For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"மேடம்..... இப்ப என்ன சொன்னீங்க?".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (22)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடன் காரின் வேகத்தை இன்னமும் வெகுவாய் குறைத்து சாலையோரமாய் நிறுத்திக்கொண்டார். வாஹினியிடம் திகைப்போடு திரும்பினார்.

"மேடம் நீங்க ...... இப்ப என்ன வார்த்தை சொன்னீங்க ..... ? "

" ஜெல் பால் ப்ளாஸ்டர் "

" புதுசா இருக்கே ? இன்னிக்குத்தான் இப்படியொரு வார்த்தையை கேள்விப்படறேன். அந்த லெட்டர் இன்னமும் உங்ககிட்டத்தான் இருக்கு ..... ? "

" ஆமா... அந்த லெட்டரை என்னோட செல்போனில் இருக்கிற சிம்பிள் ஸ்கேனரில் ஸ்கேன் எடுத்து அதை ஸேவ் பண்ணி வெச்சிருக்கேன். அந்த லெட்டரை நீங்க படிக்க விரும்பறீங்களா ..... ? "

" சர்ட்டன்லி.... அந்த அதிரா அப்பார்ட்மெண்ட் விவகாரத்தில் ஒரு சின்ன ஹோல்டிங்காவது கிடைக்காதான்னு ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்த்துட்டிருக்கேன். அந்த லெட்டரை முழுசா படிச்சா ஏதாவது ஒரு உபயோகமான தகவல் கிடைக்கலாமே..... ? "

வாஹினி தன்னுடைய செல்போனை எடுத்து எஸ்.டி.கார்டை க்ளிக் செய்து அதில் பதிவு செய்து வைத்திருந்த கடிதத்தைக் காட்ட, சந்திரசூடன் வாங்கிப் பார்த்தார். ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்த வார்த்தைகளை படிக்க படிக்கவே மனதுக்குள் தமிழாக்கம் ஒடியது.

flat number 144 adhira apartment episode 22

ஸ்மேஷ் பத்திரிக்கையின் ஆசிரியர் அவர்களின் பார்வைக்காக இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. நான் யார் என்பது உங்களுக்கு முக்கியமில்லை. நான் சொல்லப்போகும் விஷயம்தான் மிகவும் முக்கியமானது. பெண்களுக்கு எதிராக எந்த ஒரு கொடுமை நம் நாட்டின் எந்தப் பகுதியில் நடந்தாலும் உடனே அதை வாசனை பிடித்து அந்தப் பகுதிக்கு உங்கள் பத்திரிக்கையின் சார்பாக ரிப்போர்ட்டர் ஒருவர் போய்விடுவார் என்று பலரும் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கொடுமையை யார் செய்திருந்தாலும் தைரியமாக அவருடைய பெயரைக் குறிப்பிட்டு புகைப்படத்தோடு ஸ்மேஷ் பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துவிடும். செய்தியை வெளியிடுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அந்த நபரின் மேல் எதுமாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதையும் கண்கொத்தி பாம்பாய் கவனித்து சட்டபூர்வமான அணுகுமுறையையும் மேற்கொள்கிறீர்கள். பாராட்டுக்கள்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு அபார்ட்மெண்ட் இருக்கிறது. பெயர் அதிரா அப்பார்ட்மெண்ட். அங்கே கடந்த ஆறு மாத காலத்தில் 144 எண் கொண்ட ஃப்ளாட் ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்த ஐந்து பேர்களும் மற்றும் அதே அப்பார்ட்மெண்ட்டில் வேறொரு ஃப்ளாட்டில் குடியிருந்த ஒரு நபரும் மொத்தம் ஆறு பேர் அதில் நான்கு பேர் பெண்கள். இவர்கள் எல்லோருமே திடீரென்று எந்த நோயும் இல்லாமலேயே ஒரு சில நொடிகளில் இறந்து போயிருக்கிறார்கள். அந்த மரணங்கள் இயற்கையானவை என்றும் கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்றும் அவர்களின் குடும்ப டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் எனக்கு மட்டும் அந்த மரணங்களில் சந்தேகம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஃப்ளாட்டில் தங்கியிருந்தவர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாகவா நடக்கும் ? நான் பயோ மெடிக்கல் என்ஜினியரிங் படித்தவன் என்பதால் இந்த மரணங்களைக் குறித்து சந்தேகப்படுகிறேன். நடைபெற்ற ஆறு மரணங்களும் இயற்கையானவை அல்ல. அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஜெல் பால் ப்ளாஸ்டர் காரணமாய் இருக்கலாம். இறந்த ஆறு பேர்களில் நான்கு பேர் மின்தகனம் செய்யப்பட்டும், இரண்டு பேர் புதைக்கப்பட்டும் இருக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர் பெண். இன்னொருவர் ஆண். இவர்களின் உடல்களை தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டால் உண்மை தெரியும்.

இதை நான் பகிரங்கமாக என்னை வெளிப்படுத்திக்கொண்டு சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நான் என்னுடைய குடும்பத்திற்கு முக்கியமானவன். இந்த விஷயத்தில் என்னுடைய உயிரை பணயம் வைக்க நான் விரும்பவில்லை. உங்கள் ஸ்மேஷ் பத்திரிக்கை பிரபலமான பத்திரிக்கை. இந்தக் கடிதத்தை நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் பிரசுரித்தால் அதிரா அப்பார்ட்மெண்டில் நடைபெற்ற சம்பவங்கள் பல லட்சம் பேர்களுக்கு தெரியவரும். அதன் விளைவாக போலீஸ்துறையின் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும். இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது. இதை ஒரு அநாமதேயக் கடிதமாக நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம்.
இப்படிக்கு,
பொய் பேசத் தெரியாதவன்

கடிதம் முடிந்து போயிருக்க சந்திரசூடன் வாஹினியிடம் செல்போனை திருப்பிக் கொடுத்துக் கொண்டே சொன்னார்.

" மேடம்...... இந்த லெட்டரை என்னோட வாட்ஸ்அப் நெம்பர்க்கு ஃபார்வேர்ட் பண்ணி விடறீங்களா ..... ? "

" ஷ்யூர்.... உங்க வாட்ஸ்அப் நெம்பரைச் சொல்லுங்க "

சந்திரசூடன் நெம்பரைச் சொல்ல அடுத்த சில விநாடிகளில் வாஹினியின் செல்போனில் இருந்த அந்தக் கடிதம் சந்திரசூடனின் வாட்ஸ்அப் நெம்பர்க்குப் போயிற்று.

காரை மறுபடியும் நகர்த்திக்கொண்டே சந்திரசூடன் கேட்டார்.

" மேடம்.... நீங்க இந்த லெட்டரை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கலை போலிருக்கே ..... ? "

" ஆமா "

" ஏன் ..... ? "

" இந்த லெட்டர் எனக்கு வந்த அடுத்த நிமிஷம் நான் ஒரு பயோ மெடிக்கல் என்ஜினியரிங் புரபசரை போன்ல காண்டாக்ட் பண்ணிப் பேசினேன். அவர் பேர் சந்திரமெளலீஸ்வரன். அவர்கிட்ட இந்த லெட்டர் முழுவதையும் படிச்சு காட்டிட்டு அந்த ஜெல் பால் ப்ளாஸ்டரைப் பத்தி கேட்டேன் "

" என்ன சொன்னார் ..... ? "

" அபத்தம்ன்னு சொல்லி பலமா சிரிச்சார் "

" அந்த வார்த்தை ஒருவேளை அவர்க்குத் தெரியாமே இருந்திருக்கலாமே..... ? "

" அப்படியும் சொன்னேன். அதுக்கு அவர் இதோ பாருங்க மேடம். பயோ மெடிக்கல் என்ஜினியரிங்ல அப்டேட்டாய் இருக்கிற எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். எனக்குத் தெரிஞ்சு அப்படி ஒரு வார்த்தையில்லை. அந்த வார்த்தை உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அது என்னான்னு கடிதம் எழுதின நபரே சொல்லியிருக்கலாமே.... ஏன் சொல்ல்லை... இப்படியொரு லெட்டர் வந்ததற்கு பின்னணியில் வேறு ஏதாவது ஒரு விஷயம் இருக்கலாம். அதை மொதல்ல இன்வெஸ்டிகேட் பண்ணுங்கன்னு சொன்னார். சந்திரமெளலீஸ்வரன் இப்படி சொன்னதுக்குப்பிறகும் நான் டெல்லியில் இருக்கிற பயோ மெடிக்கல் என்ஜினியரிங் சம்பந்தப்பட்ட சில எமினன்ட்ஸ்கிட்ட ஜெல் பால் ப்ளாஸ்டரைப்பத்தி கேட்டார். எல்லோருமே சொன்ன ஒரு பதில் அப்படியொரு வார்த்தையே அந்தத்துறையில் இல்லைங்கிறதுதான் "

" ஸோ..... அந்த லெட்டரை இக்னோர் பண்ணிட்டீங்க ..... ? "

" எஸ்.... ஆனா.... முழுசுமா இக்னோர் பண்ணலை. எனக்கு அறிமுகமான நாலைஞ்சு போலீஸ் ஆபீஸர்கிட்ட கொண்டு போய் லெட்டரைக் காட்டினேன். அவங்க யாருமே அந்த லெட்டரைப் பொருட்படுத்தலை. இறந்துபோன ஆறு பேருமே இயற்கையான முறையில் கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்கிற ஹார்ட் அட்டாக்கில் இறந்து போயிருக்காங்க.... மரணம் ஏற்பட்டதுமே அவங்க சம்பந்தப்பட்ட ஃபேமிலி டாக்டர்ஸ் வந்து பார்த்து நேச்சுரல் டெத்ன்னு டிக்ளேர் பண்ணியிருக்காங்க. நூற்றுக்கணக்கான பேர் வசிக்கிற அப்பார்ட்மெண்ட்ல கடந்த ஆறு வருஷத்துல ஒரு ஆறு பேர் இறந்து போயிருக்காங்க என்கிற ஒரு விஷயம் சாதாரணமானது. முடிந்துபோன ஒரு விஷயம். இதை யாரோ ஒரு நபர் ஏதோ ஒரு ஆதாயத்துக்காக மறுபடியும் கிளறிவிடப் பார்க்கிறார். ஒரு விஷயம் பெரிய அளவில் பேசப்படணும்ன்னா அது ஸ்மேஷ் மாதிரியான பத்திரிக்கையில் வரணும்ன்னு லெட்டர் எழுதினவர் நினைச்சு இருக்கலாம். அதுக்கு நீங்க இடம் கொடுக்கக்கூடாது மேடம்ன்னு சொல்லிட்டாங்க. அவங்க அப்படி சொன்னதிலும் ஒரு நியாயம் இருந்ததால அதுக்கப்புறம் அந்த லெட்டர்க்கு நான் இம்பார்ட்டன்ஸ் தரலை........"

" மறுபடியும் அந்த நபர்கிட்டயிருந்து ஏதாவது லெட்டர் வந்ததா மேடம்..... ?

" வரலை.... "

" அப்படீன்னா அது ஒரு மொட்டைக்கடிதமாகத்தான் இருக்கணும். அந்த லெட்டரில் இருந்த வாசகங்கள் உண்மையாய் இருந்திருந்தா கடிதம் எழுதின நபர்க்கு கோபம் வந்து ஸ்மேஷ் பத்திரிக்கையில் ஏன் செய்தி போடலைன்னு மறுபடியும் ஒரு லெட்டர் வந்திருக்கணும் "

" நானும் இதையேதான் நினைச்சேன். இருந்தாலும் என்னோட மனசுக்குள்ளே அந்த கடித வரிகள் அப்பப்ப வந்துட்டுப் போகும். இன்னிக்கு நீங்க போன்ல அதிரா அப்பார்ட்மெண்ட்டைப்பற்றி யார்கிட்டயோ பேசிட்டு இருந்ததால நான் எனக்கு வந்த லெட்டரைப்பற்றி சொல்ல வேண்டி வந்தது "

" இனிமேல் என்னோட இன்வெஸ்டிகேஷனில் அந்த லெட்டரும் ஒரு அங்கம். நான் அதை "ஃபாலோ அப்" பண்ணிக்கிறேன் "

சந்திரசூடன் சொல்லிக்கொண்டே காரை ஜி.ஹெச்சின் பிரதான வாயிலுக்குள் நுழைத்தார். மத்தியான வேளையாக இருந்ததால் ஜி.ஹெச்சில் அவ்வளவாக கூட்டமில்லை. மிதமான வேகத்தில் சுற்றுப்பாதையில் காரை செலுத்தி சில நிமிடங்களுக்கு பின் ஹாஸ்பிடல் கட்டிடத்தின் பின்பக்கம் இருந்த மார்ச்சுவரி அறைக்கு சற்றுத்தள்ளி ஒரு மரத்துக்கு கீழே நிறுத்தினார் சந்திரசூடன்.

இருவரும் இறங்கினார்கள். வெளியே காத்திருந்த வெய்யில் முகத்தில் அறைந்தது.

சந்திரசூடனைப் பார்த்ததும் மார்ச்சுவரி அறைக்கு வெளியே நின்றிருந்த ஊழியர் ஒருவர் வேகவேகமாய் வந்து சல்யூட் வைத்து விட்டு தயக்கத்தோடு சற்று தள்ளி நின்றார். சந்திரசூடன் கேட்டார்.

" என்ன யூசூப்......... இன்னிக்கு ட்யூட்டியில் நீ இருக்கே ..... ? "

" துரைசாமிக்கு உடம்பு சரியில்லை ஸார்.... ஒரு வாரத்துக்கு லீவு "

" சரி.... மார்ச்சுவரி நீட்டாதானே இருக்கு..... ? "

" காலையிலிருந்து ரெண்டு தடவை க்ளீன் பண்ணியாச்சு ஸார் "

" கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட பொண்ணோட டெட்பாடியைப் பார்த்து ஐடென்டிஃபை பண்ண இவங்க வந்திருக்காங்க. ஸ்டெர்லைஸ் பண்ணின ரெண்டு மாஸ்கை எடுத்துட்டு வா "

யூசூப் அடுத்த அறைக்கு ஒடிப்போய் ப்ளாஸ்டிக் கவர்களுக்குள் இருந்த இரண்டு மாஸ்க்குகளை கொண்டு வந்து நீட்ட சந்திரசூடனும், வாஹினியும் அதை வாங்கி அணிந்து கொண்டார்கள். மார்ச்சுவரி கதவுக்கு முன்பாய் போய் நின்றார்கள்.

" டோரை ஒப்பன் பண்ணு யூசூப்....."

யூசூப் கையில் வைத்திருந்த சாவிக்கொத்தில் ஒன்றை தேர்ந்தெடுத்து கதவில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டை விடுவித்து, அந்த கனமான கதவைத் தள்ள, இருவரும் உள்ளே போனார்கள்.

மார்ச்சுவரி அறைக்குள் பரவியிருந்த ஏ.ஸிக்குளிர் சிறிய சிறிய ஊசிகளாய் மாறி உடம்புக்குள் ஊடுருவியது. பார்மலின் நெடி நாசிதுவாரங்களுக்குள் நுழைந்து நுரையீரல்களை அடைத்துக்கொண்டது.

சந்திரசூடன் கேட்டார்.

" பாடி..... அதே ட்ரேதானே ..... ? "

" ஆமா..... ஸார் " யூசூப் சொல்லிக்கொண்டே போய் ஒரு ட்ரேக்கு முன்பாய் போய் நின்று கைபிடியைப் பிடித்து இழக்க, ட்ரே ஆறடி நீளத்துக்கு வெளியே வந்தது.

ட்ரேயில் மல்லாந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் அட்டைக்கரி நிறத்தில் வாஹினியின் பார்வைக்குத் தட்டுப்பட்டது.

" மேடம்..... பக்கத்துல போய் பாடியைப் பாருங்க " என்றார் சந்திரசூடன்.

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 22) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X