For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ... ஸார்... அவனைப் பி...பி... பிடிச்சுட்டீங்களா.. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (33)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

மாடியின் வலது பக்க மூலையில் வெள்ளைக்கோடுகள் போட்ட சிவப்பு சட்டை அணிந்து தலையில் தொப்பியோடு அந்த உருவம் குப்புறக்கிடந்தது. மூன்று பேரும் அந்த உருவத்தை நோக்கி வேக நடை போட ஆதிகேசவன் பதட்டக்குரலில் சந்திரசூடனிடம் சொன்னார்.

" ஸார்..... இவன்தான் கையில டெலஸ்கோப்பிக் காமிராவை வெச்சுகிட்டு 144 நெம்பர் ஃப்ளாட்டை வீடியோ எடுத்துட்டிருந்தான். இதே சிவப்பு சட்டையோடும் தலையில் தொப்பியோடும்தான் நான் இவனைப் பார்த்தேன் "

" ராவ்டே பிந்தர் எங்கே .......? " சந்திரசூடன் குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே கேட்டார்.

" காமிரா பேர்வழியைத் தாக்கிவிட்டு நம்மைத் தேடி கீழே இறங்கிப் போயிருப்பாரோ.......? " ஆதிகேசவன் இடைமறித்து சொன்னார்.

" அப்படியிருக்க வாய்ப்பில்லை ஸார். ஏன்னா அப்பார்ட்மெண்ட்டுக்கு கீழே மாடிப்படிகளுக்கும் பக்கத்துலதான் நான் நின்னுட்டிருந்தேன். ராவ்டே பிந்தர் இறங்கி வந்திருந்தால் என்னோட பார்வையில பட்டிருப்பார்........"

" சரி.... மொதல்ல சிவப்பு சட்டைகாரன் யார்ன்னு பார்ப்போம் "

ஆர்வமான குரலில் சந்திரசூடன் சொல்லிக்கொண்டே குனிந்து குப்புறக்கிடந்த உடலைப் புரட்டினார். உடல் மல்லாந்து விழ சந்திரசூடனும், ஆதிகேசவனும் திகைத்துப் போன விழிகளோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

Flat number 144 adhira apartment episode 33

" இ...இ....இது ராவ்டே பிந்தர்...... நீங்க காமிரா பேர்வழின்னு சொன்னீங்களே ஆதிகேசவன் .......? "

" ஆமா ஸார்..... அவன்தான் சிவப்பு சட்டையோடும், தலையில் தொப்பியோடும் இருந்தான். இந்த ட்ரஸ் மாற்றம் எப்படீன்னு தெரியலையே. ஒருவேளை ராவ்டே பிந்தரைத் தாக்கி அவர் மயக்கமானதும் அவனோட ட்ரஸை ராவ்டேக்கு மாட்டிட்டு, அவரோட சட்டையை அவன் மாட்டிகிட்டு தப்பிச்சு போயிருக்கணும் ஸார் " ஆதிகேசவன் நடுக்கமான குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராவ்டே பிந்தர் மெல்லிய முனகலோடு அசைந்தார். சந்திரசூடன் அவரருகே குனிந்து தோளை மெல்லத் தொட்டார்.

" ராவ்டே....... "

" ம்.... "

" நான் சந்திரசூடன்....... நான் பேசறது உங்களுக்குக் கேட்குதா.......? "

ராவ்டேவின் கண்ணிமைகள் சற்றே சிரமத்தோடு பிரிந்தன. சந்திரசூடனைப் பார்த்ததும் எழுந்து உட்கார முயற்சித்தார். சர்வேசன் மண்டியிட்டு குனிந்து அவருடைய இடுப்புக்கு கை கொடுத்து உட்கார வைத்ததும் சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார். பார்வை சுற்றும் முற்றும் சுழன்றது.

" ஸ....ஸார்.... அவனைப் பி...பி....பிடிச்சுட்டீங்களா .......? "

" இ....இல்லை..... அவன் யார்ன்னு உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சுதா .......? "

" தெ....தெ....தெரியலை..... மு....முகத்தைப் பார்க்க முடியலை... நா...நான் அவனைத் தாக்குறதுக்குள்ளே, அவன் வேகமாக கையை வீசி எ...எ...என்னோட பின் கழுத்தை கத்தியால வெட்டற மாதிரி வெட்டினான். எ....எ....எனக்கு உடனே கண்ணை இருட்டிகிட்டு வந்தது. நிலை குலைஞ்சு போய் குப்புற விழுந்தேன்... என்னால எந்திரிக்க முடியலை.... மரக்கட்டை மாதிரி அப்படியே கிடந்தேன். அ...அ...அவனோட சட்டையை எனக்கு மாட்டிவிட்டான். எ...எ....என்னோட சட்டையை அவன் மாட்டிகிட்டான். அவன் யா.....யார்ன்னு பார்க்க கழுத்தைத் தி....தி.... திருப்பிப் பார்க்க எவ்வளவோ மு....மு.....முயற்சி பண்ணினேன்... முடியலை..... சரியான வலி "

" இப்ப உங்களால கழுத்தைத் திருப்ப முடியுதா .......? "

" இ....இ....இப்ப முடியுது ஸார்..... "

" எந்திரிச்சு நிக்கமுடியுதான்னு பாருங்க....." சர்வேசன் சொல்ல, ராவ்டேபிந்தர் தன்னுடைய இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு ஸ்லோமோஷனில் மெல்ல எழுந்து நின்றார். உடம்பு லேசாய் நடுங்கியது.

" உடம்புக்கு ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க.... பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு ஹாஸ்பிடலுக்குப் போயிடலாம் "

" வே.....வே.. வேண்டாம்.. ஸார். அயாம் ஆல் ரைட். இப்படியொரு சம்பவம் நடந்தது. என் வீட்டுக்குத் தெரியக்கூடாது. என்னோட ஒஃய்ப்பும் டாட்டரும் ரொம்பவுமே பயந்த சுபாவம் "

சந்திரசூடன் ராவ்டேபிந்தரின் தோள் மீது கையை வைத்தார்.

" இந்த விஷயம் உங்க வீட்டுக்கு போகாது.... நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.... அந்த காமிரா பேர்வழியைக் கண்டுபிடிக்கிற வேலையை நாங்க பார்த்துக்கறோம்"

" ஸார்..... எங்க அதிரா அபார்ட்மெண்ட்டில நடக்கிற அசாதாரண சம்பவங்களை இதுவரைக்கும் எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் சீரியஸாய் எடுத்துகிட்டு இந்த அளவுக்கு உங்களைப்போல யாரும் இன்வெஸ்டிகேஷன் பண்ணியதில்லை. ஒரு கண்துடைப்பு விசாரணை மட்டுமே நடக்கும். ஆனா கடந்து பத்து நாட்களாய் நீங்க இந்த ஒரு கேஸூக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இருட்டில் ஒளிஞ்சிட்டிருக்கிற உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர படாத பாடு பட்டுகிட்டு இருக்கீங்க. ஐ மஸ்ட் தேங்க்யூ ஸார் "

சந்திரசூடன் மெல்லச் சிரித்தரார்.

" மிஸ்டர் ராவ்டே...... நான் என்னோட ட்யூட்டியைத்தான் பண்ணிட்டிருக்கேன். இந்த கேஸ்ல நான் கூடுதல் கவனம் செலுத்தறதுக்குக் காரணம் லட்சணா என்கிற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதுதான். ஒரு பெண்ணை கை நீட்டி அடிக்கிறதே பாவம். ஒரு பெண்ணை கொலை செய்யறது மகா பாவம். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடம்பை நிர்வாணமாக்கி அடையாளம் தெரியாமல் இருக்கிறதுக்காக கருப்பு பெயிண்ட் பூசி பெண்மையை களங்கப்படுத்தியது பாவத்திலும் பாவம் மகா மகா பாவம். அந்த பாவத்தைச் செஞ்ச அரக்க குணம் கொண்ட கொலையாளிகளை சும்மாவிடலாமா..... அவங்க யார்ன்னு கண்டுபிடிச்சு சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தூக்குக்கயித்துல தொங்கவிட வேண்டாமா.... அதுக்கான இன்வெஸ்டிகேஷன்தான் இது "

ராவ்டே பிந்தரின் கண்களில் இப்போது நீர் பனித்து கனத்து உதிர்ந்தது. இரண்டு கைகளையும் குவித்து சந்திரசூடனை கும்பிட்டார்.

" ஸார்..... நீங்க பேசறதை கேட்க கேட்க ஐ ஃபீல் கில்டி...... ஐ மீன் எனக்குள்ளே ஒரு குற்ற உணர்ச்சி

" ஒரு குற்ற உணர்ச்சியா .......? "

" எஸ் "

" எதுக்காக.......? "

" ஒரு குற்றம் நடந்த சம்பவத்தை போலீஸ்கிட்டயிருந்து மறைக்கிறது தப்பா இல்லையா .......? "

" மிகப்பெரிய தப்பு "

" அந்தத் தப்பை நான் பண்ணிட்டேன் "

" வாட் டூ யூ ஸே .......? "

ராவ்டே பிந்தர் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு சந்திரசூடனை ஏறிட்டார்.

" ஸார்..... லட்சணா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உங்க நண்பர் கங்காதரனின் கார் டிக்கியில் அடைக்கப்பட்ட சம்பவம் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில்தான் நடந்திருக்கணும்ன்னு நீங்க கெஸ் வொர்க் பண்ணி வெச்சிருக்கீங்க இல்லையா .......? "

" ஆமா..... "

" அதுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா .......? "

" இல்லை..... "

" ஆனா அதுக்கான ஆதாரம் என்கிட்டே இருக்கு "

சந்திரசூடனின் இரு புருவங்களும் சட்டென்று சுருங்கி வியப்பில் முடிச்சிட்டுக் கொண்டன. " என்ன ஆதாரம் .......? "
ராவ்டே பிந்தர் தலையைக் குனிந்தபடி தயக்கமான குரலில் சொன்னார்.

" ஸார்....... இப்ப நான் சொல்லப் போகிற விஷயம் நம்ம நாலு பேர்க்கு மட்டுமே தெரிஞ்சதாக இருக்கணும். வெளியே யார்க்கும் தெரியக்கூடாது. ஏன்னா இந்த விஷயத்துல என்னோட பொண்ணு பத்மஜா சம்பந்தப்பட்டிருக்கா....... "

" உங்க டாட்டரா .......? "

" எஸ்...... பிரசவத்துக்காக வந்து இங்கே தங்கியிருக்கா. லட்சணாவோட கொலைச் சம்பவம் நடந்த அன்னிக்கு ராத்திரி பத்மஜா காத்து வாங்கறதுக்காக எங்க ஃப்ளாட் மொட்டை மாடிக்கு போயிருக்கா... மாடியில் வாக்கிங் பண்ணிட்டிருக்கும்போதுதான் உங்க ஃப்ரண்ட் கங்காதரனோட கார் அவருடைய ஃப்ளாட் ஏரியா பார்க்கிங்கில் வந்து நின்னதைப் பார்த்திருக்கா. கங்காதரனும் அவரோட மனைவியும் காரைவிட்டு இறங்கிப் போனபின், அடுத்த சில நிமிஷங்களில் ஒரு வேன் அந்தக் கார்க்குப் பக்கத்தில் வந்து நின்னதையும் அந்த வேனிலிருந்த ரெண்டு பேர் இறங்கி மூட்டை மாதிரி எதையோ தூக்கிட்டு வந்து காரோட டிக்கியை ஓப்பன் பண்ணி திணிச்சதையும் பத்மஜா பார்த்திருக்கா. பார்த்ததோடு மட்டுமில்லை. அதை தன்னோட செல்போனில் வீடியோவாகவும் எடுத்திருக்கா..... "

சந்திரசூடன் பெரிதாய் மலர்ந்தார்.

ஃபென்டாஸ்டிக்..... அந்த வீடியோ பதிவை நீங்க பார்த்தீங்களா .......? "

" பார்த்தேன் ஸார்.... அந்தப் பதிவை உங்களுக்கு அனுப்பவும் முயற்சி செஞ்சேன். ஆனா என்னோட ஒஃய்ப் வசுந்தராவும், டாட்டர் பத்மஜாவும் போலீஸீக்கு இந்த விஷயத்தைக்கொண்டு போனா நமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம்ன்னு சொல்லி அந்தப் பதிவை செல்போனிலிருந்து டெலிட் பண்ணச் சொல்லிட்டாங்க. நான்தான் டெலிட் பண்ணினேன். அவங்களோட பேச்சை என்னால தட்ட முடியலை "

சந்திரசூடன் லேசாய் முகம் சிவந்தார். கோபத்தில் வார்த்தைகள் தடித்தது.

" மிஸ்டர் ராவ்டே...... நீங்க ஒரு எக்ஸ் சர்வீஸ்மேன். ஆர்மியில் ஒரு ஆபீஸராய் இருந்திருக்கீங்க. குற்றச்சம்பவத்துக்கு ஆதாரமாய் இருந்த ஒரு வீடியோ பதிவை போலீஸீக்கு தெரியப்படுத்தாமல் இருந்த்ததும் அதை ஒஃய்ப்பும் டாட்டரும் வேண்டாம்ன்னு சொன்ன ஒரேயொரு காரணத்துக்காக டெலிட் பண்ணினது எவ்வளவு பெரிய க்ரிமினல் அஃபென்ஸ் தெரியுமா .......? "

" தெரியும் ஸார் "

" தெரிஞ்சும் ஏன் பண்ணீங்க .......? "

" டோண்ட் மிஸ்டேக்... மீ..... ஸார்.... என் பெண்ணோட செல்போனை வாங்கி அந்த வீடியோ பதிவை நான் டெலிட் பண்ணினது உண்மைதான். ஆனா அதை டெலிட் பண்றதுக்கு முன்னாடி அந்தப் பதிவை என்னோட செல்போனின் வாட்ஸ் அப் நெம்பர்க்கு ஃபார்வேர்ட் பண்ணிகிட்டேன். இது என் ஒஃய்ப்புக்கும் டாட்டருக்கும் தெரியாது. நான் மிலிடெரியில் இருந்தவன் ஸார். சட்டத்துக்கு பாதகமாய் என்னிக்குமே நடந்துக்கமாட்டேன்... அந்த செல்போன் பதிவை இந்த வாரத்துல உங்க ஆபீஸீக்கே வந்து காட்டலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ளே என்னோட டாட்டரை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண வேண்டியதாயிடுச்சு "

" ஏன் என்னாச்சு .......? "

" ஷி ஈஸ் அனிமிக்..... ப்ளட்ல ஹீமோகுளோபின் லெவல் ரொம்பவும் கம்மியாய் இருந்தது. டெலிவரி சமயத்துல அது ஒரு பிரச்சினையாய் மாறலாம்ன்னு டாக்டர் சொன்னதால இப்ப ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு....... அம்மாவும் பொண்ணும் ஹாஸ்பிடல்ல இருக்காங்க. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திகிட்டு உங்களை நேர்ல வந்து பார்த்து என் பொண்ணு பத்மஜா எடுத்த அந்த வீடியோ பதிவை உங்ககிட்ட காட்டலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க..... "

சந்திரசூடன் புன்முறுவல் பூத்த முகத்தோடு ராவ்டேவின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

" ஸாரி....... உங்க மனநிலையையும், உண்மையான நிலவரத்தையும் புரிஞ்சுக்காமே கொஞ்சம் கோபமாய் பேசிட்டேன் "

" அது நியாயமான கோபம் ஸார்..... " சொன்ன ராவ்டே தன்னுடைய செல்போனை உயிர்ப்பித்து வாட்ஸ் அப்புக்கு போய் அங்கே பார்வேர்ட் செய்யப்பட்டிருந்த அந்த வீடியோ பதிவை காட்டினார். சந்திரசூடன் போனை வாங்கிப்பார்த்தார். வீடியோ ஒடியது.

அபார்ட்மெண்ட்டின் பேஸ்மெண்ட் பார்க்கிங் ஏரியாவில் கங்காதரனின் நீலநிறக்காரும், ஒரு வேனும் பார்வைக்கு கிடைக்க, இரண்டு பேர் ஒரு மூட்டையைத் தூக்கிக்கொண்டு வருவதும், டிக்கிக்குள் திணிப்பதும், பிறகு அந்த வேன் வேகவேகமாய் கிளம்பிப் போவதும் என்று ஒரு முப்பது விநாடி நேரத்திற்குள் வீடியோ முடிந்து விட்டது.
சந்திரசூடன் அந்த செல்போனை பக்கத்தில் நின்றிருந்த சர்வேசனிடம் கொடுத்துக்கொண்டே சொன்னார்.

" சர்வேசன்..... இந்த வீடியோ பதிவை நீங்களும் ஒரு தடவை பார்த்துடுங்க.... மூட்டையைத் தூக்கிகிட்டு வர்ற ரெண்டு பேர்கள்ல ஒருத்தனோட முகம் எனக்கு பரிச்சயமாயிருக்கு..... ஆனா ஞாபகத்துக்கு வரலை. நீங்க பாருங்க.... உங்களுக்கு ஒருவேளை ஞாபகத்துக்கு வரலாம் "

சந்திரசூடன் கொடுத்த செல்போனை வாங்கி அந்த வீடியோ பதிவை உன்னிப்பாய் பார்க்க ஆரம்பித்தார் சர்வேசன்.
**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 33) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X