“ம்.... “ என்ற சத்தம் கேட்டது. - ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (36)
-ராஜேஷ்குமார்
புஷ்பா மறுபடியும் செல்போனில் குரலை உயர்த்தினாள்.
" பவானி அண்ணே..... "
இப்போது " ம்.... " என்ற சத்தம் கேட்டது.
" என்ன பேச்சையே காணோம்.... லைன்ல இருக்கீங்களா .......? "
" இருக்கேன்..... இருக்கேன்..... "
" ஜெயராஜ் பத்தி போலீஸ் உங்ககிட்ட விசாரிக்கணுமாம்... போனை அவங்ககிட்ட தர்றேன்.... பேசுங்க..... "
" ம்..... குடு.... குடு..... "
புஷ்பா தன்னுடைய செல்போனை சந்திரசூடனிடம் கொடுத்தாள்.
" பேசுங்க ஸார் "
சந்திரசூடன் செல்போனை வாங்கி மெல்லிய குரலில் விசாரணையை ஆரம்பித்தார்.

" நான் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் சென்னையிலிருந்து பேசறேன். அந்த ஜெயராஜ் இப்ப உன்கிட்டதான் இருக்கானா .......? "
" போன மாசம் வரைக்கும் என்கிட்டத்தான் வேலை பார்த்துட்டு இருந்தான் ஸார்... இப்ப இல்லை..... "
" அவன் இப்ப எங்கே இருக்கான் .......? "
" மாதுங்காவில் இருக்கிற அந்தோணியார் சர்ச்ல அங்கே சர்ச் வாலண்டியர் வேலைக்கு போயிட்டான் ஸார் "
" என்னது சர்ச் வாலண்டியரா.......? "
" ஆமா ஸார்....... சென்னையில நம்ம ஃப்ரண்ட் லூர்துகிட்டே வேலை பார்த்துட்டிருந்த அவனை நான்தான் மும்பைக்கு கூட்டிட்டு வந்தேன். ஒரு ஆறு மாசம் ஒழுங்கா வேலை பார்த்தான். அதுக்கப்புறம் அவனோட நடவடிக்கையில் லேசாய் ஒரு மாறுதல் தெரிஞ்சுது.... ஸார்"
" என்ன மாறுதல் .......? "
" வாரத்துக்கு ஒரு தடவை சர்ச்சுக்கு போயிட்டிருந்தவன், தினசரி சாயந்தரம் போக ஆரம்பிச்சான். அப்புறம் ஒரு நாள் திடீர்ன்னு வந்து நான் இனிமே வேலைக்கு வரலை. மாதுங்காவில் இருக்கிற அந்தோணியார் சர்ச்சுக்குப் போய் வாலண்டியர் ஒர்க் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான். பாக்கி சம்பளப் பணத்தைக் கூட வாங்கிக்கலை ஸார்"
" ஆச்சர்யமாயிருக்கே......... "
" நான் இன்னமும் ஆச்சர்யப்பட்டுகிட்டே இருக்கேன் ஸார் "
" சரி.... சர்ச்சுக்கு வாலண்டியர் ஒர்க் பண்ணப்போனவன் மறுபடியும் உன்னை வந்து பார்த்தானா.......? "
" ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு தடவை வந்து பார்த்து பேசிட்டு போனான். அதுக்கப்புறம் வரலை ஸார் "
" இன்னமும் அந்த சர்ச்சுலதான் இருக்கானா .......? "
" ஆமா...... "
" அவனோட செல்போன் நெம்பர் உன்கிட்ட இருக்கா.......? "
" அவன்கிட்ட செல்போன் இருந்தால்தானே நெம்பர் இருக்கும் "
" சர்ச் செல் நெம்பர் தெரியுமா .......? "
" தெரியாது ஸார்...... கூகுள்ல டைப் பண்ணி பார்த்தா..... நெம்பர் கிடைக்கும்..... ஆனா ஒரு விஷயம் ஸார் "
" என்ன .......? "
" ஜெயராஜைப் பத்தி நீங்க எதுக்காக விசாரிக்கறீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் அவன் தப்பான ஆள் கிடையாது. பனிரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி அவன் நிறைய குற்றங்களை பண்ணியிருக்கலாம். அதுக்கான சிறைத்தண்டனையும் அனுபவிச்சுட்டு வெளியே வந்துட்டான். சிறைவாசம் அவனை ஒரு பக்குவமான மனுஷனாய் மாத்தியிருக்குன்னு நான் நினைக்கிறேன் ஸார்....... "
" நீ ..... நினைக்கிற முடிவுக்கெல்லாம் போலீஸ் வர முடியாது. காரணம் ஒரு கொலை சம்பந்தமான வீடியோ பதிவில் ஜெயராஜோட முகம் தெளிவாத் தெரியுது...... "
" நான் வேணும்ன்னா எங்க ஆள் ஒருத்தனை அந்த சர்ச்சுக்கு அனுப்பி ஜெயராஜை கூட்டிட்டு வந்து பேச வைக்கட்டுமா ஸார் .......? "
" வேண்டாம்.... இனி அந்தப் பிரச்சினையை நாங்க பார்த்துக்கறோம் " சொன்ன சந்திரசூடன் செல்போனை அணைத்து புஷ்பாவிடம் கொடுத்துவிட்டு சர்வேசனை பார்த்தபடி எழுந்தார்.
" புறப்படலாமா .......? "
சர்வேசனும் எழுந்தார்.
புஷ்பா பதட்டம் நிரம்பிய குரலோடு கேட்டாள்.
" ஸார்.... இதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துடாதே "
சர்வேசன் புன்சிரிப்போடு சொன்னார். "ஜெயராஜ் சம்பந்தப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் நீ சொன்ன பதில்களையெல்லாம் செல்போன்ல ரிக்கார்ட் பண்ணி வெச்சிருக்கோம். அதுல ஏதாவது பொய்யான தகவல்கள் இருந்தா போலீஸ் உன்னைத் தேடி வரும்....... "
" ஸார்.... நாங்க உப்பு தண்ணியோடு வாழ்க்கையை நடத்தறவங்க. பொய் சொல்லமாட்டோம்.... ஜெயராஜைப்பத்தி நான் சொன்னதெல்லாம் உண்மை "
" பார்க்கலாம்.... அடுத்த ரெண்டு மணி நேரத்துக்குள்ளே மும்பையில் இருக்கிற ஜெயராஜைப்பத்தின எல்லா உண்மைகளும் எங்களுக்கு வந்துடும். அப்ப யார் சொன்னது பொய், யார் சொன்னது உண்மைன்னு தெரிஞ்சுடும்... "
இருவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து தெருவில் இறங்கி நடந்தார்கள். தெருவின் முனையில் நிறுத்தியிருந்த காரை நோக்கி நடக்க நடக்கவே சந்திரசூடன் சொன்னார்.
" சர்வேசன்..... மும்பையில் மாதுங்கா ஏரியாவோட போலீஸ் கமிஷனர் யார்ன்னு கூகுள்ல பாருங்க.... இண்டர் ஸ்டேட் போலீஸ் அஸிஸ்டன்ஸ் டிபார்ட்மெண்ட்டை காண்டாக்ட் பண்ணி, அந்தோணியார் சர்ச்பற்றியும், அங்கே வாலண்டியராய் வேலை செய்யற ஜெயராஜைப்பற்றியும் சொல்லி அந்த பீட் ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து இன்ஸ்பெக்டரை ஸ்பாட் விசிட் பண்ணச் சொல்லுங்க......"
" நான் இப்பவே ஏற்பாடு பண்ணிடறேன் ஸார். மும்பை ஃபாரன்ஸிக்கில் என்னோட ஃப்ரண்ட் ஒருத்தர் இருக்கார். பேரு நவந்தர். அவர்க்கு நம்ம பிரச்சினையை கன்வே பண்ணினா போதும். அடுத்த சில மணி நேரத்துக்குள்ளே மும்பை போலீஸிலிருந்து நமக்கு தகவல் வர ஆரம்பிச்சுடும் "
சொன்ன சர்வேசன் தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.
*********
சரியாய் மூன்று மணி நேரம் கழித்து, ஆபீஸ் அறையில் சந்திரசூடனும்,
சர்வேசனும் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, மும்பையிலிருந்து அந்த செல்போன் அழைப்பு வந்தது. சந்திரசூடன் எடுத்துப் பார்க்க, செல்போனின் டிஸ்ப்ளே திரையில் ட்ரூ காலரின் உபயத்தோடு அந்தப் பெயர் தெரிந்தது.
" வால்சந்த்.... இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் மாதுங்கா "
குடித்துக்கொண்டிருந்த டீ டம்ளரை மேஜையின் ஒரமாய் வைத்த சந்திரசூடன் செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.
" நான் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் சந்திரசூடன் பேசுகிறேன். குட் ஈவினிங் மிஸ்டர் வால்சந்த்.... "
" குட் ஈவினிங் ஸார்.... நீங்கள் கேட்டிருந்த தகவல்களை திரட்ட சற்று தாமதமாகி விட்டது. ஸாரி ஃபார் மை டிலேய்ட் காலிங் "
" நோ இஷ்யூஸ்....உங்களுடைய செல்போன் அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்தோணியார் சர்ச்சுக்குப் போய் அந்த ஜெயராஜைப் பார்த்தீர்களா ..? "
" எஸ் ஸார்.... ஜெயராஜைப் பார்க்க சர்ச்சுக்குப் போயிருந்தேன். ஆனால் அவன் சர்ச்சில் இல்லை "
" பிறகு .......? "
" அவன் இப்போது ஒரு ஆர்த்தோ ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்யப்பட்டு ட்ரீட்மெண்டில் இருக்கிறான் "
சந்திரசூடன் லேசாய் திடுக்கிட்டார். " ஜெயராஜ்க்கு என்னவாயிற்று .......? "
" இருபது நாட்களுக்கு முன்னால் சர்ச்சில் பெயிண்ட் பூச்சு வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயராஜ் சர்ச் முன்புற மேற்கூரையில் ஏறி உட்கார்ந்து, பெயிண்ட் பூச்சு வேலையைச் செய்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்திருக்கிறான். இடது காலின் தொடை எலும்பில் மல்ட்டி ஃப்ராக்ச்சர் ஏற்பட்டதின் விளைவு ஜெயராஜ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சர்ச் ஃபாதர் பால் மைக்கேல் வில்லியம்ஸ் என்னிடம் சொன்னார். நான் உடனடியாக ஃபாதர் சொன்ன ஹாஸ்பிடலுக்கு போய் ஜெயராஜைப் பார்த்தேன். அவனுடைய இடதுகால் முழுவதும் அதாவது தொடையிலிருந்து பாதம் வரை ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பேண்டேஜ் போட்டிருக்கிறார்கள். ஜெயராஜ் இன்னமும் ஒரு மாதம் வரையிலும் ஹாஸ்பிடலில் இருக்கவேண்டும் என்று டாக்டர் ஷ்யாம் பாண்டே சொன்னார் "
" இது சம்பவம் எப்போது நடந்தது.......? "
" சரியாய் இருபது நாட்களுக்கு முன்பு "
" நீங்கள் சொல்கிற காலவித்தியாசத்தை பார்க்கும்போது அதிரா அபார்ட்மெண்ட் கார் பார்க்கிங் ஏரியாவில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் இருப்பது ஜெயராஜாக இருக்க முடியாது என்கிற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கொலை செய்யப்பட்ட லட்சணாவின் உடலை டிஸ்போஸ் செய்வதற்காக, காரின் டிக்கியில் ஏற்றிய சம்பவம் பத்து நாட்களுக்கு முன்புதான் நடந்தது. ஆனால் வீடியோ பதிவில் இருப்பது ஜெயராஜ்தான் என்று கம்பேரிங் இமேஜஸ் ஆஃப் ஒல்ட் பிரிஸ்னர்ஸ் ரிக்கார்ட் சொல்கிறது. பாடி டிஸ்போஸ் சம்பவம் நடந்த அன்றைக்கு ஜெயராஜ் மும்பை ஆர்த்தோ ஹாஸ்பிடலில் கால் எலும்பு முறிந்து ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மாவு பேண்டேஜ் கட்டோடு படுத்திருக்கும் நிலைமையில் ஜெயராஜ் அந்த வீடியோ பதிவில் இருப்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்று மிஸ்டர் வால்சந்த் .......? "
" சாத்தியமே இல்லை ஸார் .... நானும் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த ஹாஸ்பிடலில் இருக்கும் டாக்டர்களையும், நர்ஸ்களையும் தனித்தனியாய் அழைத்து விசாரித்துப் பார்த்துவிட்டேன். கடந்த இருபது நாட்களாய் ஜெயராஜ் அசையக் கூட முடியாத நிலைமையில் இந்த ஹாஸ்பிடலில்தான் இருந்திருக்கான் "
" ஜெயராஜிடம் விசாரணை நடத்தினீர்களா .......? "
" நடத்தினேன்.... வீடியோ பதிவையும் காட்டினேன் "
" அவனுடைய ரியாக்சன் எப்படியிருந்தது.......? "
" விஷயத்தை சொன்னதுமே அரண்டு போனான். வீடியோ பதிவில் இருப்பது நான்தான்... என்னுடைய முகத்தை வைத்து யாரோ மார்பிங் செய்து இருக்கலாம் என்று சொன்னான் "
" நோ....நோ... அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ பதிவு அல்ல மிஸ்டர் வால்சந்த்.... நடக்கும் சம்பவத்தைப் பார்த்துவிட்டு அந்த அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் ஒரு பெண் எடுத்தது. வீடியோ பதிவில் ஏதாவது சில்மிஷம் செய்யப்பட்டிருக்கிறதாவென்று, நாங்கள் இங்கே சைபர் க்ரைம் ப்ராஞ்சில் கொடுத்து சரிபார்த்துவிட்டோம்.... ஜெயராஜிடம் ஏதோ தப்பு இருக்கிறது. பவானிசிங்கின் பின்புலம் என்ன என்பதையும் பாருங்கள். சென்னையில் லூர்துசாமியிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெயராஜ் பவானிசிங்கிடம் வேலை பார்க்க மும்பைக்கு ஏன் வரவேண்டும்.....? உங்களால் மறைமுகமான முறையில் ஒரு டீப் என்கொயரி செய்யப்பட்டதால்தான் உண்மை வெளியே வரும் "
" நீங்கள் சொல்வது சரிதான். என்னுடைய மனதிலும் இந்த கேள்விதான் ஒடிக் கொண்டு இருக்கிறது.... பவானிசிங்கின் பின்புலம் என்ன என்பதையும் விசாரித்து விட்டேன். அவன் மும்பை போர்பந்தர் ஏரியாவில் தாதாவாய் இருந்து பிறகு மீன்பிடித் தொழிலுக்கு வந்தவன். தாதாவாய் இருந்த காலத்தில் அவன் மீது ஏகப்பட்ட அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிறகு கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன..... இருந்தாலும் பவானிசிங் போன்ற ஆட்களையும் ஜெயராஜ் போன்ற சிறைக்குப் போய்விட்டு வந்தவர்களையும் முழு அளவில் நம்பிவிட முடியாது..... எனக்கு இன்னமும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். பவானிசிங் பற்றியும், ஜெயராஜ் பற்றியும் கூடுதல் தகவல்களோடு செல்போனில் உங்களைத் தொடர்பு கொள்கிறேன் ஸார் "
"உங்களுடைய பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி மிஸ்டர் வால்சந்த். தங்களுடைய அடுத்த செல்போன் அழைப்பை இரண்டு நாட்களுக்குள் எதிர்பார்க்கிறேன்"
சந்திரசூடன் செல்போனின் இணைப்பை துண்டித்து விட்டு, சர்வேசனிடம் ஏதோ பேச முயன்ற விநாடி, அறை வாசலருகே அவருடைய பர்சனல் அஸிஸ்டெண்ட் தயக்கத்தோடு வந்து நின்று சல்யூட் வைத்தார். சந்திரசூடன் அவரை ஏறிட்டார்.
" என்ன முருகானந்தம் .......? "
" ஸார்.... உங்களைப் பார்த்து பேசறதுக்காக பட்டினப்பாக்கத்திலிருந்து ஒரு பொண்ணு வந்திருக்கா... பேரு புஷ்பா.... விஷயம் என்னான்னு கேட்டேன். உங்க்கிட்டதான் பேசணும்ன்னு சொல்றா... அனுப்பட்டுமா ஸார் .......? "
**********
( தொடரும்)
[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 ]
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications