• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சொல்லு ஜமுனா".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (26)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடனின் முகத்தில் ஆச்சர்யம் அலையடித்தது. ஒரு சந்தோஷமான பார்வையால் ஜமுனாவை நனைத்தபடி கேட்டார்.

" சொல்லு ஜமுனா... அந்த "XYZBAA" என்கிற அந்த எழுத்துக்களுக்கு என்ன அர்த்தம் ..... ? "

" ஸார்.... லட்சணா எப்பவுமே எந்த ஒரு சீரியஸான விஷயத்தையும் நாலைஞ்சு ஆங்கில எழுத்துகளுக்குள்ளேயே அடக்கிடுவா. இந்த எழுத்துக்களும் அப்படிப்பட்டதுதான். இதில் கடைசியில் இருக்கிற AA ங்கிற ரெண்டு எழுத்துக்கள் அதிரா அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தைக் குறிக்கிறது " ஜமுனா இப்படி சொன்னதும் சந்திரசூடனின் உடம்புக்குள் மின்சாரம் பாய்ந்த மாதிரியான உணர்வு. குரலில் பதற்றம் தெறிக்கக் கேட்டார்.

flat number 144 adhira apartment episode 26

" என்னம்மா சொன்னே.... அதிரா அப்பார்ட்மெண்ட்டா ..... ? "

" ஆமா ஸார்..... AA எழுத்துகளுக்கு என்ன எக்ஸ்பேன்ஷன்னு நான் லட்சணாகிட்ட கேட்டப்ப அவ அதிரா அப்பார்ட்மெண்ட்ன்னுதான் சொன்னா "

" சரி, பக்கத்தில் இருக்கிற B எழுத்துக்கு என்ன அர்த்தம் ..... ? "

" ப்ளாக்ஸ்..... அது அப்பார்ட்மெண்ட்டோட ப்ளாக்ஸோட குறியீட்டு எழுத்துக்கள். அதாவது அதிரா அப்பார்ட்மெண்ட்டில இருக்கிற எக்ஸ், ஒய், இஸட் ப்ளாக்குகள் "

" அந்த ப்ளாக்குகளில் என்ன பிரச்சினை நீ கேட்டியாம்மா ..... ? "

" கேட்டேன் ஸார் "

" லட்சணா என்ன சொன்னா ..... ? "

" பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம் என்கிற பாலியல் பலாத்கார விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நான்கைந்து நபர்கள் அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டின் எக்ஸ், ஒய், இஸட் ப்ளாக்குகளில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அந்த தகவல்களின் அடிப்படையில் அங்கே போய் ஒரு ஷேடோ இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிக்கப் போவதாகவும் என்கிட்டே லட்சணா சொன்னா. நான் கூட அவகிட்ட எதுக்காக ரிஸ்க் எடுக்கிறே.... போலீஸ் கமிஷனர்கிட்டே நேரிடையாய் போய் விஷயத்தைச் சொல்லு.... அவர் பார்த்துக்குவார்ன்னு சொன்னேன். அவ அதை காதிலேயே போட்டுக்கலை...... "

" அதிரா அப்பார்ட்மெண்ட் எங்கே இருக்குன்னு உனக்குத் தெரியுமா ஜமுனா..... ? "

" தெரியாது ஸார் "

" லட்சணா உன்கிட்டே பேசும்போது அந்த அப்பார்ட்மெண்ட்டில் ஒரு ஷேடோ இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிக்கப் போவதா சொன்னா இல்லையா ..? "

" ஆமா..... "

" அது எதுமாதிரியான இன்வெஸ்டிகேஷன் ..? "

" அதைப்பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது ஸார். ஆனா நான் அவகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு என்னோட ரூமுக்கு போற நேரத்துல யார்கிட்டயிருந்தோ அவளோட செல்போனுக்கு ஒரு கால் வந்தது. எடுத்துப் பேசினா. அப்படி அவ போன்ல பேசும்போது கோபிகா என்கிற பேரும், அதிரா அப்பார்ட்மெண்ட் என்கிற வார்த்தையும் அடிபட்டது "

சந்திரசூடனை மறுபடியும் ஒரு சிறிய அதிர்ச்சி உலுக்கியது.

" பேர் என்னான்னு சொன்னே.... கோபிகாவா ..... ? "

" ஆமா ஸார் "

" ஆர் யூ ஷ்யூர் ..... ? "

" ஷ்யூர் ஸார்... பத்து நாளைக்கு முன்னாடி கேட்ட அந்த பேரை நான் எப்படி இவ்வளவு ஞாபகம் வெச்சுட்டு சொல்றேன்னு உங்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கலாம். நான் குழந்தையாய் இருக்கும்போது என்னோட அம்மாவும், அப்பாவும் எனக்கு வெச்ச முதல் பேர் கோபிகா.... ஆனா என்னோட ஜாதகப்படியும், நியூமராலஜிப்படியும் "J" என்கிற ஆங்கில எழுத்துல ஆரம்பிக்கிற பேரைத்தான் வைக்கணும்ன்னு ஜோஸியர் ஒருத்தர் சொன்னதால எனக்கு ஜமுனான்னு பேரை மாத்தி வெச்சாங்க. கோபிகா எனக்கு பிடிச்ச பேர் "

" சரி ... போன்ல பேசினது யாரு ஆணா பெண்ணா ..... ? "

" அது தெரியலை ஸார்.... லட்சணா போன்ல பேசிட்டு இருக்கும்போதே நான் அவ ரூமைவிட்டு வெளியே வந்துட்டேன்"

ஜமுனாவிடம் விசாரணையை முடித்துக்கொண்ட சந்திரசூடன் மேலும் ஒரு அரைமணி நேரம் அந்த அறையில் இருந்து எல்லாவற்றையும் அலசிப் பார்த்துவிட்டு அன்னபூர்ணியிடம் திரும்பினார்.

" லட்சணாவோட இந்த அறை இன்னமும் ஒரு ஆறு மாசத்துக்கு இப்படியே இருக்கட்டும். அறையை சுத்தம் பண்ண வேண்டாம். சாவி உங்ககிட்டேயே இருக்கட்டும். யார்க்கிட்டேயும் தர வேண்டாம். கொலையாளியை கண்டுபிடிக்கிற விஷயத்தில் எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் நான் மறுபடியும் இந்த அறைக்கு வர வேண்டியிருக்கும்..... "

அன்னபூர்ணி கண்களில் நிரம்பிய நீரோடு "சரி" என்கிற பாவனையில் தலையாட்டிவிட்டு மெல்ல குரலை இழுத்தாள்.

"ஸ....ஸ.....ஸார்...... ஒரு சின்ன ரெக்வெஸ்ட் "

" சொல்லுங்க.......... "

" இந்த பூரணி லேடிஸ் நெஸ்ட் ஹாஸ்டலுக்கு வெளியில் ஒரு நல்ல பேர் இருக்கு. இங்கே ஸ்டே பண்ணியிருக்குற லேடீஸ்களில் பாதி பேர் அரசு வேலைகளிலும், மற்ற பிரபலமான நிறுவனங்களிலும் இருக்காங்க..... லட்சணா கொலை செய்யப்பட்ட விவரங்களை மீடியாக்களுக்கு தரும்போது இந்த ஹாஸ்டலோட நேம் வெளியே வராதபடி பார்த்துக்கிட்டா.... ஐ....வில்......பி..... க்ரேட்ஃபுல் ட்டு யூ ஸார் "

சந்திரசூடன் அவளை ஏறிட்டு சொன்னார்.

" இந்த நியூஸ் மீடியாக்களுக்கு போகும்போது லட்சணா என்கிற உண்மையான பெயரே மாறியிருக்கும். செய்தி மட்டும் உண்மையாய் இருக்கும்.... ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படும்ன்னு நாங்க நினைக்கிற விஷயங்களை எல்லாம் மாத்திடுவோம். சட்டமும் அதை அனுமதிக்கிறது. பை த பை இனிமேல் நான் இங்கே விசாரணைக்கு வரும்போது இந்த காக்கி யூனிஃபார்ம் இருக்காது. வேஷ்டி சட்டையில் ஒரு சாதாரண நபர் மாதிரி உங்ககிட்ட வந்து பேசுவேன் "

" தேங்க்யூ ஸார் "அன்னபூர்ணி கண்களில் நீர் சிதற கை கூப்பினாள். சந்திரசூடனும், வாஹினியும் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து காரில் ஏறினார்கள். காரை மெதுவாய் ஒட்டிக்கொண்டே சந்திரசூடன் வாஹினியிடம் சொன்னார்.

" மேடம்.... கடந்த பத்து நாட்களாய் பதில் தெரியாமல் இருந்த ஒரு கேள்விக்கு இன்னிக்கு விடை கிடைச்சிருக்கு. கொலை செய்யப்பட்டு கருப்பு பெயிண்ட் பூசப்பட்டு கார் டிக்கியில் அடைக்கப்பட்டிருந்த பெண் யார் என்பது கடைசி வரையிலும் தெரியாமலே போய் விடுமோன்னு என்னோட மனசுக்குள்ளே ஒரு சின்ன பயம் இருந்தது. அந்த பயத்துக்கு இனி இடமில்லை. என்னோட இன்வெஸ்டிகேஷனுக்கு நீங்க பெரிய உதவியைப் பண்ணியிருக்கீங்க... ஐ வில் நெவர் பர்கெட் திஸ் ஹெல்ப் "

வாஹினி மறுத்தலாய் தலையசைத்தாள்.

" ஸாரி ஸார்..... இது உதவியில்லை. என்னோட கடமை. கொலை செய்யப்பட்டது லட்சணா என்கிற ஒரு பெண்ணில்லை. என்கூட பிறக்காத சகோதரி.... அவளுக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும்ன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை "

" யூ டோண்ட் ஹேவ் டூ வொர்ரி மேடம். இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே கொலையாளி யார்ங்கிறதை என்னால ஸ்மெல் பண்ண முடியும்ன்னு நினைக்கிறேன். கொலையாளி யாராக இருந்தாலும் சரி, அந்தத் தகவல் உங்களுக்குத்தான் முதல்முதலாய் வரும்........ "

" அந்த நிமிஷத்துக்காக நான் இந்த நிமிஷத்திலிருந்தே காத்திருத்திருக்க ஆரம்பிச்சுட்டேன்...ஸார்..... "
கார் மேற்கு மாம்பலத்தை முடித்துக்கொண்டு கோயம்பேடு போகும் அகலமான சாலைக்குள் நுழைந்தது.
சந்திரசூடன் கேட்டார்.

" மேடம்...... உங்களை எங்கே ட்ராப் பண்ணனும் ..... ? "

" நான் இப்போ என்னோட பத்திரிக்கை ஆபீஸூக்குத்தான் போகணும்.... உங்களுக்கு ஏதாவது அவசர வேலை இருந்தா என்னை இங்கேயே ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் பக்கமாய் ட்ராப் பண்ணுங்க.... நான் டாக்ஸி பிடிச்சு போயிடறேன்.... "

" நோ.....நோ..... எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை மேடம். உங்களை பத்திரிக்கை ஆபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு அதுக்கப்புறம் நான் போக வேண்டிய இடத்துக்கு போறேன்..... எனக்கு எந்த அவசரமும் இல்லை...... "

" தேங்க்யூ ஸார் "

" இதுக்கெல்லாம் நன்றி சொன்னா அது என்னோட அநியாய லிஸ்ட்டுக்குப் போயிடும் மேடம். திஸ் ஈஸ் அன் ஆப்பர்ச்சுனிடி ஐ காட் "

சந்திரசூடன் சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை அதிகப்படுத்தினார்.

******

மேலும் ஒரு அரைமணி நேரம் போக்குவரத்து நெரிசலில் நீந்தி, வாஹினியை அவளுடைய பத்திரிக்கை ஆபீஸின் வாசலருகே இறக்கிவிட்ட சந்திரசூடன், தலையசைப்பால் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு காரை நகர்த்தினார்.
கார் வேகம் பிடித்தபோது அவருடைய செல்போன் டயல்டோனை காற்றில் சிதறடித்தது.

போனின் டிஸ்ப்ளேயில் அழைப்பது யார் என்று பார்த்தார். டி.ஜி.பி. அழைத்துக் கொண்டிருந்தார். ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசினார் சந்திரசூடன்.

" குட் ஆப்டர்நூன் ஸார் "

" உங்க போனைத்தான் எதிர்பார்த்துட்டிருக்கேன். லட்சணா ஸ்டே பண்ணியிருக்கிற ஹாஸ்டலுக்குப் போனீங்களா...... அவளோட ரூமை சோதனை போட்டதில் டிட் யூ கெட் எனி க்ளூ ..... ? "

" எஸ்..... ஸார்..... ஐ காட் ஒன் யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் "

" என்ன ..... ? "

சந்திரசூடன் காரை மெதுவாய் ஒட்டிக்கொண்டே ஹாஸ்டல் விசாரணையில் நடந்த எல்லா சம்பவங்களையும் சொல்ல, டி.ஜி.பி. மறுமுனையில் கவனமாய் செவிமடுத்து விட்டு "க்ரேட்" என்று சொன்னவர் தொடர்ந்து பேசினார்.

" கொலை செய்யப்பட்ட லட்சணா பத்து நாளைக்கு முன்னால் யாரிடமோ செல்போனில் பேசியபோது கோபிகா என்கிற பேரையும் அதிரா அப்பார்ட்மெண்ட் என்கிற பேரையும் மென்ஷன் பண்ணியிருக்காங்கிற தகவல் உண்மையிலேயே ஒரு யூஸ்ஃபுல் இன்பர்மேஷன்தான். ... இந்த ஒரு இன்பர்மேஷனை வெச்சுகிட்டு ஃபர்தரா எப்படி யாரை இன்வெஸ்டிகேட் பண்ணப் போறீங்க சந்திரசூடன் ..... ? "

" ஸார்..... கோபிகாவுக்கும், லட்சணாவுக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கு. அது எதுமாதிரியான தொடர்புன்னு தெரிஞ்சுக்கத்தான் நான் இப்போ அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு போயிட்டிருக்கேன் "

" யூ .......மீன்..... அந்த லட்சணாவைப்பற்றி கோபிகாவை விசாரிக்கப் போறீங்க ..... ? "

" ஆமா ஸார் "

" ஐ ஹேவ் ஒன் டவுட்..... கோபிகாவே மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ரெட்ரோக்ரேட் பேஷண்ட். அவளுக்கு சில விஷயங்கள் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். சில விஷயங்கள் ஞாபகத்தில் இருக்காதுன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க.... இப்படிப்பட்ட நிலையில் கோபிகா சொல்லப்போகிற பதில் எந்த அளவுக்கு தெளிவாய் இருக்கும்ன்னு நீங்க நம்பறீங்க ..... ? "

" இது சம்பந்தமாய் அந்த கோபிகாகிட்ட பேசிப் பார்த்தாத்தான் தெரியும் ஸார் "

" ஒ.கே. டூ இட்..... அயாம் வெயிட்டிங் ஃபார் யுவர் கால் "

மறுமுனையில் டி.ஜி.பி. இணைப்பைத் துண்டித்துவிட காரின் வேகத்தை, அதிகப்படுத்தினார் சந்திரசூடன்.
நாற்பது நிமிஷப் பயணம்.

அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்குள் கார் நுழைந்தது. காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு லிஃப்டில் உயர்ந்து கோபிகா இருந்த ஃப்ளாட்டுக்கு முன்பாய் வந்து நின்றார்.

ஃப்ளாட் கதவு சாத்தப்பட்டிருக்க, காலிங்பெல்லுக்கான பட்டன் மேல் கையை வைத்து அழுத்தினார். அது நீளமாய் கத்திவிட்டு ஒய்ந்தது. கதவு திறக்கப்பட காத்திருந்தார்.

விநாடிகள் வேகமாய் நகர்ந்தன.

ஒரு நிமிஷம்.......
இரண்டு நிமிஷம்.......
மூன்று....... நான்கு........

சந்திரசூடன் பொறுமை இழந்தவராய் காலிங்பெல் பட்டனை அழுத்திக் கொண்டேயிருக்க,

கதவு திறக்கப்படாமல் மெளனம் சாதித்தது.

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 26) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X