• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ ஏதோ சத்தம் கேட்டது... “ ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (32)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ராவ்டே பிந்தர் பதறிப் போனவராய் இரண்டு பாகங்களாய் பிரிந்து கிடந்த செல்போனை எடுத்து இணைத்துவிட்டு காதில் வைத்தார்.

அவசர அவசரமாய் குரல் கொடுத்தார்.

" ஹலோ....... "

மறுமுனையில் நிசப்தம்.

செல்போனை மீண்டும் திறந்து பாட்டரியை ஒழுங்காய்ப் பொருத்திவிட்டு ஆதிகேசவனின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டார். இரண்டு பீப் சத்தங்களோடு இணைப்பு காணாமல் போயிற்று. நான்கைந்து முறை இணைப்புக்கு முயற்சித்த பிறகு அந்த முயற்சியை கைவிட்டு படிகளில் தயக்க நடை போட்டு ஏறினார்.
மொட்டை மாடியின் கடைசிப்படிகளில் ஏறும்போது செல்போன் ஒலிக்க ஆரம்பித்தது. டிஸ்ப்ளே திரையைப் பார்த்தார். ஆதிகேசவனின் பெயர் ஸ்க்காரலிங்கில் ஒட போனை அவசர அவசரமாய் இடது காதுக்குப் பொத்தி குரலைத் தாழ்த்தினார்.

" ஹலோ....."

"ராவ்டே..... உங்க போனுக்கு என்னாச்சு.......? ஏதோ சத்தம் கேட்டது "

" போன் திடீர்ன்னு கையிலிருந்து ஸ்லிப் ஆயிடுச்சு..... நல்லவேளையாய் உடையலை.....போனை மறுபடியும் செட் பண்ணி உங்ககிட்ட பேச முயற்சி செஞ்சேன். டவர் கிடைக்கலை. குழப்பத்தோடு படி ஏறிட்டிருக்கும்போதுதான் உங்க போன் வந்தது "

" சரி.... மொட்டை மாடிக்குப் போயிட்டீங்களா .......? "

" போயிட்டிருக்கேன் ..... இன்னும் நாலைஞ்சுபடிதான் இருக்கு. அந்த காமிரா பேர்வழி இப்ப எங்கே இருக்கான் .......? "

" இன்னமும் அந்த சின்டெக்ஸ் பக்கத்துலதான் இருக்கான். நீங்க மொட்டைமாடிக்குப் போனதும் சத்தம் வராமே நடந்து அவனை நெருங்கணும் "

" நான் பார்த்துக்கிறேன் " சொன்ன ராவ்டே பிந்தர் எஞ்சிய படிகளையும் முடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தார். மாடியின் கதவருகே நின்றபடி மொட்டை மாடியின் பரப்பளவை எட்டிப்பார்த்தார்.

Flat number 144 adhira apartment episode 32

சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசியது. அந்த அப்பார்ட்மெண்டின் ஃப்ளாட்டுக்களுக்கான பெரிய சைஸ் சின்டெக்ஸ் தொட்டிகள் தள்ளித்தள்ளி தெரிய ராவ்டே செல்போனில் கிசுகிசுத்தார்.

" ஆதிகேசவன்........ "

" சொல்லுங்க....... "

" மொட்டை மாடியில் மொத்தம் ஆறு சின்டெக்ஸ் தொட்டிகள் இருக்கு. அவன் எந்தத் தொட்டிக்குப் பின்னாடி நின்னுட்டிருக்கான் தெரியலையே .....? "

" நாலாவது தொட்டி ஃப்ரம் வெஸ்ட் டூ ஈஸ்ட். உங்க பார்வையோட கோணத்திலிருந்து பார்த்தா அவன் மறைவாய் இருந்து உங்க கண்களுக்கு தட்டுப்பட வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன் "

" இப்ப நான் என்ன செய்யட்டும்..... நாலாவது தொட்டியை நோக்கி மூவ் பண்ணட்டுமா .....? "

" ம்.... பண்ணுங்க..... அவன் உங்களை பார்த்து அலர்ட்டாகிறதுக்கு முந்தி நீங்க அவனை அட்டாக் பண்ணிடறது பெட்டர் "ஆதிகேசவன் சொல்ல, ராவ்டே பிந்தர் தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து மெதுவாய் நகர்ந்து, நாலாவது தொட்டியை நோக்கி பூனை நடை போட்டார். ஐம்பதடி தூரத்தில் தெரிந்த அந்த நான்காவது சின்டெக்ஸை உன்னிப்பாய் பார்த்துக்கொண்டே செல்போனில் முணுமுணுத்தார்.

" ஆதிகேசவன்... நான் இப்போ உங்களோட பார்வைக்குத் தட்டுப்படறேனா...? "

செல்போனின் மறுமுனையில் பதில் இல்லை.

" ஆதிகேசவன்..... "

"ம்...... "

" நான் பேசறது உங்களுக்கு கேட்குதா .....? "

" டவர் சரியா எடுக்கலை..... வாய்ஸ் பிரேக் ஆகுது....." ஆதிகேசவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தொடர்பு அறுந்து போக, ராவ்டே செல்போனை அணைத்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நான்காவது சின்டெக்ஸை நோக்கி அதிஜாக்கிரதையாய் நடந்தார்.

ஒரு நிமிட நிதான நடையில் சின்டெக்ஸ் தொட்டி நெருங்கியது.
ராணுவத்தில் தான் கற்றுக்கொண்ட சடன் ஸ்டாரம் தற்காப்புக்கலையை எப்படி கையாளுவது என்பதை மனதின் மையத்துக்கு கொண்டு வந்து நிறுத்திய ராவ்டே தொட்டியின் அடுத்தப் பக்கத்தை மெல்ல எட்டிப்பார்த்தார்.
அங்கே யாரும் இல்லை.

திகைத்துப்போனவர் கலவர விழிகளோடு சுற்றும்முற்றும் பார்த்தார். மொட்டைமாடி துடைத்து வைத்த மாதிரி இருந்தது.

பார்வைக்கு யாரும் தட்டுப்படவில்லை.

' இந்த சின்டெக்ஸ்க்குப் பின்னால்தானே அந்த காமிரா பேர்வழி இருப்பதாக ஆதிகேசவன் சொன்னார் '

" ஒருவேளை ...... நான் வருவதைத் தெரிந்துகொண்டு பக்கத்து சின்டெக்ஸின் பின்புறத்துக்கு போய் ஒளிந்திருப்பானோ .....? "

ராவ்டே பிந்தர் யோசித்துக்கொண்டே பக்கத்து சின்டெக்ஸை நோக்கி நகர முயன்ற விநாடி -
அவருடைய பின்னங்கழுத்தில் இடி இறங்கியதுபோல ஓர் அடி விழ, ஐம்பொறியும் கலங்கிப் போனவராய் திரும்பினார். தலை சுற்றி பின்னுக்குச் சாய்ந்தவரின் கண்களில் பூச்சி பறந்தது.

எதிரே கையில் நீளமான தடியோடு யாரோ நின்றிருப்பது பார்வைக்கு மசமசப்பாய் தட்டுப்பட்டது.

கண்களைச்சுருக்கிக்கொண்டு அது யாரென்று பார்க்க முயல, அந்த நபரின் கையிலிருந்த தடி மீண்டும் உயர்ந்து ராவ்டே பிந்தரின் முதுகை மூர்க்கமாய் தாக்க முயல, அவர் மின்னல் வேகத்தில் விலகிக்கொண்டு எதிர்பார்க்காத ஒரு விநாடியில் அவன் மேல் எய்த ஒரு அம்பைப்போல் பாய்ந்தார்.

*******
ஃப்ளாட் நெம்பர் 144ன் உள்ளே ஃபாரன்ஸிக் ஆபீஸர் சர்வேசனுடன் பேசிக் கொண்டிருந்த சந்திரசூடன் தன்னுடைய செல்போன் டயல்டோனை வெளியிடுவதைக் கேட்டதும் எடுத்து காதுக்கு கொடுத்தபடியே "எஸ்" என்றார்.

" ஸார்..... நா..... நான் ஆதிகேசவன் "

சந்திரசூடன் மெல்லச் சிரித்தபடி " ஏன் இவ்வளவு டென்ஷனோடு பேசறீங்க.... கோபிகா ஏதாவது பிரச்சினை பண்றாளா .....? " என்று கேட்டார்.

" இல்ல.... ஸார்..... இது வேற பிரச்சினை .....? "

" என்ன .....? "

" நீங்க தாட்சாயிணி அம்மாவோடு பேசிட்டிருக்குமேபோது ராவ்டே பிந்தர்க்கு ஒரு போன் வந்து, அவர் உங்ககிட்ட வாய்ஸ் ப்ரேக் ஆகுது, வெளியே போய் பேசிட்டு வர்றேன்னு எழுந்து போயிருப்பார். நோட் பண்ணீங்களா .....? "

" ஆமா .... "

" அவர்க்குப் போன் பண்ணினது நான்தான் "

" எதுக்காக ராவ்டே பிந்தர்க்கு போன் பண்ணீங்க .....? "

" ஸார்.... கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்னோட அபார்ட்மெண்ட் மொட்டைமாடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுக்கப் போகும்போது இஸட் அப்பார்ட்மெண்டின் மொட்டைமாடியிலிருந்து யாரோ ஒரு நபர் கையில் காமிராவோடு 144 நெம்பர் ஃப்ளாட்டையும், நீங்க தாட்சாயிணி அம்மாவோடு பேசிட்டிருந்ததையும் வீடியோ எடுத்துட்டிருந்தான். நான் உடனே ராவ்டே பிந்தர்க்கு போன் பண்ணி அந்த இஸட் அப்பார்ட்மெண்ட் மொட்டைமாடிக்குப் போய் காமிரா பேர்வழியை மடக்கச்சொன்னேன் " என்று பேச்சை ஆரம்பித்த ஆதிகேசவன் எல்லா விஷயங்களையும் வேகமாய் சொல்லி முடித்தார்.

இப்போது சந்திரசூடனை பதற்றம் தொற்றிக்கொண்டது.

" ராவ்டே பிந்தர் அந்த காமிரா பேர்வழியை மடக்கிட்டாரா .....? "

" தெரியலை ஸார்..... ராவ்டே பிந்தர் அந்த அப்பார்ட்மெண்ட்டோட மொட்டைமாடிக்குப் போகிறவரைக்கும் நானும் அவரும் செல்போன்ல லைவா பேசிட்டிருந்தோம். அதுக்கப்புறம் டவர் கிடைக்காததால தொடர்ந்து பேச முடியலை. ஆனா அவர் மொட்டைமாடிக்குப் போய் சேர்ந்ததைப் பார்த்தேன். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியலை... ராவ்டே பிந்தரோட செல்போனை காண்டாக்ட் பண்ணினேன். நாட் ரீச்சபிள்ன்னு ரெக்கார்டட் வாய்ஸ் வருது. நான் இப்போ அந்த அப்பார்ட்மெண்ட்டுக்குத்தான் போயிட்டிருக்கேன்.... நீங்களும் வந்துடுங்க ஸார்...."

" இதோ புறப்பட்டேன் " என்றவர் செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி சர்வேசனிடம் திரும்பினார். படபடத்தார்.

" வாங்க சர்வேசன் Z அப்பார்ட்மெண்ட்டுக்கு போலாம் "

" என்ன ஸார் ஏதாவது பிரச்சினையா

"போய்ப் பார்த்தாத்தான் தெரியும்... அது பிரச்சினையா .... இல்லையான்னு...... "

அடுத்த சில விநாடிகளில் ஃப்ளாட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.
Z அப்பார்ட்மெண்ட் போய் சேர்வதற்குள் சந்திரசூடன் சர்வேசனிடம் விபரத்தைச் சொல்ல அவர் லேசாய் கோபப்பட்டார்.

"ஆதிகேசவன் தப்பு பண்ணிட்டார்.... ராவ்டே பிந்தருக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்றதுக்கு பதிலாய், நேரிடையாய் உங்களுக்கு போன் பண்ணி அந்த காமிரா பேர்வழியைப்பத்தி சொல்லியிருக்கலாமே .....? "

" நோ.....நோ..... நான் ஃப்ளாட்டை விட்டு வெளியே வந்துட்டா காமிரா பேர்வழி அந்த அப்பார்ட்மெண்ட்டோட மொட்டைமாடியிலிருந்து கீழே இறங்கிடுவானோன்னு ஆதிகேசவன் நினைச்சிருக்கார். அதுவும் சரியான காரணம்தான் "

" இப்போ மொட்டைமாடியில் என்ன நடந்திருக்கும்ன்னு தெரியலையே" இருவரும் பேசிக்கொண்டே வேக நடை போட்டு அப்பார்ட்மெண்ட்டை நெருங்கினார்கள்.

Z அப்பார்ட்மெண்ட்டின் பிரதான வாயிலில் தவிப்போடு நின்றிருந்தார் ஆதிகேசவன். அவரை நெருங்கிய சந்திரசூடன் கேட்டார்.

" என்ன..... மொட்டை மாடிக்குப் போய் பார்த்தீங்களா .....? "

" இல்ல ஸார்..... நான் மட்டும் தனியாய்ப் போக பயமாயிருந்தது. உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்..... "

" சரி.... வாங்க போலாம்........... "

வேகவேகமாய் மூன்று பேரும் நடந்தார்கள்.

நடக்க நடக்க ஆதிகேசவனிடம் சர்வேசன் கேட்டார். " இங்கே லிஃப்ட் இருக்கா .....? "

" லிஃப்ட் இருக்கு ஸார்.... ஆனா ரிப்பேர்.......

" மொத்தம் எத்தனை மாடி.....? "

" நாலு "

" லிஃப்ட் இல்லாமே இங்கே எப்படி குடியிருக்காங்க .....? "

" பாதி ஃப்ளாட்ஸ் வேக்கண்ட் ஸார்.... ஃப்ளாட் ஒனர்ஸ் வந்த விலைக்கு விற்க தயாராயிருக்காங்க..... "

அரைகுறை வெளிச்சத்தோடு தெரிந்த மாடிப்படிகளில் ஏறிக்கொண்டே சந்திரசூடன் கேட்டார்.

" ராவ்டே பிந்தர்க்கு மறுபடியும் போன் பண்ணிப் பார்த்தீங்களா .....? "

" பண்ணிட்டேயிருந்தேன் ஸார்... நாட் ரீச்சபிள்ங்கிற ரெக்கார்டட் வாய்ஸ்தான் வருது...... இந்த ஏரியாவில் அடிக்கடி இப்படிப்பட்ட டவர் ப்ராப்ளம் வர்றது சகஜம் "

மூன்று பேரும் மூச்சு வாங்கி, முகம் வியர்த்து நான்காவது மாடியின் படிகளில் ஏறி மொட்டைமாடிக்கு வந்தார்கள். மாடியின் வலதுபக்க மூலைக்கு சென்ற அவர்களுடைய பார்வைகள் ஒர் அதிர்வுக்கு உட்பட்டன.

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 32) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X