• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

" எ....எ.....என்ன கோபிகா.....? " ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (29)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

கோபிகாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டுப்போன சந்திரசூடன், ஆதிகேசவன், ராவ்டே பிந்தர் மூன்று பேரும் ஃப்ளாட்டின் இடது பக்க கார்னரை நோக்கி கிட்டத்தட்ட ஒடினார்கள்.
கோபிகா அங்கேயிருந்த ஒரு அறைக்கு முன்பாய் முகம் வியர்த்து பீதி நிறைந்த பார்வையோடு நின்றிருந்தாள்.

" எ....எ.....என்ன கோபிகா.....? "

சந்திரசூடன் கேட்க கோபிகா பேச முடியாமல் இரண்டு தடவை உதடுகளை ஈரப்படுத்திக்கொண்ட பின் திக்கித் திணறும் குரலில் பேசினாள்.

" அ....அ.....அந்த ரூமை கொஞ்சம் எட்டிப் பாருங்க ஸார் "

அவள் சுட்டிக்காட்டிய அறையை தயக்கத்தோடு நெருங்கி உள்ளே பார்வையை வீசினார் சந்திரசூடன்.
அடுத்தவிநாடியே ஒட்டு மொத்த உடம்பும் ஒரு சிலிர்ப்புக்கு உட்பட்டது.
அந்த அறை முழுவதும் நூற்றுக்கணக்கில் கரப்பான் பூச்சிகளும், இடையிடையே பெரிய சைஸ் பல்லிகளும், நீளநீளமாய் பூரான்களும் செத்துக் கிடந்தன.
சந்திரசூடனைத் தொடர்ந்து ஆதிகேசவனும், ராவ்டே பிந்தரும் அறையை எட்டிப்பார்த்துவிட்டு அதிர்ந்துபோன முகங்களோடு சந்திரசூடனிடம் திரும்பினார்கள். ராவ்டே பிந்தர் கேட்டார்.

" எப்படி ஸார்...... இந்த ஒரு ரூமுக்குள்ளே மட்டும் இவ்வளவு கரப்பான் பூச்சிகளும், பல்லிகளும், பூரான்களும் செத்துக் கிடக்கு .....? "

சந்திரசூடன் நெற்றி7யை தேய்த்தார். " அதுதான் எனக்கும் ஆச்சர்யமாய் இருக்கு. இந்த சம்பவம் ஒரு சிலமணி நேரத்துக்கு முன்னாடிதான் நடந்திருக்கணும் "

" ப்ளாட்டுக்குள்ளே வந்த நபர்க்கும், இந்த சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் .....? "

ராவ்டே பிந்தர் ஆச்சர்யப்பட ஆதிகேசவன் சொன்னார். "ஸார்.... இந்த ப்ளாட்டுக்குள்ளே நாம நுழைந்ததுமே ஒரு கெட்ட வாடை அடிச்சுது.... அந்த வாடை அடிச்சதுக்கு காரணம் இப்படி எல்லாமே செத்துக் கிடக்கிறதுதான்னு நினைக்கிறேன் "

சந்திரசூடன் மறுத்தலாய் தலையை அசைத்தார்.

Flat number 144 adhira apartment episode 29

" நோ.....நோ....... அது அப்படிப்பட்ட ஸ்மெல் கிடையாது. எலி பூனை இதுமாதிரியான பாலூட்டிகள் செத்து டீகம்போஸானால்தான் ஸ்மெல் வரும். கரப்பான் பூச்சி, பல்லி, பூரான்கள் டீகம்போஸானாலும் கூட இப்படியெல்லாம் ஸ்மெல் வராது "

" அப்படீன்னா இந்த ஸ்மெல்லுக்கு என்ன காரணம் .....? "

" கண்டுபிடிச்சுடலாம் " என்று சொன்ன சந்திரசூடன் தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு ஜன்னல் ஒரமாய் போய் நின்று கொண்டு ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்டில் பணிபுரியும் ஒரு அதிகாரியை தொடர்பு கொண்டார். மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

" சர்வேசன் "

" சொல்லுங்க ஸார்.."

" நீங்க இப்ப ஆபீஸ்ல இருக்கீங்களா..... இல்ல வெளியே ஆன் டியூட்டியில் இருக்கீங்களா .....? "

" நேற்றைக்கும் இன்னிக்கும் ஆன் ட்யூட்டிதான் ஸார்.... ஆவடி பக்கத்துல ஒரு ராப்பரி இன்ஸிடெண்ட். அது சம்பந்தமான இன்ஸ்வெஸ்டிகேஷனுக்கு வந்தேன். வேலை முடிஞ்சுது..... என்ன விஷயம் ஸார் எனி அர்ஜென்ஸி
வொர்க் .....? "

" இப்ப நீங்க வேலை முடிஞ்சு ஆபீஸூக்கு திரும்பிட்டிருக்கீங்க. இல்லையா .....? "

" ஆமா ஸார்... "

" வர்ற வழியில் கொஞ்சம் ஈஞ்சம்பாக்கம் வரைக்கும் வர முடியுமா? இங்கே இருக்கிற ஒரு ஃப்ளாட்டில் நீங்க சீன் ஆஃப் க்ரைம் பார்த்து ஒரு ரிப்போர்ட் தரணும். இது ஒரு முக்கியமான இன்ஸ்வெஸ்டிகேஷன் "

" ஈஞ்சம்பாக்கம் ஏரியாவில் எந்த இடத்துக்கு வரணும் ஸார் "

" அதிரா அப்பார்ட்மெண்ட் "

செல்போனின் மறுமுனையில் மெளனம் நிலவ சந்திரசூடன் கேட்டார்.
" என்ன சர்வேசன்.... பேச்சையே காணோம் .....? "

" அப்பார்ட்மெண்ட்டோட பேரைக் கேட்டதுமே லேசா ஜெர்க் ஆயிட்டேன் "

" என்ன காரணம் .....? "

" அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு அந்தப் பகுதியில் குடியிருக்கிற மக்கள் வெச்சிருக்கிற பேரு சந்திரமுகி அப்பார்ட்மெண்ட். அங்கே சில மர்மமான மரணங்கள் நடந்திருக்கிறதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அப்பார்ட்மெண்டிலிருந்து நீங்க பேசறேன்னு சொன்னதும் ஒரு சின்ன அதிர்ச்சி. அங்கே என்ன பிரச்சினை ஸார் .....? "

" நேர்ல வாங்க சொல்றேன் "

" இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே அங்கே இருப்பேன். அப்பார்ட்மெண்ட்டோட ப்ளாக் நெம்பரையும், ஃப்ளாட் நெம்பரையும் சொல்லுங்க"

" எக்ஸ் ப்ளாக் ஃப்ளாட் நெம்பர் 144 "

" ஃப்ளாட் நெம்பரே சரியில்லை.... வந்துடறேன் ஸார் "

" ப்ளீஸ்...... அயாம் வெயிட்டிங் " என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்ட சந்திரசூடன் செல்போனை அணைத்த விநாடி ராவ்டே பிந்தர் தயக்கத்தோடு நடைபோட்டு பக்கத்தில் வந்து நின்றார்.

" ஸார்...... "

" எஸ் "

ராவ்டே பிந்தர் குரலைத் தாழ்த்தினார்.

" அந்த அம்மா வந்திருக்காங்க "

" அம்மாவா.... யாரு .....? "

" மேலே குடியிருக்கிற தாட்சாயணியம்மா. அதோ அந்த ரூம்ல உட்கார வெச்சிருக்கேன் "

" எப்ப வந்தாங்க .....? "

" நீங்க செல்போன் பேசிட்டிருக்கும் போது "

" வாங்க பார்க்கலாம் "சந்திரசூடன் சொல்லிக்கொண்டே நகர முயல கோபிகா ஆதிகேசவனோடு அவரை நெருங்கினாள்.

" ஸ....ஸார்..... ஒரு சின்ன ஆப்ளிகேஷன் "

" என்னம்மா..... .....? "

" தாட்சாயணியம்மா ஹேண்டிகேப்பட் வுமன். ஒரு கால் ஊனம். அவங்களை நீங்க விசாரிக்கும்போது பேச்சுல கொஞ்சம் ஸாஃப்ட்னஸ் இருந்தா பரவாயில்லை "

" நான் அவங்களை விசாரிக்கும்போது நீங்க மூணு பேரும் எனக்குப் பக்கத்துல இருக்கலாம்..... வாங்க...... போலாம் "

சந்திரசூடன் பேசியபடியே நடந்து அந்த அறைக்குள் நுழைய, சாய்வான நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்த அறுபது வயது பெண் சிவப்பு நிற சேலையில் பார்வைக்குத் தட்டுப்பட்டாள். சற்றே கருத்த நிறம். நெற்றியின் மையத்தில் இருந்த பெரிய குங்குமப் பொட்டு பிசிறில்லாத வட்டத்துக்குள் பளிச்சென்றிருந்தது. தோளின் இரண்டு பக்கமும் விரித்துப் போடப்பட்டிருந்த தலைமுடி கற்றை கற்றையாய் ஜடாமுடிகளாக மாறி தொங்க, கழுத்தில் மினுமினுப்போடு கூடிய ருத்ராட்சமாலை. நீள்வட்ட முகத்தில் தீட்சண்யமான விழிகள்.

சந்திரசூடன் ஒரு நாற்காலியை எடுத்து அவளுக்கு முன்பாய் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். ஒரு புன்முறுவலாய் சொன்னார்.

" இன்னும் கொஞ்ச நேரத்துல நானே வந்து உங்களைப் பார்க்கலாம்ன்னு இருந்தேன்.... அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க...... "

தாட்சாயணி அம்மாள் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு சன்னமான குரலில் சொன்னாள்.

" கொஞ்ச நேரத்துக்கு முந்தி கோபிகாவோட அலறல் சத்தம் கேட்டது. என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க வந்தேன். ஆதிகேசவன் விபரம் சொன்னார்.... "

" இந்த 144 நெம்பர் ஃப்ளாட்ல நடக்கிற சம்பவங்களையெல்லாம் நீங்களும் பார்த்துட்டு வர்றீங்க. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க .....? "

தாட்சாயணி அம்மாளின் உதடுகளில் சிறு புன்முறுவல் பரவியது.

" இதுல நான் நினைக்க என்ன இருக்கு.....? எல்லாமே அவளோட விருப்பப்படிதான் நடந்துட்டிருக்கு....."

" அவளோட விருப்பமா .....? "

" ஆமா "

" யாரது .....? "

" விழி மூடா பகவதி..... நூறு வருஷத்துக்கு முந்தி மந்தை காடுன்னு அழைக்கப்பட்ட ஒரு இடம் இன்னிக்கு மண்டைக்காடா மாறி அங்கே குடியிருக்கிற பகவதியின் திருவுளப்படிதான் இங்கே எல்லாம் நடந்திட்டிருக்கு "

சந்திரசூடன் சற்றே குரலை உயர்த்தினார்.

" இதோ பாருங்கம்மா.... இது ஒரு முக்கியமான போலீஸ் விசாரணை. இந்த விசாரணையில் நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்க இப்படியெல்லாம் ஆன்மீகத்தனமான பதில்களைச் சொன்னா அந்த பதில்களால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை. எனக்கும் கடவுள் பக்தி இருக்கு.... மனுஷன் செய்யற தப்புக்கெல்லாம் கடவுள் மேல பழியைப் போட்டுட்டு நாம விசாரணையை முடிக்க முடியாது. எனக்கு வேண்டியது தெளிவான பதில்கள், இந்த அப்பார்ட்மெண்ட்ல நடந்துட்டிருக்கிற அசாதாரண சம்பவங்களுக்கெல்லாம் யார் காரணம் .....? "

" யார் காரணம்ன்னு கேட்காதீங்க. எது காரணம்ன்னு கேளுங்க .....? "

" சரி..... எது காரணம் .....? "

தாட்சாயணி அம்மாள் பல்வரிசை லேசாக தெரியும்படி சிரித்துவிட்டு சொன்னாள்.

" பயம் "

" பயமா... என்ன பயம்.....? "

" நம்முடைய எண்ணம்தான் நமக்கு முதல் எதிரியும், முதல் நண்பனும். நாம் எண்ணுகிற எண்ணம் நேர்மறையாக இருந்தால் அந்த எண்ணம் நமக்கு நண்பன். எதிர்மறையாக இருந்தால் எதிரி. இந்த அதிரா அப்பார்ட்மெண்டில் குடியிருக்கிற தொண்ணூறு சதவீதம் பேர்க்கு எதிர்மறை எண்ணங்கள். அதனால்தான் இங்கே நடக்கிற சம்பவங்களும் அசாதாரணமானதாக இருக்கு.... எண்ணம் போல் வாழ்வுன்னு நமக்கு முன்னாடி வாழ்ந்த பெரியவங்க சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க "

" மறுபடியும் மழுப்பலா பேசறீங்க .....? "

" இது மழுப்பல் இல்லை.... உண்மை. இந்த அப்பார்ட்மெண்ட் குடியிருப்புவாசிகளில் தொண்ணூறு சதவீதம் பேர்க்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணம் அவர்கள் அல்ல..... "

" அப்புறம் .....? "

" இந்த ஒட்டுமொத்த அப்பார்ட்மெண்டும் 15 ஏக்கர் நிலபரப்புள்ள ஒரு மயானத்தின் மேல் கட்டப்பட்டு இருப்பதுதான் காரணம். நாம் ஒரு மயானத்துக்கு போக நேர்ந்தா அந்த இடத்துல ஒரு சில மணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாது. மனதில் ஒரு பயமும் வேண்டாத எண்ணங்களும் தோன்றும். அந்த இடத்தைவிட்டு எப்போது கிளம்பலாம்ன்னு இருக்கும். ஆனால் இங்கே இருக்கிற குடியிருப்புவாசிகள் ஒரு மயானத்தின் மேல் 24 மணி நேரமும் வாழ்ந்துட்டிருக்காங்க......அப்படி வாழ்ந்துகிட்டிருக்கிறவங்களோட எண்ணங்கள் கண்டிப்பா எதிர்மறையாகத்தான் இருக்கும் "

சந்திரசூடன் பீறிட்டு வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு கேட்டார்.

இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் ஒரு மயான பூமி மேல கட்டப்பட்டிருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும் .....? "

" லட்சணா சொன்னா "

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 29) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X