• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நீங்க யார் ஸார்?"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (14)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடன் கோபிகாவை இமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்க கோபிகா மறுபடியும் கேட்டாள்.

" சொல்லுங்க நீங்க யார் ஸார் ..... ? "

சந்திரசூடன் ஒரு புன்முறுவலோடு சொன்னார். குரலில் சிரிப்பையும் கலந்து கொண்டார். " என்னம்மா கோபிகா..... அதுக்குள்ளே என்னை மறந்துட்டியா...... நான்தாம்மா ஏசிபி சந்திரசூடன் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் "

கோபிகாவின் உதட்டில் இப்போது சின்னதாய் ஒரு சிரிப்பு தொற்றியிருக்கக் கேட்டாள்.

" தெரியும் ஸார்..... ஒரு ஏசிபி இப்படித்தான் சுவரோரமாய் மறைஞ்சு நின்னுகிட்டு ஒரு பொண்ணு செல்போன்ல தன் புருஷனோடு பேசறதை ஒட்டு கேட்பாரா....... ? உங்களுக்கு என் மேல் என்ன ஸார் சந்தேகம்.. ? ஏதாவது சந்தேகம் இருந்தா நேரிடையாவே கேட்கலாமே ..... ? "

flat number 144 adhira apartment episode 14

" சந்தேகமெல்லாம் ஒண்ணுமில்லேம்மா..... ஃப்ளாட்டுக்குள்ளே கொஞ்சம் புழுக்கமாய் இருந்தது. அதான் சிட்அவுட் பக்கம் போய் நின்னு காத்து வாங்கலாமேன்னு வந்தேன். நீ போன்ல பேசிட்டிருக்கிறதைப் பார்த்துட்டு அப்படி ஒரமாய் ஒதுங்கி நின்னேன். மத்தபடி நீ உன்னோட ஹஸ்பெண்ட்கிட்ட பேசறதை ஒட்டு கேக்கிறதுக்காக நான் மறைவாய் ஒளிஞ்சு நிக்கலை. நான் அப்படி நின்னது உன்னோட மனசுக்குத் தப்பாப்பட்டிருந்தா அயாம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி "

கோபிகா சிரித்தாள்.

" என்ன ஸார்.... இதுக்கெல்லாம் போய் ஸாரி கேட்கறீங்க.... அயாம் ஜஸ்ட் ப்ளேயிங் வித் யூ "

இட்ஸ் ஒ.கே...... ஹஸ்பெண்ட்கிட்ட பேசி முடிக்க வேண்டியதை பேசிட்டியாம்மா ..... ? "

" ம்... பேசிட்டேன் ஸார் "

" ஏதாவது பிரச்சினையாம்மா ரொம்பவும் கோபமாய் பேசிட்டிருந்தே ..... ? "

" ஆமா ஸார்..... அவர் கொஞ்ச நாளாகவே சரியில்லை... நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடறதில்லை.... வாரத்துல ரெண்டு மூணு நாள் வீட்டுக்கு லேட்டா வர்றார். காரணம் கேட்டா சரியான பதில் இல்லை..... ஒரு நாளைக்கு அவரை உங்ககிட்டே கூட்டிட்டு வர்றேன் ஸார்...... கவுன்சிலிங் கொடுங்க"

" அவசியம் கூட்டிட்டு வாம்மா....... அவர்கிட்டே என்ன பிரச்சினை இருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கிறேன்... அப்புறம்.... இன்னொரு விஷயம் "

" என்ன ஸார் ..... ? "

" உன்னோட அப்பா உன்னைத் தேடிகிட்டு இங்கே வந்துட்டார் "

" என்னோட அப்பாவா ..... ? "

" ம் "

" எங்கே ஸார் ..... ? "

" அதோ முன்னாடி ரூம்ல கபிலனோடு உட்கார்ந்து உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார் "

கோபிகா வேகவேகமாய் நடந்து ஃப்ளாட்டின் முன்பக்கத்தை நோக்கிப் போனாள். ட்ராயிங் அறையில் ஒரு நாற்காலிக்கு சாய்ந்தபடி உட்கார்ந்திருந்த தன்னுடைய அப்பா ஆதிகேசவனைப் பார்த்து அவரருகே வந்து சில விநாடிகள் மெளனமாய் நின்று விட்டு சொன்னாள்.

" ஸாரிப்பா...... நம்ம அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளே வந்த ஏசிபி ஸாரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஒடலை. காலும் ஒடலை. உங்ககிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லிக்காமே ஏதோ ஒரு வேகத்துல புறப்பட்டு வந்துட்டேன். ஏசிபி ஸார் நான் காலேஜ்ல படிச்சுட்டு இருக்கும்போது தமிழ் மன்றம் சார்பாய் வந்து ஒரு அருமையான மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்தார். அந்த ஸ்பீச் இந்த நிமிஷம் வரைக்கும் என்னோட மூளையில் அப்படியே கல்வெட்டு மாதிரி பதிஞ்சிருக்கு...... "

ஆதிகேசவன் நாற்காலியினின்றும் எழுந்து வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு சொன்னார்.

" அவரைப் பார்த்து பேசிட்டியா ..... ? "

" பேசிட்டேப்பா..... நம்ம அப்பார்ட்மெண்ட்ல நடந்த ஆறு அமானுஷ்ய மரணங்களைப்பத்தியும் சொல்லிட்டேன். அவரும் அது சம்பந்தமான விசாரணைக்காகத்தான் வந்து இருக்காராம் " பேசிக்கொண்டே போன கோபிகா சட்டென்று இடுப்பின் மறைவுக்கு கையைக்கொண்டு போய் செல்போனை எடுத்தாள். முகம் மாறினாள்.
செல்போனின் டிஸ்ப்ளேயைப் பார்த்தவள் தன் இடது கை முன் விரல்களால் நெற்றியை லேசாய்த் தட்டிக்கொண்டாள்.

" இவரை என்ன பண்றது.... இப்பத்தான் போன் பண்ணி அஞ்சு நிமிஷம் ஆச்சு. மறுபடியும் போன் ..... ? "

ஆதிகேசவன் கேட்டார். " போன்ல யாரம்மா ..... ? "

" வேற யாரு உங்க மாப்பிள்ளைதான் " என்று சொன்னவள் போனை காதுக்கு கொடுத்தாள்.
சந்திரசூடன், ஆதிகேசவன், கபிலன் மூன்று பேரும் ஒருவரையொருவர் குழப்பமான முகங்களோடு பார்த்துக்கொண்டார்கள்.

கோபிகா சற்றே தள்ளிப்போய் பேசினாலும் அவள் பேசுவது மற்றவர்களின் செவிகளில் விழுந்தது.

" என்னது..... ஆபீஸூக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வர்றீங்களா ..... ? "

" .......................................... "

" எதுக்கு வர்றீங்க ..... ? "

" .......................................... "

" காரணத்தை வந்து சொல்றீங்களா..... ? "

" .......................................... "

" ஏன் போன்லயே சொல்லக்கூடாதா..... ? "

" .......................................... "

" சரி வாங்க..... வரும்போது நான் குடுத்து அனுப்பிச்ச லஞ்ச்சை மிச்சம் மீதி வெக்காமே சாப்ட்டுட்டு வாங்க. அப்பத்தான் நான் உங்ககிட்ட பேசுவேன் "

" .......................................... "

" சரி.... சரி.... வாங்க..... வீட்டுக்கு வர்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..... அப்புறம் என்ன ..... வாங்க வீட்ல வெயிட் பண்றேன் "

செல்போனில் பேச்சை முடித்துக்கொண்ட கோபிகா சந்திரசூடனிடம் வந்தாள்.

" ஸாரி ஸார்.... நான் உடனடியாய் வீட்டுக்கு கிளம்பணும். என்னோட ஹஸ்பெண்ட் ஆபீஸூலிருந்து திடீர்ன்னு புறப்பட்டு வர்றார். அவர் எப்பவுமே இப்படித்தான் நினைச்சா லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்துடுவார்.... "

" அதனால் என்ன போயிட்டு வாம்மா.... நான் உங்க அப்பாகிட்டே பேசிட்டிருக்கேன் "

கோபிகா ஆதிகேசவனிடம் திரும்பினாள்." அப்பா.... வீட்டை பூட்டிட்டுதானே வந்தீங்க ..... ? "

" பின்னே பூட்டாமலா வருவாங்க ..... ? "

" சாவியைக் கொடுங்கப்பா "

ஆதிகேசவன் சாவியை எடுத்துக் கொடுக்க, கோபிகா வாங்கிக்கொண்டு சந்திரசூடனைப் பார்த்தாள்.

" ஸார்..... இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டைப் பத்தி நான் சொன்னதையெல்லாம் மறந்துடாதீங்க. இன்வால்வ்மெண்ட்டோடு கூடிய ஒரு டீப் என்கொயரியை நீங்க நடத்தினா மட்டும் எல்லா உண்மைகளும் வெளியே வந்து வரிசை கட்டி நிக்கும். பை த பை உங்க செல்போன் நெம்பரை எனக்குக் கொடுக்க முடியுமா ஸார் ..... ? "

"தாராளமா தர்றேன்.. சேவ் பண்ணிக்கம்மா"

"ஏதாவது முக்கியமான விஷயமாய் இருந்தா மட்டும்தான் உங்களைக் கூப்பிடுவேன். டிஸ்டர்ப்பா நினைக்காதீங்க "

சந்திரசூடன் சிரித்தார்.

" நீ எப்ப வேணும்ன்னாலும் எந்த நேரமாய் இருந்தாலும் சரி எனக்கு போன் பண்ணும்மா... நான் அந்த விநாடியே போனை அட்டெண்ட் பண்றேன் "

" தேங்க்யூ ஸார்.... அப்பாகிட்டே பேசிட்டிருங்க. அவரும் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டைப் பத்தி நிறைய சொல்வார் "

கோபிகா பேசிக்கொண்டே தலையசைப்பால் மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினாள்.

அவள் போய் அரை நிமிட நேரம் வரை மெளனம் காத்த சந்திரசூடன் ஆதிகேசவனிடம் திரும்பினார்.

" என்ன ஸார்...... நீங்க உங்க டாட்டர் கோபிகாவை ரெட்ரோக்ரேட் பேஷண்ட்ன்னு சொல்றீங்க. செலக்டிவ் அம்னீஷியா என்கிற வார்த்தையையும் மென்ஷன் பண்றீங்க. ஆனா கோபிகா பேசறதைப் பார்த்தா அது மாதிரி நினைக்கத் தோணலையே ..... ? "

ஆதிகேசவன் உஷ்ணமாய் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னார்.

" ஸார்..... எனக்கும் இதே ஆச்சர்யம்தான். இப்ப உயிரோடு இல்லாத கணவனை உயிரோடு இருக்கிறதாய் நினைச்சுட்டு அவ செல்போன்ல பேசறதும், வீட்டுக்குள்ளே நடந்துக்கிறதும், ராத்திரி நேரத்துல கூட சிலசமயம் அவளோட படுக்கை அறைவிலிருந்து பேச்சுக்குரல் கேட்கிறதும் எனக்கு பழகிப்போன விஷயங்கள். நல்லவேளையா என்னோட ஒய்ஃப் உயிரோடு இல்லை. இருந்திருந்தா அவ படற வேதனையும் எனக்கு ஒரு பெரிய பாரமாய் இருந்திருக்கும் "

அதுவரை பேசாமல் இருந்த கபிலன் இப்போது குறுக்கிட்டு கேட்டான்.

" கோபிகா இன்னமும் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர்ஸ்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டு இருக்காளா ..... ? "

" இல்லை..... ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டிருந்த எல்லா டாக்டர்களும் சொன்ன ஒரே பதில் என்னிக்காவது ஒரு நாள் கோபிகா தன்னோட பழைய நிலைமைக்குத் திரும்பலாம். ஆனா அதனோட சக்சஸ் ரேட் பத்து சதவீதம்தான்"
அறையில் சில விநாடிகள் வேண்டாத கனத்த நிசப்தம் நிலவ அதைக் கலைத்தார் சந்திரசூடன்.

" மிஸ்டர் ஆதிகேசவன்...... திஸ் ஈஸ் ஹைலி பேதட்டிக் அண்ட் அன்ஃபார்ச்சுனேட். உலகத்தில் இருக்கிற எந்த ஒரு அப்பாவுக்கும் இதுமாதிரியான நிலைமை வரக்கூடாது. எனி ஹெள வீ ஹேவ் டூ ஃபேஸ் த பிரப்ளம்ஸ். நான் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்தது வேற ஒரு விசாரணைக்காக. ஆனா இந்த அப்பார்ட்மெண்ட்ல மர்மமான மரணங்கள் ஆறு நடந்திருக்கு. டி.வி.நடிகை சொர்ணரேகா, ஏர் ஹோஸ்டஸ் தர்ஷினி, தமிழ் புரபசர் நப்பின்னை, ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்த வான்மதி, ரியல் எஸ்டேட் ஒனர் அன்வர் அலி, ஆறாவதாய் உங்க மாப்பிள்ளை தனசேகர். இந்த ஆறு பேரோட மரணங்களைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ..... ? "

" ஸார்..... நான் இப்ப சொல்லப் போகிற ஒரு விஷயம் உங்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கும் "

" என்ன ..... ? "

" என்னோட மாப்பிள்ளை தனசேகரைத் தவிர மத்த அஞ்சு பேரும் இதே அதிரா அப்பார்ட்மெண்ட்ல எந்த ஃப்ளாட்ல தங்கியிருந்தாங்கன்னு தெரியுமா..... ?"

" எங்கே ..... ? "

" ஃப்ளாட் நெம்பர் 144 "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 13 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 14) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X