• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"விஷயம் என்னான்னு சொல்லும்மா".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (21)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செல்போனை அட்டெண்ட் செய்யலாமா வேண்டாமா என்று ஒரு சில விநாடிகள் யோசித்த சந்திரசூடன் பிறகு டிஸ்ப்ளேயில் தெரிந்த எண்ணைத் தொட்டுவிட்டு இடது காதுக்கு பொத்தினார்.

" சொல்லு ..... கோபிகா "

" ஸார்..... நீங்க இப்ப எங்கே இருக்கீங்க..... ? "

" மொதல்ல விஷயம் என்னான்னு சொல்லும்மா "

" நீங்க உடனடியா புறப்பட்டு அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு வரணும். ரொம்பவும் அவசரம் "

லேசாய் எரிச்சலானார் சந்திரசூடன்.

" இதோ பாரம்மா....நான் இப்போ ஒரு முக்கியமான விஷயமா வெளியே கிளம்பிட்டிருக்கேன். நீ சொல்லப் போற விஷயம் எந்த அளவுக்கு முக்கியமானதுன்னு தெரிஞ்சாத்தான் நான் அப்பார்ட்மெண்ட்டுக்கு புறப்பட்டு வரமுடியும் ..... ? "

flat number 144 adhira apartment episode 21

" விஷயம் ரொம்பவும் முக்கியமானதுதான் ஸார் "

" அப்ப என்னான்னு சொல்லு "

" நீங்க போன வாரம் என்கொயரி பண்றதுக்காக அப்பார்ட்மெண்ட் வந்தப்ப ஃப்ளாட் நெம்பர் 144ஐப் பூட்டி சீல் வெச்சுட்டு போனீங்க இல்லையா ..... ? "

" ஆமா "

" ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னாடி நான் எங்க சிட்அவுட்ல இருக்கிற செடிகளுக்கு உரம் போட்டுகிட்டு இருந்தப்ப அந்த ஃப்ளாட்டைப் பார்த்தேன். ஒரு ஜன்னல் கண்ணாடி சரியா சாத்தப்படாத காரணத்தால ஃப்ளாட்டோட உட்புறம் லேசா தெரிஞ்சுது. நான் அதைப்பத்தி என்னோட அப்பாகிட்டே சொல்லணும்ன்னு நினைச்சுட்டு இருக்கும்போதே அந்த சம்பவம் நடந்தது ஸார் "

" என்ன சம்பவம் ..... ? "

" சரியா சாத்தப்படாத அந்த ஜன்னல் கதவை உள்ளேயிருக்கிற யாரோ வெளியே கையை நீட்டி இழுத்து சாத்தினாங்க "

சந்திரசூடனின் உடம்புக்குள் ஒர் அதிர்வலை பரவியது.

" நீ என்னம்மா சொல்றே.... பூட்டி சீல் வெச்ச ஃப்ளாட்டுக்குள்ளே ஆள் எப்படி இருக்க முடியும் ..... ? "

" அதான் ஸார் எனக்கு ஆச்சர்யம் "

" சரி... உன்னோட அப்பாகிட்டே இதைப்பத்தி சொன்னியா கோபிகா ..... ? "

" சொன்னேன் ஸார் "

" அப்பா பக்கத்துல இருக்காரா ..... ? "

" ம்..... இருக்கார் "

" போனை அவர்கிட்ட குடும்மா "

" இதோ தர்றேன் ஸார் "

அடுத்த சில விநாடிகளில் கோபிகாவின் அப்பா ஆதிகேசவன் பேசினார்.

" ஹலோ... "

" என்ன ஸார் உங்க டாட்டர் கோபிகா சொல்றது உண்மையா ..... ? "

மறுமுனையில் மெளனம்.

ஆதிகேசவனின் குரலுக்காக சில விநாடிகள் காத்திருந்த சந்திரசூடன் பிறகு பொறுமை இழந்தவராய் " என்ன பேச்சையே காணோம்.... நான் பேசறது உங்களுக்கு கேக்குதா ஸார் ? " என்றார்.

ஆதிகேசவன் குரலைத் தாழ்த்தினார். " கேக்குது ஸார்..... கோபிகா பக்கத்துல நின்னுட்டு இருந்ததால உடனே உங்களுக்கு பதில் சொல்ல முடியலை... இப்பத்தான் கிச்சனுக்குள்ளே குக்கர் கத்துதேன்னு போனா..... கோபிகா சொன்ன மாதிரி அந்த 144 நெம்பர் ஃப்ளாட்ல யாரும் இல்ல ஸார்..... அது அவளோட கற்பனையாய் இருக்கும்ன்னு நினைக்கிறேன் "

" சரியாய் சாத்தப்படாத ஜன்னல் கதவை உள்ளேயிருக்கிற யாரோ வெளியே கையை நீட்டி இழுத்து சாத்தினாங்கன்னு கோபிகா அவ்வளவு தெளிவாய் சொல்றாளே ..... ? "

" ஸார்..... நான் கோபிகாவைப்பத்தி ஏற்கனவே உங்ககிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிட்டேன். அவ பேசறது எல்லாமே தெளிவாயும் நம்பற மாதிரிதான் இருக்கும். 144 நெம்பர் ஃப்ளாட்டோட விஷயமும் அப்படித்தான். நீங்க அந்த ஃப்ளாட்டை பூட்டி சீல் வெச்சுட்டு போன நாளில் இருந்தே கோபிகா அடிக்கடி சிட்அவுட்ல போய் நின்னுகிட்டு ஃப்ளாட்டையே பார்த்துட்டிருப்பா....."

" ஏன் பார்த்துட்டிருக்கேன்னு நீங்க கேக்கலையா ..... ? "

" கேட்டேன் ஸார் "

" நான் கேட்ட அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமே மெளனமா போயிட்டா. அதுக்கப்புறம் அவகிட்டே அதைப்பத்தி பேசறதேயில்லை "

" சரி....இன்னிக்கு கோபிகா அந்த வீட்டுக்குள்ளே யாரோ இருக்காங்க... உள்ளேயிருந்துகிட்டே ஜன்னல் கதவை சாத்தறாங்கன்னு சொன்னதும் அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அந்தப் ஃப்ளாட்டைப் போய் பார்த்தீங்களா ..... ? "

" உடனே போய்ப் பார்த்தேன் ஸார்.... நீங்கப் போனவாரம் அந்த ஃப்ளாட்டைப் பூட்டி எப்படி சீல் வெச்சுட்டுப் போனீங்களோ அதே மாதிரிதான் ஃப்ளாட் இருக்கு. யாரும் உள்ளே இருக்க வாய்ப்பேயில்லை "

" அப்புறம் கோபிகா ஏன் அப்படியொரு பொய்யைச் சொல்லணும் ..... ? "

" ஸார்..... கோபிகாவுக்கு பொய் சொல்லணும்ங்கிற இன்டென்ஷன் கிடையாது. அவ ஒரு ரெட்ரோக்ரேட் பேஷண்ட்ன்னு ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேன். அவ இப்ப வாழ்ந்துட்டுகிட்டு இருக்கிற ஒரு வாழ்க்கை கற்பனைகள் கலந்த ஒரு நனவு வாழ்க்கை.... இனிமேல் கோபிகாகிட்டயிருந்து இப்படிப்பட்ட போன்கால்ஸ் வந்தா அதைப் பெரிசா எடுத்துக்க வேண்டாம் ஸார். இக்னோர் தெம்..... அவ பேசறதுல எந்த வார்த்தை உண்மை எந்த வார்த்தை கற்பனை எனக்கு மட்டும்தான் ஸார் தெரியும் "

" சரி..... 144 நெம்பர் ஃப்ளாட்டுக்கு மேல ரெண்டாவது மாடியில் குடியிருக்கிற பிரசன்னம் பார்க்கிற ஒரு வயசான மலையாளி அம்மா இருக்கிறதா சொன்னீங்க இல்லையா ..... ? "

" ஆமா "

" அந்த அம்மாவோட பேர் என்ன ..... ? "

" தாட்சாயிணி அம்மா "

" அவங்க நாகர்கோவிலில் இருக்கிற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்குப் போயிருக்கிறதாய் சொன்னீங்க..... வந்துட்டாங்களா ..... ? "

" வந்துட்டாங்க ஸார்..... அந்த அம்மாவோட ஃப்ளாட்ல லைட் எரியுது. மொட்டை மாடியில சிவப்பு சேலைகள் காயறதைப் பார்த்தேன் "

" இன்னிக்கு சாயந்தரம் அப்பார்ட்மெண்ட்டுக்கு வர்றேன். அந்த அம்மாகிட்ட ஒரு என்கொயரி நடத்த வேண்டியிருக்கு "

" வாங்க ஸார்.... நானே அந்த அம்மாகிட்ட கூட்டிட்டுப் போறேன் "

" தேங்க்யூ" சொன்ன சந்திரசூடன் செல்போனை அணைத்துவிட்டு லிஃப்ட்டுக்கு பக்கத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு மெளனமாய் நின்றிருந்த வாஹினியிடம் வந்தார்.

" ஸாரி மேடம்...... ஒரு அன் எக்ஸ்பெக்டட் போன்கால் அவாய்ட் பண்ண முடியலை..... உங்களை காக்க வெச்சுட்டேன் "

வாஹினி சின்னதாய் புன்னகைத்தாள்.

" நோ இஷ்யூஸ்...... நீங்க பேசறதை நானும் அப்ஸர்வ் பண்ணினேன். போலாமா ..... ? "

" ம் "

லிஃப்டில் இறங்கி கீழே வந்தார்கள்.

" மேடம்..... நீங்க எப்படி டி.ஜி.பி. ஆபீஸூக்கு வந்தீங்க.... பை கார் ..... ? "

" இல்ல என்னோட கார் சர்வீஸூக்குப் போயிருக்கிறதால டாக்ஸியில்தான் வந்தேன் "

" தென் நோ ப்ராப்ளம்... வாங்க என்னோட கார்லய போயிடலாம் " சந்திரசூடன் சொல்லிக்கொண்டே பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த டிபார்ட்மெண்ட்டுக்கு சொந்தமான இன்னோவா காரில் ஏறி ட்ரைவிங் சீட்டை ஆக்ரமித்தார். வாஹினி பக்கத்து சீட்டில் உட்கார்ந்தாள். கார் புறப்பட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறி பிரதான சாலைக்கு வந்ததும் சந்திரசூடன் கேட்டார்.

" மேடம்... இதுக்கு முன்னாடி ஜி.ஹெச்.மார்ச்சுவரிக்கு போய் எந்த ஒரு பாடியையாவது பார்த்து ஐடென்டிஃபை
பண்ணினது உண்டா ..... ? "

" இல்லை.... இதுதான் முதல் தடவை "

" மார்ச்சுவரி அட்மாஸ்பியர் கொஞ்சம் பார்மலின் நெடியோடு வயித்தைக் கலக்கறமாதிரி இருக்கும்.... "

" கேள்விப்பட்டிருக்கேன். நோ.... ப்ராப்ளம் ஒரு உண்மையை வெளியே கொண்டு வரணும்ன்னா இதுமாதிரியான சூழ்நிலைகளை ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்.... லட்சணா சமுதாய நலனில் அக்கறையுள்ள ஒரு துடிப்பான பெண். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார விவகாரங்களில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி, மீடியாக்களின் உதவியோடு அந்த நபரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துடுவா. போன மாசம் எக்ஸ் மினிஸ்டர் எழிலரசன் தன்கிட்டே உதவியாளராய் வேலை பார்த்த ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஆசை வார்த்தை காட்டி மோசம் பண்ணி அவ வயிற்றில் வளர்ந்துட்டிருந்த கருவையும் ஒரு மாத்திரை கொடுத்து கலைச்சிருக்கார். விஷயத்தை வெளியே சொன்னா கொலை பண்ணிடுவேன்னும் மிரட்டியிருக்கார். இந்த விஷயத்தை எப்படியோ தெரிஞ்சுகிட்ட லட்சணா தகுந்த ஆதாரங்களோடு மீடியாக்களின் உதவியோடு சி.பி.சி.ஐ.டி. போலீஸூக்கு கொண்டு போக எழிலரசன் இப்போ ஜாமீனில் கூட வெளியே வர முடியாத அளவுக்கு புழல் சிறையில் இருக்கார்"

சந்திரசூடன் காரை ஒட்டிக்கொண்டே ஒரு சிரிப்போடு தலையாட்டினார்.

" ஒ.... அந்த எக்ஸ் மினிஸ்டர் எழிலரசன் மாட்டிகிட்டது லட்சணாகிட்டதானா? போனமாசம் எல்லா சேனல்களின் பிரேக்கிங் நியூஸ் எழிலரசன்தான். லட்சணா ஹேஸ் டன் ஏ குட் ஜாப் "

" ரியலி " என்று சொன்ன வாஹினி லேசாய் குரலை இழுத்தாள்.

" நான் ஒரு விஷயத்தைப்பத்தி கேட்டா நீங்க தப்பா நினைக்கக்கூடாது... கேட்கலாமா ..... ? "

" பை ஆல் மீன்ஸ் "

" நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செல்போன்ல யார்கிட்டயோ பேசிட்டிருக்கும்போது அதிரா அப்பார்ட்மெண்ட் என்கிற பேரைச் சொன்னீங்க.. ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிற அப்பார்ட்மெண்ட்தானே ..... ? "

" ஆமா..... அந்த அப்பார்ட்மெண்ட்டைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா மேடம்..? "

" தெரியாது. ஆனா அந்த அப்பார்ட்மெண்ட்டைப்பற்றியும் அங்கே இருக்கிற ஃப்ளாட்144 ஐப் பற்றியும், அங்கே கடந்த ஆறு வருஷங்களில் நடந்த ஆறு மரணங்களைப் பற்றியும் என்னோட பத்திரிக்கை ஆபீஸூக்கு ஒரு அநாநிமஸ் லெட்டர் வந்தது. அந்த லெட்டரை டைப் பண்ணி அனுப்பியிருந்தவர், தன்னை ஒரு பயோ மெடிக்கல் என்ஜீனியர்ன்னு அறிமுகப்படுத்திகிட்டு தன்னோட பெயரைக் குறிப்பிடாமே லெட்டர் அனுப்பியிருந்தார் "

காரை ஒட்டிக்கொண்டிருந்த சந்திரசூடன் வேகத்தைக் குறைத்து அதிர்ச்சியோடு வாஹினியிடம் திரும்பினார்.

" லெட்டர்ல அவர் என்ன எழுதியிருந்தார் ..... ? "

" கிட்டத்தட்ட ரெண்டு பக்கத்துக்கு ஏதேதோ எழுதியிருந்தார். ஆனா அவர் எழுதினது எதுவுமே நம்பும்படியாய் இல்லை "

" நம்பும்படியாய் இல்லையா ..... ? "

" ஆமா.... ஜெல் பால் ப்ளாஸ்டர் என்கிற வார்த்தையை நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா ..... ? "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 20) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X