• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஏன் உண்மையாய் இருக்கக்கூடாது?"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (28)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடனின் மனசுக்குள் கோபிகாவின் அந்த உறுதியான பேச்சு ஒரு ஆணியடித்த மாதிரி இறங்க, யோசிக்க ஆரம்பித்தார்.

" கோபிகா சொல்வது ஏன் உண்மையாய் இருக்கக்கூடாது. அந்த 144 நெம்பர் ஃப்ளாட்டுக்குள் யாராவது வந்து போக ஏதாவது வழியிருக்கலாமே. ஃப்ளாட்டை ஒப்பன் செய்து பார்த்தால் என்ன .....? " சந்திரசூடன் யோசிக்க யோசிக்க கோபிகா பேச்சைத் தொடர்ந்தாள்.

" ஸார்..... நான் சொன்னதுல உங்களுக்கு இன்னமும் நம்பிக்கை வரலைன்னு நினைக்கிறேன். இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற சில பேர் என்னை மென்டல்ன்னு கமெண்ட் பண்றது எனக்குத் தெரியும் ஸார். அப்பா கூட சில சமயங்களில் நான் பேசறதை காது கொடுத்து கேட்கமாட்டார். நான் ஏதாவது கேள்வி கேட்டா அலட்சியமா பதில் சொல்வார். ஆனா நீங்க ஒருத்தர்தான் என்னோட பேச்சை உன்னிப்பாய் கேட்டுட்டு பதில் சொல்றீங்க..... ரெஸ்பான்ஸ் பண்றீங்க.... இப்ப நான் சொல்ற இந்த விஷயத்தையும் கேளுங்க ஸார்..... எனக்கு பொய் சொல்லத் தெரியாது. நான் எதைப் பார்த்தேனோ அதைத்தான் உங்ககிட்ட சொன்னேன் "

flat number 144 adhira apartment episode 28

சந்திரசூடன் நாற்காலியினின்றும் எழுந்தார்.

" சரி....... வாம்மா..... பார்த்துடலாம் "

" தேங்க்யூ ஸார் " ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கைகளைத் தட்டிவிட்டு ஆட்காட்டி விரலைக் காட்டினாள்.

" ஒரே ஒரு நிமிஷம் ஸார்...... ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்..... கோபிகா சொல்லிவிட்டு தன்னுடைய அறையை நோக்கிப் போக, ஆதிகேசவன் ஒரு பெருமூச்சோடு சந்திரசூடனை ஏறிட்டார்.

" ஸார்..... கோபிகாவோட பேச்சுக்கு நீங்க இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை...... அவளை ஸ்கிப் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம். இன்னிக்கு நீங்க பூட்டோட சீலை உடைச்சு அந்தப் ஃப்ளாட்டை திறந்து காட்டினா, ரெண்டு நாள் கழிச்சு வேற ஏதாவது ஒண்ணை கற்பனை பண்ணிட்டு உங்களுக்கு போன் பண்ணுவா..... உங்களுக்கு எவ்வளவே வேலைகள் இருக்கலாம். அந்த வேலைகளுக்கு நடுவில் கோபிகாவோட போன் கால்ஸ் ஒரு பெரிய தொல்லையாய் மாறக்கூடிய அபாயம் இருக்கு ஸார் "

சந்திரசூடன் ஆதிகேசவனை புன்னகையால் நனைத்தபடி குரலைத் தாழ்த்தினார்.

" நீங்க இன்னமும் உங்க பெண்ணை ஒரு மனநோயாளியாகவே பார்த்துட்டு இருக்கீங்க..... ஆனா நான் கோபிகாவை வேற ஒரு கோணத்திலிருந்து பார்த்துட்டிருக்கேன். இந்த அப்பார்ட்மெண்டில் ஒரு குறிப்பிட்ட ஃப்ளாட்டில் தொடர்ந்து மர்மமான மரணங்கள் நடந்திருக்கு. அந்த மரணங்களுக்கான காரணம் என்னவாக இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க, இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற யார்க்குமே துளி கூட அக்கறையில்லை. ஆனா மனநிலை பாதிக்கப்பட்ட கோபிகாவுக்குள்ளே அந்த இன்டென்ஷன் இருந்துட்டே இருக்கு. அதனால்தான் 144 நெம்பர் ஃப்ளாட்டை அவ வாட்ச் பண்ணிட்டே இருக்கா.... சீல் வெச்சு பூட்டின அந்த ஃப்ளாட்டுக்குள்ளே யாரும் இருக்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் ஃப்ளாட்டை ஒப்பன் பண்ணி அங்கே யாருமில்லைங்கிறதை கோபிகாவுக்கு தெரியப்படுத்திட்டோம்ன்னா அதுல அவளுக்கு ஒரு தெளிவும், சந்தோஷமும் கிடைக்கும். பை த பை இது ஒரு சின்ன ட்ராமாதான். வாங்க ஃப்ளாட்டை போய்ப் பார்த்துட்டு அப்படியே மேல் ஃப்ளாட்ல குடியிருக்கிற அந்த தாட்சாயிணி அம்மாவையும் என்கொயரி பண்ணிட்டு வந்துடலாம் "
ஆதிகேசவனின் கண்களில் நீர் நிரம்பி மின்ன, குரல் தழுதழுத்தார்.

" ஸார்...... நீங்க என் பெண் கோபிகாவோட உணர்வுகளுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கிறதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கு. அதேபோல் கோபிகாவை மனச்சிதைவு நோயிலிருந்து மீட்டு அவளை பழைய நிலைமைக்கு கொண்டு வர நீங்கதான் கொஞ்சம் முயற்சி எடுக்கணும் "

" லட்சணா சொன்ன மாதிரி ஒரு நியூராலஜிஸ்ட்டையும், சைக்காலஜிஸ்ட்டையும் கன்சல்ட் பண்ணி கோபிகாவுக்கு ஒரே நேரத்துல ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிக்கணும்.... எனக்குத் தெரிஞ்ச டாக்டர்ஸ் ரெண்டு பேர் இப்போ யு.எஸ்.ல இருக்காங்க..... அவங்க அடுத்த மாசம்தான் திரும்பி சென்னை வர்றாங்க. வந்ததுமே நான் ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்றேன் "

ஆதிகேசவன் இரண்டு கைகளையும் குவித்துக் கும்பிட்டார்.

" தேங்க்யூ ஸார்..... நான் உயிரோடு இருக்கும்போதே கோபிகா பழைய நிலைமைக்கு திரும்பிட்டா நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன் "

" எப்பவுமே பாஸிட்டீவா திங்க் பண்ணுங்க ஆதிகேசவன்..... அப்படியெல்லாம் நெகட்டீவா பேசாதீங்க........" சந்திரசூடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோபிகா சுடிதாரிலிருந்து சேலைக்கு மாறி அறையினின்றும் வெளிப்பட்டாள்.

" போலாமா ஸார் ..... ? "

" ம்...... வாம்மா....... நான் உங்கப்பாவும் ரெடி "

மூன்று பேரும் ஃப்ளாட்டை விட்டு வெளியே வந்து வெய்யிலுக்கு பயந்து, நிழலில் நடந்து " எக்ஸ் " ப்ளாக்கை நெருங்கியபோது ராவ்டே பிந்தர் எதிர்பட்டார். ஒரு சல்யூட் வைத்துவிட்டு சொன்னார்.

" குட் ஆஃப்டர்நூன் ஸார் "

" குட் ஆஃப்டர்நூன் மிஸ்டர் ராவ்டே பிந்தர் "

" என்ன ஸார்.... மறுபடியும் என்கொயரியா ..... ? "

சந்திரசூடன் சிரித்துவிட்டு சொன்னார்.

" எஸ்.... மோர் விசிட்ஸ்...... மோர் இன்ஃபர்மேஷன்ஸ்ன்னு என்னோட மேலதிகாரி சொல்வார்...... அதைத்தான் இப்ப பண்ணிட்டு இருக்கேன்.... இன்னமும் இங்கே நிறைய தடவை வர வேண்டியிருக்கும் "

" நீங்க இன்னிக்கு அந்த மலையாள லேடி தாட்சாயிணியம்மாவை விசாரிக்க வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்..... ஏம்.... ஐ...... கரெக்ட் ஸார் ..... ? "

" எஸ்....அதுக்கு முன்னாடி இன்னொரு முக்கியமான வேலையும் இருக்கு "

" என்ன ஸார் ..... ? "

" சொல்றேன்.... நீங்களும் வாங்க "

மாடிப்படிகளில் ஏறும்போது சந்திரசூடன், கோபிகா ஃப்ளாட் 144 பற்றி தன்னிடம் சொன்னதைச் சொல்ல ரபிந்தர் தன்னுடைய நெற்றியில் ஆச்சர்ய வரிகளைக் காட்டினார். குரலைத் தாழ்த்தி அவர்க்கு மட்டும் கேட்கும்படியாய் பேசினார்.

" அப்படியெல்லாம் ஃப்ளாட்டுக்குள்ளே யாரும் இருக்க வாய்ப்பில்ல ஸார்...."

" அது எனக்கும் தெரியும்........... இருந்தாலும் கோபிகாவுக்காக ஒரு தடவை ஒப்பன் பண்ணிப் பார்த்துடலாம் "

" தென் இட்ஸ் ஒகே ஸார் "

மாடியின் முதல் தளத்திற்கு வந்து 144 எண் பொறித்த அந்த அறைக்கு முன்பாய் நான்கு பேரும் நின்றார்கள்.

கதவின் மையப் பகுதியில் காடாத்துணியால் சுற்றப்பட்ட பூட்டு அரக்கு சீலோடு திம்மென்று தெரிந்தது.

சந்திரசூடன் அதை கோபிகாவுக்கு சுட்டிக்காட்டியபடியே சொன்னார்.

" பாரம்மா.... பத்து நாளைக்கு முன்னாடி சீல் வெச்சது இன்னமும் அப்படியே இருக்கு....."

" அதை நான் ஒத்துக்கறேன் ஸார்.... ஆனாலும்...... "

" சரி.....சரி..... உன்னை நம்ப வைக்கணும்ன்னா இதை ஒப்பன் பண்ணித்தான் தீரணும்........." சொன்ன சந்திரசூடன் தன் சட்டைப்பையில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு பூட்டை நெருங்கினார். காடாத்துணியின் மேல் பதித்து வைத்திருந்த அரக்கு முத்திரையை அகற்ற முயன்றவர் அதைத் தொடாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். சில விநாடிகளுக்குப்பிறகு முகம் மாறிப்போனவராய் " மை குட்னஸ் " என்று சொல்லி தன் நெற்றியைத் தேய்த்தார்.

ரபிந்தரும், ஆதிகேசவனும் குழப்ப முகங்களோடு அவரைப் பார்த்தார்கள்.

" என்ன ஸார்...... எனிதிங்க் ராங் ..... ? "

" எஸ்.....சம்திங் ராங்....... பத்து நாளைக்கு முன்னாடி நான் வெச்ச சீல் மாதிரி இது இல்லை.... காடாத்துணியோட நிறம் மாறியிருக்கு. அரக்கு முத்திரையோட சைஸ் பெரிசாயிருக்கு. யாரோ முன்பிருந்த சீல் துணியை கட் பண்ணி பூட்டைத் திறந்துகிட்டு உள்ளே போயிருக்காங்க. திரும்பவும் வெளியே வந்து அவங்க கொண்டு வந்த காடாத்துணியை பூட்டுக்கு சுற்றி அரக்கு சீல் வெச்சுட்டு போயிருக்காங்க. பூட்டை சேதப்படுத்தாமே கள்ளச்சாவியை உபயோகப்படுத்தியிருக்காங்க " சந்திரசூடன் சொல்லச்சொல்ல கோபிகா தன் இதழ் கோடியில் ஒரு சிறு புன்னகையை நெளியவிட்டப்படி சொன்னாள்.

" நான்தான் சொன்னேனே ஸார்.... ஃப்ளாட்டுக்குள்ளே யாரோ இருந்தாங்கன்னு இப்பவாவது நம்பறீங்களா ..... ? "

சந்திரசூடன் அவளை ஏறிட்டார்.

" யூ ஆர் ரைட் கோபிகா..... இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கும்போது எந்த ஒரு விஷயத்தையுமே இக்னோர் பண்ணக்கூடாதுன்னு டி.ஜி.பி.அடிக்கடி சொல்வார். அதுக்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம். நான் வெச்ச சீலை உடைச்சுகிட்டு ஃப்ளாட்டுக்குள்ளே யாரோ போயிருக்காங்கன்னா அவங்களுக்குத் தேவையான ஏதோ ஒண்ணு இந்த ஃப்ளாட்டுக்குள்ளே இருந்திருக்கணும். அது என்னான்னு கண்டுபிடிக்க உள்ளே போய் சீன் ஆஃப் க்ரைம் பார்க்கணும் "

சந்திரசூடன் சொல்லிக்கொண்டே பூட்டின் மேல் சுற்றப்பட்டிருந்த துணியையும், அரக்கு முத்திரையையும் அகற்றிவிட்டு பூட்டின் துவாரத்திற்கு சாவியைக் கொடுத்து நெம்பினார். பூட்டு திறந்து கொள்ள உள்ளே நுழைந்தார். மற்றவர்கள் பின்தொடர்ந்தார்கள்.

முன்புறம் இருந்த வரவேற்பறையைக் கடந்து உள்ளேயிருந்த ஹால் பகுதிக்குள் நுழைந்தபோது சந்திரசூடனின் வலது கை தன்னிச்சையாக கர்ச்சீப்பை எடுத்து நாசிப்பகுதிக்கு கொண்டு போயிற்று.

" ஏதோ ஸ்மெல் வர்ற மாதிரி இல்லை ..... ? "

" ஆமா ஸார்....... பேட் ஸ்மெல் "

" வயித்தைப் புரட்டுது ஸார் "

மூன்று பேரும் மூக்கை பொத்திக்கொள்ள மெல்ல நடை போட்டு ஹாலைக் கடந்த சந்திரசூடன் பக்கவாட்டில் இருந்த ஒரு அறையின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார்.

அறை சுத்தமாய் இருந்தது. பார்வை கூர்மையாகி அறையிலிருந்த ஒவ்வொரு பொருளையும் தடவியது. பின் அந்த அறையினின்றும் நகர்ந்து அடுத்த அறைக்கு போக அவர் முயன்ற விநாடி ராவ்டே பிந்தர் குரல் கொடுத்தார்.

" ஸார்.... ஒரு நிமிஷம்......... "

" என்ன ..... ? "

" இதோ.... இந்த ஏரியாவில்தான் ஸ்மெல் அதிகமா இருக்கு "

சந்திரசூடன் வேகமான நடையில் ராவ்டே பிந்தரை நோக்கிப் போக, அவர் சமயலறையை ஒட்டியிருந்த பகுதியைக் காட்டினார்.

" இந்த இடத்துல நின்னு ஸ்மெல் பண்ணிப் பாருங்க ஸார்... கொஞ்சம் அதிகப்படியாய் வருது. ஸ்மெல்ஸ் ஏ லிட்டில் டூ மச் "

அவர் காட்டிய இடத்தில் போய் நின்ற சந்திரசூடன் மூச்சை இழுத்து சுவாசிக்க முயன்ற விநாடி -
ஃப்ளாட்டின் இடது பக்க மூலையிலிருந்து கோபிகாவின் அந்த அலறல் சத்தம் கூர்தீட்டப்பட்ட ஒர் ஆயுதமாய் மாறி காதுக்குள் பாய்ந்தது.

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 28) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X