For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நீ நேர்ல பார்த்தியா?".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (19)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ராவ்டே பிந்தர் விழிகள் நிலைகுத்திப் போனவராய் நாற்காலியினின்றும் அதிர்ச்சியோடு எழுந்தார். மகள் பத்மஜாவை பயத்தோடு பார்த்தார்.

" எ...என்னம்மா சொல்றே ..... நீ நேர்ல பார்த்தியா ? "

பத்மஜா மையமாய் தலையாட்டினாள்.

" ஆமா டாடி ..... பார்த்தேன் "

" என்ன பார்த்தே......? "

பத்மஜா மெல்ல நடந்து போய் வாசற்கதவை சாத்திவிட்டு வர, வசந்தராவும் பதறிப் போனவளாய் மகளை நெருங்கி கையைப் பற்றினாள்.

" என்னடி....வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டறே.... உன்னோட அப்பா என்ன சொன்னாருன்னு நல்லா கவனிச்சியா ..... ? "

flat number 144 adhira apartment episode 19

" கவனிச்சுட்டுதாம்மா சொல்றேன். நேத்து ராத்திரி நான் அந்த சம்பவத்தைப் பார்த்தேன் "

ராவ்டே பிந்தர் திணறும் குரலில் கேட்டார்.

" என்ன பார்த்தேன்னு சொல்லு "

" டாடி..... நேற்றைக்கு ராத்திரியே உங்ககிட்ட இந்த விஷயத்தைச் சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஆனா இந்த அபார்ட்மெண்ட்ல நடந்துட்டு இருக்கிற சம்பவங்களைப் பார்த்து ஏற்கனவே நீங்க கடுமையான மன உளைச்சலில் இருக்கீங்க. இந்த சம்பவத்தையும் சொல்லி உங்க மனசை கலவரப்படுத்த விரும்பலை. நேத்து ராத்திரி நான் வீட்டுக்குள்ளே புழுக்கமாயிருக்கேன்னு மொட்டை மாடிக்குப் போனேன். மாடியோட வலதுபக்க பேராபெட் சுவர்க்குப் பக்கத்துல நின்னுட்டிருக்கும்போதுதான் கங்காதரன் அங்கிளோட கார் பேஸ்மெண்ட் பார்க்கிங் ஏரியாவில் வந்து நின்னது. அவரும் அவரோட ஒஃய்ப்பும் காரிலிருந்து இறங்கி அவங்க ஃப்ளாட் இருந்த பக்கமாய் நடந்து போனாங்க. நான் மொட்டை மாடியில் மேற்கொண்டு ஒரு பத்து நிமிஷம் நடந்துட்டு கீழே இறங்கிப் போலாம்ன்னு படியருகே வந்தப்ப என்னோட பார்வை மறுபடியும் பேஸ்மெண்ட் பார்க்கிங் ஏரியாவுக்கு போயிற்று. அப்பத்தான் கங்காதரன் அங்கிளோட கார்க்கு பக்கத்துல ஒரு வேன் வந்து நின்னது "

ராவ்டே பிந்தரின் நெற்றி சட்டென்று ஒரு சுருக்கத்துக்கு உட்பட்டது.

" வேனா ..... ? "

" ம்...... "

" என்ன வேன் அது ..... ? "

" தெரியலை டாடி.... பேஸ்மெண்ட் ஏரியாவில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால அது என்ன வேன்..... என்ன நிறம்ன்னு தெரியலை. நான் அந்த வேனைப் பார்த்துகிட்டு இருக்கும்போதே வேனில் இருந்து ரெண்டு பேர் இறங்கினாங்க. உருவங்கள் சரியா தெரியலை. ரெண்டு பேர்ல ஒருத்தன் கங்காதரன் அங்கிளோட காரோட டிக்கி பக்கமாய் நின்னுகிட்டு ஏதோ பண்ணிட்டிருந்தான். கொஞ்ச நேரத்துல காரோட டிக்கி ஒப்பனாயிடுச்சு. அடுத்த சில விநாடிகளுக்குள்ளே வேனிலிருந்து மூட்டை மாதிரி எதையோ தூக்கிட்டு வந்து காரோட டிக்கிக்குள்ளே திணிச்சாங்க. நான் உடனே என்னோட கையிலிருந்த செல்போன் வீடியோ காமிராவை ஆன் பண்ணி அதை சூட் பண்ணினேன். அப்படி சூட் பண்ணிட்டிருக்கும்போதே வேன் கிளம்பிப் போயிடுச்சு........ "

ராவ்டே பிந்தர் எரிச்சலோடு மகளை ஏறிட்டார்.

" என்ன பொண்ணும்மா நீ...... ரெண்டு பேர் வேன்ல வந்து ஒரு காரோட டிக்கியை திறந்து எதையோ உள்ளே திணிச்சுட்டு போயிருக்காங்க. உடனடியாய் நீ என்கிட்டே அதை சொல்லியிருந்தா நான் கங்காதரனுக்கு தகவல் கொடுத்து இருப்பேனே ..... ? "

" டாடி..... மொதல்ல நான் அந்த சம்பவத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் சாதாரண நிகழ்வாய் தெரிஞ்சுது. ஒருவேளை கங்காதரன் அங்கிள் சொல்லித்தான் காரோட டிக்கியில் எதையோ வெக்கிறாங்கன்னு நினைச்சேன். அப்புறம் மனசுக்குள்ளே ஒரு சந்தேகம் வந்த பின்னாடிதான் என்னோட செல்போன்ல வீடியோ எடுத்தேன் "

" எங்கே..... அந்த செல்போன் வீடியோவை காட்டு "

" ஒரு நிமிஷம் டாடி.... " சொன்ன பத்மஜா தன் கையில் இருந்த செல்போனை வெளிச்சமாக்கி வீடியோ ஆப்ஷனுக்குப்போய் அந்த வீடியோ காட்சிக்கு உயிர் கொடுத்தாள்.

வீடியோ ஒடியது.

அப்பார்ட்மெண்ட் பேஸ்மெண்ட் பார்க்கிங் ஏரியா சாம்பல் பூசியது போல் தெரிய கங்காதரனின் நீலநிறக்காரும், ஒரு வேனும் பார்வைக்கு தட்டுப்பட்டது. இரண்டு பேர் ஒரு மூட்டையைத் தூக்கிக்கொண்டு வருவதும், டிக்கிக்குள் திணிப்பதும், அந்த வேலை முடிந்ததும் வேன் அவசர அவசரமாய் கிளம்பிப் போவதும் என்று ஒரு முப்பது விநாடி நேரத்திற்குள் வீடியோ முடிந்துவிட்டது.

ராவ்டே பிந்தர் அந்த வீடியோவை நான்கைந்து தடவை ஒடவிட்டுப் பார்த்தார்.

ஒரு பழைய மாடல் வேன் அது. குறுக்குவாட்டில் வேன் நிறுத்தப்பட்டு இருந்ததால் நெம்பர் ப்ளேட் தெரியவில்லை.
மகளை மறுபடியும் ஒரு கோபப் பார்வை பார்த்தார்.

" நீ தப்பு பண்ணிட்டேம்மா..... நேத்து ராத்திரியே இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லியிருந்தா கங்காதரனுக்கு தெரியப்படுத்தியிருக்கலாம்"

ராவ்டே பிந்தர் சொல்ல வசுந்தரா இடையே குறுக்கிட்டு சீறினாள்.

" அப்படி சொல்லியிருந்தா அதனால பாதிக்கப்படப் போறது நம்ம பத்மஜாதான். பத்மஜா இந்த வீட்டுக்கு வந்திருக்கிறது நல்லபடியாய் ஒரு குழந்தையைப் பெத்துட்டு போறதுக்காகத்தான். இந்த அப்பார்ட்மெண்ட்ல என்னமோ நடந்துட்டு போகட்டும். நாம அதைப்பத்தி கவலைப்படாமே நம்ம வேலையைப் பார்ப்போம் "

" அப்படீன்னா போலீஸ்ல இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்ங்கிறியா..... ? "

" ஆமா..... வேன்ல வந்த ரெண்டு பேர் யாரோ எப்படிப்பட்டவங்களோ? கங்காதரனுக்கும் அவங்களுக்கும் என்ன பகையோ? விஷயம் எதுவாகயிருந்தாலும் சரி நாம மூச்சு காட்டாமே இருக்கணும். போலீஸ் அந்த விசாரணையை எப்படியோ நடத்திகிட்டு போகட்டும்....."

" வசு..... நீ இப்படி பேசறது சரியில்லை. நான் ரிடையரான ஒரு ஆர்மி மேன். எனக்கு தெரிஞ்ச ஒரு உண்மையை போலீஸ்கிட்ட மறைக்கிறது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா ..... ? "

வசுந்தரா ஆத்திரத்தோடு ஏதோ பேச முயல பத்மஜா அவளை கையமர்த்தினாள்.

" அம்மா...... அப்பாவைத் திட்டாதே....நான் அவர்கிட்ட பேசிக்கிறேன் " சொன்னவள் ராவ்டே பிந்தரிடம் திரும்பினாள்.

" டாடி....... இந்த விஷயத்தை போலீஸ்கிட்டயிருந்து மறைக்கிறது குற்றம்தான். இருந்தாலும் என்னோட நிலைமையை நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும். எதிரிகள் எப்படிப்பட்டவங்கன்னு தெரியாது. அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்னோட மாமனார் மாமியார்க்கு ஏற்கனவே உங்க மேல கோபம். பேசினபடி நகை போடலைன்னு சொல்லிக் குத்திக்காட்டாத நாள் கிடையாது. எனக்கு வாய்ச்ச கணவர் என்கிட்ட அன்பாய் இருக்கிறதால அந்த வீட்ல என்னால சந்தோஷமாய் இருக்க முடியுது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் போலீஸீக்கு நீங்க விஷயத்தை தெரியப்படுத்தி நான் எடுத்த வீடியோ பதிவையும் காட்டினா அதனோட விளைவுகள் எப்படியிருக்கும்ன்னு உங்களுக்கே புரியும் "

" எனக்குப் புரியுதும்மா..... "

கோபம் குறையாமல் வசுந்தரா கணவனை ஏறிட்டாள்.

" புரியுதுல்ல....அப்ப இந்த விஷயத்தை மறந்துடுங்க "

ராவ்டே பிந்தர் இறுகிப்போன முகத்தோடு சரி என்கிற பாவனையில் தலையாட்ட வசுந்தரா மகளிடம் திரும்பினாள்.

" நீ இப்ப உடனடியாய் செய்ய வேண்டிய வேலை என்ன தெரியுமா ..... ? "

" சொல்லும்மா "

" அந்த வீடியோ பதிவை டெலிட் பண்ணனும் "

பத்மஜா ராவ்டே பிந்தரிடம் இருந்த தன் செல்போனை வாங்கி அந்த வீடியோ பதிவை உடனடியாய் டெலிட் செய்தாள். வசுந்தரா தீர்க்கமான குரலில் சொன்னாள்.

" இனிமே இந்த விஷயத்தைப் பத்தி நாம பேசக்கூடாது

ராவ்டே பிந்தர் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு தலையாட்டி வைத்தார்.

*******

டி.ஜி.பி.வைகுந்த் தனக்கு முன்பாய் உட்கார்ந்திருந்த சந்திரசூடனை ஒரு கோபப் பார்வையோடு ஏறிட்டபடி, பார்த்து முடித்த ஃபைலை எறியாத குறையாய் மேஜையின் மேல் போட்டார்.

"மிஸ்டர் சந்திரசூடன்...... யூ ஆர் டிஸப்பாயிண்டிங் மீ எவ்ரிடே. சம்பவம் நடந்து ஒரு வாரமாச்சு. ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடம்பு முழுவதும் கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட சம்பவம் எல்லா மீடியாக்களிலும் சூடு குறையாமே போயிட்டிருக்கு... ஆனா இந்தக் கேஸை டீல் பண்ற நீங்க விசாரணைங்கிற பேர்ல தினசரி அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு போறீங்க. டிட் யூ கெட் எனி ஃப்ரூட்புல் க்ளூ? "

" நாட் யெட் ஸார் "

" ஒய் ..... ? "

" ஸார் ...... அந்த அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற ஒரு சிலரைத் தவிர மத்தவங்க யாருமே கேக்கிற கேள்விகளுக்கு ஃப்ராப்பரா ஆன்ஸர் தர்றதில்லை. நிறைய பேர் பயப்படறாங்க. அந்த பயத்துக்கு என்ன காரணம்ன்னும் புரியலை ஸார்"

" கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட அந்தப்பெண் அதிரா அப்பார்ட்மெண்ட்டில்தான் கொலை செய்யப்பட்டு இருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க இல்லையா ..... ? "

" ஆமா "

" உங்ககிட்ட அதுக்கான ஆதாரம் ஏதாவது இருக்கா ..... ? "

" இல்ல ஸார் "

" அப்புறம் எப்படி அந்த முடிவுக்கு வந்தீங்க ..... ? "

" ஸார்.... இப்போதைக்கு என்னோட கெஸ் ஒர்க் இது. ஆனா எப்படியும் அடுத்து வாரத்துக்குள்ள அதுக்கான ஆதாரத்தோடு உங்க முன்னாடி வந்து உட்காருவேன் "

டி.ஜி.பி. மேற்கொண்டு பேசும் முன்பு அவருடைய இண்டர்காம் போன் முணுமுணுப்பாய் கூப்பிட்டது.

ரீஸீவரை எடுத்து பட்டனை அழுத்திவிட்டு பேசினார்.

" எஸ் "

மறுமுனையில் அவருடைய உதவியாளர் பேசினார்.

" ஸார்.... பெண்களுக்காக நடத்தப்படும் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையான ஸ்மேஷ்லிருந்து எடிட்டர் வாஹினி உங்களைப் பார்க்க வந்து இருக்காங்க..... "

" விஷயம் என்னான்னு கேட்டீங்களா ..... ? "

" கேட்டேன் ஸார்.... "

" என்ன சொன்னாங்க..... ? "

" மார்ச்சுவரியில் இருக்கிற கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட அந்தப்பெண்ணோட டெட்பாடியை உடனடியாய் பார்க்கணுமாம் "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 19) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X