• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"என்ன சொல்றே யூசூப்?"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (24)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செல்போனின் மறுமுனையில் அந்த ஆண் குரல் ஆச்சர்யப்பட்டது.

" என்ன சொல்றே யூசூப்..... மார்ச்சுவரியில் இருந்த அந்த பெண்ணோட டெட்பாடியை லட்சணாதான்னு எப்படி கண்டுபிடிச்சாங்க ? "

யூசூப் மறுபடியும் ஒரு தடவை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு குரலை கிசுகிசுப்பாக்கி நடந்த சம்பவங்களை ஒரு நிமிட நேரம் செலவழித்துச் சொல்ல, செல்போனின் மறுமுனையில் இருந்த குரல் மேலும் ஆச்சர்யப்பட்டது.

" என்னது..... லட்சணாவோட இடது கையிலிருந்த சுண்டுவிரல் நிஜமான விரல் இல்லையா ? "

" ஆமா ..... அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் சந்திரசூடனோடு வந்த அந்த பத்திரிக்கைகார அம்மாவுக்கு லட்சணாவைப் பத்தின எல்லா விபரங்களும் தெரிஞ்சிருக்கு..... கெட்டிக்கார பொம்பளை. அதுதான் கண்டுபிடிச்சு சொல்லிடுச்சு"

flat number 144 adhira apartment episode 24

" சரி.... அவங்க ரெண்டு பேரும் இன்னும் ஹாஸ்பிடல்லதான் இருக்காங்களா ? "

" இல்லை... இப்பத்தான் கார்ல புறப்பட்டு போனாங்க.... அவங்க போனதும்தான் உனக்கு போன் பண்றேன் "

" எப்படியோ ..... கடந்த பத்து நாளாய் இழுந்துட்டிருந்த ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்துடுச்சு.... நான் இதை யார்க்கு சொல்லணுமோ அவங்களுக்கு சொல்லிடறேன்.... உனக்கு நான் குடுத்த வேலை முடிஞ்சிடுச்சு "

" எனக்கு எந்த பிரச்சினையும் வராதே? "

" உனக்கென்ன பிரச்சினை வரப்போகுது யூசூப். அந்தப்பொண்ணு லட்சணாவோட டெட்பாடியைப் பார்க்க யார் யார் வர்றாங்கன்னு உன்னை வேவு பார்க்கச் சொன்னேன். அவ்வளவுதான் அதுக்கான ஒரு அமெளண்ட்டையும் உனக்கு கொடுத்துட்டேன்.... இனி நீ இதையெல்லாம் மறந்துட்டு உன்னோட வழக்கமான வேலையைப் பாரு... நான் இனிமே உனக்கு போன் பண்ண மாட்டேன். நீயும் போன் பண்ணி இதைப்பத்தி பேசாதே.... இந்த லட்சணா விவகாரத்தை மறந்துடு "

மறுமுனை செல்போன் இணைப்பைத் துண்டித்துக்கொள்ள, யூசூப்பும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன்னுடைய செல்போனின் திரையை இருட்டாக்கி சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

********

மேற்கு மாம்பலம் அந்த முற்பகல் வேளையில் ஒழுங்கற்ற போக்குவரத்தோடும், ஜன நெரிசலோடும் தெரிய, இன்னோவா கார் மிதமான வேகத்தில் பயணித்து பாபு ராஜேந்திரபிரசாத் சாலையின் ஐந்தாவது குறுக்குத் தெருவுக்கு நுழைந்து " பூரணி லேடீஸ் நெஸ்ட் " என்ற பெயர்ப்பலகையோடு தெரிந்த அந்த மூன்று மாடி கட்டிடத்துக்கு முன்பாய் போய் நின்றது.

சந்திரசூடன் காரினின்றும் இறங்கிக் கொண்டே சொன்னார்.

" கொஞ்சம் பெரிய ஹாஸ்டல் மாதிரிதான் தெரியுது மேடம்..... "

" நானும் இன்னிக்குத்தான் இந்த ஏரியாவில் இப்படியொரு ஹாஸ்டலை பார்க்கிறேன். ஸீம்ஸ் டு பி லக்ஜூரியஸ் "
இருவரும் பாதி திறந்திருந்த காம்பெளண்ட் கேட்டுக்குள் நுழைந்து, அகலமான அந்த க்ரானைட் வாசற்படி ஏறி உள்ளே போனார்கள்.

நீளமான வராந்தாவோடு ஹாஸ்டல் அமைதியாய் இருக்க நிர்வாக அலுவலகம் என்று சொன்ன அறைக்குள் உட்கார்ந்து கம்ப்யூட்டர் கீ போர்டைத் தட்டிக்கொண்டிருந்த அந்த நடுத்தர வயது பெண் போலீஸ் யூனிஃபார்மில் இருந்த சந்திரசூடனைப் பார்த்ததும் ஸ்லோமோஷனில் திகைத்து, நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தாள். இரட்டை நாடி சரீரம் காரணமாய் எழுந்து நின்றபோது இன்னமும் குள்ளமாய் தெரிந்தாள். அவளுடைய உதடுகள் தன்னிச்சையாய் "எஸ் " என்று முனகியது.

அறைவாசலில் நின்றபடியே சந்திரசூடன் கேட்டார்.

" இந்த ஹாஸ்டலோட நிர்வாகியைப் பார்க்கணும் "

" அட்மினிஸ்ட்ரேஷன்..... நான்தான் "

" உங்க பேரைத் தெரிஞ்சுக்கலாமா ..... ? "

" அன்னபூரணி " என்று சொன்னவள் தயக்கத்துடன் கேட்டாள்.

" என்ன விஷயம் ஸார் ..... ? "

" ஒரு சின்ன என்கொயரி.... ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்.... "

" நோ.... ப்ராப்ளம் ...... ப்ளீஸ் கம் "

சந்திரசூடனும், வாஹினியும் அந்த அறைக்குள் நுழைந்து விடுதி நிர்வாகி அன்னபூரணி காட்டிய இருக்கைகளில் உட்கார்ந்தார்கள். அவளும் அமர்ந்தபடி கேட்டாள்.

" சொல்லுங்க ஸார்.... என்ன விஷயம் ..... ? "

" லட்சணா என்கிற ஒரு ஜர்னலிஸ்ட் பெண் இந்த ஹாஸ்டலில்தானே ஸ்டே பண்ணியிருக்காங்க ..... ? "

" ஆமா.... "

" அந்தப் பொண்ணைப் பார்க்கணுமே..... ? "

" லட்சணா பத்து நாளைக்கு முன்னாடி வெளியே போனா. அதுக்கப்புறம் நான் பார்க்கலை.... அதாவது அவ வரலை..... "

" உங்க ஹாஸ்டலில் தங்கியிருக்கிற ஒரு பெண் பத்து நாளா வரலை.... அவ ஏன் வரலைன்னு தெரிஞ்சுக்க உங்களுக்குள்ளே ஒரு பதைபதைப்பு வரலையா ? "

" லட்சணா எப்பவுமே அப்படித்தான் ஸார்.... அவ ஒரு ஃப்ரீலான்ஸர் ஜர்னலிஸ்ட்டா இருக்கிறதால ஏதாவது ஒரு விவகாரமான செய்தி கிடைச்சுதுன்னா வெளி மாநிலத்துக்குக் கூட போயிடுவா.... எனக்கு இன்ஃபார்ம் கூட பண்ணமாட்டா.... ஆரம்ப காலத்துல போன் பண்ணி கேட்டுட்டு இருந்தேன். அப்புறம் அதையும் விட்டுட்டேன். ஒரு தடவை டெல்லிக்குப் போய் நிர்பயா சம்பந்தப்பட்ட விவகாரத்துல தகவல்களை திரட்டறதுக்காக அங்கேயே இருபது நாள் இருந்துட்டு வந்திருக்கா..... பை...த.....பை..... இப்ப என்ன ஸார் பிரச்சினை..... ? அவளைப்பத்தி எதுக்காக விசாரிக்க வந்து இருக்கீங்க ? "

சந்திரசூடன் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு சொன்னார்.

" அந்த லட்சணா இப்போ உயிரோடு இல்லை "

அன்னபூரணியின் ஒட்டு மொத்த உடம்பும் ஒரு பலத்த அதிர்ச்சிக்கு உட்பட்டு பின்னுக்கு சாய்ந்து முகத்திலிருந்த கண்ணாடியை கை நடுங்க கழற்றினாள். குரல் தொண்டையை அடைத்துக்கொண்டது.

" எ...எ...என்ன ஸார் சொல்றீங்க........ ? "

சந்திரசூடன் அவளுக்கு பதில் சொல்வதற்குள் வாஹினி குறுக்கிட்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபின், லட்சணா சம்பந்தப்பட்ட எல்லா விபரங்களையும் சொல்லி முடித்தாள்.

" மைகுட்னஸ்" என்று சொன்ன அன்னபூரணியின் கண்களில் நீர் திரண்டு கன்னங்களில் வழிய அதைத் துடைக்க கூட தோன்றாமல் குரல் தழுதழுக்க பேசினாள்.

" பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கே நடந்தாலும் சரி, அதைக் கேள்விப்பட்ட மறுநிமிஷமே கிளம்பிப் போயிடுவா. நான் கூட ஒரு தடவை அதையெல்லாம் போலீஸ் பார்த்துக்குவாங்க. நீ ஏன் போறேன்னு கேட்டதுக்கு இன்னிக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற பாதி பேர் பணத்துக்கு விலை போகக்கூடியவங்க....... அப்படி அவங்க விலை போயிட்டா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நியாயம் கிடைக்காதுன்னு சொல்லுவா.... இன்னிக்கு அவளுக்கே இப்படிப்பட்ட ஒரு கொடுமை நடந்திருக்கு " மேற்கொண்டு பேச முடியாமல் அன்னபூரணி அழ ஆரம்பித்துவிட சந்திரசூடன் சொன்னார்.

" லட்சணா மேல ஏகப்பட்ட வெறுப்பு இருக்கப் போய்த்தான் அவளை கொடூரமாய் கொலை பண்ணி கருப்பு பெயிண்ட்டைப் பூசி காரோட டிக்கியில் அடைச்சிருக்காங்க. சம்பவம் எந்த இடத்துல எப்படி நடந்திருக்கும்ங்கிறதை எங்களால இன்னமும் கெஸ் பண்ண முடியலை. என்னோட நண்பர் கங்காதரனோட கார் அதிரா அப்பார்ட்மெண்ட்டோட கார் பார்க்கிங்கில் நின்னுட்டிருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்திருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன். ஆனா அதுக்கா ஆதாரம் எதுவும் கிடைக்கலை. உங்களுக்கு அதிரா அப்பார்ட்மெண்ட்டைப்பத்தி ஏதாவது தெரியுமா ? "

அன்னபூரணி தலையாட்டினாள். " அந்த பேர்ல ஒரு அப்பார்ட்மெண்ட் இருக்குன்னு இப்ப நீங்க சொல்லித்தான்
எனக்குத் தெரியும். அது எந்த ஏரியாவில் இருக்கு ..... ? "

" ஈஞ்சம்பாக்கம் "

" அந்த ஏரியா பக்கமெல்லாம் போய் ரொம்ப வருஷமாகுது ஸார்... இந்த ஹாஸ்டலை நிர்வாகம் பண்ணவே நேரம் பத்தலை........"

" இட்ஸ் ஒகே...... இந்த ஹாஸ்டலில் லட்சணா தங்கியிருந்த அறையை சோதனை போட்டா, ஏதாவது ஒரு தடயம் கிடைக்கலாம்ங்கிற எண்ணத்துலதான் நாங்க வந்தோம்.... அந்த அறையைப் பார்க்கலாமா ..... ? "

" நோ ப்ராப்ளம்.... லட்சணா எப்பவுமே ஹாஸ்டலை விட்டு வெளியே போகும்போது சாவியை என்கிட்ட குடுத்துட்டுதான் போவா.... காரணம் வெளியே போனா அவ எப்ப எத்தனை நாள் கழிச்சு ரூமுக்கு வருவான்னு அவளுக்கே தெரியாது. இந்த ஹாஸ்டல்ல ரூம் க்ளினிங் தினமும் நடக்கும். வாங்க ..... லட்சணாவோட ரூமுக்கு போலாம் "

அன்னபூரணி சொல்லிக்கொண்டே பக்கத்தில் இருந்த மேஜையின் இழுப்பறையைத் திறந்து, சாவியொன்றை எடுத்துக்கொண்டு எழுந்தாள். இருவரும் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

இரண்டாவது மாடியில் முதல் அறை லட்சணாவின் அறை. கதவின் மேற்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு அடி நீள செவ்வக ஸ்டிக்கர் ஸ்ட்ரிப்பில் "பெண்ணின் பெருந்தக்க யாவுள" என்ற வாக்கியம் ஃப்ளோரோஸண்ட் எழுத்துக்களில் பளபளத்தது.

பூட்டுக்கு விடுதலை கொடுக்கப்பட கதவைத் தள்ளிக்கொண்டு மூன்று பேரும் உள்ளே போனார்கள்.

சற்றே பெரிய அறை. தினமும் கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்யப்பட்டிருந்த காரணத்தால் எந்த ஒரு இடத்திலும் தூசி இல்லாமல் பளிச்சென்றிந்தது.

அறையின் சுவரோரமாய் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் புத்தகங்கள் ஒழுங்காய் அடுக்கப்பட்டு தெரிய சுவரோடு சாய்ந்து வைத்திருந்த காட்போர்டில் செய்தித்தாளில் இருந்த கத்தரித்து எடுக்கப்பட செய்திகள் சீராய் ஒட்டப்பட்டு இருந்தன. சந்திரசூடன் அருகில் சென்று பார்த்தார்.

flat number 144 adhira apartment episode 24

காட்போர்டின் கீழே கடைசியாய் ஒட்டப்பட்டிருந்த செய்திக்குக் கீழே தெரிந்த அந்த ஆங்கில எழுத்துக்களின் மேல் சந்திரசூடனின் பார்வை நிலைத்தது. மனசுக்குள் கேள்வி முளைத்தது.

" XYZBAA..... இது என்ன ..... ? "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 24) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X