• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ என்ன சொல்றே ஜெயராஜ்...?? ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (48)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சந்திரசூடனை ஆச்சர்யம் அடித்துப் போட்டது.

செல்போனில் குரலை உயர்த்தினார்.

Flat number 144 adhira apartment episode 48

" என்ன சொல்றே ஜெயராஜ்..... உன்னோட தம்பி இனிகோ பேர்ல எந்தத் தப்பும் இல்லைன்னு நிரூபிக்க ஆதாரத்தை நீ தரப் போறியா ....... ? "

"ஆமா ஸார்..... "

" என்ன ஆதாரம்....... ? "

" ஸார்... நான் பல குற்றங்களை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன்தான். பண மோசடி, நில மோசடி, அடிதடி, கட்ட பஞ்சாயத்து இப்படி சட்ட விரோதமான காரியங்களைப் பண்ணியிருந்தாலும், யாரையும் நான் கொலை பண்ணினது இல்லை. ஆனா கூலிப்படை ஆட்கள் சில பேரோடு எனக்கு மறைமுகமான தொடர்பு இருந்தது. அதுல ஒருத்தன்தான் சூளைமேடு உதயா. பணத்துக்காக கொலை செய்யற கூலிப்படையோட முக்கியமான மூளையே இந்த சூளைமேடு உதயாதான். நான் ஜெயிலிருநது விடுதலையாகி, வெளியே வந்த அடுத்த வாரமே உதயா என்னை வீட்ல வந்து பார்த்தான். வண்டலூர்க்கு பக்கத்தில் இருக்கிற ரெண்டு கிரவுண்டு நிலத்தை அபகரிக்கிறதுக்காக போலி பத்திரம் ஒண்ணை தயார் பண்ணிக் குடுக்க முடியுமான்னு கேட்டான். நான் மாட்டேன்னு சொன்னதோடு மட்டுமில்லாமே நீ இனிமே என்னைப் பார்க்க வராதே, இந்த திருட்டு வேலையெல்லாம் விட்டுட்டு நான் ஒரு புது மனுசனா வாழப்போறேன்னு சொன்னேன். அவன் சிரிச்சான். என்னை கிண்டலடிச்சுப் பேசினான். அப்படி பேசிட்டு இருக்கும்போதே அவனுக்கு ஒரு போன் கால் வந்தது. மறுமுனையில் பேசினது யார்ன்னு எனக்குத் தெரியலை. ஆனா உதயா அந்த நபர்கிட்ட பேசினதைக் கேட்டு அதிர்ந்து போயிட்டேன் "

" அப்படி அவன் என்ன பேசினான்....... ? "

" உதயா அந்த நபர்கிட்ட பேசும்போது என்ன ஸார்... நேத்து நாம பேசின மேட்டர்தானே...? முடிச்சிடுவோம்... அது ஒரு பொண்ணா இருக்கிறதால மனசுக்கு கொஞ்சம் நெருடலாயிருக்கு. ஆனா அவ ஒரு பத்திரிக்கைக்காரின்னு சொல்றீங்க... அதனால உங்களுக்கு ஆபத்துன்னா மூச்சை நிறுத்திட வேண்டியதுதான். பொண்ணோட போட்டோ, பேர், அட்ரஸை எல்லாத்தையும் எனக்கு அனுப்பி வையுங்க.. அவளோட மூவ்மெண்ட்ஸை நோட் பண்ணி ஒரு கெட்ட நாளாப் பார்த்து போட்டுத் தள்ளிடுவோம்... அப்புறம் இன்னொரு விஷயம் ஸார்.. பழைய ரேட்டெல்லாம் கட்டுபடியாகாது. போலீஸையும் கவனிக்க வேண்டியிருக்கு. அதுவுமில்லாமே நம்மகிட்ட வேலை பார்த்த பசங்களெல்லாம் இப்ப குண்டாஸ் சட்டத்துல அரெஸ்டாகி ஜெயில்ல இருக்காங்க.... வெளி மாவட்டத்திலிருந்துதான் ஆட்களைக் கூட்டிட்டு வந்து நீங்க சொன்ன வேலையை முடிச்சாகணும். ரேட் எவ்வளவுன்னு இன்னிக்கு ராத்திரி சொல்றேன். இப்ப நான் வெளியே ஒரு முக்கியமான வேலையா வந்திருக்கேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் ஸார் "

சந்திரசூடன் சில விநாடிகள் நிசப்தம் காத்துவிட்டு ஒரு சந்தேகத் தொனியோடு பேச ஆரம்பித்தார்.

" ஜெயராஜ்..... நீ சொல்றது நம்பும்படியாய் இல்லையே....? "

" ஏன் ஸார்.... "

" சூளைமேடு உதயா நீ பக்கத்தில் இருக்கும்போதே இப்படியெல்லாம் பகிரங்கமா பேசுவானா..... அதுவும் தான் பண்ணப்போகிற ஒரு கொலையைப்பத்தி....... ? "

" ஸார்... உதயாவைப்பத்தி உங்களுக்கு சரியாத் தெரியலை.... அவன் யார்க்காகவும், எதுக்காகவும் பயப்படமாட்டான்... எதையுமே வெளிப்படையாய் பேசறது மூலமாகவே, எதிராளிகளை பயமுறுத்துவான்.... போலீஸ் டிபார்ட்மெண்ட்ல அவனுக்கு சில பேரைத் தெரியும். அந்த தைரியம்தான் அவனுக்கு.. "

" உதயாவுக்கு உதவி செய்யற போலீஸ் அதிகாரிகள் யார் யார்ன்னு உனக்குத் தெரியுமா....... ? "

" தெரியாது ஸார் "

" பயந்துட்டு பொய் சொல்லாதே... இது ஆஃப் த ரிக்கார்டாய் இருக்கும் "

" சத்தியமா எனக்குத் தெரியாது ஸார்... உதயா ஒரு கூலிப்படை தலைவன் என்கிற விஷயம் எனக்குத் தெரிஞ்ச நாளிலிருந்தே, நான் அவனை விட்டு விலகி வந்துட்டேன். யாராவது ஒருத்தரோட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் போது மட்டும் போலிபத்திரம் தயார் பண்ண அவனோட ஆளை அனுப்புவான். இல்லேன்னா அவனே வருவான்... நான் இப்ப சொல்லிட்டிருக்கிறதெல்லாம் உண்மை ஸார். நான் பொய் பேசறதைவிட்டு ரொம்ப நாளாச்சு... என்னோட தம்பி இனிகோ செல்வராஜூக்கும் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த டெட்பாடி டிஸ்போஸ் சம்பவத்துக்கும் ஒரு சதவீதம் கூட சம்பந்தம் இருக்காது ஸார்... நீங்க அந்த உதயாவை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்து விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சா உங்களுக்கு உண்மை தெரியும்.... ஆனா நான்தான் இதையெல்லாம் உங்ககிட்ட சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லிடாதீங்க ஸார் "

" இந்தப் பிரச்சினையை எப்படி டீல் பண்றதுன்னு எனக்குத் தெரியும்.... நாளைக்குக் காலையில் உன்னோட தம்பி இனிகோவும், அவனோட மனைவி சுவாதியும் என்னைப் பார்க்க வர்றாங்க... உன்னோட பார்வைக்கு உன் தம்பி நிரபராதியாய் இருக்கலாம். ஆனா என்னோட பார்வையில் இவன் இன்னமும் குற்றவாளிதான் "

சொன்ன சந்திரசூடன் தனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ராவ்டே பிந்தரையும், திருமூர்த்தியையும் சிறிய புன்னகையோடு பார்த்தார்.

" அதிரா அப்பார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட எல்லா மர்ம முடிச்சுகளும் அடுத்த வாரத்துக்குள்ளேயே அவிழ்ந்து விடுவதற்கான சாத்திய கூறுகள் ஒவ்வொண்ணா நம்மை நெருங்கிட்டிருக்கு.... மும்பையிலிருந்து கிடைச்ச ஒரு தகவலும், திருமூர்த்தி சொன்ன அருளானந்தத்தைப் பற்றிய ஒரு விஷயமும் வெரி யூஸ் ஃபுல் க்ளூஸ்... அந்த கேஸ்ல இப்பத்தான் ஒரு தெளிவு கிடைச்சிருக்கு"

திருமூர்த்தியின் முகத்தில் சந்தோஷம் மின்னியது.

" ஸார்.... இன்னிக்கு உண்மையிலேயே ஒரு நல்ல நாள். போரூர் ஹாஸ்பிடல்ல நான் ராவ்டே பிந்தரைப் பார்க்காமே இருந்திருந்தா இந்த நிமிஷம் உங்களுக்கு முன்னாடி உட்கார்ந்து எனக்குத் தெரிஞ்ச அதிரா அப்பார்ட்மெண்ட்டைப் பத்தின உண்மைகளை சொல்ல வாய்ப்பு கிடைச்சிருக்காது "

" எஸ்.... எனக்கு உங்ககிட்டயிருந்து மேலும் அருளானந்தம் பற்றிய சில தகவல்கள் வேணும். அருளானந்தத்தோட கேரக்டர் எப்படி.. ? "

" ரொம்பவும் நல்ல டைப் ஸார். ஆனா கொஞ்சம் ஷார்ட் டெம்பர்ட். ஒய்ஃப் லீலாவதியை டைவர்ஸ் பண்ணி முறைப்படி பிரிஞ்ச பின்னாடி, ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் லீலாவதிகிட்ட போய் மன்னிப்பு கேட்டு ரெண்டாவது தடவையாக பத்திரிக்கை அடிச்சு, ரிலேட்டீவ்ஸையும், ஃப்ரண்ட்ஸையும் கூப்பிட்டு கல்யாணத்தை நடத்தினார். ஒரு வித்தியாசமான கேரக்டர் ஸார் "

" அவர்க்கு சன்ஸ், டாட்டர்ஸ் யாராவது இருக்காங்களா .. ? "

" இல்ல ஸார் "

" சென்னையில் அருளானந்தத்திற்கு வேற யாராவது ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களா......?"

" அப்படி யாரும் இருக்கிற மாதிரி தெரியலை ஸார் "

" சரி.... அதிரா அப்பார்ட்மெண்ட் கன்ஸ்ட்ரக்சன் வொர்க் நடக்கும்போது சென்னையில் அவர் எந்த ஏரியாவில் குடியிருந்தார் .. ? "

" அண்ணா நகர் குறிஞ்சி காலனியில் அஞ்சாவது குறுக்குத் தெருவுல முதல் வீடு ஸார்..... "

" சொந்த வீடா .. ? "

" ஆமா ஸார்.... அதை ஸேல் பண்ணிட்டுத்தான் ஒய்ஃப்போடு ஸ்ரீலங்காவுக்குப் புறப்பட்டுப் போனார். அவரைப்பத்தி எதுக்காக ஸார் இவ்வளவு டீடெய்லா விசாரிக்கிறீங்க? ஹி ஈஸ் ஹார்ம்லஸ். அவர்க்கும் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த சம்பவங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை ஸார்.... "

" இருக்கு "

" எப்படி ஸார்....... ? "

" அருளானந்தம் ஸ்ரீலங்காவில் எதுமாதிரியான பிசினஸை பண்ணிட்டிருந்ததாக சொன்னீங்க....... ? "

" அனிமல் ஸ்லாட்டரிங் அண்ட் ப்ராஸ்ஸிங் "

" அந்த பிசினஸுக்கும் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த சம்பவங்களுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு லிங்க் இருக்கு "

" என்ன லிங்க் ஸார்...? "

" இப்போதைக்கு வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது. மொதல்ல அருளானந்தம் யாழ்ப்பாணத்தில் எந்தப் பகுதியில் இருக்கார்ன்னு கண்டு பிடிக்கணும். அதுக்கு நீங்க தான் உதவணும் திருமூர்த்தி "

" கண்டிப்பா ஸார்..... "

சந்திரசூடனின் பார்வை ராவ்டே பிந்தரிடம் திரும்பியது.
" மிஸ்டர் ராவ்டே.... உங்க டாட்டர் பத்மஜாவோட ஹெல்த் இப்போ எப்படியிருக்கு...? "

" பி.பி. இன்னும் கண்ட்ரோலுக்கு வரலை ஸார். பிரசவம் நல்லபடியாய் நடக்கணும்ன்னா பி.பி. நார்மலாகணும்ன்னு டாக்டர் சொல்றார். வீ ஆர் வெயிட்டிங் ஃபார் தட் மொமண்ட் "

" டோன்ட் வொரி ராவ்டே.... பை காட்ஸ் கிரேஸ் எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். உங்க டாட்டர் ஹாஸ்பிடல்ல இருக்கிற இந்த நிலைமையிலும் நீங்க திருமூர்த்தியை கூட்டிகிட்டு என்னைப் பார்க்க வந்ததுக்கு ஐ மஸ்ட் தேங்க் யூ.... "

" ஸார்.... எனக்கு இருக்கிற ஒரு ஒரே ஆசை, அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில் இப்ப குடியிருக்கிற எல்லாருமே, இனி வரப் போகிற நாட்களிலாவது நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கணும்ங்கிறதுதான். நீங்களும் உண்மையான அக்கறையோடு இந்தக் கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணிட்டிருக்கீங்க... நான் ராணுவத்துல வேலை பார்த்தவன். அந்த ரத்தம் உடம்புல ஒடறதாலே என்னால முடிஞ்ச உதவிகளை உங்களுக்குப் பண்ணிட்டிருக்கேன். அதனால்தான் ஹாஸ்பிடல்ல திருமூர்த்தியைப் பார்த்ததும் அவரை உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன் "

" யூ ஹேவ் டன் ஏ க்ரேட் ஜாப் ராவ்டே... திருமூர்த்தி கொடுத்த தகவல் ரொம்பவே யூஸ்ஃபுல்.... இருட்டான ஒரு ரூமுக்குள்ளே மெழுகுவர்த்தி ஒண்ணை ஏத்தி வெச்ச மாதிரியான தகவல் அது... அதே மாதிரி மும்பையிலிருந்து கிடைச்ச ஒரு தகவலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சுடலாம்ங்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு "
உத்வேகத்துடன் சந்திரசூடன் நம்பிக்கை தெறிக்கும் குரலில் பேசிக்கொண்டிருக்கும் போதே இண்டர்காம் டெலிபோன் முணுமுணுப்பாய்க் கூப்பிட்டது. எடுத்து காதுக்குக் கொடுக்க மறுமுனையில் அவருடைய உதவியாளரின் குரல் கேட்டது.

" ஸார்..... டி.ஜி.பி.ஆபீஸிலிருந்து ரெண்டு தடவை போன் பண்ணிட்டாங்க "

" என்ன விஷயம்ன்னு கேட்டீங்களா....... ? "

" கேட்டேன் ஸார். டி.ஜி.பி. உடனே உங்களைப் புறப்பட்டு வரச் சொல்றார் "

*****

டி.ஜி.பி. ராம்பாபு தனக்கு முன்பாய் வந்து நின்று சல்யூட் அடித்த சந்திரசூடனை இறுகிய முகத்தோடு பார்த்தபடி காலி நாற்காலியைக் காட்டினார்.

" பீ ஸீட்டட் "

சந்திரசூடன் உட்கார்ந்தார்.

" ஸீம்ஸ் டு பி டயர்ட்.... டீ சாப்பிடறீங்களா....... ? "

" வேண்டாம் ஸார்... இப்ப டீ சாப்பிட்டா வீட்ல போய் டின்னர் சாப்பிடும்போது பசியிருக்காது "

" அதுவும் சரிதான் " என்று சொன்னவர் சில விநாடிகள் மெளனம் காத்துவிட்டு கேட்டார்.

" அந்த ஸ்மேஷ் பத்திரிக்கையோட எடிட்டர் வாஹினிகிட்ட பேசிட்டீங்களா....... ? "

" எதைப்பத்தி ஸார் ....... ? "

டி.ஜி.பி. எரிச்சலான குரலில் சொன்னார்.

" மேற்கொண்டு அந்தப் பத்திரிக்கையில் அதிரா அப்பார்ட்மெண்ட் பற்றிய நியூஸ் எதுவும் வரக்கூடாதுன்னு உங்ககிட்ட சொல்லியிருந்தேனே....... ? "

" ஒ.... அதுவா.... ஸாரி ஸார்... மறந்துட்டேன் "

" நிஜமாவே மறந்துட்டீங்களா.... இல்லை மறந்துட்ட மாதிரி நடிக்கறீங்களா....... ? "

" சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ் ஸார்... நீங்க எப்படி வேண்டுமானாலும் வெச்சுக்கலாம் "

" ஒரு ஹை அஃபிஷியல் ஆபீஸர்கிட்ட பேசறமாதிரி உங்க பேச்சு இல்லையே ....?"

" நீங்களும் டி.ஜி.பி. மாதிரி பேசலையே ஸார்.... யார்க்கோ பயந்துட்டு பேசறமாதிரி இருக்கே....... ? "

" லுக் மிஸ்டர் சந்திரசூடன்..... நாளைக்கு அந்த ஸ்மேஷ் பத்திரிக்கையில் அதிரா அப்பார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியும் வரக்கூடாது..... "

சந்திரசூடன் எதுவும் பேசாமல் டி.ஜி.பி.யையேப் பார்த்துக்கொண்டிருக்க அவர் கேட்டார்.

" இந்த மெளனத்துக்கு என்ன அர்த்தம்....... ? "

" செய்தி கண்டிப்பா வரும்ன்னு அர்த்தம் ஸார்... தென் ஒன்மோர் இன்ஃபர்மேஷன் ஸார். குற்றவாளிகளை நான் கிட்டத்தட்ட நெருங்கிட்டேன் "
**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 ]

English summary
Flat number 144 adhira apartment episode 48 by Novelist Rajeshkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X