிஷ நேரமாய் பேசிட்டிருக்கா. இன்னும் பேச்சு முடியலை. இப்பத்தான் டாய்லட் போனேன். நீங்களும் வந்திட்டீங்க.... ஏன் என்ன விஷயம்.... ரெண்டு பேரும் டென்ஷனாய் தெரியறீங்க ..... ? "

கபிலன் ஆதிகேசவனை சுட்டிக்காட்டியபடி சொன்னான்.

" ஸார்..... இவர் கோபிகாவோட அப்பா. பேரு ஆதிகேசவன். சென்னை செக்ரட்ரியேட்டில் பெரிய போஸ்டிலிருந்துவிட்டு ரிடையரானவர். நான் இவ்வளவு நேரமும் மொட்டைமாடியில் இவர்கூடத்தான் பேசிட்டிருந்தேன். மார்வாடி ஃபேமிலிகிட்ட நான் பேசிட்டு இருந்ததாய் நான் சொன்னது பொய் "

" சரி.... இப்ப என்ன பிரச்சினை ..... ? "

" பிரச்சினையே கோபிகாதான் ஸார் "

" என்ன சொல்றீங்க ..... ? "

கபிலன் மெதுவாய் நடந்துபோய் ஃபளாட்டின் பின்புறமிருந்த சிட்அவுட் க்ரில்கேட் பக்கமாய் நின்று கொண்டு முதுகைக் காட்டியபடி பேசிக்கொண்டு இருந்த கோபிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் சந்திரசூடனிடம் வந்தான்.

" ஸார்.... நான் இப்போ கோபிகாவைப்பத்தி சொல்லப்போகிற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கலாம். ஆனா அதுதான் உண்மை " என்று சொன்ன கபிலன் சற்றுமுன் ஆதிகேசவன் தன்னுடைய மகளைப்பற்றி சொன்ன ரெட்ரோக்ரேட் நோய், செலக்டிவ் அம்னீஷியா விவரங்களைச் சொல்ல சந்திரசூடனின் முகம் படிப்படியாய் நிறமிழந்து அதிர்ச்சிக்குப் போயிற்று. ஒரு பெருமூச்சோடு தலையசைத்தார்.

" கபிலன்...... நீங்க சொல்றதை என்னால நம்ப முடியலை.... ஒரு பெண் ஒரு விஷயத்தைப்பற்றி எவ்வளவு தெளிவாய்ப் பேசணுமோ அந்த அளவுக்கு கோபிகா தெளிவோடும் கோர்வையான வார்த்தைகளோடும் பேசறா..... மனநலம் சரியில்லாத ஒரு பெண்ணால அவ்வளவு தெளிவாய் பேச முடியாது "

ஆதிகேசவன் சந்திரசூடனைப் பார்த்து தன்னுடைய இரண்டு கைகளையும் கூப்பினார்.

" ஸார்..... நீங்க ஒரு உண்மையைப் புரிஞ்சுக்கணும். கோபிகா மனநலம் சரியில்லாத பெண் கிடையாது. ஷி ஈஸ் ஏ ரெட்ரோக்ரேட் பேஷண்ட். உலகத்துல ஒரு லட்சம் பேர் இது மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டு இருக்காங்க. போன வருஷம் இறந்துபோன தன்னோட கணவர் இன்னமும் இருக்காங்கிற நினைப்போடு கோபிகா போன்ல பேசிட்டு இருக்கா.. அப்படி சிட்அவுட் ஒரமாய் போய் நின்னு அவ என்ன பேசறான்னு ஒரு நிமிஷம் கேட்டுப் பாருங்க "

சந்திரசூடன் ஆமோதிப்பதாய் தலையசைத்துவிட்டு சத்தம் எழாமல் நடந்துபோய் சிட்அவுட் சுவரோரமாய் நின்று கொள்ள, மறுபக்கம் இருந்த சிட்அவுட்டில் க்ரில் கம்பிகளுக்கு சாயந்தபடி கோபிகா செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள். பேச்சில் கொஞ்சல் கூடுதலாக இருந்தது.

" நான் இன்னிக்குக் காலையில எவ்வளவு கஷ்டப்பட்டு லஞ்ச் பண்ணிக்கொடுத்தேன். வெஜிடபிள் புலாவ், தக்காளித்தொக்கு. தயிர் சேமியா இந்த மூணுல நீங்க ஒண்ணைக்கூடத் தொட்டுப் பார்க்கலைன்னு நினைக்கிறேன் "

" ....................... " சில விநாடி நேர மெளனத்திற்கு பிறகு கோபிகா கோபமான குரலில் பேசினாள்.

" என்னது பசியில்லையா..... காலையில ஆபீஸ் புறப்பட்டு போகும்போது மூணு இட்லிதானே சாப்பிட்டீங்க. அது எப்படி பசியில்லாமே போகும்....... ? இன்னிக்கு சாயந்தரம் நீங்க ஆபீஸிலிருந்து வந்ததும் டாக்டர் சுந்தரேஸ்வரனைப் பார்க்கப்போறோம். அவர்தான் இன்னிக்கு சிட்டியில பெஸ்ட் காஸ்ட்ரோ டாக்டர். உங்களுக்கு பசி எடுக்காத காரணத்தை ரெண்டு நிமிஷத்துல கண்டுபிடிச்சுடுவார் "

" .......................................... "

" இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணிக்கெல்லாம் நீங்க வீட்ல இருக்கணும். நான் இப்பவே டாக்டர்கிட்டே பேசி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிடறேன். அப்புறம் உங்ககிட்ட ஒரு விஷயம்.... இன்னிக்கு நம்ம அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு எனக்கு பிடிச்ச ஒருத்தர் திடீர்ன்னு விசிட் பண்ணியிருந்தார். யார்ன்னு உங்களால கெஸ் பண்ண முடியுதா ..... ? "

" .......................................... " ஐந்து விநாடி அமைதி காத்த கோபிகா சிரித்தாள்.

கண்டிப்பா உங்களால முடியாது..... அவர் யார்ன்னு நானே சொல்லிடறேன். நான் காலேஜ்ல படிக்கும்போது சந்திரசூடன் என்கிற ஒரு ஏசிபி எங்க காலேஜூக்கு வந்து ஒரு அருமையான மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்தார்ன்னு சொல்லிட்டிருப்பேனே...... ? அவர் இன்னிக்கு நம்ம அப்பார்ட்மெண்ட்ல "கே" ப்ளாக் 427 வது ஃப்ளாட்டுக்கு வந்து இருந்தார். கூடவே அந்த ஃப்ளாட்டோட ஒனர் சன்னும் வந்திருந்தார். ஏசிபியை பார்த்ததுமே எனக்கு ஒரே சந்தோஷம். என்னோட அப்பாகிட்ட கூட சொல்லிக்காமே ஒடிப்போனேன். அவரைப் போய்ப் பார்த்தேன். நான் யாரு என்னாங்கிற விபரத்தைச் சொன்னதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டார் "

" .......................................... "

" என்ன பேசினேன்னு கேட்கறீங்களா.... ? நம்ம அதிரா அப்பார்ட்மெண்ட்ல கடந்த ஆறு வருஷ காலத்துல நடந்த அமானுஷ்யமான மரணங்களைப் பத்திச் சொன்னேன். அவரும் அந்த மரணங்கள் சம்பந்தமான விசாரணையை மேற்கொள்ளத்தான் வந்திருக்காராம். ரொம்பவும் சந்தோஷமாய் இருந்தது "

" .......................................... "

சில விநாடிகள் கழித்து கோபிகா பேச்சைத் தொடர்ந்தாள். " இப்ப நீங்க என்ன சொன்னீங்க ? அது எனக்கு வேண்டாத வேலையா... ? வர வர நீங்களும் மத்தவங்க மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்க... நம்ம அதிரா அப்பார்ட்மெண்ட்ல ஆறு பேர் அடுத்தடுத்து இறந்து போனதை என்னால சாதாரண விஷயமா எடுத்துக்க முடியாது. ஏசிபிகிட்டே எனக்குத் தெரிஞ்ச எல்லா உண்மைகளையும் சொல்லப்போறேன் "

" .......................................... "

" என்னது.... சொல்லக்கூடாதா....... அப்படியெல்லாம் சொல்லாமே என்னால இருக்க முடியாதுங்க "

" .......................................... "

கோபிகாவின் குரல் உயர்ந்தது. " நான் பேசறது உங்களுக்கு முட்டாள்தனமாய் படுதா..... ? நான் முட்டாள்தாங்க... என்னை மெண்டல்ன்னு கூட சில பேர் சொல்றாங்க.... நீங்களும் என்னை மெண்டல்ன்னே சொல்லுங்க. நான் ஒண்ணும் கவலைப்படமாட்டேன். சாயந்தரம் வீட்டுக்கு வாங்க. உங்களைப் பேசிக்கிறேன். இப்ப போனை கட் பண்றேன்.... எனக்காக ஏசிபி உள்ளே காத்திட்டிருக்கார். அவரை காக்க வெச்சுட்டு உங்ககிட்ட பேசிட்டிருக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை " கோபிகா படபடவென்று பேசிவிட்டு செல்போனை இடுப்பில் சொருகிக்கொண்டு சிட்அவுட்டினின்றும் வெளிப்பட சுவரோரமாய் நின்றிருந்த சந்திரசூடன் அவளுக்கு முன்பாய் வந்து நின்று புன்முறுவல் பூத்தார்.

" என்னம்மா கோபிகா.... உன்னோட ஹஸ்பெண்ட் தனசேகர்கிட்டே இவ்வளவு கண்டிப்போடு பேசறே...... தட்ஸ் குட் .... உன்னை மாதிரியே எல்லாப் பெண்களும் இருந்துட்டா...... " என்று பேசிக்கொண்டே போன சந்திரசூடனை ஒரு கோபப்பார்வை பார்த்தாள் கோபிகா.

சந்திரசூடன் பேச்சை நிறுத்திவிட்டு வியப்பாய் அவளை ஏறிட்டார்.

" என்னம்மா.... அப்படி பார்க்கிறே ..... ? "

" ஆமா ..... நீங்க யாரு ..... ? " கேட்ட கோபிகாவின் குரல் இப்போது மாறியிருந்தது.

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 13) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X