For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நீ.....நீ..... நீங்களா? வாங்க ஸார்"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (27)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ஐந்து நிமிடமாகியும் கதவு திறக்கப்படாமல் போகவே பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை விசாரிக்கலாமா என்று சந்திரசூடன் நினைத்த விநாடி கதவின் தாழ்ப்பாள் உள்ளே விலகும் சத்தம் கேட்டது.

தொடர்ந்து 25 சதவீத இடைவெளியோடு கதவு திறக்கப்பட, ஆதிகேசவன் பார்வைக்குத் தட்டுப்பட்டார்.

சந்திரசூடனைப் பார்த்ததும் சற்றே பதட்டப்பட்டவராய் முழுகதவையும் திறந்தார்.

" ஸார்...... நீ.....நீ..... நீங்களா? வாங்க ஸார்...... உள்ளே வாங்க.... ஸாரி ஸார்...... நான் டாய்லெட்ல இருந்தேன். உடனடியாய் வந்து கதவைத் திறக்க முடியலை ..... "

" நோ.... ப்ராப்ளம் மிஸ்டர் ஆதிகேசவன்.... கதவு திறக்க கொஞ்சம் லேட்டானதும் நான் லேசாய் டென்ஷன் ஆயிட்டேன்......" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்த சந்திரசூடன் வீட்டுக்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டார்.

" கோபிகா வீட்ல இல்லையா ..... ? "

" இருக்கா ஸார்.... ரும்ல படுத்து தூங்கிட்டு இருக்கா..... ராத்திரி நேரத்துல அவ சரியா தூங்காததினால பகல் நேரத்துல அசந்து போய் தூங்கிடுவா.... சில சமயம் கண் முழிக்க சாயந்தரம் ஆறு மணியாயிடும்..... உட்கார்ங்க ஸார்....... "

flat number 144 adhira apartment episode 27

ஆதிகேசவன் சோபாவைக் காட்ட. சந்திரசூடன் உட்கார்ந்தார்.

" நல்ல வெய்யில் நேரத்துல வந்திருக்கீங்க. மோர் இருக்கு.தரட்டுமா ஸார் ? "

" நோ தேங்க்ஸ்.... நீங்களும் உட்கார்ங்க....... "

ஆதிகேசவன் உட்கார்ந்துகொண்டே கேட்டார்.

" ஃப்ளாட் நெம்பர் 144க்கு மேலே குடியிருக்கிற அந்த மலையாள லேடி தாட்சாயிணி அம்மாவைப் பார்த்து என்கொயரி பண்ணத்தானே இப்ப வந்து இருக்கீங்க ஸார் ..... ? "

" எஸ்..... ஆனா அதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு மிஸ்டர் ஆதிகேசவன் "

" என்ன விஷயமாய் ஸார் ..... ? "

" உங்களுக்கு லட்சணா என்கிற பெண்ணைத் தெரியுமா ..... ? "

ஆதிகேசவனின் முகத்தில் லேசாய் ஒரு நிறமாற்றம் நிகழ்ந்தது. தயக்கக் குரலில் கேட்டார்.

" நீங்க சொல்ற லட்சணா ஒரு சோஷியல் ஆக்டிவிஸ்ட்தானே ..... ? "

" ஆமா.... பெண்களுக்கு எதிராய் நடக்கிற அநியாயங்களைத் தட்டிக் கேட்கிற டைப் "

" வெஸ்ட் மாம்பலத்தில் இருக்கிற ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் ஸ்டே பண்ணியிருக்கிற அந்தப் பெண்ணைத்தானே சொல்றீங்க ..... ? "

" எஸ்.... அந்தப் பெண்தான்...... "

" தெரியும் ஸார்...... எதுக்காக லட்சணாவைப் பத்தி விசாரிக்கறீங்க ..... ? "

" சொல்றேன்.... அதுக்கு முன்னாடி லட்சணாவை உங்களுக்கு எப்படித் தெரியும்ன்னு சொல்லுங்க "

" ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு டி.வி. நிகழ்ச்சியைப் பார்த்துட்டிருக்கும் போது லட்சணாவோட பேட்டியை ஒளிபரப்பினாங்க. பேட்டி எடுத்தவரின் கேள்விகளுக்கு லட்சணா பதில் சொல்லும்போது மனச்சிதைவு நோய்களுக்கு உள்ளான பெண்களுக்கு தான் வெற்றிகரமாய் கவுன்சிலிங் செய்து பல பெண்களை மீட்டு எடுத்து புது வாழ்க்கையை கொடுத்ததாக சொன்னாள். அதை பார்த்த எனக்கு கோபிகாவுக்கும் இதுமாதிரியான கவுன்சிலிங் கொடுத்தால் என்ன என்கிற எண்ணம் எனக்குள்ளே தோணிச்சு. பேட்டி முடிந்ததும் அந்த டி.வி.ஸ்டேஷனை தொடர்பு கொண்டு லட்சணாவின் செல்போன் நெம்பரை வாங்கி, அந்தப் பெண்கிட்ட பேசினேன். கோபிகாவுக்கு இருக்கிற மனச்சிதைவு நோயைப் பற்றி சொன்னேன். அடுத்த நாளே அந்த லட்சணா புறப்பட்டு வந்துட்டா. நான் லட்சணாவை கோபிகாவுக்கு என் ஃப்ரண்ட் ஒருத்தரோட டாட்டர்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வெச்சேன். லட்சணா வாரத்துக்கு ஒரு தடவை இங்கே வந்து ஒரு மணி நேரம் கோபிகாகிட்ட பேசி கவுன்சிலிங் கொடுப்பா. கோபிகாவுக்கும் லட்சணாவை ரொம்ப பிடிக்கும் "
சந்திரசூடன் குறுக்கிட்டு கேட்டார்.

" லட்சணாவோட கவுன்சிலிங் கோபிகாவுக்கு யூஸ்ஃபுல்லாய் இருந்ததா? "

" இல்ல ஸார்..... ஒரு ரெண்டு மாத கவுன்சிலிங்கிற்குப் பிறகு லட்சணா என்கிட்ட நேரிடையாவே வந்து கோபிகாவுக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்பு கவுன்சிலிங்கால் குணப்படுத்த முடியாது. இது ஒரு சிக்கலான மனச்சிதைவு நோய், ஒரு ந்யூராலாஜிஸ்ட்டும், சைக்காலாஜிஸ்ட்டும் இணைந்து ஒரே நேரத்துல ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சா குணப்படுத்த முடியும். அதுக்கான ஏற்பாட்டை பண்ணுங்கன்னு சொல்லிட்டு போயிட்டா...... "

" அதுக்கப்புறம் லட்சணா இங்கே வரலையா.... ? "

" வரலை....... "

" இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த ஆறு மர்மமான மரணங்கள் பற்றி லட்சணாவுக்கு தெரியுமா ..... ? "

"தெரியும்...... "

" அதைப்பற்றி லட்சணா என்ன சொன்னா ..... ? "

" அந்த விஷயத்துல அவ பெரிசா ஒண்ணும் இன்ட்ரஸ்ட் காட்டலை. இயற்கையான மரணங்கள்ன்னு டாக்டர்ஸே சொல்லிட்ட பிறகு அதுல நாம சந்தேகப்பட என்ன இருக்குன்னு சிம்பிளா சொல்லிட்டா "

" சரி.....கடைசியா லட்சணாவை என்னிக்குப் பார்த்தீங்க ..... ? "

" கடந்த அஞ்சு மாசமாய் அந்தப் பெண்ணை நான் பார்க்கலை. ஆனா பத்து நாளைக்கு முன்னாடி ஒரு ராத்திரி நேரம் பத்து மணி சுமார்க்கு எனக்கு போன் பண்ணிப் பேசினா "

" எதுக்காக போன் ..... ? "

" இந்த ஃப்ளாட்ல எங்ககூட வந்து ரெண்டு நாள் தங்கியிருக்க பர்மிஷன் கேட்டா " நெற்றியில் விழுந்த வியப்பு வரியோடு சந்திரசூடன் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார்.

" தங்கறதுக்கு பர்மிஷனா ..... ? "

" ஆமா...... "

" நீங்க எதுக்குன்னு கேட்கலையா..... ? "

" கேட்டேன் ஸார்.... அதுக்கு லட்சணா அந்த விஷயத்தை இப்போதைக்கு உங்ககிட்ட சொல்ல முடியாது. ரெண்டு நாள் தங்கிட்டு அங்கிருந்து கிளம்பும்போது சொல்றேன்னு சொன்னா.... நானும் மேற்கொண்டு அவளை ஃபோர்ஸ் பண்ணாமே "நீயும் என்னோட பொண்ணு மாதிரிதாம்மா..... ரெண்டு நாள் என்ன.... ரெண்டு மாசம் கூட தங்கலாம் வா"ன்னு சொன்னேன். ஆனா லட்சணா வரலை..... ஒரு தடவை போன் பண்ணிப் பார்த்தேன்..... " தி நெம்பர் ஈஸ் நாட் இன் யூஸ் " ங்கிற ரெக்கார்டட் வாய்ஸ் வந்தது. அதுக்கப்புறம் எனக்கு இருக்கிற பிரச்சினைகளில் லட்சணாவையே மறந்துட்டேன். இப்ப நீங்க வந்து லட்சணாவைப்பற்றி கேட்டதும்தான் எனக்கு அந்தப் பெண்ணோட ஞாபகமே வந்தது. இப்பவாவது சொல்லுங்க ஸார்..... எதுக்காக இந்த விசாரணை ..... லட்சணாவை உங்களுக்கு எப்படி தெரியும் ..... ? "

சந்திரசூடன் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு சொன்னார்.

" அந்தப் பெண் லட்சணா இப்போ உயிரோடு இல்லை........ "

ஆதிகேசவன் முகம் அதிர்ச்சியில் உறைந்து போயிற்று. பதறும் குரலில் கேட்டார்.

" எ....எ.....என்ன ஸார்..... சொ....சொல்றீங்க ..... லட்சணாவுக்கு என்னாச்சு.....? "

" மர்டர்ட் பை சம்படி "

" எப்ப ஸார் .....? "

" நான் இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு பத்து நாளைக்கு முன்னாடி என்னோட நண்பர் கங்காதரனின் மகன் கபிலனோடு எதுக்காக வந்தேன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா .....? "

" நல்லாவே ஞாபகம் இருக்கு ஸார்..... கங்காதரனோட கார் டிக்கியில் கருப்பு பெயிண்ட் பூசப்பட்ட நிலையில் ஒரு பொண்ணோட டெட்பாடி இருந்ததாகவும், அந்த டெட்பாடி இந்த அப்பார்ட்மெண்ட்டின் கார் பார்க்கிங் ஏரியாவில்தான் கார் டிக்கிக்குள் அடைக்கப்பட்டிருக்கணும்ங்கிற சந்தேகத்துல இங்கே இன்வெஸ்டிகேட் பண்ண வந்தீங்க......... "

" அந்த காரின் டிக்கிக்குள் டெட்பாடியாய் இருந்தது வேறு யாருமில்லை லட்சணாதான் "

" ஸ.....ஸ.....ஸார்..... நீங்க பேசற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பேரிடியாய் இருக்கு. அந்த டெட்பாடி லட்சணாதான்னு உங்களால எப்படி ஐடென்டிஃபை பண்ண முடிஞ்சுது.....? "

" ஸ்மேஷ் என்கிற பேர்ல ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை வந்துட்டிருக்கு...... உங்களுக்குத் தெரியுமா.....? "

" தெரியும் ஸார்...... ரொம்பவும் பிரபலமான பத்திரிக்கை "

" அந்தப் பத்திரிக்கையோட ஆசிரியர் வாஹினி மூலமாகத்தான் லட்சணாவை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சுது " என்று பேச ஆரம்பித்த சந்திரசூடன் நடந்த விபரங்கள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க ஆதிகேசவன் நொறுங்கிப் போனவராய் சோபாவுக்கு தளர்வாய் சாய்ந்தார். குரல் உடைய பேசினார்.

" அவ மேல யார்க்கு என்ன விரோதம் ஸார் ? அப்படியே விரோதமாய் இருந்தாலும் இவ்வளவு கொடூரமாய் கொலை பண்ணின நபர்க்கு இருதயம் இருக்க வேண்டிய இடத்தில் நிச்சயமாய் ஒரு கல்தான் இருக்கும் ..... இப்படிப்பட்ட ஆட்களை....... "

ஆவேசமாய் ஆதிகேசவன் மேற்கொண்டு பேசும் முன் ஹாலின் மூலையில் இருந்த, அறைக்கதவு திறக்கப்பட்டது. சந்திரசூடனிடம் குரலைத் தாழ்த்தி கிசுகிசுப்பான குரலில் சொன்னார்.

" ஸார்..... கோபிகா வர்றா...அவளுக்கு லட்சணாவோட மர்டர் சம்பந்தப்பட்ட விபரங்கள் எதுவும் தெரிய வேண்டாம். ரொம்பவும் அப்செட் ஆயிடுவா "

சந்திரசூடன் சரி என்கிற பாவனையில் தலையசைத்துக் கொண்டிருக்கும் போதே, கதவைத் திறந்தபடி வெளிப்பட்ட கோபிகா அவரைப் பார்த்ததும் கண்களை வியப்பில் விரித்து கிட்டத்தட்ட கத்தினாள்.

" ஸ.....ஸ.....ஸார்..... நீங்களா...? வாட் ஏ சர்ப்ரைஸ் விசிட்... எப்ப ஸார் வந்தீங்க ..... ? "

" இப்பத்தான் வந்தேன்... வழக்கம் போல என்கொயரிதான்..... நீ தூங்கிட்டிருக்கிறதாய் அப்பா சொன்னார்

" ஆமா ஸார்.... மத்தியானம் லஞ்ச் சாப்பிட்டதும் ஒரு தூக்கம் போடுவேன்" என்றை சொல்லிக்கொண்டே சந்திரசூடனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். சிறிது நேரம் மெளனமாய் இருந்துவிட்டு மெல்லிய குரலில் சொன்னாள்.

" தேங்க்யூ ஸார் "

" இப்ப எதுக்கம்மா எனக்கு நன்றி ? "

" ஸார்... அந்த எக்ஸ் ப்ளாக் 144 நெம்பர் ஃப்ளாட்டை நீங்க பூட்டி சீல் வெச்சீங்க.... ஆனா காலையில் பதினோரு மணிக்கு நான் என் ஃப்ளாட் சிட்அவுட்டிலிருந்து பார்க்கும்போது அந்த 144 நெம்பர் ஃப்ளாட்டுக்குள்ளே இருந்த யாரோ பாதி திறந்திருந்த ஜன்னலை இழுத்து மூடறதைப் பார்த்தேன். அதை நான் என்னோட அப்பாகிட்ட சொன்னேன். அவர் அதை சீரியஸாய் எடுத்துக்கலை. பிரமையாய் இருக்கும்ன்னு சொல்லிட்டார். ஆனா என்னோட பேச்சை நம்பி நீங்க அதை சீரியஸாய் எடுத்துக்கிட்டு அந்த ஃப்ளாட்டைப் பார்க்க வந்ததுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா ? "

சந்திரசூடன் மெலிதாய் புன்முறுவல் பூத்தார்.

"சொல்லு ஜமுனா".. ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (26)

" நான் ஃப்ளாட்டைப் பார்க்க வரலையம்மா. அந்த 144 நெம்பர் ஃப்ளாட்டை பூட்டி எப்படி நான் சீல் வெச்சுட்டு போனேனோ, அது அப்படியேதான் இருக்குன்னு அப்பா சொல்றாரே ? "

" கரெக்ட் ஸார் .... அந்த சீல் அப்படியேதான் இருக்கு. அப்பா சொன்னது சரிதான். நானும் போய்ப் பார்த்தேன். ஆனா பூட்டி சீல் வெச்ச அந்த ஃப்ளாட்டுக்குள்ளே யாரோ இருக்காங்க.... அது மட்டும் நிச்சயம். நீங்க கண்டிப்பா அந்த ஃப்ளாட்டை ஒப்பன் பண்ணிப் பார்க்கணும் " என்று அழுத்தம் திருத்தமாய் சொன்ன கோபிகாவின் குரலில் ஒரு டன் உறுதி தெரிந்தது.

(தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 26) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X