• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

““ பேர் என்ன சொன்னீங்க... புஷ்பாவா ...? ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (37)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சந்திரசூடன் தன்னுடைய உதவியாளரை வியப்பாய்ப் பார்த்தார்.

" ஆமா ஸார் "

" இப்பத்தானே மூணு மணி நேரத்துக்கு முன்னாடி அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போய் விசாரிச்சுட்டு வந்தோம். இப்ப எதுக்காக பார்க்க வந்திருக்காள்ன்னு தெரியலையே..... சரி அனுப்புங்க..........."

" எஸ்......ஸார் " என்று சொல்லிய உதவியாளர் சல்யூட் ஒன்றை கொடுத்து விட்டு வெளியேறினார்.

சந்திரசூடன் சர்வேசனை ஒரு புன்னகையில் நனைத்தபடி சொன்னார்.

" சர்வேசன்...... இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸ் ஒரு சிறிய மண்பாதையில் ஆரம்பமாகி வழி தெரியாமே, திக்கு திசை தெரியாமே பயணம் பண்ணி, ஹைவேஸ் ரோட்டுக்கு வந்த பின்பும் கூட இன்னும் தெளிவில்லாமே இருக்கு...... இந்த கேஸ்ல நிறைய கேள்விகள். ஆனா ஒரு கேள்விக்குக் கூட இன்னமும் பதில் கிடைக்கலை"

" ஸார்..... இந்த கேஸ்ல நான் இப்பத்தான் உங்ககூட ஜாய்ன் பண்றேன். நீங்க சொன்ன விஷயங்களை வெச்சுப் பார்க்கும்போது நடந்த சம்பவங்கள் எல்லாமே ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இல்லாமேயிருக்கு..... லட்சணா இங்கே கொலை செய்யப்பட்டதுக்கும், மும்பையில் இருக்கிற ஜெயராஜ்க்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க நாம ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்ன்னு நினைக்கிறேன்....... "

Flat number 144 adhira apartment episode 37

சர்வேசன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே புஷ்பா அறைவாசலில் வந்து நின்று, பவ்யமாய் கும்பிடு ஒன்றைப் போட்டாள்.

சந்திரசூடன் கையசைத்தார்.

" உள்ளே வா....... "

புஷ்பா மெல்ல தயக்க நடை போட்டபடி வந்தாள்.

" உட்கார்....." தனக்கு சற்றுத் தள்ளி காலியாக இருந்த நாற்காலியொன்றைக் காட்டினார் சந்திரசூடன்.

" பரவாயில்ல ஸார்...... நிக்கறேன் "

" சரி... என்ன ஆபீஸீக்கே வந்துட்டே...எதையாவது சொல்ல மறந்துட்டியா...? "

" ஆமா.... ஸார் "

" ம்..... சொல்லு..... என்ன விஷயம் ....? "

" அ....அது வந்து ஸார்... நீங்க வீட்டுக்கு வந்து விசாரிச்சுட்டு போன பின்னாடிதான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அந்த ஜெயராஜ் என் கணவர்கிட்ட வேலை பார்த்துட்டிருந்தப்ப..... ஒரு பொண்ணு அடிக்கடி வந்து அவனைப் பார்த்து பேசிட்டு போவா....அரை மணி நேரமாவது பேசுவாங்க "

சந்திரசூடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். குரலில் ஆர்வம் சிதற கேட்டார்.

" யாரந்த பொண்ணு....? "

" தெரியலை ஸார்... பாக்கறதுக்கு கொஞ்சம் பளிச்ன்னு இருப்பா..... மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்துடுவா "
" அந்தப் பொண்ணு யார்ன்னு நீயோ உன்னோட புருஷனோ கேட்கலையா..? "

" கேட்டோம் ஸார்..... "

" அவன் என்ன சொன்னான் ....? "

" சொந்தக்கார பொண்ணு ...... வசதியில்லாத குடும்பம். அவசரத்துக்கு பணம் தேவைப்பட்டா வருவாள்ன்னு சொன்னான் "

"அந்தப் பொண்ணோட பேரு. அவ எங்கேயிருந்து வர்றாங்கிற விபரம் தெரியுமா?"

" தெரியாது ஸார் .... நாங்களும் கேட்டுத் தெரிஞ்சுக்க அக்கறை காட்டலை. என்னோட கணவரும் அந்தப் பொண்ணைப் பத்தி ஜெயராஜ்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்ன்னு சொல்லிட்டார் "

" அந்தப் பெண்.... ஜெயராஜைப் பார்க்க வந்தா அவனோட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் ....? "

" என்ன வேலை பார்த்துட்டு இருந்தாலும் அந்த வேலையை அப்படியே போட்டுட்டு அவளைப் பார்க்க போயிடுவான். ரெண்டு பேரும் கடல் மணல்ல கொஞ்ச தூரம் நடந்து போய் ஒரு படகு மறைவில் நின்னுகிட்டு பேசுவாங்க.... "

" ரெண்டு பேரும் லவ்வர்ஸா ....? "

" அப்படியும் தெரியலை ஸார்.... ஜெயராஜ் அந்தப் பொண்ணைப் பார்த்ததுமே பவ்யமா எந்திரிச்சுப் போவான்..... கூட நடக்கும்போது ரெண்டடி தள்ளியே நடப்பான். நடக்கும்போது யார்க்கும் கேட்டுடாதபடி சத்தம் இல்லாமே பேசிட்டு போவாங்க.... அவங்க ரெண்டு பேரும் சிரிச்சுப் பேசி நான் பார்த்ததேயில்ல ஸார் "

" சரி.... அந்தப் பெண்.... எப்படியிருப்பா.... போட்டோ ஏதாவது இருக்கா.......? "

" போட்டோ இல்ல ஸார்.... ஆனா அடையாளம் சொல்ல முடியும். சராசரி உயரம் ஸார்.... மாநிறம். முகத்துல கவலையிருந்தாலும் திருத்தமாயிருப்பா.... லேசா சுருட்ட முடி.... கையில, காதுல, மூக்குல ஒரு பொட்டு தங்கம் கிடையாது. கழுத்துல ஒரு பவளமாலை மட்டும் இருக்கும். வயசு முப்பத்தஞ்சிலிருந்து நாப்பதுக்குள்ளே இருக்கும்"

" சரி.... ஜெயராஜ் ஏன் செல்போன் வெச்சுக்கலை .......? "

" தெரியலை ஸார்...... என்னோட கணவர் கூட தன்கிட்டயிருந்த ஒரு பழைய செல்போனை ஜெயராஜூக்கு குடுத்து நீ யூஸ் பண்ணுன்னு சொன்னார். அவன் பிடிவாதமா வேண்டாம்ன்னு சொல்லிட்டான். காரணம் கேட்டப்ப நான் இப்போ நிம்மதியா சந்தோஷமாயிருக்கேன். எனக்குன்னு ஒரு செல்போன் இருந்து, அந்த நெம்பர் வெளியே தெரிஞ்சா எனக்கு நிறைய பிரச்சினைகள் வரும்ன்னு சொல்லிட்டு வேண்டாம்ன்னுட்டான். அதுக்கப்புறம் நாங்களும் வற்புறுத்தலை.... "

" ஜெயராஜ் சென்னையிலிருந்து மும்பைக்கு போன பின்னாடி அந்தப் பெண் ஜெயராஜைத் தேடிகிட்டு வந்தானா .......? "

" வரலை ஸார்.... ஜெயராஜ் அந்தப் பொண்ணுகிட்டதான் மும்பை போறது பத்தி சொல்லியிருக்கலாம் "

" அவ யார்ன்னு கண்டுபிடிக்க வேற ஏதாவது வழியிருக்கா .......? "

" நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன் ஸார். ஒரு வழியும் பிடிபடலை.... நான் பவானிசிங் அண்ணனுக்கு மறுபடியும் போன் பண்ணிப் பார்த்தேன். அவர் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருக்கார். ஜெயராஜ் பத்தின எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாதுன்னு நீங்க சொன்னதால நான் உடனே புறப்பட்டு உங்களைப் பார்க்க வந்தேன் "

சந்திரசூடன் சில விநாடிகள் நிசப்தம் காத்துவிட்டு தலையாட்டினார்.
" சரி..... நீ புறப்படு..... "

புஷ்பா நகராமல் தயக்கமாய் நின்றாள்.

" எ....எ......என்ன.......? "

" ஸ....ஸ......ஸார்..... ஜெயராஜ் என்னமோ தப்பு பண்ணியிருக்கான்னு தெரியுது. எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துடாதே .......? "

" இதோ பார்...... நீ ஏதாவது தப்பு பண்ணியிருந்தாத்தான் போலீஸூக்கு பயப்படணும்.......? போலீஸூக்கு உதவணும்ன்னா நீ ஒரு வேலையைச் செய் "

" சொல்லுங்க ஸார்..... எதுவாயிருந்தாலும் பண்றேன் "

" ஜெயராஜைப் பார்க்கிறதுக்காக அந்தப் பெண் பட்டினபாக்கம் ஏரியாவுக்கு அடிக்கடி வந்துட்டுப் போயிருக்கா...... அங்கே இருக்கிற யார்க்காவது அந்தப் பெண்ணைப் பத்தி தெரிஞ்சிருக்கலாம். மெல்ல பேச்சு குடுத்து விசாரிச்சுப் பாரு...... "

" நான் இன்னியிலிருந்தே அந்த வேலையை ஆரம்பிச்சுடறேன் ஸார் " சொன்ன புஷ்பா இருவர்க்கும் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு, அறையினின்றும் வெளியேற, சந்திரசூடன் தன்னுடைய செல்போனை எடுத்து, மும்பை மாதுங்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வால்சந்தை தொடர்பு கொள்ள அடுத்த சில விநாடிகளில் இணைப்பு கிடைத்தது. பேசினார்.

" மிஸ்டர் வால்சந்த்.... நான் சந்திரசூடன். சென்னையிலிருந்து பேசுகிறேன். மறுபடியும் உங்களை அழைத்து தொந்தரவு தருகிறேன் "

" நோ ப்ராப்ளம் ஸார்..... யூ கேன் கால் மீ அட் எனி டைம் "

" அந்த ஜெயராஜ் பற்றி இப்போது ஒரு புதிய தகவல் கிடைத்து இருக்கிறது. நீங்கள் இன்னமும் ஆர்த்தோ ஹாஸ்பிடலில்தான் இருக்கிறீர்களா .......? "

" இல்லை ஸார்...... வெளியே வந்துவிட்டேன். இப்போது ஸ்டேஷனுக்கு போய்க் கொண்டு இருக்கிறேன். என்ன விஷயம் ஸார்.... எனிதிங் இம்பார்ட்டண்ட்.......? "

" எஸ் "

" சொல்லுங்கள் ஸார்..... வாட் கேன் ஐ டூ .......? "

" ஜெயராஜ் சென்னையில் லூர்துசாமியிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அவனை ஒரு பெண் அடிக்கடி சந்தித்து பேசியிருக்கிறாள். அவள் யார் என்பது புஷ்பாவுக்கும் லூர்துசாமிக்கும் தெரியவில்லை. ஜெயராஜிடமே நேரிடையாய் கேட்டு விடலாமென்று இருக்கிறேன். அவனிடம் செல்போன் இல்லை.... அதனால் ..... "

" நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது ஸார்..... நான் திரும்பவும் அந்த ஹாஸ்பிடலுக்கு போய் ஜெயராஜிடம் என்னுடைய செல்போனை கொடுத்து உங்களிடம் பேச வைக்க வேண்டும். ஏம் ஐ கரெக்ட்"

" அப்சல்யூட்லி இன்ஸ்பெக்டர்.... "

" நான் மறுபடியும் அந்த ஹாஸ்பிடலுக்கு போக ஒரு மணி நேரம் ஆகிவிடும். காரணம் ஹெவி ட்ராஃபிக் "
" நோ ப்ராப்ளம்...... அயாம் வெயிட்டிங் "

தட்ஸ் ஃபைன் ஐ வில் கால் யூ ஸூன் "

" தேங்க்யூ "

செல்போனை அணைத்தார் சந்திரசூடன்

*********
ஸ்மேஷ் பத்திரிக்கை அலுவலகம்.

பத்திரிக்கையின் ஆசிரியர் வாஹினி 'ஃபுல் மூன்' டிவியின் நிருபர்க்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்தாள். வார்த்தைகளில் தெறித்த நெருப்புப் பொறிகளை எதிரே இருந்த காமிரா விழுங்கிக்கொண்டிருந்தது.

" சட்டம் எல்லோர்க்கும் பொதுவானதுதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு தனிச்சட்டம் வேண்டும். இப்போதைய நடைமுறைச் சட்டத்தில் ஒரு முக்கியமான ஷரத்து இருக்கிறது. தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு ஆணோ பெண்ணோ தன்னைத் தாக்க வரும் நபரை தற்காப்புக்காக தாக்கி, அதில் அந்த நபர் இறந்து போனால் அதைக் கொலைக் குற்றமாக கருத வேண்டியதில்லை என்று அந்த ஷரத்து சொல்கிறது. அந்த ஷரத்தையே அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கென்று தனிச்சட்டத்தை உருவாக்க வேண்டும். அதாவது பாலியல் ரீதியாக ஒரு பெண்ணை ஒரு ஆண் துன்புறுத்தும்போது அவனைத் தண்டிக்கும் உரிமையை சட்டம் அந்தப் பொண்ணுக்கு கொடுக்க வேண்டும் "

" நீங்கள் சொல்வது எந்த அளவுக்கு சாத்தியம் மேடம் ......? "

" ஒரு அரசு நினைத்தால் எதுவுமே சாத்தியம்தான். சட்டம் பெண்களுக்கு பக்கபலமாய் இருந்தால் தான் மனவக்ரமும், காமவெறியும் கொண்ட ஆண்கள் பயப்படுவார்கள். இந்தக் கருத்தை எந்த அரசு உணர்கிறதோ அந்த அரசுதான் நல்ல அரசு.... நம் முன்னோர்கள் இதைத்தான் " கொலையும் செய்வாள் பத்தினி" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் "

டி.வி.நிருபர் வாய்விட்டு சிரித்துவிட்டு சொன்னார்.

" பேட்டியில் நான் கேட்ட இறுதியான கேள்விக்கு நிறைவான பதிலைச் சொல்லியிருக்கிறீர்கள் மேடம்.... உண்மையிலேயே உங்களுடைய இந்தக் கருத்து சட்டரீதியாக நடைமுறைக்கு வருமானால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெகுவாகக் குறையும். 'ஃபுல் மூன்' டிவி நேயர்களுக்கு நல்லதொரு பேட்டியளித்த உங்களுக்கு எங்கள் நிலையத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் "

சொன்ன நிருபர் எழுந்து தனக்கு முன்பாய் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோமேடிக் ரிவால்வீங் காமிராவின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வந்து மறுபடியும் வாஹினிக்கு எதிரே உட்கார்ந்தார்.

" மேடம்......இதுவரைக்கும் நீங்க எங்க 'ஃபுல் மூன்' டிவி நேயர்களுக்காக ஒரு பேட்டியைக் கொடுத்தீங்க. இப்ப நீங்க எனக்காக ஒரு ப்ரத்யேக பேட்டி ஒண்ணைத் தரணும்....... "

" உங்களுக்கு ப்ரத்யேக பேட்டியா .......? "

" எஸ்.... அந்தப் பேட்டியில் நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்கப் போறேன். நீங்க அதுக்கு பதில் சொன்னா போதும் "

வாஹினியின் நெற்றியில் குழப்பக்கோடுகள் விழுந்தன.

" என்ன கேள்வி .......? "

" ஈஞ்சாம்பாக்கம் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் கடந்த சில வருஷங்களில் ஆறு பேர் மர்மமான முறையில் ஃப்ளாட் நெம்பர் 144ல் இறந்து போயிருக்காங்க. இதில் நாலு பேர் பெண்கள். அதைப்பத்தி உங்க ஸ்மேஷ் பத்திரிக்கையில் ஏன் ஒரு வரி கூட எழுத மாட்டேங்கறீங்க.அதுக்கான காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா?"

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 37) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X