For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"எப்போ குடி வந்தார்?.. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (16)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடன் சில விநாடிகள் யோசிப்பாய் இருந்துவிட்டு அதிர்ச்சி விலகாத முகத்தோடு ஆதிகேசவனை ஏறிட்டார்.

" வான்மதியோட மரணமும் கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்கிற மெடிக்கல் டிஸ்ஆர்டர் வகையைச் சேர்ந்ததுதானா ..... ? "

" ஆமா....... ஸார் "

" சரி, அதுக்கப்புறம் அந்த ரியல் எஸ்டேட் ஒனர் அன்வர் அலி இந்த 144 ஃப்ளாட்டுக்கு எப்போ குடி வந்தார் ..... ? "

" அடுத்த மூணுமாசத்துக்குள்ளாகவே அன்வர் அலி அந்த 144 ஃப்ளாட்டுக்கு வந்து ஆர்ப்பாட்டமாய்
வித்தியாசமான பூஜைகள் சிலவற்றை பண்ணினார். ஏதோ ஒரு தர்ஹாவிலிருந்து இஸ்லாமிய பெரியவர் ஒருத்தரைக் கூட்டிட்டு வந்து நடு ராத்திரியில் ஃப்ளாட் பூராவும் சாம்பிராணிப் புகையைப் போட்டு மயிலிறகு தோரணங்கள் கட்டி பூஜை போட்டார். அடுத்த நாள் மத்தியானம் கிடா வெட்டி தன்னோட நண்பர்களுக்கும் சொந்தக்காரங்களுக்கு கறி பிரியாணி விருந்து போட்டார்.

flat number 144 adhira apartment episode 16

" பூஜைக்கும் விருந்துக்கும் இங்கே இருக்கிற அப்பார்ட்மெண்ட்வாசிகளைக் கூப்பிட்டாரா அன்வர் அலி..... ? "

" ம்.... கூப்பிட்டார்.... ஆனா யாரும் போகலை. வெல்ஃபேர் அஸ்ஸோசியேஷன் தலைவர் ராவ்டே பிந்தர் மட்டும் அன்னிக்கு சாயந்தரம் 144 ஃப்ளாட்டுக்குப் போய் அன்வர் அலியைப் பார்த்து பேசியிருக்கார். அன்வர் அலி அந்த ஃப்ளாட்டில் நாலு பெண்கள் இறந்து போனது பற்றி ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கலை. அப்படியே அது ஒரு அமானுஷ்யமான விவகாரமாய் இருந்தாலும் தான் செய்த பூஜைகள் அதையெல்லாம் சுத்தம் பண்ணிடும்ன்னு சொல்லியிருக்கார். ராவ்டே பிந்தரும் இந்த ஃப்ளாட்ல தங்கறது அவ்வளவு சரியில்லை. கூடிய சீக்கிரமே வேற ஒரு ஃப்ளாட்டுக்கு குடி போயிடறது பெட்டர்ன்னு சொல்லியிருக்கார். அதுக்கு அன்வர் அலி சிரிச்சுகிட்டே என்ன சொன்னார் தெரியுமா ஸார் ..... ? "

" என்ன சொன்னார் ..... ? "

" அவரோட ஜாதகப்படி அவர்க்கு வயசு தொன்னூத்தி அஞ்சாம். தொன்னூறு வயசு வரைக்கும் எந்த வியாதியோ, எந்த ஒரு விபத்தோ அவர்க்கு வராதாம். இந்த அதிரா அப்பார்ட்மெண்டிலேயே அதிக நாள் உயிர் வாழப் போகிற நபர் நான் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்ன்னு அன்வர் அலி சொல்லியிருக்கார். அதுவும் இல்லாமே அவர் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டிருக்கார் "

" என்ன ..... ? "

" இந்த குறிப்பிட்ட ஃப்ளாட் நெம்பர் 144 எண் கணித விதிப்படி அதாவது நியூமராலஜிகல் விதிப்படி ஒரு விபரீதமான எண். ஒரு வகையில் பார்த்தா யோக எண். இந்த ஃப்ளாட்டில் வந்து தங்கும் நபர்களுக்கு ஏற்றவாறு தன்னோட குணாதிசயங்களை மாற்றிக்கொள்ளுமாம் அந்த 144 எண் "

" பேத்தல்" என்றார் சந்திரசூடன்.

" அப்படி சொல்லாதீங்க ஸார்.... எனக்கும் இந்த ஜாதகம், ஜோதிடம், கைரேகை, நியூமராலஜி மாதிரியான விஷயங்களில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாமே இருந்தது. ஆனா சில வருஷங்களுக்கு முன்பு நான் வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தபோது கோவில் வளாகத்துல ஒரு பெரியவரைப் பார்த்தேன். கோவில்ல அன்னிக்கு சரியான கூட்டம். உட்கார எங்கேயும் இடமில்லாததால் பெரியவர்க்கு பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன இடைவெளி இடத்துல போய் உட்கார்ந்தேன். பெரியவர் இன்னமும் சற்று நகர்ந்து இடம் கொடுத்துக்கொண்டே " நல்லா வசதியா உட்காருங்க" என்றார். நானும் உட்கார்ந்தேன் "

சந்திரசூடன் மெல்லச் சிரித்தார்.

" அந்த பெரியவர் உடனே உங்களுக்கு ஜோஸியம் சொல்ல ஆரம்பிச்சுட்டாரா..... ?"

" அவர் சொன்னது ஜோஸியம் மாதிரி இல்லை ?"

" அப்புறம்..... ?"

" என்னைப் பார்த்ததும் வெளியூரான்னு கேட்டார். நான் ஆமான்னு சொன்னதும் ரொம்பவும் குழப்பத்தோடு கோயிலுக்கு வந்து இருக்கீங்க போலிருக்கு. என்ன பிரச்சினைன்னு கேட்டார். நான் உடனே என்னோட பொண்ணு கோபிகாவோட ஜாதகம் எந்த வரனுக்கும் பொருந்தி வரமாட்டேங்குது. கல்யாணமாறதே கஷ்டம்ன்னு எல்லா ஜோஸியகாரங்களும் சொல்லிட்டாங்க. ஒரே ஒரு ஜோஸியர் மட்டும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்ன்னு சொன்னார். நானும் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணுமே என்கிற கவலையில் கோயிலுக்கு வந்தேன்னு சொன்னேன். அதுக்கு அவர் உங்க பொண்ணுக்கு கல்யாணமாகும். அப்படி கல்யாணம் நடந்த பிறகு அவளுக்கு அது ஒரு வித்தியாசமான வாழ்க்கையாய் இருக்கும்ன்னு சொன்னார். நான் குழப்பத்தோடு அது என்ன வித்தியாசமான வாழ்க்கைன்னு கேட்டேன். அதுக்கு அவர் என்னோட மனசுக்குப்பட்டதை சொன்னேன். அவ்வளவுதான்னுட்டார். நானும் கோபிகாவுக்கு கல்யாணமானா போதும் என்கிற எண்ணத்துல மேற்கொண்டு அவர்கிட்ட வற்புறத்தி கேட்கலை "

சந்திரசூடன் தன் குரலில் கலந்திருந்த கேலி குறையாமல் கேட்டார்.

" அதுக்கப்புறம் அவர் ஏதும் சொல்லலையா ..... ? "

" சொன்னார் "

" என்ன ..... ? "

" இப்ப இருக்கிற இடத்தை விட்டுட்டு வேற ஒரு இடத்துக்கு குடிபோகிற எண்ணம் வேண்டாம். மீறிப்போனால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்ன்னு சொன்னார். அன்னிக்கு அவர் சொன்னதையெல்லாம் நான் அவ்வளவு சீரியஸாய் எடுத்துக்கொள்ளாததின் விளைவை இப்ப நானும் என்னோட பொண்ணும் அனுபவிச்சுட்டு இருக்கோம். நாங்க இந்த ஃப்ளாட்டுக்கு வந்திருக்க கூடாது "

" சரி.... அன்வர் அலி ஃப்ளாட் நெம்பர் 144 எண் பற்றி சொல்லும்போது அது ஒரு விபரீதமான எண்ன்னு சொன்னதாய் குறிப்பிட்டீங்க. அது எப்படீன்னு சொல்ல முடியுமா ..... ? "

ஆதிகேசவன் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

" ஸார்.... ஃப்ளாட் எண் 144 ன் கூட்டுத்தொகை ஒன்பது. எண் கணிதப்படி 9ம் எண் நல்ல எண். மேன்மைத்தரக்கூடியது. ஆனா அந்த கூட்டுத்தொகை வந்ததற்கான எண்கள் சரியில்லை. எண் 1 சூரியனுக்குரியது. எண் 4 ராகுவுக்கு உரியது. அதுவும் 144ல் ரெண்டு நான்குகள். ராகு சூரியன் பகை கிரகங்கள். இதன் கூட்டுத்தொகையான 9 எண் செவ்வாய்க்குரியது. செவ்வாய் கிரகம் ரத்தம் சம்பந்தப்பட்ட கிரகம். எதிர்பாராத ரத்த இழப்பு, மரணங்களுக்கு செவ்வாய் காரணமாய் இருப்பதால்........ "

ஆதிகேசவன் பேசப்பேச சந்திரசூடன் கோபமாய் கை உயர்த்தினார்.

" போதும் ஆதிகேசவன், உங்க கதாகாலட்சேபம்.... உங்ககிட்ட பேசிட்டிருந்தா இந்த அப்பார்ட்மெண்டில் நடந்த ஆறு பேரோட மரணங்கள் பற்றின ஏதாவது ஒரு உண்மை கிடைக்கும்ன்னு பார்த்தா நீங்க என்னையே பயமுறுத்தற மாதிரி ஃப்ளாட் நெம்பர் 144 பற்றின ஜோதிடரீதியான விஷயங்களை சொல்றீங்க. நீங்க வேணும்ன்னா அதை நம்பலாம். ஆனா நான் அப்படியெல்லாம் நம்பிட்டு போயிட முடியாது "

ஆதிகேசவன் தன்னுடைய இரண்டு கைகளையும் வேகமாய் ஆட்டி மறுத்தார்.

" ஸாரி ஸார்..... நான் இப்ப உங்க கிட்ட சொன்னதெல்லாம் மத்தவங்க அந்த ஃப்ளாட் 144ஐப் பற்றி சொன்னதுதான். இது என்னோட தனிப்பட்ட கருத்து கிடையாது. உண்மையில் எனக்கும் ஜோதிடம், நியூமராலஜியில் பெரிய நம்பிக்கை எல்லாம் கிடையாது.... ஸார்....... நடந்த மரணங்களுக்குப் பின்னாடி எதுமாதிரியான மர்மம் ஒளிஞ்சிட்டிருக்குங்கிற உண்மையை நீங்க கண்டுபிடிச்சுட்டீங்கன்னா அதுவே இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு ஒரு பெரிய விடிவு காலமாய் அமையும் "

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் நின்றிருந்த கபிலன் சந்திரசூடனை மெல்ல ஏறிட்டான்.

" ஸார்..... ஆதிகேசவன் ஸாரும் நானும் உண்மையைக் கண்டுபிடிக்கிற இந்த விஷயத்துல உறுதுணையாய் இருப்போம். அவர்க்கு இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற நபர்களில் ஒரு எழுபது சதவீதம் பேரையாவது தெரியும். உங்களுக்கு எதுமாதிரியான தகவல்கள் வேண்டப்பட்டாலும் சரி, அவரால சேகரம் பண்ணிக் கொடுக்க முடியும் "
சந்திரசூடன் சற்றே கோபம் தணிந்தவராய் ஆதிகேசவனை ஏறிட்டார்.

" ஸாரி.... கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன். டோண்ட் மைண்ட் இட்.... சரி.... அந்த அன்வர் அலி இந்த 144 எண் ஃப்ளாட்டில் எத்தனை மாசம் வரைக்கும் இருந்தார் ..... ? "

" அவர் ஒரு ஆறு மாசம் வரைக்கும் தன் குடும்ப உறுப்பினர்களோடு அம்மா, அப்பா, மனைவி, ஒரு குழந்தையோடு சந்தோஷமாய்த்தான் இருந்தார். ரியல் எஸ்டேட் பிசினஸும் நல்லபடியாய் போயிட்டிருக்கிறதாய் அஸ்ஸோஸியேஷன் தலைவர் ராவ்டே பிந்தர்கிட்டே சொல்லியிருக்கார். இந்த நிலைமையில்தான் ஒரு நாள் அன்வர் அலி அப்பார்ட்மெண்ட்டின் பேவ்மெண்ட்டில் வாக்கிங் போயிட்டிருந்தபோது சத்தமே இல்லாமே மயக்கம் போட்டு சாய்ஞ்சுட்டார். ஹாஸ்பிடல் போறதுக்குள்ளே இறந்துட்டார். அதுக்கப்புறம் அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு யாரும் குடி வரலை. நாக்பூரில் இருக்கிற ஃப்ளாட் ஒனர் கன்ஷிராமும் இனிமே அந்த ஃப்ளாட்டை யார்க்கும் வாடகைக்கு விடப் போறதில்லைன்னு சொல்லிட்டார் "

சந்திரசூடன் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு கேட்டார்.

" அன்வர் அலிக்குப் பிறகு அந்த ஃப்ளாட்டுக்கு யாரும் குடி வர யாரும் முன் வரலையா ..... ? "

" வரலை "

" ஃப்ளாட் இப்போ எத்தனை மாசமாய் காலியாய் இருக்கு ..... ? "

" ஆறேழு மாசம் இருக்கும் "

" பை....த....பை.... அந்த ஃப்ளாட் எண் 144 ஐ நான் பார்க்கலாமா ..... ? "

" எ.....எ.....எதுக்கு ஸார் ..... ? "

" இவ்வளவு மரணங்களுக்குக் காரணமான அந்த ஃப்ளாட் எப்படியிருக்குன்னு நான் பார்க்க வேண்டாமா ..... ? ஃப்ளாட்டோட சாவி யார்கிட்டே இருக்கு ..... ? "

"அஸ்ஸோஸியேஷன் தலைவர் ராவ்டே பிந்தர்கிட்டேதான் இருக்கு. நான் வேணும்ன்னா போன் பண்ணி அவரை ஃப்ளாட்கிட்டே வரச் சொல்லட்டுமா ஸார் ? "

" ம்...... போன் பண்ணுங்க..... 144 ஃப்ளாட் எந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கு ? "

" கடைசியில் இருக்கிற எக்ஸ் அப்பார்ட்மெண்ட்ல ஸார் "

*******

எக்ஸ் அப்பார்ட்மெண்ட் அந்தப் பகல் வேளையிலேயே ஏதோ ஒரு சாயந்தர வேளையில் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. இதயத்துடிப்பு தானாகவே அதிகரித்தது. முதல் மாடியிலேயே இருந்த அந்த 144 எண் ஃப்ளாட்டின் கதவுக்கு முன்பாய் போய் நின்றார் சந்திரசூடன். பக்கத்திற்கு ஒருவராய் ஆதிகேசவனும், கபிலனும் நின்றார்கள். கதவின் நிறம் வெகுவாய் மங்கிப் போயிருக்க என்றைக்கோ சாத்தப்பட்ட மலர் மாலைகள் வாடி சருகாகி சரம் சரமாய் தொங்கின. கதவு முழுக்க ஒரு அங்குலம் இடைவிடாமல் குங்கும பொட்டுகள் வைக்கப்பட்டு பழுப்பு நிறத்தில் தெரிந்தன. கதவின் மையத்தில் ஆணி ஒன்று அடிக்கப்பட்டு அதில் கால பைரவர் படம் மாட்டப்பட்டு காற்றுக்கு லேசாய் ஆடியது. சந்திரசூடன் ஆதிகேசவனிடம் கேட்டார்.

" ராவ்டே பிந்தர் இன்னும் வரலை ..... ? "

" இப்ப வந்துடுவார் ஸார் "

" கதவையெல்லாம் இப்படி அலங்கோலம் பண்ணி வெச்சது யாரு... எதுக்காக இவ்வளவு குங்குமப் பொட்டுகள் ..... ? "
" அது.... அது.... குங்குமப் பொட்டுகள் இல்ல ஸார் ..... "

" பின்னே ..... ? "

" ரத்தத்தை தொட்டு பொட்டு வெச்சிருக்காங்க "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 16) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X