• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தட்ஸ் குட்.... என்ன க்ளூ அது ..? . ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (34)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்டின் இமேஜ் கம்பேரிஸன் டெக்னிக்ஸ் என்ற ஸ்டிக்கர் வாசகம் பேசிய கதவைத் திறந்துகொண்டு, சந்திரசூடனும், சர்வேசனும் உள்ளே நுழைய, கம்ப்யூட்டர்க்கு முன்பாய் உட்கார்ந்திருந்த ரிப்போர்ட்டிங் ஆபீஸர் வெங்கடேஷ் எழுந்து நின்று, ஒரு ப்ரோட்டோகால் சல்யூட்டைக் கொடுத்துவிட்டு, மெல்லிய குரலில் சொன்னார்.

" ஸார்..... ரிப்போர்ட் ரெடி....... நானே உங்களுக்கு போன் பண்ணலாம்ன்னு இருந்தேன்"

சந்திரசூடன் மெலிதான சிரிப்போடு வெங்கடேஷை ஏறிட்டார். " சில விஷயங்களை போனில் பேசக்கூடாது.... அதனால்தான் நாங்களே நேர்ல வந்துட்டோம். பை த பை ரிப்போர்ட் என்ன சொல்லுது .......? "

" உட்காருங்க ஸார்.... ஒரு நிமிஷத்துல ரிப்போர்ட்டை பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்துடறேன். நீங்களே படிச்சுப் பார்த்துடலாம் "

சந்திரசூடனும், சர்வேசனும் நாற்காலிகளுக்குச் சாய வெங்கடேஷ் பக்கத்து அறைக்குள் நுழைந்து அந்த நிமிஷம் முடிவதற்குள் கையில் தாளோடு வெளிப்பட்டார்.

சந்திரசூடன் வாங்கிப் பார்த்தார்.

Flat number 144 adhira apartment episode 34

IMAGE AND SCREENSHOT COMPARISON என்று டைப் செய்யப்பட்டிருந்த ஆங்கில வார்த்தைக்கு கீழே வாசகங்கள் வரி வரியாய் ஓடி சில பத்திகளாய் மாறியிருந்தது.

" மிஸ்டர் வெங்கடேஷ்"

" ஸார் "

" உங்க ஃபாரன்ஸிக் பாஷையில் இருக்கிற இந்த ரிப்போர்ட்டை படிச்சா, அதை உள்வாங்கிக் கொள்ள, கொஞ்ச நேரமாகும்....... ரிப்போர்ட்டோட சாராம்சத்தை நீங்களே சொல்லிடுங்க "

" ஒ.கே.ஸார்..... லெட் மீ மேக் இட் க்ளீயர்........ நீங்க நேற்றைக்கு அதிரா அப்பார்ட்மெண்டிலிருந்து ராவ்டே என்பவர் கொடுத்த வீடியோ பதிவையும், அந்தப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்களையும், இம்மேஜ்களையும் ஃபோர் டைமென்ஷனில் அல்ட்ரா ஐடெண்டிஃபை பண்ணி கன்வே பண்ணிப் பார்த்ததில் ஒரு க்ளூ கிடைச்சிருக்கு....... "

" தட்ஸ் குட்...... என்ன க்ளூ அது .......? "

" வீடியோவில் பதிவாகியிருந்த அந்த ரெண்டு பேர் ஒரு ஆம்னி வேனிலிருந்து இறங்கி, மூட்டை மாதிரி எதையோ தூக்கிட்டு வந்து, காரோட டிக்கியை ஒப்பன் பண்ணி, உள்ளே வெச்சபோது எடுத்த ஸ்க்ரீன் ஷாட் பதிவை ஃபயர் பாக்ஸ் ஸ்க்ரீன் க்ரேப்பில் ஜூம் செய்து பார்த்ததில் ரெண்டு பேர்ல ஒருத்தனோட முகம் நல்லாவே

தெரியுது ஸார். அந்த முகத்தை முன்னாள் குற்றவாளிகளின் முகங்களோடு ஓப்பிட்டு பார்த்ததில் அது ஜெயராஜ் என்கிற குற்றவாளியின் முகத்தோடு ஒத்துப்போகுது "

" ஆர்....யூ....ஷ்யூர் .......? "

" நைன்ட்டி பர்ஸண்ட் ஸார்.... ஹேவ் ஏ லுக் ஆன் திஸ் கம்பேரிஸன் ஆஃப் போட்டோஸ்..... " சொன்ன வெங்கடேஷ் தனக்கு முன்பாய் இருந்த லேப்டாப்பை சந்திரசூடன் சர்வேசன் பக்கமாய் திருப்பி வைத்து அதன் கீ போர்டில் இருந்த ஒரு பட்டனைத் தட்டினார்.

லேப்டாப்பின் அகன்ற திரை இரண்டு பாகமாக பிரிந்து ஒரு பாதியில் அதிரா அப்பார்ட்மெண்டின் பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த வேனும், இன்னொரு பாதியில் பழைய குற்றவாளிகளின் போட்டோக்களும் தெரிந்தன.
வெங்கடேஷ் லேப்டாப்பின் திரையைக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

" ஸார்....... நான் இப்போ அதிரா அப்பார்ட்மெண்டின் பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த வேனையும், வேனில் இருந்து இறங்கிட்டிருக்கிற அந்த ரெண்டு பேரையும் ஜூம் பண்ணிக் காட்டறேன். அதுல க்ரே கலர் சர்ட் பேர்வழியோட முகத்தை மட்டும் உன்னிப்பா பாருங்க.. " சொன்ன வெங்கடேஷ் அந்தப் பாதியை மட்டும் ஜூம் செய்ய லேப்டாப் திரை முழுவதும் அந்த நபரின் முகம் பரவி அடைத்துக்கொண்டது.

லேசாய் எலும்புத்தட்டிப்போன முகத்தில் பெப்பர் சால்ட் மீசையும் தாடியும் ட்ரிம் செய்யப்பட்டு தெரிய, கூர்மையான அந்த மூக்கும், கலவரம் நிரம்பியிருந்த இரண்டு கண்களும் வீடியோ பதிவுக்கு வசமாக சிக்கியிருந்தன.

பதிவைப் பார்த்த சந்திரசூடனின் முகம் ஒரு மலர்ச்சிக்கு உட்பட்டது. உற்சாகமாய்ப் பேசினார்.
" யூ ஹேவ் டன் ஏ க்ரேட் ஜாப் மிஸ்டர் வெங்கடேஷ். இப்ப இவனோட முகம் எனக்கு சட்டுன்னு பிடிபடுது. 12 வருஷத்துக்கு முந்தி நான் ட்ரக் அப்யூஸ் ப்ரிவென்ஷன் அண்ட் கண்ட்ரோல் டிபார்ட்மெண்ட்டில் ட்ரக் ட்ராபிக்கிங்க் ப்ரிவென்ஷன் ஆபீஸராய் இருந்தப்ப இவனோட போட்டோவை அடிக்கடி..... பார்த்திருக்கேன். காரணம் இவன் போதை மருந்துக்களைக் கடத்தி அதை சாமார்த்தியமா சப்ளை பண்றதுல பெரிய கில்லாடி..... ஒரு தடவை இவனை அரஸ்ட்கூட பண்ணியிருக்கேன். ஆனா அரஸ்ட் பண்ணின அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே ஜாமீன்ல வெளியே வந்துட்டான் காரணம் அரசியல் செல்வாக்கு. நான் அந்த டிபார்ட்மெண்டிலிருந்து மாறுதலாகி வேற ஒரு டிபார்ட்மெண்டுக்குப் போனதும், இவனை சுத்தமாய் மறந்துட்டேன். இவன் பேர் ஜெயராஜ்ன்னு நீங்க சொல்லவும்தான் ஞாபகம் வருது. பை....த....பை பதிவில் இருந்த இன்னொருத்தன் யார்ங்கிறதை கண்டுபிடிக்க முடிஞ்சுதா வெங்கடேஷ்.......? "

" முயற்சி செஞ்சு பார்த்தேன் ஸார்..... ஃபோர்த் டைமென்ஷனை யூஸ் பண்ணியும் பதிவில் இருந்த இன்னொரு நபரின் உருவம் சரியா பிடிபடலை. நாம ஜெயராஜை மடக்கினா போதும்... அந்த ரெண்டாவது நபர் யார்ன்னு தெரிஞ்சுடும்....... "

" நீங்க சொல்றது சரிதான்.... ஆனா ஜெயராஜ் இப்போ எங்கே இருப்பான்னு எப்படி கண்டுபிடிக்கப்போறோம் .......? "

வெங்கடேஷ் சின்னதாய் புன்முறுவல் பூத்துக் கொண்டே சொன்னார்.

" அதையும் ட்ரேஸ் அவுட் பண்ணிட்டேன் ஸார். அந்த ஜெயராஜ் ஒரு ஹவாலா கேஸ்ல மாட்டி ஏழு வருஷம் சிறைத்தண்டனையை அனுபவிச்சுட்டு ஆறுமாசத்துக்கு முன்னாடிதான் விடுதலையாகி வெளியே வந்திருக்கான் "

" ஈஸிட்..... இந்தத் தகவலை உங்களுக்கு கொடுத்தது யாரு.......? "

" என்னோட ரிலேட்டிவ் ஒருத்தர் பேரு கைலாஷ். அவர் இப்போ எக்ஸ் - பிரிஸ்னர்ஸ் வெல்ஃபேர் அஸ்ஸோசியேஷன்ல செக்கரட்டரியாய் இருக்கார். சிறையில் தண்டனை காலம் முடிஞ்சு வெளியே வர்ற கைதிகளுக்கு கவுன்ஸிலிங் கொடுத்து, மறுவாழ்வு தர்ற ஒரு மகத்தான வேலையை செஞ்சுட்டு வர்றார். வீடியோ பதிவில் பார்த்த ஜெயராஜ் ஒரு பழைய குற்றவாளின்னு தெரிஞ்சதுமே, அவன் ஏதாவது ஒரு ஜெயிலில் கைதியாய் இருந்திருக்க வாய்ப்பிருக்குன்னு நான் நினைச்சு அவர்க்கு போன் போட்டுப் பேசினேன். அவரோட வாட்ஸ் ஆப்க்கு ஜெயராஜோட போட்டோவையும் அனுப்பி வெச்சேன். அவர் போட்டோவைப் பார்த்த உடனேயே அவர் ஒரு தகவல் களஞ்சியமாய் மாறி ஜெயராஜைப் பற்றி ஒரு ப்ரீப் டிஸ்கிரிப்ஷன் கொடுத்துட்டார் "

சந்திரசூடனும், சர்வேசனும் ஆர்வமாய் நிமிர்ந்தார்கள்.

" கைலாஷ் எனக்கு அனுப்பி வெச்ச அந்த வாய்ஸ் மெஸேஜை நீங்களும் கேளுங்க ஸார் " சொன்ன வெங்கடேஷ் தன்னுடைய செல்போனை எடுத்து வாட்ஸ் அப்பை ஆன் செய்ய கரகரப்பாய் ஒரு குரல் கேட்டது.

" வெங்கடேஷ்... நீங்க அனுப்பி வெச்ச அந்த பழைய குற்றவாளியோட போட்டோவைப் பார்த்தேன். அவன் பேரு ஜெயராஜ்ன்னு போலீஸ் ரிக்கார்ட்ஸ் இருந்தாலும் வெளியே அவனுக்கு இருக்கிற இன்னொரு பெயர் "மருந்து ஜெயா" மருந்துன்னா போதைப்பொருள். அவன் செய்யாத குற்றங்களே கிடையாது. அவனுக்குப் பின்னாடி ஒரு அரசியல் கட்சி வலுவாய் இருக்கிற காரணத்தால போலீஸ் அவனை எப்ப அரஸ்ட் பண்ணினாலும் அடுத்த பனிரெண்டு மணி நேரத்துக்குள்ளே வெளியே வந்துடுவான். ஆனா கொஞ்ச நாளிலேயே அந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கியமான பிரமுகர் ஒருத்தர் திடீர்ன்னு ஹார்ட் அட்டாக்ல போக மருந்து ஜெயாவுக்கு பிரச்சினைகள் உருவாக ஆரம்பிச்சுது.

அதே கட்சியில் இருந்த இன்னொரு தலைவர் தான் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க இவனை மாட்டிவிட, ஹவாலா வழக்குல குற்றம் நிரூபணமாகி ஜெயராஜ்க்கு ஏழு வருஷ சிறைத்தண்டனை கிடைச்சுது. பாளையங்கோட்டை சிறையில் ஏழு வருஷம் இருந்துட்டு ஆறுமாசத்துக்கு முன்னாடிதான் வெளியே வந்தான். சிறை வாழ்க்கை ஜெயராஜை ரொம்பவே மாற்றியிருந்ததால தனக்கு மறுவாழ்வு வேணும்ன்னு கேட்டு பிரிசனஸர்ஸ் வெல்ஃபேர் அஸ்ஸோசியேஷனுக்கு மனு போட்டிருந்தான்.

அஸ்ஸோசியேஷனோட நிர்வாக்குழுஅவனை நேர்ல அழைச்சு, அவனுக்கு எதுமாதிரியான தொழில் தெரியும்ன்னு கேட்டதுக்கு தான் ஆரம்ப காலத்துல தூத்துக்குடியில் கடலுக்கு போய் மீன்பிடி தொழில் பண்ணிட்டிருந்தாய் சொல்லியிருக்கான். நிர்வாகக் குழுவில் இருந்த ஒருத்தருக்கு காசிமேட்டில் பல வருஷமாய் மீன்பிடி தொழிலை பெரிய அளவில் பண்ணிகிட்டு இருக்கும் லூர்துசாமியை தெரிஞ்சு இருந்ததால அவரை காண்டாக்ட் பண்ணிப் பேசி வேலை வாங்கிக்கொடுத்தார். மூணு மாசத்துக்கு முன்னாடி காசிமேட்டுல நான் மீன் வாங்கப்போன போது ஜெயராஜை பார்த்தேன்.

ஆளே மாறிப்போயிருந்தான். என்னைப் பார்த்ததும் ரொம்பவும் பவ்யமாய் கையைக் கட்டிகிட்டு பேசினான். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருந்தது. ஆனா நீங்க இப்ப எனக்கு அனுப்பின வீடியோ பதிவில் இருக்கிறது ஜெயராஜ்தான்ங்கிறதுல கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது. நாயை என்னதான் குளிப்பாட்டி நடுவீட்ல வெச்சாலும் அது மறுபடியும் தெருவுக்குத்தான் ஒடும்ங்கிறது இவனோட விஷயத்துல எவ்வளவு உண்மைன்னு நல்லாவே புரியுது. நான் லூர்துசாமியோட செல்போன் நெம்பரை வாட்ஸ்அப்ல அனுப்பியிருக்கேன். நீங்க வேணும்ன்னா அவருக்கு போன் பண்ணி பட்டும் படாமே ஜெயராஜைப்பத்தி விசாரிச்சு பாருங்க" வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெஸேஜ் முடிந்து போயிருக்க, வெங்கடேஷ் சந்திரசூடனை ஏறிட்டபடி கேட்டார்.

" அந்த லூர்துசாமிக்கு போன் பண்ணி ஜெயராஜ் பத்தி கேட்டுப் பார்க்கட்டுமா ஸார்.......? "

" ம்..... கேளுங்க "

வெங்கடேஷ் செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு லூர்துசாமியின் எண்ணைத் தொடர்பு கொண்டார்.
உடனே மறுமுனையில் ரிங் போய் ஒரு பெண் குரல் கேட்டது.

" ஹலோ...... "

வெங்கடேஷ் நிதானமான குரலில் கேட்டார்.

" யார் பேசறது .......? "

மறுமுனையில் இருந்த பெண் சிடுசிடுத்தாள்.

" போன் பண்ணினது நீங்க.... உங்களுக்கு யார் வேணும் .......? "

" லூர்துசாமிகிட்ட பேசணும் "

" நீங்க யாரு.......? "

" அவரோட ஃப்ரண்ட் "

" பேரு .......? "

" பெஞ்சமின் "

" என்ன விஷயமாய் பேசணும் .......? "

" ஒரு முக்கியமான விஷயம்... தனிப்பட்ட முறையில் அவர்கிட்டதான் பேசணும் "

" அப்படீன்னா நீங்க செத்துதான் போகணும் "

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 34) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X