For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"உங்களுக்குத் தெரியுமா?".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (25)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடன் தனக்கு வெகு அருகாக நின்றிருந்த வாஹினிக்கு செய்தித்தாளிலிருந்து கத்தரித்து எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்த அந்தக் கடைசித்துண்டு பேப்பரைக் காட்டியபடி கேட்டார்.

" மேடம்...... லட்சணா உங்களை பத்திரிக்கை ஆபீஸில் சந்தித்தபோது சொன்ன பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம் சம்பந்தப்பட்ட மேட்டர்தானே இது..... ? "

" ஆமா.... "

" ஒட்டப்பட்டிருந்த அந்த செய்திக்கு கீழே ஸ்கெட்ச் பேனாவால் XYZBAA என்கிற ஆங்கில எழுத்துக்கள் தெரியுது..... அந்த எழுத்துக்களின் விரிவாக்கம் என்னான்னு தெரியுமா மேடம் ..... ? "

வாஹினி அந்த எழுத்துக்களை உற்றுப் பார்த்துவிட்டு "தெரியாது" என்பது போல் தலையசைக்க, சந்திரசூடனின் பார்வை ஹாஸ்டல் நிர்வாகி அன்னபூரணியின் பக்கம் திரும்பியது.

flat number 144 adhira apartment episode 25

" உங்களுக்குத் தெரியுமா ..... ? "

அவளும் தலையாட்டினாள். " ஸாரி ஸார்... லட்சணா ஒரு ஜர்னலிஸ்ட் என்கிற விஷயம் மட்டுமே தெரியும். அது சம்பந்தமாய் நான் எதுவுமே அவகிட்ட பேசினது இல்லை..... நான் இந்த ரூமுக்குள்ளே வந்து ஏழெட்டு மாசம் இருக்கும். எலக்ட்ரிகல், பிளம்பிங் ஒர்க் இப்படி ஏதாவது இருந்தால் மட்டுமே நான் ரூமுக்குள்ளே போய்ப் பார்ப்பேன். மற்றபடி யாரோட ரூமுக்குள்ளேயும் தேவையில்லாமே போகமாட்டேன். இப்படிப்பட்ட பேப்பர் கட்டிங்க்ஸையெல்லாம் லட்சணா நீட்டா ஒட்டி வெச்சிருக்கிறதை நான் இன்னிக்குத்தான் பார்க்கிறேன்... ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருக்கிற அந்த ஆங்கில எழுத்துகளுக்கு என்ன எக்ஸ்பேன்ஷன் ன்னு எனக்குத் தெரியாது ஸார்..... "

" நோ...... ப்ராப்ளம் " என்று சொன்ன சந்திரசூடன் சுவரில் சாத்தப்பட்டு தெரிந்த அலமாரிக் கதவைத் திறந்தார். நிறம் நிறமாய் புத்தகங்கள். எல்லாமே ஆங்கில புத்தகங்கள்.

சந்திரசூடன் அதிலிருந்து ஒரு புத்தகத்தை உருவினார். கைக்கு அடக்கமான ஹேண்ட் புக் அது. தலைப்பு கண்ணில் அடித்தது.

"HAND BOOK ON SEXUAL HARASSMENT OF WOMEN AT WORK PLACE"

இன்னொரு புத்தகத்தை எடுத்தார். "கம்ப்ளைய்ண்ட் அண்ட் இன்வெஸ்டிகேஷன் செல். நேஷனல் கமிஷன் ஃபார் விமன் "

" விமன்ஸ் ரைட்ஸ் கம்ப்ளைய்ண்ட்ஸ் "

" க்ரைம்ஸ் எகெய்ன்ஸ்ட் விமன். விமன் லா இண்டியா "

இப்படி ஏகப்பட்ட தலைப்புகளோட நிறைய புத்தகங்கள்.

சந்திரசூடன் வாஹினியிடம் திரும்பினார்.

" மேடம்..... நீங்க சொன்ன மாதிரி லட்சணா சாதாரண பெண்ணில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராய் ஒரு பெரிய போரையே நடத்தியிருக்கா..... இந்த ஒரு விஷயத்துக்காகவே லட்சணாவுக்கு "பாரத ரத்னா" விருதுக்கு உங்க பத்திரிக்கை மூலமாய் சிபாரிசு பண்ணலாம். நிறைய புக்ஸ் படிச்சிருக்கா "

வாஹினி தலையசைத்தாள்.

" ஐ செக்கண்ட் யுவர் வேர்ட்ஸ் ஸார். லட்சணா கடைசியாய் கையில் எடுத்துகிட்ட ஒரு மிகப் பெரிய பிரச்சினை பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம். இது உலகளாவிய பாலியல் விவகாரம். அந்தப் பிரச்சினையை லட்சணா கையாளப் போய்த்தான் அவளுக்கு இந்த முடிவு நேர்ந்திருக்கணும். இந்த அலமாரிக்குள்ளேயே அந்த பீடோ ஃபைலிக் சம்பந்தப்பட்ட ஹேண்ட் புக் ஏதாவது இருக்கலாம். தேடிப் பார்த்தா கிடைக்கலாம் "

" யூ மே பி கரெக்ட் மேடம் " என்று சொன்ன சந்திரசூடன் அலமாரிக்குள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹேண்ட் புக்குகளை ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தார்.

ஐந்தாறு புத்தகங்களை எடுத்துப் பார்த்தபின் " பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம்" என்கிற இரண்டு வரி தலைப்புகளோடு அந்தப்புத்தகம் சந்திரசூடனின் கைக்குக் கிடைத்தது.

" மேடம்...... ஐ காட் தட் புக் "

" ப்ளீஸ் கோ த்ரூ இட் .... ஸார் "

சந்திரசூடன் அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தார். கண்களில் நீரோடு ஒரு பெண் குழந்தையின் ஒவியம். கீழே கிறுக்கலாய் எழுதப்பட்ட வாக்கியங்கள்.

வார்த்தைகள் புதிது
குற்றமும் புதிது

முதல் பக்கத்தைப் பிரித்து மெல்ல வாய்விட்டுப் படித்தார். " பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம்" போன்ற வார்த்தைகள் செய்தித்தாள்களின் ஏதாவது ஒரு மூலையில் எட்டிப் பார்த்துவிட்டு மறைந்து போய் விடுகின்றன. பலரும் இதனைக் கவனிப்பதில்லை. கவனித்தாலும் அதைப்பற்றி ஒரு புரிதல் இல்லாததால் விலகிப் போய்விடுகிறார்கள். ஆனால் உண்மைச்செய்தி என்ன என்பது சமூக அறிவியலார்களுக்கு மட்டுமே தெரியும். 12 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை மட்டுமே குறி வைத்து கடத்திப்போய் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் பீடோ ஃபைலிக் மனநோயாளிகளின் வக்கிரச் செயலை அடிப்படையாகக்கொண்டதுதான் செக்ஸ் டூரிஸம் என்கிற ஒரு வியாபாரம்.

இப்படியொரு கும்பல் டூரிஸ்ட்களின் நடுவில் இருப்பது அமெரிக்காவின் FBI தொடங்கி INTERPOLE வரைக்கும் தெரிய வரவே அந்தக் கும்பலைக் கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படைகள் அமைத்து மும்முரமாய் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் மும்பை, கோவா, புனே, டெல்லி, கல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் தற்போது பீடோ ஃபைலிக் நோயாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது மற்றும் ஒரு நிர்பயா சம்பவம் போன்றது. தேசியக்குற்ற ஆவணக்காப்பகம் அளித்த ஒரு தகவலின்படி இந்தியாவில் எட்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் ரீதியாய் சிதைக்கப்படுகிறது. பீடோ ஃபைலிக் மனநோயாளிகளால் இந்தக் குற்றச்செயல் மேலும் அதிகமாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

சந்திரசூடன் புத்தகத்தைப் புரட்டி படித்துக் கொண்டிருக்கும் போதே அந்த அறையின் வாசலில் நிழலாடியது. யாரோ நிற்பது போன்ற உணர்வு.

சந்திரசூடனும், வாஹினியும் திரும்பிப் பார்த்தார்கள். அந்த இளம்பெண் பார்வைக்குக் கிடைத்தாள்.

" யார் இந்தப்பெண்.....?" என்கிற கேள்வியோடு சந்திரசூடன் அன்னபூரணியைப் பார்க்க, அவள் சொன்னாள்.

" ஷி ...ஈஸ்... ஜமுனா.... பக்கத்து ரூம்ல தான் ஸ்டேயிங். லட்சணாவோடு நல்ல பழக்கம். ராத்திரி நேரங்கள்ல ரெண்டுபேரும் மணிக்கணக்காய் பேசிட்டிருப்பாங்க " என்று சொன்ன அன்னபூரணி அந்த ஜமுனாவிடம் திரும்பினாள்.

" என்ன ஜமுனா....இன்னிக்கு ஆபீஸிலிருந்து சீக்கிரமாகவே வந்துட்டே..... ? வழக்கமாய் ஆறு மணிக்கு மேல்தானே வருவே ..... ? "

" ஆமா மேடம்..... பாண்டி பஜார்ல ஒரு பர்சேஸிங் வேலை இருந்தது. ஆபீஸூக்கு ஹாப்டே லீவு போட்டேன். பர்சேஸை முடிச்சுட்டு இப்பத்தான் வந்தேன். லட்சணாவோட ரூம் கதவு திறந்திருக்கிறதைப் பார்த்துட்டு அவதான் வந்துட்டாளோன்னு நினைச்சேன். ஆனா உள்ளே போலீஸ் இருக்கிறதைப் பார்த்ததும் மனசுக்கு பகீர்ன்னு இருந்தது. ஏதாவது பிரச்சினையா மேடம் ..... ? "

அன்னபூரணி பதில் சொல்ல முடியாமல் தவிக்க, சந்திரசூடன் ஜமுனாவை ஏறிட்டார்.

" உள்ளே வாம்மா..... லட்சணாவைப் பத்தி உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு "

ஜமுனாவின் கண்களில் கலவரம் நிரம்பிக்கொள்ள தயக்க நடை போட்டுக்கொண்டு உள்ளே வந்தாள்.
சந்திரசூடன் அவளை உன்னிப்பாய்ப் பார்த்துக்கொண்டே கேட்டார்.

" லட்சணாவோடு உனக்கு நல்ல பழக்கம் இருக்கிறதாய் அன்னபூரணி மேடம் சொன்னது உண்மைதானே ..... ? "

" உண்மைதான் ஸார்..... மத்தவங்களுக்கு நல்லது செய்யணும்ங்கிற அவளோட அந்த நல்ல குணம் எனக்குப்பிடிக்கும்.... அதுக்காகவே லட்சணாகிட்ட நெருங்கிப் பழகினேன். பத்து நாளா அவளைப் பார்க்காதது மனசுக்கு கஷ்டமாய் இருந்தது. நீங்க வந்திருக்கிறதைப் பார்த்தா அவளுக்கு என்னாச்சோன்னு அடிவயித்துல "திக் திக்"ன்னு இருக்கு ஸார் "

சந்திரசூடன் ஜமுனாவுக்கு பக்கத்தில் வந்து நின்றார்.

" இதோ பார் ஜமுனா.... உன்னோட ஹாஸ்டல்மேட் லட்சணாவுக்கு என்னாச்சுன்னு நான் அப்புறமா சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ உண்மையான பதில்களைச் சொல்லணும். எதையும் மறைக்க முயற்சி பண்ண வேண்டாம் "

ஜமுனாவுக்கு முகம் வியர்த்துக்கொட்ட சேலைத் தலைப்பால் ஒற்றிக்கொண்டே சொன்னாள்.

" கேளுங்க ஸார் "

" லட்சணாவை நீ கடைசியாய் என்னிக்குப் பார்த்துப் பேசினே ..... ? "

" பத்து நாளைக்கு முன்னாடி ராத்திரி நேரம். ரொம்ப நேரம் அவ ரூம்ல உட்கார்ந்து பேசிட்டிருந்தேன் "

" எது விஷயமாய் ரெண்டு பேரும் பேசினீங்க ..... ? "

" வழக்கமாய் பெண்களுக்கு எதிராய் நடந்துகிட்டு இருக்கிற அநியாயங்களைப் பத்தித்தான் லட்சணா பேசுவா. அன்னிக்கும் அதைத்தான் பேசினா. ஆனா அன்னிக்கு அவ பேசின விஷயம் வேறமாதிரி இருந்தது "

" வேற மாதிரின்னா ..... ? "

" ஏதோ ஒரு புதுவகையான பாலியல் பலாத்காரம் தமிழ்நாட்ல ஊடுருவிட்டிருக்கிறதாகவும், அதைத் தடுக்கலைன்னா பனிரெண்டு வயசு பெண் குழந்தைகளுக்கு ஆபத்துன்னும் சொன்னா. அன்னிக்கு ரொம்பவும் பதட்டமாயிருந்தா "

" பேசும்போது பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம் என்கிற வார்த்தைகளை யூஸ் பண்ணினாளா ..... ? "

" ஆமா ஸார்.... நீங்க இப்ப சொன்ன இதே வார்த்தைகளைத்தான் அவளும் சொன்னா.... நியூஸ் பேப்பரில் வந்திருந்த நியூஸை கட் பண்ணி போர்டுல ஒட்டினா..... "

" அப்படி லட்சணா ஒட்டினது இந்தப் பேப்பர் கட்டிங்கான்னு பாரு "

சொன்ன சந்திரசூடன் சற்றே நகர்ந்து நின்று அந்த போர்ட்டைக் காட்டினார்.

ஜமுனா அந்த போர்ட்டில் கடைசியாய் ஒட்டப்பட்டு இருந்த பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம் பேப்பர் கட்டிங்கைப்
பார்த்து விட்டு தலையாட்டினாள்.

" இதேதான் ஸார் "

" சரி.... அந்தப் பேப்பர் கட்டிங்குக்கு கீழே "XYZBAA" ங்கிற லெட்டர்ஸ் ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருக்கே. அது எழுதினது யாரு லட்சணாவா..... ? "

" ஆமா ஸார்..... அந்த எழுத்துக்களை அவ எழுதும்போது நானும் பக்கத்துல இருந்தேன் "

" அந்த "XYZBAA" எழுத்துக்களுக்கு என்ன அர்த்தம்ன்னு உனக்கு தெரியுமா..... ? "

" தெரியும் " என்றாள் ஜமுனா.

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 25) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X