• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ அங்கே என்ன இருக்கு ....? “ ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (31)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செல்போனின் மறுமுனையில் பேசிய ஆதிகேசவனின் குரலில் ஒருவித பதட்டம் இருந்ததை உணர்ந்து கொண்ட ராவ்டே பிந்தர், சந்திரசூடனை தயக்கத்தோடு ஏறிட்டார்.

" ஸ.....ஸார்..... ஏதோ ஒரு போன்கால் வருது...... வாய்ஸ் பிரேக் ஆகுது....... வெளியே போய் பேசிட்டு வர்றேன் "
சந்திரசூடன் மெலிதாய் புன்னகைத்தார்.

" இதுக்கு பர்மிஷன் கேட்கணுமா ராவ்டே.....? போய் பேசிட்டு வாங்க. நான் அதுக்குள்ளே தாட்சாயிணியம்மாகிட்டே என்னோட என்கொயரியை முடிச்சுக்கிறேன்"

" தேங்க்யூ ஸார் "ராவ்டே பிந்தர் சொல்லிவிட்டு வேகவேகமாய் ஃப்ளாட்டினின்றும் வெளிப்பட்டார். ஆள் நடமாட்டமற்ற நீளமான வராந்தாவில் நடந்தபடி செல்போனை காதுக்கு ஒற்றினார்.

" வெளியே வந்துட்டேன் ஆதிகேசவன். விஷயம் என்னான்னு சொல்லுங்க...."

" நான் சொல்லப்போறதை கொஞ்சம் உன்னிப்பாய் கேட்டுட்டு உடனடியாய் செயல்படணும். இப்ப நீங்க ஃப்ளாட்டுக்கு வெளியே எந்த இடத்துல நின்னு பேசிட்டிருக்கீங்க .....? "

" பொது வராந்தாவில் "

" அப்படியே நடந்து மொட்டை மாடிக்கு போங்க "

" அங்கே என்ன இருக்கு .....? "

" சொல்றேன்..... மொதல்ல மொட்டை மாடிக்கு போங்க.... அங்கே போனதும் யார் பார்வைக்கும் தட்டுப்படாமே வாட்டர் டேங்குக்குப் பின்னாடி மறைவாய் நின்னுகிட்டு "Z" ப்ளாக்கில் மொட்டை மாடியைப் பாருங்க "

ராவ்டே பிந்தர் பொறுமை இழந்தவராய் மொட்டை மாடிக்கு போகும் படிகளில் ஏறிக்கொண்டே கேட்டார்.

Flat number 144 adhira apartment episode 31

" அந்த Z" ப்ளாக் மொட்டை மாடியில் என்ன பிரச்சினை .....? "

" மேலே போங்க உங்களுக்கே தெரியும் "ஆதிகேசவன் சொல்ல ராவ்டே பிந்தர் செல்போனை காதில் ஒட்ட வைத்துக்கொண்டு வேகவேகமாய் ஏறி மொட்டை மாடியின் மேல்தளத்துக்கு வந்தார். மூச்சு வாங்க பேசினார்.

" மாடிக்கு வந்துட்டேன் "

" சரி..... யார் பார்வைக்கும் படாமே வாட்டர் டேங்குக்குப் பின்னாடி போய் மறைவாய் நில்லுங்க "

" நின்னுட்டேன் "

" இப்போ தலையை மட்டும் நீட்டி மெதுவாய் "Z" ப்ளாக் அப்பார்ட்மெண்ட்டோட மொட்டை மாடியைப் பாருங்க "

ராவ்டே பிந்தர் எகிறும் இருதயத்துடிப்போடு வாட்டர் டேங்கின் மறைவிலிருந்து மெல்ல எட்டிப்பார்த்து தன்னுடைய பார்வையை "Z" ப்ளாக்கின் மொட்டை மாடிக்கு துரத்தினார்.
செல்போனில் ஆதிகேசவனின் குரல் கேட்டது.

" என்ன ராவ்டே...... அந்த மொட்டைமாடியில் யாராவது உங்க பார்வைக்குத் தட்டுப்படறாங்களா .....? "

" ஆமா.... வெள்ளைக்கோடுகள் போட்ட சிவப்பு சட்டையோடு யாரோ ஒருத்தர் நிக்கிறார். தலையில் தொப்பி "

" முகம் தெரியுதா .....? "

" சரியா தெரியலை..... இந்த எக்ஸ் ப்ளாட்டிலிருந்து அந்த "Z" ப்ளாக் நூறு மீட்டர் தூரத்துல இருக்கு. எதிர் வெய்யில் வேற. கண்ணு கூசுது "

" அந்த நபர் யார்ன்னு உங்களால ஐடென்டிஃபை பண்ண முடியுதா .....? "

" முடியலை......"

" சரி..... அவன் கையில் ஏதோ வெச்சிருக்கான். அது என்னான்னு பிடிபடுதா .....? "

" காமிரா மாதிரி தெரியுது "

" காமிராவேதான்.... டெலஸ்கோப்பிங் காமிரா"

" மொட்டை மாடியில் நின்னுகிட்டு என்ன பண்றான் .....? "

" போன நிமிஷம் வரைக்கும் அவனோட கையிலிருந்த காமிராவோட கோணம் ஃப்ளாட் நெம்பர் 144ன் மேலேயே இருந்தது. அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சந்திரசூடனும், தாட்சாயிணியம்மாவும் பேசிட்டு இருக்கிறதை வீடியோவாய் எடுத்துட்டிருக்கான்னு நினைக்கிறேன்...... "

" அப்படீன்னா அவன் தப்பான ஆளு "

" என்னோட மனசுக்கும் அப்படித்தான் படுது..... "

" அப்புறம்..... என்ன யோசனை.... நான் இப்பவே போய் அவனை மடக்கறேன்.. சந்திரசூடன்கிட்ட சொல்ல வேண்டாமா .....? "

" வேண்டாம்..... சந்திரசூடன் தாட்சாயிணியம்மாகிட்ட பேசிட்டு இருக்கட்டும். இப்போதைக்கு அவர்கிட்ட இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம். நீங்க அவனை மடக்கினதும் நான் அவர்க்கு போன் மூலமா இன்ஃபார்ம் பண்ணிடறேன். அவர் இப்போ ஃப்ளாட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வந்தா அந்த காமிரா பேர்வழி எச்சரிக்கையாகி அந்த மொட்டை மாடியிலிருந்து இறங்கிப் போயிடுவான் "

" யூ ஆர் ரைட்...... நீங்க அவனை வாட்ச் பண்ணிட்டே இருங்க.... இதோ நான் கிளம்பிட்டேன் "

" ராவ்டே..... பி... கேர்ஃபுல்..... அந்த காமிரா பேர்வழிகிட்ட ஏதாவது ஆயுதம் இருக்கலாம். உங்களைத் தாக்கவும் முயற்சி செய்யலாம் "

" யூ டோண்ட் வொர்ரி......... நான் ஆர்மியிலிருந்து வந்தவன். அவனை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்குத் தெரியும் "

ராவ்டே பிந்தர் சொல்லிக்கொண்டே மின்னல் வேகத்தில் மாடிப்படிகளில் இறங்கி தரைதளத்திற்கு வந்து பார்க்கிங் ஏரியாவில் வேகமாய் நடந்தார். செல்போனில் குரலைத் தாழ்த்தினார்.

" இப்ப அவன் மொட்டை மாடியில் என்ன பண்ணிட்டிருக்கான் .....? "

" மாடியோட பேராபட் சுவர் மேல காமிராவை வெச்சுகிட்டு அந்த 144 நெம்பர் ஃப்ளாட்டை நிதானமாய் ஷீட் பண்ணிட்டு இருக்கான் "

" நான் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ளே "Z" ப்ளாக் அப்பார்ட்மெண்ட்டோட மொட்டை மாடிக்கு போயிடுவேன். நம்ம ரெண்டு பேரோட போனும் ஆன்லயே இருக்கட்டும் "

ராவ்டே பிந்தர் பேசிக்கொண்டே துரித நடை போட்டார்.

*********

சந்திரசூடன் தாட்சாயிணியம்மாவிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, ஃப்ளாட்

வாசலிலிருந்து காலிங்பெல் குரல் கொடுத்தது. அறையினின்றும் வெளிப்பட்ட சந்திரசூடன் வேகமாய்ப் போய் கதவைத் திறந்தார்.

வெளியே நாற்பதுகளின் நடுவில் இருந்த ஃபாரன்ஸிக் ஆபீஸர் சர்வேசன் நின்றிருந்தார். மாடி ஏறி வந்ததில் லேசாய் மூச்சு வாங்கினார். வியர்வையில் சட்டை நனைந்திருந்தது.

" ஸாரி.....ஸார்..... ஹெவி ட்ராஃபிக். ஒவ்வொரு சிக்னலிலேயும் ரெண்டு மூணு நிமிஷம் நிற்க வேண்டியதாயிடுச்சு....... "

" நோ..... ப்ராப்ளம் சர்வேசன்..... இன்னிக்கு நீங்க எனக்கு அவைலபிளாய் இருந்ததே மிகப்பெரிய விஷயம்..... ப்ளீஸ் கம் இன் "

சர்வேசன் உள்ளே நுழைந்தபடியே கேட்டார்.

" இங்கே என்ன ஸார் பிரச்சினை .....? " கேட்டவர் சட்டென்று முகம் மாறி தன் கர்ச்சீப்பை எடுத்து நாசிக்கு கொண்டு போனார்.

" ஸார்..... ஏதோ ஒரு பேட் ஸ்மெல் வருது "

" பிரச்சினையே அதுதான்..... வாங்க..... சொல்றேன் "

அதே விநாடி தாட்சாயிணியம்மாள் அறையினின்றும் வெளிப்பட்டு சந்திரசூடனை நோக்கி வந்தாள்.

" நான் என்னோட ஃப்ளாட்டுக்குப் போலாமா.....? இன்னிக்கு செவ்வாய்க்கிழமை மூணு டூ நாலரை ராகு காலம். துர்க்கைக்கு பூஜை பண்ணனும். பூஜைக்கு நிறைய பேர் வருவாங்க "

" நீங்க போங்கம்மா..... நான் மறுபடியும் இந்த ஃப்ளாட்டுக்கு வரும்போது எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா உங்ககிட்ட வந்து என்கொயரியை வெச்சுக்கிறேன் "

தாட்சாயிணியம்மாள் தலையசைத்துவிட்டு நகர்ந்துவிட சர்வேசன் குழப்பம் மண்டிய முகத்தோடு சந்திரசூடனை ஏறிட்டார். தயக்கமான குரலில் கேட்டார்.

" யார் ஸார்...... இந்த சாமியார் அம்மா .....? "

சர்வேசனிடம் கடந்த பத்து நாட்களில் நடந்த சம்பவங்களையெல்லாம் சுருக்கமாக சந்திரசூடன் சில நிமிடங்களில் சொல்லி முடிக்க, அவருடைய முகத்தில் திகைப்பும் அதிர்ச்சியும் மாறி மாறி உற்பத்தியாயிற்று.

" ஸார்..... இந்த ஏரியா ஜனங்க சந்திரமுகி அப்பார்ட்மெண்ட்ன்னு இதைச் சொல்றதுல தப்பேயில்லை போலிருக்கு...... "

" சரி.... இந்த பேட் ஸ்மெல்லுக்கு காரணம் என்னவாகயிருக்கும்ன்னு நினைக்கிறீங்க சர்வேசன் .....? "

" கரப்பான் பூச்சிகளும், பல்லி பூரான்களும் எந்த ரும்ல செத்து கிடக்கிறதாய் சொன்னீங்க .....? "

" வாங்க......" சொன்ன சந்திரசூடன் முன்னால் நடந்து சென்று ஃப்ளாட்டின் கார்னரில் இருந்த அறையைக் காட்ட, சர்வேசன் உள்ளே நுழைந்தார். நெற்றியில் வியப்பின் வரிகள் கூடியது.

" மைகுட்னஸ் " என்று வாய்விட்டு சொன்னவர், குத்துக்காலிட்டு உட்கார்ந்து தன் கையோடு கொண்டு போயிருந்த சிறிய ஃபாரன்ஸிக் கிட்டைத் திறந்து, தின் க்ளவுஸை இரண்டு கைகளுக்கும் மாட்டிக்கொண்டு, இறந்து கிடந்த ஒரு கரப்பான் பூச்சியை எடுத்துப்பார்த்தார். பிறகு கிட்டில் இருந்த ஒரு சிறிய பாட்டிலை உருவி அதில் இருந்த திரவத்தை ஒரு ஃபில்லர் மூலம் நிரப்பி கரப்பான் பூச்சியின் மேல் துளித்துளியாக விட்டார். பூச்சியை மல்லாக்க போட்டவர் ஃபாரன்ஸிக் மைக்ரோ லென்ஸால் அதைப் பார்த்துவிட்டு சந்திரசூடனை ஏறிட்டார்.

" ஸார்.... இந்த ஃப்ளாட்ல அடிக்கிற பேட் ஸ்மெல்லுக்கு காரணம் ஒருவிதமான கெமிக்கலை எல்லாப்பக்கமும் ஸ்பிரே பண்ணியிருக்காங்க.... ஸ்பிரே பண்ணப் பண்ண உயிர் தப்ப முயன்ற எல்லா பூச்சிகளும் இந்த கார்னர் ரூமுக்கு வந்து இருக்கணும். இங்கேயும் ஸ்பிரே பண்ணினதால் ஒட்டுமொத்தமும் இங்கேயே உயிர் விட்டிருக்கு...... "

" எதுக்காக இந்த கெமிக்கல் ஸ்பிரே.....? "

" ஸாரி ஸார்..... இந்த கேள்விக்கு உடனே பதில் கிடைக்காது. இட் ஸீம்ஸ் லைக் ஏ பெர்வெர்ஸ் திங்க்..... இது சாதாரண சம்பவம் கிடையாது "

**********

ராவ்டே பிந்தர் செல்போனை காதில் ஒட்டவைத்துக்கொண்டு வியர்த்துக் கொட்டும் உடம்போடு "Z" ப்ளாக் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி வேகமாய் நடந்தார்.

" ஆதிகேசவன்... இன்னும் ரெண்டு நிமிஷத்துக்குள் நான் "Z" அப்பார்ட்மெண்ட்டுக்கு போயிடுவேன். பை...த...பை ஆள் யார்ன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சுதா .....? "

" தலைக்கு அவன் தொப்பி போட்டிருக்கிறதால பாதி முகம்தான் தெரியுது "

" மடக்கிடலாம் ஆள் மொட்டை மாடியில் இருக்கிறதால தப்பிக்க முடியாது. லிஃப்ட்டும் இப்போ ரிப்பேர்ல இருக்கிறது இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் "ராவ்டே பிந்தர் யாரும் கேட்டுவிடாதபடி தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டே எட்டி நடை போட்டார்.

வியர்த்து ஊற்றும் உடம்போடு இரண்டு நிமிட நடை. "Z" ப்ளாக் நெருங்கியது. அதன் பேஸ்மெண்ட் ஏரியாவில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்க, மாடிப்படிகளில் தாவி ஏறினார். மூச்சு வாங்க செல்போனில் பேசினார்.

" ஆதிகேசவன்... பிளாக்குக்கு வந்துட்டேன். மாடிப்படி ஏறிட்டிருக்கேன். மொட்டை மாடியில் அவன் என்ன பண்றான் .....? "

"இப்போ சின்டெக்ஸ் டேங்க் பக்கமாய் போய் அங்கிருந்து காமிராவை ஹேண்டில் பண்ணிட்டிருக்கான். நீங்க எப்படி அவனை மடக்கப் போறீங்க ராவ்டே ? "

" கைவசம் சடன் ஸ்டார்ம் இருக்கு "

" சடன் ஸ்டார்மா .....? "

" எஸ்... ஆர்மியில் எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்புக்கலைக்குப் பேர் "சடன் ஸ்டார்ம்" கையில் ஆயுதம் எதுவும் இல்லாதபோது அந்தக் கையையே ஆயுதமாக்கி எதிரியை கண்ணிமைக்கிற நேரத்தில் சாய்த்துவிட முடியும். ரொம்ப நாள் கழிச்சு அந்தக் கலையை யூஸ் பண்ணப்போறேன் "

" ராவ்டே.... பி காஷியஸ் "

" நோ... நீட் டூ வொர்ரி ஆதிகேசவன். நீங்க மட்டும் அவனோட மூவ்மெண்ட்ஸை லைவா சொல்லிட்டே வாங்க..... அவனோட மூவ்மெண்ட்ஸ் தெரிஞ்சாத்தான் நான் அவனை எச்சரிக்கையோடு அணுக முடியும் "

ராவ்டே பிந்தர் சொல்லிக்கொண்டே படிகளில் தாவி ஏற முயல, கால் இடறியது. விழாமல் இருப்பதற்காக சுவரைப் பிடிக்க முயன்றவரின் கையிலிருந்த செல்போன் நழுவியது.

மாடிப்படியின் முனையில் பட்டு செல்போன் இரண்டு பாகங்களாய் தெறித்தது.
**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 31) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X