• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ என்னது செத்து ..... போகணுமா..? - ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (35)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வெங்கடேஷ் சில விநாடிகள் செல்போனில், திகைப்பில் இருந்துவிட்டு மறுமுனையில் இருந்த பெண்ணிடம் கேட்டார்.

" என்னது செத்து .......போகணுமா .......? "

" ஆமா.... லூர்துசாமி இப்போ உயிரோடு இல்லை "

" என்னாச்சு அவர்க்கு .......? "

" அவரோட ஃப்ரண்ட்ன்னு சொல்றீங்க. அவர் எப்படி செத்தார்ன்னு உங்களுக்கு தெரியாதா.......? "

" தெரியாது..... நான் ஆறு மாசம் வெளியூர்ல இருந்தேன். நேத்து ராத்திரிதான் சென்னை வந்தேன்.... லூர்துசாமிகிட்டே நான் கடனா கொஞ்சம் பணம் வாங்கியிருந்தேன். அதைத் திருப்பி குடுத்துட்டு போலாம்ன்னுதான் போன் பண்ணினேன் "

அதிரடியாய் வெங்கடேஷ் பேசிய பொய்க்கு உடனடியாய் பலன் கிடைத்தது. அந்தப் பெண்ணின் குரலில் ஒரு திடீர் மரியாதை ஒட்டிக்கொண்டது. குரல் குழைந்தது.

Flat number 144 adhira apartment episode 35

" உங்க பேர் என்ன சொன்னீங்க .......? "

" பெஞ்சமின் "

" அவர் உங்களுக்கு கடனா எவ்வளவு பணம் கொடுத்திருக்காரு .......? "

" ரெண்டு லட்சம்... ஆனா லூர்துதான் இப்போ உயிரோடு இல்லையே. பணத்தை யார்கிட்ட தர்றது .......? "

" என்கிட்ட..... குடுத்துடுங்க..... "

" நீங்க யாரு .......? "

" அவரோட சம்சாரம்... மூணாவது சம்சாரம் "

" பேரு...... "

" புஷ்பா..... "

" பணத்தை உங்ககிட்ட குடுத்துட்டா மத்த ரெண்டு பேரும் பிரச்சினை பண்ண மாட்டாங்களா .......? "

" அந்த ரெண்டையும் தள்ளி வெச்சுட்டு கடந்த ஆறுமாச காலமா அவர்..... என்கூடத்தான் இருந்தாரு....... நீங்க பணத்தை என்கிட்டத்தான் தரணும். அவரோட நாமினி நான்தான் "

" வீட்டு அட்ரஸ் மாறிடுச்சா.... இல்லை அதேதானா .......? "

" இப்ப வேற அட்ரஸ்...... நோட் பண்ணிக்கறீங்களா .......? "

" சொல்லுங்க "

" சர்ச் ரோடு ரெண்டாவது குறுக்குத்தெரு டோர் நெம்பர் 116. பட்டினப்பாக்கம். வீட்டுக்கு முன்னாடி ஒரு பெரிய வேப்பமரம் இருக்கும். நீங்க எப்ப வர்றீங்க.......? "

" இன்னும்..... ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடறேன்... ஆமா..... லூர்துசாமிக்கு என்னாச்சு..... ஆறுமாசத்துக்கு முன்னாடி நான் பார்த்தப்ப கூட நல்லாத்தானே இருந்தாரு "

அந்த புஷ்பா சிரித்தாள். " என்ன நல்லாயிருந்தாரு.... இருபது வருஷ மொடாக்குடி..... கிட்னி, லிவர் ரெண்டிலேயும் ஏகப்பட்ட டேமேஜ்.... உங்க ஃபரண்ட் லூர்து டாக்டர் குடுத்த மருந்தையும் சாப்பிடலை. அவர் சொன்ன புத்திமதியையும் கேட்கலை. ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருந்து எதையும் சாப்பிட முடியாமே கஷ்டப்பட்டுட்டு போய்ச் சேர்ந்திட்டாரு. மூணு மாசமாச்சு "

" இப்ப அவரோட பிசினஸை யார் பார்த்துக்கறாங்க .......? "

" நான்தான்..... வேற யாரு பார்த்துக்குவாங்க.... நீங்க இங்கே வாங்க... நான் நேர்ல எல்லாத்தையும் சொல்றேன் "

" இதோ புறப்பட்டுட்டேன்....." சொன்ன வெங்கடேஷ் செல்போனை மெளனமாக்கி விட்டு சந்திரசூடனையும், சர்வேசனையும் ஒரு கேலியான புன்னகையால் நனைத்தார். " என்ன ஸார்...... நான் உருவாக்கின பெஞ்சமின் கேரக்டர் சரியாய் வருமா .......? "

" ஷ்யூர்..... இனி லூர்துசாமியோட மூணாவது சம்சாரத்தைப் போய் பார்த்துட வேண்டியதுதான். ஜெயராஜைப் பத்தி அவளுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்..... நீங்க வரவேண்டாம் வெங்கடேஷ். நானும் சர்வேசனும் போறோம்..... அந்த புஷ்பாவோட வீட்டு அட்ரஸை மறுபடியும் சொல்லுங்க "

வெங்கடேஷ் அட்ரஸை சொல்ல சந்திரசூடன் அதை ஒரு தாளில் எழுதிக்கொண்டபடி எழுந்தார்.

*********

பட்டினப்பாக்கம். மதியவேளை.

சர்ச் தெருவின் முனையில் காரை நிறுத்திவிட்டு சந்திரசூடனும், சர்வேசனும் இறங்கினார்கள்.
ஜன நடமாட்டம் அவ்வளவாக இல்லை. தலைக்கு மேல் வெய்யில் தகித்தது. கடற்கரை மணலில் பரப்பி போடப்பட்டிருந்த மீன்கள் கருவாடாக மாறிக்கொண்டிருக்க கடல் காற்று நாறியது. தூரத்தில் தெரிந்த கடல் அலைகளோடு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மீன்பிடி வலைகள் நிறம் நிறமாய் ஆங்காங்கே காற்றுக்கு அசைந்தன.

இருவரும் இயல்பாய் நடந்து சர்ச் தெருவுக்குள் பிரவேசித்து மெல்ல நடை போட்டார்கள். தெருவின் இரண்டு பக்கத்திலும் வரிசையாய் ஓட்டு வீடுகள். ஒரு ஐம்பது மீட்டர் தூரம் நடப்பதற்குள் இரண்டாவது குறுக்குத்தெரு வந்தது.

நுழைந்தார்கள்.

" டோர் நெம்பர் 116 தானே .......? "

" ஆமா ஸார்.... "

அடுத்த ஒரு நிமிஷ நடையில் காம்பெளண்ட் கேட்டில் 116 என்று பெயிண்டால் கோணல்மாணலாய் எழுதப்பட்ட அந்த வீட்டுக்கு முன்பாய் போய் நின்றார்கள். சர்வேசன் காம்பெளண்ட் கேட்டைத் தள்ள அது "றீச்" என்ற சத்தத்தோடு பின்னால் போன விநாடி பக்கவாட்டு ஜன்னலில் ஒரு பெண்ணின் கருத்த முகம் எட்டிப் பார்த்தது. கேட்டது.

" யாரு .......? "

சந்திரசூடன் குரல் கொடுத்தார்.

" நான் பெஞ்சமின்.... இது லூர்துசாமியோட வீடுதானே .......? "

" ஆமா.... உள்ளே வாங்க " சொன்ன அந்தப் பெண் வேகவேகமாய் வந்து கதவைத் திறந்தாள். முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. இருவரும் உள்ளே நுழைந்து முன்னறையில் அவள் எடுத்துப்போட்ட நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.

சர்வேசன் கேட்டார்.

" புஷ்பாங்கிறது .......? "

" நான்தான்...... லூர்துசாமியோட மூணாவது சம்சாரம்.... உங்க ரெண்டு பேர்ல என்கூட போன்ல பேசின பெஞ்சமின் யாரு .......? "

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு பேசாமல் மெளனம் காக்க, அந்த புஷ்பா சற்றே கோபம் தெறிக்கும் குரலில் கேட்டாள்.

" என்ன பேசாமே இருக்கீங்க...... உங்க ரெண்டு பேர்ல யாரு பெஞ்சமின்...? "

சந்திரசூடன் அந்த புஷ்பாவை ஒரு சிறு சிரிப்போடு பார்த்துக்கொண்டே சொன்னார்.
" எங்க ரெண்டு பேர்ல யாருமே பெஞ்சமின் கிடையாது. நான் சந்திரசூடன். இவர் சர்வேசன். ரெண்டு பேரும் போலீஸ் டிபார்ட்மெண்ட்........ "

புஷ்பாவின் கண்களில் கலவரம் பரவ, அவளுடைய கருப்பு முகம் இன்னொரு கோட்டிங் அடித்துக்கொண்டாற்போல் மேலும் கருத்தது.

" போ.....போலீஸா........?" வாய் அவளையும் அறியாமல் திறந்து கொள்ள, சிதிலமான பல் வரிசை தெரிந்தது. நெற்றியும், முகமும் வியர்த்து வழிய எச்சிலை அவஸ்தையோடு விழுங்கிவிட்டு கேட்டாள்.

" எ...எ....எதுக்காக ஸார் வந்திருக்கீங்க.... நான் எந்தத் தப்பும் பண்ணலையே ........?"

" நீ தப்பு பண்ணினதாய் நாங்களும் சொல்லலையே..... ஒரு விசாரணைக்காகத்தான் இங்கே வந்திருக்கோம். நாங்க கேட்கிற கேள்விக்கு நீ உண்மையான பதிலைச் சொல்லணும்..... அந்த பதில் எங்களுக்கு கிடைச்சுட்டா உடனடியாய் போயிடுவோம் "

" கே.....கே......கேளுங்க ஸார் "

" உன்னோட கணவர் லூர்துசாமி இறந்து இப்போ எத்தனை மாசமாச்சு........?"

" மூணு மாசம் ஸார்..... "

" அவர்க்குப் பின்னாடி நீதான் அவர் பார்த்துட்டிருந்த மீன் பிடி தொழிலை நிர்வாகம் பண்ணிட்டிருக்கே இல்லையா ........?"

" ஆமா ஸார்........."

" உன்கிட்ட இப்போ எத்தனை பேர் வேலை பார்த்துட்டிருக்காங்க ........?"

" கிட்டத்தட்ட அம்பது பேர் "

" அதுல ஜெயராஜ் என்கிற பேர்ல யாராவது இருக்காங்களா ........?"

" அந்த பேர்ல ரெண்டு பேர் இருக்காங்க ஸார். நீங்க எந்த ஜெயராஜை கேட்கறீங்க?"
புஷ்பா சேலைத்தலைப்பால் தன் பின்னங்கழுத்தில் வழியும் வியர்வையை ஒற்றிக்கொண்டே கேட்டாள்.
சந்திரசூடன் சர்வேசனைப் பார்க்க, அவர் தன்னுடைய செல்போனின் வாட்ஸ் அப்புக்கு போய் ஜூம் செய்யப்பட்ட ஜெயராஜின் "க்ளோஸ் அப்" முகத்தைக் காட்டினார்.

புஷ்பா பார்த்துவிட்டு தயக்கமான பார்வையோடு " ஸார்.... இவன் ஜெயில் தண்டனையை அனுபவிச்சுட்டு வந்த மாஜி கைதிதானே .......? " என்றாள்.

" ஆமா..... அவனேதான்..... "

" அவன் இப்போ எங்கிட்ட வேலை பார்க்கலை ஸார் "

" அப்புறம் வேற எங்கே .......? "

" மும்பைக்கு போயிட்டான்..... மும்பை தாராவியில் பவானி சிங்ன்னு ஒரு எக்ஸ்போர்ட் வியாபாரிகிட்ட இருக்கான். என்னோட கணவர் லூர்துவும், பவானி சிங்கும் நல்ல ஃப்ரண்ட்ஸ் ஸார்.... போன வருஷத்துல ஒருநாள் பவானி சிங் மும்பையிலிருந்து சென்னை வந்தப்ப, ஜெயராஜ் ஹிந்தி, மராத்தி பாஷை நல்லா பேசறதைக் கேட்டுட்டு என்கிட்ட வேலைக்கு வந்துடறியான்னு கேட்டார். ஜெயராஜும் ரொம்பவும் இஷ்டப்பட்டதால நாங்க அவனை மும்பைக்கு அனுப்பிட்டோம் "

" இப்பவும் ஜெயராஜ் மும்பைலதான் இருக்கானா .......? "

" ஆமா ஸார் "

" நிச்சயமா தெரியுமா .......? "

" அங்கதான் இருப்பான்னு நினைக்கிறேன். என்ன விஷயம் ஸார்.... அந்த ஜெயராஜ் ஏதாவது தப்பு பண்ணிட்டானா .......? "

" அவன் ஒரு கொலை வழக்குல சம்பந்தப்பட்டிருக்கான். கொலை செய்யப்பட்ட பெண்ணோட உடம்பை டிஸ்போஸ் பண்ணும்போது எடுத்த போட்டோதான் இப்ப நீ பார்த்தது........ "

புஷ்பா உறைந்து போன பார்வையோடு சில விநாடிகள் அப்படியே நின்றாள். பிறகு மெல்ல முனகினாள்.

" நம்ப முடியலை ஸார் "

" எதனால நம்ப முடியலை.......? "

" அவன் ஜெயிலுக்குப் போனவன்தான் ஸார்... ஆனா இங்கே வந்து வேலைக்கு சேர்ந்த பிறகு ரொம்பவுமே மாறிட்டான். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. எல்லார்க்கும் வலிய வலியப் போய் உதவி பண்ணுவான். மாதச் சம்பளத்துல பாதியை பக்கத்துல இருக்கிற ஒரு அநாதை இல்லத்துக்கு கொண்டு போய் குடுத்துடுவான் "
" ஜெயராஜ் நல்லவன் மாதிரி நடிச்சிருக்கலாமே .......? "

" அப்படி தெரியலை ஸார்... ஒருத்தன் உண்மையிலேயே நல்லவனாய் இருக்கிறதுக்கும் நல்லவன் மாதிரி நடிக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதை சுலபமாய் கண்டுபிடிச்சுடலாம். ஜெயராஜ் உண்மையிலேயே திருந்திட்டான்னு நான் நம்பறேன் ஸார் "

" சரி.. மும்பை தாராவியில் இருக்கிற பவானி சிங்க்கு தமிழ் தெரியுமா ....? "

" தெரியும் ஸார் "

" போன் போட்டு குடு..... நான் பவானி சிங்கிட்டே பேசறேன் "

சந்திரசூடன் சொல்ல புஷ்பா தயக்கத்தோடு தலையாட்டிவிட்டு தன்னுடைய செல்போனை எடுத்து தொடர்பு கொள்ள இணைப்பு உடனே கிடைத்தது. ஸ்பீக்கரை "ஆன்" செய்துவிட்டு பேசினாள்.

" பவானி அண்ணே..... நான் புஷ்பா பேசறேன் "

மறுமுனையில் பவானி சிங் வாய்விட்டு சிரிப்பது கேட்டது.

"என்னம்மா திடீர் போன்..... லூர்துவோட மொத ரெண்டு பெண்டாட்டிகளும் சண்டைக்கு வந்து வாசல்ல நின்னுட்டு இருக்காங்களா .......? "

" அது இல்லேண்ணே..... இது வேற ஒரு பிரச்சினை "

" என்னான்னு சொல்லு "

" ஒரு விசாரணைக்காக போலீஸ் வந்து இருக்காங்க. உங்ககிட்ட பேசணுமாம் "

" எ....எ...என்னது...... போலீஸ் என்கிட்ட பேசணுமா.......? "

" ஆமா "

" விஷயம் என்னான்னு கேட்டியா.......? "

" ம்.... கேட்டேன். ஜெயராஜைப்பத்தி விசாரிக்கணுமாம் "

"....................."

மறுமுனையில் மெளனம்.

" அண்ணே..... நான் பேசறது கேக்குதா .......? "

புஷ்பா குரலை உயர்த்தி கேட்க, மறுமுனையில் நிசப்தம் நீடித்தது.

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 35) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X