For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா ஆதிகேசவன்?".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (17)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

" என்னது ரத்தத்தை தொட்டு பொட்டு வெச்சிருக்காங்களா ..... ? "

" ஆமா ஸார் " என்றவர் தொடர்ந்து பேசினார்.

" இந்த போர்ஷனுக்கு மேல் போர்ஷன்ல பிரசன்னம் பார்க்கிற ஒரு வயசான மலையாள அம்மா இருக்காங்க. பேரு தாட்சாயணியம்மா. வயசு எழுபது இருக்கும். அந்த அம்மாதான் ஒவ்வொரு அமாவாசைக்கும் அடுத்த நாளான பிரதிமை தினத்துல இதுமாதிரியான ரத்தப் பொட்டுக்கள் வைக்கிறது வழக்கம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன் "

" அது என்ன மனித ரத்தமா ..... ? "

" கோழியோட ரத்தம்ன்னு சொன்னாங்க "

" அந்த தாட்சாயணியம்மா இப்படி ரத்தப் பொட்டுக்களை வைக்கிறதை நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா ஆதிகேசவன் ..... ? "

" நான் பார்த்திருக்கேன் ஸார் " என்று தனக்குப் பின்பக்கமிருந்து குரல் வரவும் சந்திரசூடன் திரும்பிப் பார்த்தார். ராவ்டே பிந்தர் நின்றிருந்தார்.

flat number 144 adhira apartment episode 17

" வாங்க.... ராவ்டே..... உங்களுக்குத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்"

" இந்த ஃப்ளாட் காலியான நாளிலிருந்து அதாவது கடந்த ஆறேழு மாசமா இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரத்தனம் நடந்திட்டிருக்கு ஸார் "

" ஏன் இப்படி பண்றீங்கன்னு நீங்க கேட்கலையா ..... ? "

" கேட்டேன் ஸார் அதுக்கு அந்த அம்மா இந்த ஃப்ளாட்ல ஏதோ ஒரு தீயசக்தி இருக்கிறதாவும் அதைச் சாந்தப்படுத்தறதுக்காக குருதிப்பொட்டு பூஜை பண்ணினா நல்லதுன்னு சொன்னாங்க "

" இப்படி குருதிப்பொட்டு வெக்கிற விஷயம் ஃப்ளாட்டோட ஒனர் நாக்பூரில் இருக்கிற கன்ஷிராமுக்குத் தெரியுமா ..... ? "

" கன்ஷிராமுக்கு தெரியப்படுத்திட்டுதான் இப்படிப்பட்ட பூஜை பண்றதாகவும், அவர் சொன்ன யோசனையின் பேரில்தான் கதவு நடுவுல ஆணியடிச்சு கால பைரவரோட உருவ போட்டோவை மாட்டியிருக்கிறதாகவும் தாட்சாயணியம்மா சொன்னாங்க. இதெல்லாம் முட்டாள்தனம்ன்னு சொல்லிப் பார்த்தேன். அந்த அம்மா அதைக் காதிலேயே போட்டுக்கலை. ஒவ்வொரு மாசமும் அமாவாசை கழிஞ்ச மறுநாள் இந்த ஃப்ளாட் கதவுக்கு முன்னாடி உடுக்கை சத்தத்தோடு ஒரு ஆர்ப்பாட்ட பூஜை நடக்கும். ஆரம்பத்துல ரெண்டு தடவை சொல்லிப் பார்த்தேன். கேட்கலை. அப்புறம் விட்டுட்டேன் "

" அந்த அம்மா இப்போ மேல் போர்ஷன்ல இருக்காங்களா ..... ? "

" இல்லை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்ல ஏதோ திருவிழான்னு நாகர்கோவில் புறப்பட்டுப் போயிருக்காங்க. அடுத்த வாரம் வந்துடுவாங்க.... "

" சரி... இந்த ஃப்ளாட்டோட சாவி உங்ககிட்டத்தான் இருக்கிறதாய் ஆதிகேசவன் சொன்னார் "

" ஆமா ஸார்.... கன்ஷிராம் கேட்டுகிட்டதின் பேரில் சாவியை நான்தான் வெச்சிருக்கேன் "

" ஃப்ளாட்டை நான் பார்க்கணும். ஒப்பன் பண்ண முடியுமா ..... ? "

" ஸ....ஸார்.... இது என்னோட சொந்த ஃப்ளாட் கிடையாது. ஒனர் கன்ஷிராம்கிட்டே ஒரு வார்த்தை கேட்கணும்..... "

" கேட்டுச் சொல்லுங்க.... அவர் மாட்டேன்னு சொன்னா போனை என்கிட்டே கொடுங்க. நான் பேசறேன் "

ராவ்டே தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு சற்றுத்தள்ளி போய் நின்று ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு சன்னமான குரலில் பேசிவிட்டு சந்திரசூடனிடம் வந்தார்.

" நோ..... ப்ராப்ளம் ஸார்.... ஃப்ளாட்டை ஒப்பன் பண்ணி காட்டச் சொல்லிட்டார். வாங்க பார்த்துடலாம் "

ராவ்டே பிந்தர் சொல்லிக்கொண்டே சட்டைப் பைக்குள் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டுக்கு முன்பாய் போய் நின்று, அதை அன்லாக் செய்து கதவைத் தள்ளினார். வெகுநாட்களாக சாத்தியிருந்த கதவு என்பதால் தரையைத் தேய்த்துக்கொண்டு "கீறிச்" சென்ற சத்தத்தோடு பின் வாங்கியது.
ஃப்ளாட் கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யப்படாததின் விளைவு அறைகளின் சுவர் மூலைகளில் சிலந்திகள் தோரண தோரணமாய் கூடுகளைக் கட்டி பெரிதும் சிறிதுமாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்க, ரோஸ் நிற மார்பிள் தரையில் லேசாய் புழுதி மண்டி தெரிந்தது.

சந்திரசூடன் உள்ளே நுழைய மற்றவர்களும் பின் தொடர்ந்தார்கள். மூன்று பெட்ரூம் வசதியோடு ஃப்ளாட் விஸ்தாரமாய் தெரிய, எல்லா ஜன்னல்களும் இறுக்கமாய் மூடப்பட்டு இருந்ததன் காரணத்தினால் அறைக்குள் அடைப்பட்டிருந்த காற்று அவஸ்தையாய் நாறியது. கபிலன் வேகவேகமாய் போய் ஹாலில் இருந்த பிரதான ஜன்னல்களை திறந்து வைக்க, ஆதிகேசவன் சுவரில் பார்வைக்குப்பட்ட ஸ்விட்ச்களைத் தட்டினார். இரண்டு ஃபேன்கள் மெதுவாய் சுழல ஆரம்பித்தன. ஒரு ட்யூப் லைட் எரிந்தது.

சந்திரசூடன் ஹாலில் நடைபோட்டபடியே பார்வையை கூராக்கிக்கொண்டு ஃப்ளாட்டை நிதானமாய் அளந்தார். பார்த்த உடனேயே பிடித்துவிடக்கூடிய வகையில் ஃப்ளாட் ஒரு வசீகரம் காட்டியது. சமையலறை, பி.வி.சி.எல்.ஷேப் மாடுலார் கிச்சன் கண்ணைப் பறிக்கும் ஸ்ட்ராபெரி நிறத்தில் அமர்க்களம் பண்ணியது. கெளண்டர் டாப் வாஷ்பேசினும் செராமிக் சின்க்கும் அழுக்குத் தீற்றல்களுடன் காணப்பட்டது.

சந்திரசூடன் சமையலறைக்கு வலது பக்கம் சற்றுத் தள்ளியிருந்த ஒரு கதவைத் தள்ளிப் பார்த்தார்.

க்ரானைட் சுவரோடு குளியலறை பளிச்சென்று தெரிய, அறையின் மையத்தில் ரெக்டேங்குலர் பாத் டப் ஒன்று காய்ந்து போன சோப் நுரையோடு பளிச்சிட்டது.

சந்திரசூடன் ஆச்சர்யப்பட்டார்.

" ஃப்ளாட் இவ்வளவு லக்ஜரியா இருக்கு. என்ன வாடகை கொடுத்துட்டிருந்தாங்க? "

" இருபத்தஞ்சாயிரம் "

" பரவாயில்லையே.... அதனால்தான் இதைப் பார்த்தவங்க யாரும் வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போகப் பிரியப்படாமே பிடிவாதமாய் வாடகைக்கு இருந்துட்டு போயிருக்காங்க "

" அவங்க இங்கே இருந்ததுக்கு குறைந்த வாடகையும் ஒரு காரணம் ஸார்..... " என்று சொல்லிவிட்டு மெல்ல குரலைத் தாழ்த்தினார் ராவ்டே பிந்தர்.

" ஸார்... நான் ஒய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரி. எனக்கு இந்த பேய், பிசாசு, அமானுஷ்யம், மாந்தரீகம் போன்ற வார்த்தைகளில் ஒரு சதவீதம் கூட நம்பிக்கை கிடையாது. இந்த ஃப்ளாட்டில் குடியிருந்த அஞ்சு பேரும், கோபிகாவின் கணவர் தனசேகரும் ஒரே மாதிரியான முறையில் அதாவது நேச்சுரல் டெத் மாதிரியான மெடிக்கல் டிஸ்ஆர்டரில் இறந்து போயிருக்காங்க. நிச்சயமாய் இதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு சட்ட விரோதமான காரணம் இருக்கு. இதை நீங்க ஒரு அவசரகால விசாரணை கேஸாய் எடுத்துகிட்டு ஆறு மரணங்களுக்குப் பின்னாடி இருக்கிற மர்ம முடிச்சை அவிழ்க்கணும். இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் மற்ற பிற அப்பார்ட்மெண்ட்கள் மாதிரி சந்தோஷம் நிரம்பி இயல்பாய் இருக்கணும் உங்க விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு தர்றேன் "

சந்திரசூடன் ராவ்டே பிந்தரை ஏறிட்டார்.

" தேங்க்யூ ஸோமச் பட்.... ஒரு சின்ன திருத்தம் "

"என்ன ..... ? "

" இந்த அப்பார்ட்மெண்ட்ல இதுவரைக்கும் மர்மமான முறையில் நடந்த ஆறு மரணங்களைப்பற்றி நான் இங்கே விசாரிக்க வரலை. நேற்று ராத்திரி ஏழாவது மரணமும் நடந்திருக்கு.... அதைப்பத்தி விசாரிக்கத்தான் வந்திருக்கேன் "

முகத்தில் நிறமிழந்த ராவ்டே பிந்தர் அதிர்ச்சியடைந்தவராய் சந்திரசூடனை ஏறிட்டார்.

" என்ன ஸார் சொல்றீங்க.... ஏழாவது மரணமா ..... ? "

" எஸ் "

" யாரு ..... ? "

" ஒரு பெண். இளம் பெண். அந்தப் பெண்ணின் உடம்பில் எந்தவிதமான ஒரு ரத்த காயமும் இல்லாமல் கொலை பண்ணி அந்தப் பெண் யார்ன்னு அடையாளம் தெரியக்கூடாதுங்கிறதுக்காக அவ உடம்பை நிர்வாணமாக்கி கறுப்புப் பெயிண்ட்டைப் பூசியிருக்காங்க "

ராவ்டே பிந்தர் உடல் நடுங்கி முகம் வெளிறிப்போனவராய் " மைகுட்னஸ் " என்று முனகி கண்களை மூடித் திறந்தார். நிதானமான குரலில் கேட்டார்.

" ஸார் அந்தப் பெண்ணின் மரணம் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்லதான் நடந்திருக்கு என்கிற முடிவுக்கு எப்படி வந்தீங்க ..... ? "

சந்திரசூடன் கபிலனிடம் திரும்பினார். " கபிலன்.... உங்க அப்பாவோட கார் டிக்கிக்குள் கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட அந்தப் பெண்ணோட டெட்பாடி எப்படி வந்தது என்கிற விபரத்தை ராவ்டே பிந்தர்க்கு கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்க.... "

கபிலன் தலையசைத்துவிட்டு சொல்ல ஆரம்பித்தான்.

" ஸார்... நேற்றைக்கு என்னோட அப்பாவும் அம்மாவும் ஒரு மேரேஜ் ரிசப்ஷனுக்கு போறதுக்காக தயாராய் இருந்தபோது ஒரு ஒரு ஹவுஸ் ப்ரோக்கர் அப்பாவுக்கு போன் பண்ணி இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எங்க ஃப்ளாட்டை விலைக்கு வாங்க பார்ட்டி ஒருத்தர் வந்து இருக்கிறதாகவும், உடனே புறப்பட்டு வந்தா விலையைப் பேசி முடிவு பண்ணிடலாம்ன்னு சொன்னார். அப்பாவும் அம்மாவும் மேரேஜ் ரிசப்ஷனுக்கு கொஞ்சம் லேட்டாய் போய்க்கலாம்ன்னு நினைச்சு உடனே அப்பார்ட்மெண்ட்டுக்கு புறப்பட்டு வந்திருக்காங்க "

" அதாவது நேத்து ராத்திரி ..... ? "

" ஆமா.... காரை பேஸ்மெண்ட்ல இருக்கிற எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லோ லைனில் நிறுத்திவிட்டு அப்பாவும் அம்மாவும் எங்க ஃப்ளாட்டுக்குப் போய் ப்ரோக்கர்கிட்டேயும், ஃப்ளாட் வாங்க வந்த பார்ட்டிகிட்டேயும் பேசியிருக்காங்க. ஒரு மணி நேரம் பேசியும் விலை படியாததால அப்பா, அம்மா அங்கேயிருந்து கிளம்பி நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள ஒரு கிளைச்சந்தில் காரை நிறுத்திட்டு மேரேஜ் ரிசப்ஷனை அட்டெண்ட் பண்ணப் போயிருக்காங்க. ஒரு மணி நேரத்துக்கு மேல் ரிசப்ஷனில் இருந்துட்டு கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்த போது காரைக் காணோம். காரை யாரோ திருடிட்டு போயிட்டாங்க. அப்பா உடனே போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு தன்னோட நண்பரான ஏ.சி.பி.கிட்டேயும் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கார். இதற்கிடையில் திருடப்பட்ட எங்க கார் முடிச்சூர் பகுதியில் இருந்த ஒரு ஆட்டோமொபைல் ஒர்க்சாப்ல இருக்கிறதாய் தகவல் கிடைச்சது. அந்த ஏரியாவோட ஒரு பழைய எம்.எல்.ஏ.ரகுநாத்தும், மெக்கானிக் மாத்யூவும் புதுக்கார்களை திருடிட்டு வந்து அதை ராத்திரியோடு ராத்திரியா டிஸ்மேண்டில் பண்ணி கடந்த சில வருஷங்களாய் வெளிமாநிலத்துக்கு வித்துட்டு இருந்திருக்காங்க. எங்க காரை ராத்திரியோடு ராத்திரியா ஏதோ ஒரு காரணத்தால டிஸ்மேண்டில் பண்ண முடியாததால கார் முழுமையா கைக்கு கிடைச்சுது. காரை செக் பண்ணிப் பார்த்தபோதுதான் காரோட டிக்கிக்குள்ளே கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு பெண்ணோட நிர்வாண உடல் இருந்தது. அது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது "

" அந்தப் பெண்ணோட உடல் கார்க்குள்ளே எப்படி வந்ததுன்னு அந்த பழைய எம்.எல்.ஏ.ரகுநாத்கிட்டேயும், மெக்கானிக் மாத்யூகிட்டேயும் கேட்டீங்களா ..... ? " ராவ்டே பிந்தர் கேட்க கபிலன் தொடர்ந்தான்.

" காரைத் தேடி நாங்க ஸ்பாட்டுக்கு போனபோது ரகுநாத்தும், மாத்யூவும் அவங்களோட எதிரிகளால் வெட்டப்பட்டு கிடந்தாங்க. ரகுநாத் உயிரோடு இல்லை. மாத்யூ உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தான். அவன் உயிர் பிரியற நேரத்துல கொடுத்த வாக்குமூலப்படி காரோட டிக்கியில் ஒரு பெண்ணோட டெட்பாடி இருந்த விஷயம் ரகுநாத்துக்கோ, தனக்கோ தெரியாதுன்னு சொன்னான். அங்கே வேலை செய்யற பாண்டியும் அதையேதான் சொன்னான் "

" அப்படீன்னா அந்த கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட இளம் பெண்ணோட டெட்பாடி உங்க காரோட டிக்கிக்கு மாற்றப்பட்ட இடம் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்தான்னு சொல்ல வர்றீங்களா ..... ? "
கபிலனிடம் ராவ்டே பிந்தர் கேட்க சந்திரசூடன் இறுகிப்போன முகத்தோடு அவரை ஏறிட்டார். நிறுத்தி நிதானமான குரலில் சொன்னார்.

" எஸ்..... இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் ஒரு புள்ளி. இங்கே நடந்த மர்மமான ஆறு மரணங்கள் ஒரு புள்ளி, கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்டு டிக்கியில் இருந்த இளம் பெண்ணின் டெட்பாடி ஒரு புள்ளி. இந்த மூன்றுப் புள்ளிகளையும் இணைக்கக்கூடிய ஒரு விஷயம் நிச்சயம் இந்த அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளேதான் இருக்கு "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 17) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X