For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“ யார் இந்தப் பெண்....? “ ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (40)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

வாஹினி வேகமாய் காரை செலுத்த, அடுத்த சில நிமிஷங்களில் நல்வாழ்வு நகர் சிவப்பாய்ப் பூத்திருந்த மேஃப்ளவர் மரங்களோடு பார்வைக்குக் கிடைத்தது.

சுத்தமான சாலைகள் சீரான இடைவெளியில் பிரிந்திருக்க, ஒவ்வொரு சாலையின் ஆரம்பத்திலும் தேசத்தலைவர்களின் பெயர்கள் நீல வண்ணப் பெயர்ப் பலகையில் ஃப்ளோரஸண்ட் எழுத்துகளில் மின்னியது. பாரதியார் தெரு, திலகர் தெரு, வ.உ.சி. தெரு, வல்லபாய் படேல் தெரு, ஜவஹர்லால் தெரு என்று வரிசையாய் பெயர்கள் தட்டுபட இதிகாசன் சொன்னார்.

" மேடம்... லெஃப்ட்ல கட் பண்ணிக்குங்க. அதுதான் ராஜேந்திர பிரசாத் ரோடு "

கார் திரும்பியது.

" வலது பக்கம் ஆறாவது வீடு...... கொஞ்சம் உயரமான காம்பெளண்ட் சுவரோடு தெரியுதே அந்த வீடுதான்....... "

இதிகாசன் சொன்ன அந்த வீட்டுக்கு முன்பாய் சற்றே ஒதுக்கி காரை நிறுத்தினாள் வாஹினி. அந்த பகல் நேரத்திலேயே தெரு ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறுமையைப் பூசிக்கொண்டிருக்க, பக்கத்து வீட்டு டி.வி.யில் இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்துக் கொண்டிருப்பதற்கு, அடையாளமாய் ஆரவாரம் எழுந்தது. "இந்தியா டிபிட்டட் பாகிஸ்தான் பை செவன் விக்கெட்ஸ்" என்று வர்ணனையாளர் உச்ச ஸ்தாயில் கத்துவதும் கேட்டது.
வாஹினியும், இதிகாசனும் காரைவிட்டு இறங்கி காம்பெளண்ட் கேட்டைத் திறந்து கொண்டு, உள்ளே போக, போர்டிகோ பில்லரில் கட்டிப் போடப்பட்டிருந்த அந்த கறுப்பு நிற நாய், காதுகளை உயர்த்திக்கொண்டு உறுமியது.
இதிகாசன் அதட்டலாய் குரல் கொடுத்தார்.

" டேய்.... ப்ளாக்கி நான்தான்டா....... "

இதிகாசனை புரிந்துகொண்ட ப்ளாக்கி வாயைச் சாத்திக்கொண்டு வாலை ஆட்டியது.

இதிகாசன் க்ரானைட் வாசற்படி ஏறி காலிங் பெல்லின் மேல் கையை வைப்பதற்கு முன்னால், வாசல் கதவின் தாழ்ப்பாள் விலகியது.

Flat number 144 adhira apartment episode 40

அந்தப் பெண் தெரிந்தாள். அவ்வளவு அழகாக இல்லை. சற்றே பெரிய நெற்றியோடு மாநிறம், நாற்பது வயது இருக்கலாம். உடுத்தியிருந்த சிவப்பு நிற சல்வார் கம்மீஸில் சூரியகாந்திப் பூக்கள் சிரித்தன. வாஹினியை ஒரு புன்சிரிப்போடு பார்த்து கை குவித்தாள்.

" வெல்கம் மேடம்..... ப்ளீஸ் கெட் இன்..... டாக்டரை பார்க்க வந்தீங்களா.......? "

வாஹினி "ஆமாம்" என்பது போல் தலையசைத்தாள்.

"உள்ளே வந்த உட்கார்ங்க..... ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுவார்..." சொல்லிவிட்டு அந்தப் பெண் உள்ளே போய்விட, வாஹினியும், இதிகாசனும் அந்தச் சிறிய ஹாலில் போடப்பட்டு இருந்த, சோபாவில் போய் உட்கார்ந்தார்கள். வாஹினி குரலைத் தாழ்த்தினாள்.

" இதிகாசன் "

" மேடம் "

" யார் இந்தப் பெண் .......? "

இதிகாசன் பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்க, வாஹினி வியப்பாய் அவரைப் பார்த்தாள்.

" நான் உங்ககிட்டதான் பேசிட்டிருக்கேன்...... அந்தப் பெண் யார்ன்னு கேட்டேன் "

" கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும் மேடம் "

" என்னது... எனக்கே புரியுமா .......? " வாஹினி திகைத்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள். கையில் ஒரு அதிநவீன லேப்டாப் சில்வர் உடம்போடு மின்னியது.

வாஹினிக்கு எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தவள் லேப்டாப்பை டீபாயின் மீது வைத்துவிட்டு சொன்னாள்.

" ஸாரி மேடம் "

" எதுக்கு ஸாரி .......? "

" பொய் சொன்னதுக்காக ...... நீங்க பார்க்க வந்த டாக்டரே நான்தான் "

வாஹினி அதிர்ச்சியில் சோபாவின் நுனிக்கு நகர்ந்தாள். " நீ.... நீங்களா .......? "

அவளுடைய உதடுகளில் புன்னகை பரவியிருக்க மெல்லிய குரலில் சொன்னாள்.

" நானேதான் நோ டவுட் "

" ஒரு மணி நேரத்துக்கு முன்னால்... என் கூட போன்ல பேசினது யாரு.......? "

" தட்ஸ் மீ மேடம்.... அயாம் குந்தவை..... "

" போன்ல பேசினது ஆண் குரலாய் இருந்ததே.......? "

" என்னோட செல்போனில் இருந்த வாய்ஸ் சேஞ்சர் ஏப்பை யூஸ் பண்ணி பேசினேன். அந்த ஏப் மூலமா ஃபிமேல் வாய்ஸை மேல் வாய்ஸாய் மாற்றி பேச முடியும் மேடம் "

" எ....எ....எதுக்காக இப்படி .......? "

ஆச்சர்யத்தோடு திணறும் குரலில் வாஹினி கேட்க, இதிகாசன் இடைமறித்து ஒரு சிரிப்போடு சொன்னார். " ஒரு முன்னெச்சரிக்கைதான் மேடம் "

" முன்னெச்சரிக்கையா .......? "

" எஸ்..... மேடம்..... உங்களுக்கு அந்த ஜெல்பால் ப்ளாஸ்டர் விஷயத்தில் நம்பிக்கை ஏற்பட்டு, இந்த வீட்டு வாசற்படி ஏறும்வரை, தன்னை யார்ன்னு வெளிப்படுத்திக்க குந்தவை விரும்லை...... இதை நீங்க தப்பாய் எடுத்துக்க வேண்டாம் "

வாஹினி வியப்பில் சில விநாடிகளை கரைத்துவிட்டு குந்தவையை ஏறிட்டாள்.

" முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டியதுதான்..... ஆனா நீங்க ரொம்பவும் பயப்படறீங்கன்னு நினைக்கிறேன் "
" பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்பட்டுத்தான் ஆகணும்.... கான்ஃபிடன்ஸ் இருக்கலாம் மேடம்.... ஆனா ஒவர் கான்ஃபிடன்ஸ் இருக்கக்கூடாது... நான் உங்களுக்கு அனினாமஸ் லெட்டர் எழுதினதுக்கு காரணமே எதிரிகள் மிக மிக பலம் படைத்தவர்களாய் இருக்காங்கிற ஒரே ஒரு விஷயம்தான். நம்ம மண்டையோடு உறுதியானதுதான். அதுக்காக அதை பாறை மேல மோத வெச்சு அதனோட உறுதியை பரிசோதிக்க முடியுமா என்ன .......? "

வாஹினியின் உதடுகள் முதல் தடவையாய் ஒரு புன்சிரிப்பால் விரிந்தது.

" நல்ல உதாரணம்.... இட்ஸ் ஒ.கே.... இப்ப விஷயத்துக்கு வருவோம்... அது என்ன ஜெல்பால் ப்ளாஸ்டர்.......? "

" சொல்றேன் மேடம்... அதுக்கு முன்னாடி என்னை பற்றின ஒரு அறிமுகத்தை, உங்களோடு ஷேர் பண்ணிக்க விரும்பறேன். என்னோட முழுப்பேர் செந்தமிழ் குந்தவை. அப்பா, அம்மா ரெண்டு பேரும் தமிழாசிரியர்களாய் இருந்ததினால எனக்கு இந்த பேர் கிடைச்சது. ஐ லவ் மை நேம். பேரண்ட்ஸ் ரெண்டு பேருமே இப்ப உயிரோடு இல்லை. எனக்கு கல்யாணமாகி இருபது வயசுல ஒரு மகன் இருக்கான். சிங்கப்பூர்ல ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் எடுத்து படிச்சிட்டிருக்கான். மூணு மாசத்துக்கு ஒரு தடவை சென்னை வந்து ஒரு வாரம் தங்கியிருப்பான் "

" உங்க ஹஸ்பெண்ட் .......? "

" அடுத்ததாய் அவரைப்பத்தித்தான் சொல்ல வந்தேன். என் கணவரோட பேர் தாமரைச்செல்வன். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாடிக்ஸ் டிபார்ட்மெண்ட்டில் ஹெச்.ஒ.டி.யாய் இருக்கார். அஞ்சு வருஷத்துக்கு முந்தி, அவர்க்கும் எனக்கும் ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டு, கோர்ட்டுக்கு போய் லீகலாய் டைவர்ஸ் வாங்கிட்டோம்.... அதுக்கப்புறம் அந்த வேதனையை எல்லாம் மறக்கிறதுக்காக ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டை எடுத்து பி.ஹெச்.டி. பண்ணலாம்ன்னு நினைச்சு, HSACயில் ஒரு ஃப்ரண்ட்டை போய்ப் பார்த்தேன். அந்த ஃப்ரண்ட் கொடுத்த ஒரு புரஜெக்ட்டை வெச்சுத்தான் பி.ஹெச்.டி.யில் டாக்டர் பட்டம் வாங்கினேன்.........." குந்தவை பேசப்பேசவே.......

வாஹினி குறுக்கிட்டு "ஒரு நிமிஷம்" என்றாள்.

" எஸ் "

" ஏதோ HSACன்னு சொன்னீங்க. அது என்னான்னு தெரிஞ்சுக்கலாமா .......? "

"ஹெல்த் சயின்ஸ் அட்வைஸரி கமிட்டி (HEALTH SCIENCE ADVISORY COMMITTEE) மேடம்"

" ஒ நான் இன்னிக்குத்தான் இதைப்பத்தி கேள்விப்படறேன். பி.ஹெச்.டி.யில் டாக்டரேட் பட்டம் வாங்க எதுமாதிரியான சப்ஜெக்ட்டை செலக்ட் பண்ணீங்க .......? "

" அனிமல் வெல்ஃபேர் அண்ட் ப்ரொடக்சன் "

" அது எது மாதிரியான ரிசர்ச் .......? "

" இந்த உலகத்தில் உள்ள எல்லா விலங்கினங்களின் நலன்களும் பாதுகாக்கப்படணும்ங்கிறதுதான், என்னோட ஆராய்ச்சியின் நோக்கம். அதுல முக்கியமானது " அனிமல் ஸ்லாட்டரிங் " இந்த " அனிமல் ஸ்லாட்டரிங் " என்கிற வார்த்தை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் "

" ம்.... தெரியும்...... இறைச்சிக்காக ஆடுமாடுகளை கொல்றதைத்தான் "அனிமல் ஸ்லாட்டரிங் "ன்னு சொல்லுவாங்க "

" அந்த ஸ்லாட்டரிங் எவ்வளவு கொடூரமான முறையில் செய்யப்படுதுன்னு உங்களுக்கு தெரியுமா மேடம்.......? "

" ஸாரி.... அது சம்பந்தப்பட்ட காட்சிகளை நான் பார்த்ததில்லை "

" நான் பார்த்திருக்கேன் மேடம்.... மனிதனோட உணவு பட்டியலில் விலங்குகளோட இறைச்சிக்கு ஒரு முக்கியமான இடம் இருக்குங்கிறதை நான் மறுக்கலை. ஆனா அந்த விலங்குகள் கொல்லப்படும் முறைதான் பார்க்கிற யாரையும் பதைபதைய வைக்கும்.... அந்த கொடூரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் நான் " அனிமல் ஸ்லாட்டரிங் " என்கிற சப்ஜெக்ட்டை என்னோட பி.ஹெச்.டி. ஆராய்ச்சிக்காக எடுத்தேன்..... அதுல டாக்டரேட் பட்டத்தையும் வாங்கிட்டேன் "

வாஹினி தலையசைத்தாள்.

" இட்ஸ் ஒகே குந்தவை...... இப்ப எனக்கு இருக்கிற ஒரு சந்தேகத்தை உங்ககிட்ட கேட்கலாமா .......? "

" ப்ளீஸ்............... "

" நீங்க ஆய்வுக்கு பண்ணி டாக்டரேட் பட்டம் வாங்கின " அனிமல் ஸ்லாட்டரிங் "சப்ஜெக்ட்டுக்கும், "ஜெல்பால் ப்ளாஸ்டர்" என்கிற வார்த்தைக்கும், அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த அந்த ஆறு அசாதாரண மரணங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா .......? "

" நிச்சயமா இருக்கு மேடம் " என்றாள் குந்தவை இறுகிப்போன முகத்தோடு.

******

சந்திரசூடனும், சர்வேசனும் இரண்டாவது தடவை டீ வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மும்பையிலிருந்து மாதுங்கா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வால்சந்த் செல்போனில் கூப்பிட்டார்.

" ஸார்..ஜெயராஜூக்கு ஒரு மைனர் சர்ஜரி நடந்து முடிந்தது. சற்று முன்புதான், அவனை ஆப்ரேஷன்
தியேட்டரிலிருந்து அறைக்குக் கொண்டு வந்தார்கள். அனஸ்தீஷியா கொடுத்து இருப்பதால் அவனுக்கு மயக்கம் தெளிய இன்னமும் இரண்டு மணி நேரமாகும் என்று டாக்டர் சொன்னார். மேற்க்கொண்டு நான் என்ன வேண்டுமென்று சொல்லுங்கள் ஸார்"

" மிஸ்டர் வால்சந்த்..... ஜெயராஜ் சர்ச் வாலண்டியராய் மாதுங்காவில் இருக்கும் அந்தோணியார் சர்ச்சில்தானே வேலை பார்த்துக்கொண்டிருந்தான் .......? "

" ஆமாம் ஸார் "

" அந்த சர்ச்சின் பாதர் யாரென்று உங்களுக்கு தெரியுமா .......? "

" தெரியும் ஸார். அவருடைய பெயர் ஞானகடாட்சம். இரண்டு வருடங்களுக்கு முன்பு மாதுங்கா ஏரியாவில் சிறிய அளவில் மதக்கலவரம் நடந்தபோது, மத நல்லிணக்க கூட்டம் ஒன்றை நடத்தினேன். அப்போது அவரை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அண்மையில் கூட அந்த சர்ச்சின் குருத்தோலை ஃபங்க்சன் நடந்தபோது, கூட்டம் அதிகமாக வரும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். ஏன் அவரிடம் நீங்கள் பேச விரும்புகிறீர்களா .......? "

" இல்லை..... நீங்கள் அந்த சர்ச்சுக்கு சென்று ஜெயராஜ் தங்கியிருந்த அவனுடைய அறையை பாதர் ஞானகடாட்சத்தின் அனுமதியோடு சோதனை போட வேண்டும். அப்படி சோதனை போட்டால் அங்கே ஏதாவது தடயம் கிடைக்கலாம் "

" யூ மே பி கரெக்ட் ஸார்..... அதற்கு முன் நான் உங்களிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் "
சந்திரசூடன் ஆர்வமானார்.

" என்ன .......? "

" நீங்கள் சொன்னபடியே படுக்கையிலிருந்து ஜெயராஜ் கீழே விழுந்த சம்பவம் குறித்து இங்கே ஹாஸ்பிடல் ஊழியர்களிடம் ஒரு விசாரணையை நடத்தினேன். அந்த விசாரணையில் தகவலொன்று கிடைத்தது ஸார். அதாவது நான் ஹாஸ்பிடலுக்கு வந்து ஜெயராஜிடம் விசாரித்துவிட்டு போனதும், அவன் சிறிது பதட்டமாகவே இருந்திருக்கிறான். அடுத்த சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் ஊழியர் ஒருவரிடம் இருந்து, செல்போன் வாங்கி யார்க்கோ போன் செய்து பேசியிருக்கிறான் "

" செல்போன் கொடுத்து உதவிய அந்த ஹாஸ்பிடல் ஊழியர் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்களா .......? "

" ஸாரி ஸார்.. கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆர்த்தோ ஹாஸ்பிடல் மிகப் பெரியது. டாக்டர்கள், நர்ஸ்கள், மற்ற பணியாளர்கள் என்று ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பணி செய்கிறார்கள். அது தவிர நோயாளிகளைப் பார்க்க வந்த விசிட்டர் கூட்டம் எல்லா வார்டுகளிலும் இருந்தது. ஹாஸ்பிடல் ஊழியர்களில் யாரும் தங்களுடைய செல்போனை ஜெயராஜூக்கு கொடுக்கவில்லையென்று சொல்கிறார்கள். அப்படியானால் வெளியிலிருந்து வந்த நபர்களில் யாரோ ஒருவர்தான் ஜெயராஜூக்கு செல்போனைக்கொடுத்து உதவியிருக்க வேண்டும். ஜெயராஜ் தப்பானவன் என்று நீங்கள் சொன்னதில் தப்பேயில்லை ஸார்"

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 40) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X