For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன மேடம் பயப்படறீங்களா..? ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (39)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

இதிகாசன் ஒரு சின்ன தயக்கமான பார்வையோடு வாஹினியை ஏறிட்டபடி சொன்னார்

" மேடம்... அந்த டாக்டர்க்கு போன் பண்றதுக்கு முன்னால் ஒரு ஹம்பிள் கண்டிஷன் "

" என்ன .......? "

" அந்த டாக்டர் யார் என்கிற விஷயம் இப்போதைக்கு வெளியே யார்க்கும் தெரியக்கூடாது. முக்கியமா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற எந்த ஒரு அதிகாரிக்கும் தெரியக்கூடாது....."

" காரணத்தை தெரிஞ்சுக்கலாமா .......? "

" ரெண்டு காரணம் மேடம்...... முதல் காரணம் டாக்டரோட உயிர்க்கு ஆபத்து ஏற்படலாம். ரெண்டாவது காரணம் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த அந்த ஆறு மரணங்களுக்குப் பின்னால் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற சில அதிகாரிகள் உஷாராகி தப்பித்து விடலாம் "

" இதுக்கெல்லாம் ஆதாரம் ஏதாவது இருக்கா .......? "

" அந்த ஆதாரத்தை கண்டுபிடிக்கத்தான் நாம இப்ப களத்துல குதிச்சிருக்கோம்... "

" அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் சந்திரசூடன் அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸை மும்முரமாய் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டிருக்கார். அவர்கிட்ட கூட சொல்ல வேண்டாமா .......? "

" வேண்டாம் மேடம்..... "
" சந்திரசூடன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி "

" எனக்கும் தெரியும் மேடம்.... இருந்தாலும் இப்போதைக்கு டாக்டர் யார் என்கிற விபரம் அவர்க்கும் தெரிய வேண்டாம் "

வாஹினி சில விநாடிகள் யோசனையாய் இருந்துவிட்டு தலையாட்டினாள்.

" இட்ஸ் ஓ.கே......நோ ஆர்க்யூமெண்ட்.... அந்த டாக்டர் யார்ன்னு யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். நீங்க உடனே போன் பண்ணுங்க. நான் அவர்கிட்ட பேசணும்...."

" இப்ப பேசிடலாம் மேடம் " சொன்ன இதிகாசன் தன்னுடைய செல்போனை எடுத்து ஒரு எண்ணை தேடி எடுத்து தொடர்பு கொண்டான். ஸ்பீக்கரை ஆன் செய்ய, மறுமுனையில் ரிங் போவது தெளிவாய் கேட்டது.
பத்து விநாடிகளுக்கு பிறகு ஒரு ஆண் குரல் கேட்டது. " சொல்லுங்க...இதிகாசன் "

" டாக்டர்..... ஸ்மேஷ் பத்திரிக்கையோட ஆசிரியர் மேடம் வாஹினி அவங்க பத்திரிக்கையில் நியூஸ் போட சம்மதிச்சுட்டாங்க..... அவங்க இப்போ பக்கத்துல தான் இருக்காங்க. செல்போன் ஸ்பீக்கரை ஆன் பண்ணியிருக்கேன். ஹேவ் ஏ டாக் வித் ஹெர்"

அடுத்த விநாடியே செல்போனின் மறுமுனையிலிருந்து அந்தக் குரல் ஒலித்தது.

Flat number 144 adhira apartment episode 39

" வணக்கம் மேடம்..... உங்ககிட்ட பேசறதுல ரொம்பவும் மகிழ்ச்சி. டாக்டர்ன்னு சொன்னதுமே மருத்துவம் சம்பந்தப்பட்ட டாக்டர்ன்னு என்னை நினைச்சுட வேண்டாம். நான் ஒரு பி.எச்.டி ஹோல்டர். டாக்டர் ஆஃப் பிலாஸபி. அனிமல் ஸ்லாட்டர் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துகிட்டு நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கேன்....."

வாஹினி இடைமறித்துக் கேட்டாள்.

" அந்த "ஜெல்பால் ப்ளாஸ்டர்" லெட்டரை எழுதினது நீங்கதானா .......? "

" ஆமா...... "

" அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த ஆறு மரணங்களுக்கும் "ஜெல்பால் ப்ளாஸ்டர்" என்கிற வார்த்தைக்கும் என்ன சம்பந்தம் .......? "

" அதைப்பத்தி போன்ல சொல்ல முடியாது மேடம். நேர்லதான் பேசணும். நீங்க ஒரு வீடியோவையும் பார்க்க வேண்டியிருக்கும் "

" வீடியோவா .......? "

" எஸ் மேடம்......அதைப் பார்த்தாத்தான் ஜெல்பால் ப்ளாஸ்டர்ன்னா என்னான்னு உங்களுக்கு புரியும் "

" எப்ப பார்க்கலாம்.......? "

" இப்பவே இதிகாசனோடு புறப்பட்டு வாங்க. மதுராந்தகத்துக்குப் பக்கத்துலதான் எனக்கு வீடு... ஒரு மணி நேரத்துக்குள்ளே நீங்க வந்து பார்த்துட்டு போயிடலாம் "

வாஹினி பதில் பேசாமலே மெளனிக்க மறுமுனையில் டாக்டர் சிரித்தார்.

" என்ன மேடம் பயப்படறீங்களா .......? "

" பயமில்லை...... இதிகாசனை இன்னிக்குத்தான் முதல் தடவையாய் பார்க்கிறேன்... உங்களைபத்தியும் இன்னிக்குத்தான் கேள்விப்படறேன். அதனால ஒரு சின்ன தயக்கம்...... "

செல்போனின் மறுமுனையில் டாக்டர் சிரித்தார்.

" மேடம்..... உங்களோட தயக்கம் நியாயமானதுதான். உங்க நிலைமையில் நான் இருந்தாலும் இப்படித்தான் யோசிப்பேன். ஆனா சில விஷயங்களில் நாம துணிச்சலான முடிவுகளை எடுக்கணும்ன்னா தயக்கத்தை உதறணும். அதிரா அப்பார்ட்மெண்ட்டின் அசாதாரண மரணங்களைப்பற்றி, அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் சந்திரசூடன் கடந்த ரெண்டு வார காலமாய் இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டிருக்கார்... ஆனா அவரால அந்த கேஸ்ல ஒரு அங்குலம் கூட முன்னேற முடியலை. அதுவுமில்லாமே லட்சணா என்கிற ஒரு பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காரில் அடைக்கப்பட்ட கேஸூக்குத்தான் அவர் அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுத்து மூவ் பண்ணிட்டிருக்கார்... இப்படிப்பட்ட நிலைமையில் ஸ்மேஷ் பத்திரிக்கையில் அந்த ஆறு மரணங்களைப்பற்றிய செய்தி வெளியானால்தான் எல்லாப் பக்கமும் அதிர்வலைகள் ஏற்பட்டு, அது மக்கள் மத்தியில் ஒரு பேசும் விஷயமாய் மாறும் என்பது, என்னோட நம்பிக்கை...... இதுக்கு உங்களோட ஒத்துழைப்பும் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.... மனிதனோட உணவுத் தேவைக்காக பிராணிகள் கொல்லப்படுவதையே பொறுத்துக் கொள்ள முடியாத எனக்கு, இந்த அநியாய மனித மரணங்களை நினைச்சா ஒரு தார்மீக கோபம் வர்றதை என்னால் தவிர்க்க முடியலை..... நீங்க என்னையும் இதிகாசனையும் தாராளமாய் நம்பலாம். அப்படி உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லாத பட்சத்தில்..... "

மறுமுனையில் டாக்டர் பேசப்பேச வாஹினி இடைமறித்து அவசரக்குரலில் சொன்னாள்.

" டாக்டர்..... நானும், இதிகாசனும் உடனே கிளம்பறோம் "

" தட்ஸ் குட்.... அயாம் வெயிட்டிங் மேடம்..... "

******

சந்திரசூடனும், சர்வேசனும் சிரமப்பட்டு ஒரு மணி நேரத்தைக் கரைத்த பின்பே மும்பையிலிருந்து செல்போன் அழைப்பு வந்தது. குரலில் சற்றே பதட்டம் தெரிந்தது.

" ஸார்.... நான் மாதுங்கா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வால்சந்த் பேசுகிறேன் "

சந்திரசூடன் கேட்டார். " ஆர்த்தோ ஹாஸ்பிடல் போய் சேர்ந்து விட்டீர்களா .......? "

" இப்போது அங்கேதான் இருக்கிறேன் "

" ஜெயராஜைப் பார்த்து பேசினீர்களா .......? "

" ஸாரி ஸார்... பேச முடியவில்லை.... அங்கே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து விட்டது "

" வாட் ஹேப்பண்ட் .......? "

" ஹாஸ்பிடல்ல ஜெயராஜ் அட்மிட் செய்யப்பட்டிருந்த அறைக்குள் நான் சென்று பார்த்தபோது அவன் அறையில் இல்லை ஸார்... விசாரித்துப் பார்த்ததில் அவனை ஆப்ரேஷன் தியேட்டர்க்கு கொண்டு போயிருப்பதாக சொன்னார்கள் "

" ஆப்ரேஷன் தியேட்டர்க்கா..... எதற்கு .......? "

" ஒரு அவசர ஆப்ரேஷன்..... நான் ஜெயராஜை விசாரித்துவிட்டுப் போன சற்று நேரத்தில் அவன் படுக்கையினின்றும் எழுந்து உட்கார முயற்சி செய்திருக்கிறான். அப்போது ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாய், கட்டிலிலிருந்து நழுவி கீழே விழுந்ததில் காலில் கட்டுப் போட்ட இடத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. மயக்க நிலையில் ஜெயராஜ் ஆப்ரேஷன் தியேட்டரில் இருப்பதாகவும், அங்கே சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாகவும் ட்யூட்டியில் இருக்கும் டாக்டர்களில் ஒருவர் சொன்னார் "

சந்திரசூடன் நெற்றியைப் பிடித்துக்கொண்டு பெருமூச்சுவிட்டார்.

" மைகுட்னஸ்..... ஜெயராஜூக்கு சிகிச்சை முடிய எவ்வளவு நேரமாகும் என்று கேட்டீர்களா .......? "

" கேட்டேன் ஸார்..... கேட்டதற்கு எப்படியும் ஒரு மணி நேரமாகிவிடுமென்று அந்த டாக்டர் சொன்னார். ஜெயராஜ் ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வரும் வரைக்கும் காத்திருந்து அவன் பேசும் நிலைமையில் இருந்தால் உங்களோடு அவனை பேச வைக்கிறேன் ஸார் "

" மிஸ்டர் வால்சந்த்.... " சந்திரசூடன் குரலைத் தாழ்த்தினார்.

" ஸார்.... "

" உங்களுக்கு பக்கத்தில் நர்ஸ், டாக்டர் யாராவது இருக்கிறார்களா .......? "

" இல்லை "

" ஒ.கே. நான் இப்போது சொல்லப்போவதை கவனமாய்க் கேளுங்கள் "

" சொல்லுங்கள் ஸார் "

" ஜெயராஜ் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக டாக்டர்களில் ஒருவர் சொன்னதாக குறிப்பிட்டீர்கள்.... அல்லவா .......? "

" ஆமாம்..... "

" அந்த செய்தி உண்மையா என்பதா உறுதி செய்துக்கொள்ளுங்கள் "

" ஏன் ஸார்.... அதில உங்களுக்கு என்ன சந்தேகம் .......? "

" சென்னையில் ஜெயராஜைப்பற்றி நான் கேள்விப்படுகிற விஷயங்கள் சரியில்லை...... அவனிடம் ஏதோ ஒரு தப்பு இருக்கிறது "

" யூ டோண்ட் வொர்ரி ஸார்..... நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன்..... ஜெயராஜ் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வரும் வரைக்கும் நான் காத்திருந்து, அவன் சுயநினைவோடு இருந்தால் உங்களோடு பேச வைக்கிறேன்.... ஹாஸ்பிடலின் சூழ்நிலையையும் கண்காணிக்கிறேன் "

" தேங்க் யூ ஸோ மச் ஃபார் யுவர் கோவாப்ரேஷன் வெயிட்டிங் ஃபார் யுவர் கால் மிஸ்டர் வால்சந்த்.... "

*******

காரை ஒட்டிக்கொண்டிருந்த வாஹினி தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இதிகாசனிடம் கேட்டாள்.

" மதுராந்தகம் ஏரியாவுக்கு வந்துட்டோம். இப்பவாவது டாக்டரோட வீடு எந்த லொகேஷன்ல இருக்குன்னு சொல்லக்கூடாதா .......? "

" நேரா போங்க மேடம்..... ஒரு கிலோமீட்டர் தூரம் போனதும் ஸ்வர்ணா ரெஸிடென்ஸி ஹோட்டல் வரும். ஹோட்டலை க்ராஸ் பண்ணினதுமே லெஃப்டல ஒரு ரோடு பிரியும். அதுல போனா நல்வாழ்வு நகர் என்கிற பேர்ல ஒரு காலனி தெரியும். அங்கே எல்லா வீடுகளும் ஒரேமாதிரியான எலிவேஷன்ல இருக்கும். ஒவ்வொரு தெருவுக்கும் தேசத்தலைவர்களோட பேர். நாம சந்திக்கப்போகிற டாக்டர் இருக்கிற தெருவுக்கு பேர் ராஜேந்திர பிரசாத்......... "

வாஹினி காரின் வேகத்தை சற்றே அதிகரித்தபடி சொன்னாள். "இந்த மதுராந்தகம் ஏரியாவில் நல்வாழ்வு நகர் என்கிற பேர்ல ஒரு காலனி இருக்கிறது இன்னிக்குத்தான் தெரியும் "

" உள்ளே போனா இன்னும் நிறைய நகர்கள் இருக்கு மேடம்..... நால்வர் நகர், ஹேப்பி கார்டன், ரூபி அவென்யூ, பாண்டவாஸ் குடியிருப்பு....இப்படி சொல்லிகிட்டே போலாம் "

வாஹினி சில விநாடி மெளனத்திற்கு பிறகு சன்னமான குரலில் " இதிகாசன்..... " என்றாள்.

" சொல்லுங்க மேடம்..... "

" எனக்கு முன்பின் தெரியாத ஒரு பி.ஹெச்.டி. டாக்டரைப் பார்த்து பேச, உங்களை நம்பி வர்றேன். ஏதாவது பிரச்சினை வந்துடாதே..... "

இதிகாசன் மெல்ல சிரித்தார்.

" மேடம்..... பிரச்சினைகளுக்கு விடை தேடத்தான் நாம டாக்டரைப் பார்க்கப் போறோம்.... ஒரு பிரபலமான பத்திரிக்கைக்கு எடிட்டர் நீங்க. படிக்காத ஒரு கிராமத்துப் பொண்ணு கூட தைரியமாயிருக்கிற இந்த காலத்துல நீங்க பயப்படலாமா .......? "

" இது பயமில்லை.... ஏ லிட்டில் ஹெஸிடேஷன் "

" உங்களுக்கு அப்படிப்பட்ட தயக்கம் இருந்தா காரை லெஃப்ட்ல ரோட்டோரமாய் நிறுத்துங்க மேடம்.... நான் இறங்கிக்கறேன். நீங்க உங்க ஆபீஸீக்குப் போயிடுங்க.... நான் என்னோட வேலையைப் பார்க்கப்போறேன் "

" ஸாரி இதிகாசன்" என்று சொன்ன வாஹினி காரின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.

" நாம டாக்டரைப் பார்க்கப் போறோம் "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 39) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X