• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"என்ன மேடம்.. அடையாளம் தெரியுதா... ?".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (23)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வாஹினியின் மனசுக்குள் பயம் உதைத்துக்கொண்டிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் ட்ரேயை நெருங்கி மெல்ல எட்டிப் பார்த்தாள்.

உடம்பு முழுவதும் சீராய் கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் ஏதோ ஒரு கற்சிலைப் போல விறைத்துப் போயிருந்தது. உடம்பின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டு விடாமல் ஒருவித எச்சரிக்கை உணர்வோடு பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்ததை உன்னிப்பாய் கவனித்த வாஹினி அந்தப் பெண்ணின் முகத்திற்கு பார்வையைக் கொண்டு போய் நிறுத்தினாள். உடல் என்னதான் உறைநிலையில் வைத்து பாதுகாப்பாய் ப்ரஸர்வ் செய்யப்பட்டிருந்தாலும் நாசி பாகமும், கன்னங்களும் வீங்கி உப்பலாய் தெரிந்தன.

flat number 144 adhira apartment episode 23

சந்திரசூடன் வாஹினியை நெருங்கியபடி கேட்டார்.

" என்ன மேடம்..... இது லட்சணாதானா..... அடையாளம் தெரியுதா ..... ? "

" பாடி லேசாய் டீ கம்போஸாகியிருக்குன்னு நினைக்கிறேன் "

" மே...பி.....பாடி இங்கே வந்து பத்து நாளாச்சு மேடம். இன்னும் போஸ்ட்மார்ட்டம் கூட பண்ணலை "

" ஏன் போஸ்ட்மார்ட்டம் பண்ணலை ..... ? "

" போஸ்ட்மார்ட்டம் பண்ணினா பாடியோட ஷேப், முக அடையாளம் முற்றிலும் மாற வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொன்னதால பாடி யாருன்னு அடையாளம் தெரிஞ்ச பின்னாடி பி.எம். நடத்திக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். நீங்க இந்த பாடியை இன்னும் கொஞ்சம் கீன் அப்ஸர்வ் பண்ணி மெதுவா பதில் சொல்லுங்க மேடம்..... அவசரமில்லை...... "

" முகத்தைப் பார்த்தா லட்சணா மாதிரி தெரியலை "

" ஆர் யூ ஷ்யூர் ..... ? "

" எஸ் இது வேற யாரோ ..... ? "

" அப்படீன்னா சரி வாங்க போலாம் " சந்திரசூடன் சொல்லிவிட்டு நகர முயல, வாஹினி அசையாமல் அப்படியே நின்றாள்.

" என்ன மேடம் ..... ? "

" ஒரு நிமிஷம் ஸார்...... இது லட்சணாவா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஒரு வழி இருக்கு "

" என்ன வழி ..... ? "

" இருங்க..... கன்ஃபார்ம் பண்ணி சொல்றேன் " என்று சொன்ன வாஹினி தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு மார்ச்சுவரி அறையினின்றும் வெளியே வந்து ஒரு ஒரமாய் நின்றபடி செல்போனில் ஒரு நெம்பரை தேடி எடுத்து தேய்த்தாள். மறுமுனையில் உடனே ரிங் போய் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

" குட் ஆப்டர்நூன் மேடம்..... நான் இதயா பேசறேன் "

" இதயா...... நீ இப்போ வீட்ல இருக்கியா ? ஆபீஸ்ல இருக்கியா ..... ? "

" ஆபீஸ்லதான் மேடம் "

" ஒரு அஞ்சு நிமிஷம் உன்கிட்ட பேசலாமா ..... ? "

" பேசலாம் ..... என்ன விஷயம் மேடம் ..... ? "

" உன்னோட ஃப்ரண்ட் லட்சணா பத்துநாளா ஹாஸ்டலில் இல்லை... எங்கே போனாள்ன்னு தெரியலைன்னு நீ எனக்கு போன் பண்ணி விசாரிச்சே இல்லையா ..... ? "

" ஆமா மேடம் "

" அவளைப்பத்தின தகவல் ஏதாவது கிடைச்சுதா ..... ? "

" இல்ல மேடம்.... நான் கூட விஜயவாடாவில் இருக்கற அவளுடைய அப்பாவுக்கு போன் பண்ணி லட்சணா அங்கே இருக்காளான்னு கேட்க நினைச்சு ரெண்டு தடவை ட்ரை செஞ்சேன். லாங் ரிங் போச்சு. அவர் போனை அட்டெண்ட் பண்ணலை. உங்களுக்கு ஏதாவது லட்சணாவைப் பத்தின தகவல் கிடைச்சுதா மேடம் ..... ? "

" இன்னும் இல்லை.... ஆனா ஒரு விஷயத்துல எனக்கு உன்னோட கன்ஃபர்மேஷன் வேணும் "

" என்னான்னு சொல்லுங்க மேடம் "

" ரெண்டு வருஷத்துக்கு முந்தி லட்சணா டூவீலரில் போகும்போது ஒரு டிப்பர் லாரி மோதி ஆக்ஸிடெண்ட் ஆச்சு இல்லையா ..... ? "

" ஆமா மேடம் ..... "

" அந்த ஆக்ஸிடெண்ட்ல லட்சணாவோட இடது கைவிரல்களில் சுண்டுவிரல் கட்டாகி, அந்த விரலை மறுபடியும் பொருத்த முடியாமே அதுக்குப் பதிலா செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பிராஸ்தடிக் ஃபிங்கர் பொருத்தப்பட்டதாய் கேள்விப்பட்டேன். ஆறு மாசத்துக்கு முந்தி லட்சணா என்னைப் பார்க்க வந்தப்ப நான் ஏதேச்சையா அவளோட இடது கை சுண்டு விரலை கவனிச்சேன். அது செயற்கையான பிளாஸ்டிக் விரல் மாதிரியே எனக்கு தெரியலை. ஏதோ நிஜமான விரல் மாதிரியே நெயில் பாலீஷ் தீட்டப்பட்ட நகப்பூச்சோடு தெரிஞ்சுது...."

" உண்மைதான் மேடம்.... நான் கூட பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். அது ஒரு வகையான சிலிகான் பிராஸ்தடிக் ஃபிங்கர். அவளுடைய நிறத்துக்கு ஏற்றமாதிரியான விரல் அது. பார்க்கிற யார்க்குமே அது ஒரு செயற்கையான விரல்ன்னு தோணாது. இப்ப எதுக்காக மேடம் இந்த கேள்வியைக் கேக்கறீங்க..? "

" இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே நான் மறுபடியும் உனக்கு போன் பண்றேன் "வாஹினி பேசிவிட்டு செல்போனை அணைத்த விநாடி மார்ச்சுவரியிலிருந்து சந்திரசூடன் குழப்பம் மண்டிய முகத்தோடு வந்தார்.

" என்ன மேடம்.... இப்ப நீங்க யார்க்கு போன் பண்ணீங்க ..... ? "

வாஹினி விஷயத்தைச் சொல்ல அவருடைய முகம் மாறியது.

" யூ மீன் இந்த டெட்பாடியோட இடது கையின் சுண்டுவிரல் பிராஸ்தடிக் ஃபிங்கராய் இருந்தா அது லட்சணாவாய்த்தான் இருக்க முடியும்ன்னு சொல்ல வர்றீங்களா ..... ? "

" எஸ்.... உடனடியாய் போஸ்ட்மார்ட்டம் பண்ற டாக்டர்ஸ் யாரையாவது கூப்பிட்டு அந்த இடது கை சுண்டுவிரலை மட்டும் டெஸ்ட் பண்ணி பார்க்கச் சொல்லுங்க.....அவ லட்சணாவா இல்லையாங்கிற உண்மை உடனடியா தெரிஞ்சுடும்"

சந்திரசூடன் திரும்பிப் பார்த்து " யூசூப் " என்று குரல் கொடுக்க மார்ச்சுவரிக்குள் இருந்த நபர் ஓட்டமும் நடையுமாய் வந்தார்.

" ஸார்...... "

" பி.எம்.பண்ற டாக்டர்களில் இப்ப யார் ட்யூட்டியில் இருக்காங்க ..... ? "

" டாக்டர் வில்லியம்ஸ் இருக்கார் ஸார் "

" அவரோட செல்போன் நெம்பர் உன்கிட்ட இருக்கா ..... ? "

" இருக்கு ஸார் "

" சொல்லு " சந்திரசூடன் தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டார்.

*********

டாக்டர் வில்லியம்ஸ் தன்னுடைய தலையின் முன் வழுக்கையில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை ஒற்றிக்கொண்டே போஸ்ட்மார்ட்டம் அறையிலிருந்து வெளிப்பட, வெளியே காரில் காத்திருந்த சந்திரசூடனும், வாஹினியும் அவரை ஆர்வமாய் எதிர்கொண்டார்கள்.

வில்லியம்ஸ் வாஹினியை ஏறிட்டார்.

" மேடம்..... நீங்க சந்தேகப்பட்டது சரிதான். அந்த டெட்பாடியோட இடது கையின் சுண்டுவிரல் பிராஸ்தடிக் ஃபிங்கர்தான்...... உயர்தர சிலிகான் மற்றும் சைலாஸ்டிக் ஜெல் ரெண்டும் சேர்ந்த பயோ கலவையால் உருவாக்கப்பட்ட லிட்டில் ஃபிங்கர் அது. ஒரு முறையான போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டிருந்தால் கூட அந்த லிட்டில் ஃபிங்கரை நான் கவனிச்சிருக்க மாட்டேன். நீங்க குறிப்பிட்டு சொன்னதாலதான் அதை எக்ஸாமின் பண்ண முடிஞ்சுது. யூ ஆர் ஹேவிங் ஏ குட் அண்ட் வெரி கீன் அப்ஸர்வேஷன். ஸ்மேஷ் பத்திரிக்கை ஒரு பவர் ஃபுல் சர்க்குலேஷனோடு பரபரப்பாய் விற்பனையாகறதுக்கு காரணம் உங்க கிட்டே இருக்கிற இப்படிப்பட்ட ஒரு அசாத்தியமான திறமைதான் "

வாஹினியின் கண்களில் நீர் பனித்தது.

" ஸாரி டாக்டர் ....... அது லட்சணாவாய் இருக்கக்கூடாதுன்னு மனசுக்குள்ளே ப்ரே பண்ணிட்டு இருந்தேன். ஷி ஈஸ் ஏ ஜெம். லட்சணா மாதிரியான ஒரு துணிச்சலான ஜர்னலிஸ்ட்டை பார்க்க முடியாது. சச் ஏ பிரில்லியண்ட் அண்ட் பிரேவ் கேர்ள். ஐ லாஸ்ட் ஹெர் "

" ஸாரி மேடம்.... உங்க உணர்வுகளைப் புரிஞ்சுக்காமே நான் ஒரு டாக்டராய் பேசிட்டேன். எந்த ஒரு பெண்ணுக்குமே லட்சணா மாதிரியான நிலைமை வரக்கூடாது. கொலையாளிக்கு லட்சணா மேல் கொலை வெறி மட்டுமில்லை.... வேறு ஏதோ ஒரு வன்மமும் இருந்திருக்கணும். இல்லேன்னா அவளோட உயிரற்ற உடம்புக்கு இப்படி கறுப்புப் பெயிண்ட் பூசியிருக்க முடியாது " சொன்ன டாக்டர் வில்லியம்ஸ் பக்கத்தில் நின்றிருந்த சந்திரசூடனிடம் திரும்பினார்.

" முழு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே ரெடியாயிடும் ஸார். நீங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து யாரையாவது அனுப்புங்க. கொடுத்து விடறேன் "

" தேங்க்யூ டாக்டர்....... "

வில்லியம்ஸ் அங்கிருந்து நகர்ந்துவிட கண்ணீரில் நனைந்த விழிகளோடு கார்க்கு சாய்ந்தபடி நின்றிருந்த வாஹினியை நெருங்கினார் சந்திரசூடன்.

" மேடம்.....கடந்த பத்து நாட்களாய் விடை தெரியாமே இருந்த ஒரு கேள்விக்கு இன்னிக்கு பதில் கிடைச்சிருக்கு. லட்சணாவின் இந்த நிலைமைக்கு காரணமான நபர் யாராக இருந்தாலும் சரி அவங்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு..... இந்த விஷயத்துல உங்க ஒத்துழைப்பு எனக்கு வேணும் "

வாஹினி கண்ணாடியைக் கழற்றிவிட்டு கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே குரல் கம்மக் கேட்டாள்.

" உங்களுக்கு எதுமாதிரியான ஒத்துழைப்பு வேணும் ..... ? "

" லட்சணா ஏதோ ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தான்னு சொன்னீங்க ..... ? "

" ஆமா....வெஸ்ட் மாம்பலத்தில் பூரணி லேடீஸ் நெஸ்ட் என்கிற ஹாஸ்டலில் ஸ்டே பண்ணியிருந்தா "

" அந்த ஹாஸ்டலுக்கு இப்ப போறோம். லட்சணா தங்கியிருந்த அறையை ஒரு முழுமையான சோதனைக்கு உட்படுத்தினா சின்னத் தடயமாவது கிடைக்காமல் போகாது. இன்வெஸ்டிகேஷனை ஸ்பீட் அப் பண்ணினா குற்றவாளியை நெருங்கிடலாம். ஷேல் வீ மேக் ஏ மூவ் .....? " சொன்னவர் காருக்குள் ஏறினார். வாஹினி பக்கத்து இருக்கையில் உட்கார கார் நகர்ந்து வேகம் பிடித்தது.

கார் கண்ணிலிருந்து மறையும் வரை அதைப் பார்த்துக்கொண்டிருந்த மார்சுவரி ஆள் யூசூப் பிறகு மெல்ல தன்னுடைய செல்போனை எடுத்து காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஒரு எண்ணைத் தேடி எடுத்து தேய்த்து காதில் வைத்தான். பார்வையைத் துரத்தி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.

சில விநாடிகளுக்கு பின் மறுமுனையில் ரிங் போய் ஒரு ஆண் குரல் கேட்டது.

" என்ன யூசூப்.....? "

யூசூப் செல்போனில் வெகுவாய் குரலைத் தாழ்த்தினான்.

" அந்த பெண்ணோட பாடியைப் பார்த்து அது லட்சணாதான்னு கண்டுபிடிச்சுட்டாங்க "

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 22) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X