Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

““ யா....யா.....யார் வேணும்.. சொல்லுங்க ?“ ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (45)

Subscribe to Oneindia Tamil

-ராஜேஷ்குமார்

அத்தியாயம் - 45

போட்டோவில் இருந்த பெண் சந்திரசூடனுக்கு வெகு அந்நியமாய் தெரிந்தாள்.

இதற்கு முன் இவளை எங்கேயாவது பார்த்திருக்கிறோமா என்று சில விநாடிகள் ஆழமாய் யோசித்தார்.
யாரும் நினைவுக்குத் தட்டுப்படவில்லை.

அவர்க்குப் பக்கத்தில் தயக்கத்தோடு நின்றிருந்த மரியசெல்வம் கேட்டான்.

" ஸார்...... நீங்க போய் இந்த அந்தப்பொண்ணைப் பார்த்துட்டு வர்ற வரைக்கும் நான் இந்த பூங்காவிலேயே இருக்கட்டுமா ? "

" அதெல்லாம் வேண்டாம். நீ புறப்படு... இதே ரோட்ல நேராப் போய் வலது பக்கமாய் கட் பண்ணினா வர்ற முதல் வீடுதானே அவ வீடு.... "

" ஆமா ஸார் "

" நான் பார்த்துக்கறேன்... அப்புறம் இந்த விஷயத்தைப்பத்தி வெளியே யார்கிட்டேயும் பேச வேண்டாம் "

" பேசமாட்டேன் ஸார். புஷ்பாக்காவும் இதைத்தான் சொன்னாங்க. நான் கிளம்பறேன் ஸார் "

மரியசெல்வம் பவ்யமாய் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு நகர்ந்துவிட, சந்திரசூடன் பைக்கை அதே ரோட்டில் விரட்டினார். முப்பது விநாடி பயணத்தில் ரோடு வலதுபுறமாய் திரும்ப, பார்வைக்குக் கிடைத்த முதல் வீட்டுக்கு முன்பாய், வேகத்தைக் குறைத்து பைக்கை நிறுத்தினார்.

சிறிய வீடு என்றாலும் அழகாய் சுத்தமாய் இருந்தது. மண் தொட்டிகளில் குரோட்டன்ஸ் இலைகள் பூக்களைப் போலவே பல நிறங்களில் சிரித்தன. வீட்டுக்கு இடதுபுறமாய் இருந்த ஷெல்டர்க்குள் தூசிபடலத்தோடு ஒரு யமஹா பைக் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.

சந்திரசூடன் அந்த சிறிய காம்பெளண்ட் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே போய், வாசற்படி ஏறி அழைப்பு மணிக்கான பட்டனை அழுத்தினார்.

Rajesh kumar Novel: Flat number 144 adhira apartment, episode 45

முப்பது விநாடிகள் கழித்து தயங்கி தயங்கி கதவு திறக்கப்பட அந்தப் பெண்ணின் முகம் தெரிந்தது.
மரியசெல்வத்தின் செல்போனில் பார்த்த அதே முகம். சந்திரசூடனை குழப்பமாய் பார்த்தாள்.

" யா....யா.....யார் வேணும் ? "

" உன்னைத்தான் பார்க்க வந்தேன். உன்கூட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு

" நீங்க யார்ன்னு தெரியலையே ? "

" போலீஸ்.... "

அவளுடைய கண்களில் கலவரத்தீ பரவியது.

" போ....போ......போலீஸா.... ? எ...என்கிட்டே என்ன பேசணும் ? "

" ஜெயராஜைப்பத்தி....... "

" ஜெயராஜா......? "அவள் பெரிதாக திகைக்க, சந்திரசூடன் புன்முறுவல் பூத்தார்.

" தெரியாதுன்னு சொல்லிடாதே.... புஷ்பா மூலமா எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டுதான் வந்திருக்கேன்.... உள்ளே போய் பேசலாமா? இல்ல போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் பேசலாமா? "

" உ...உ....உள்ளே வாங்க " சொல்லி அவள் வழிவிட்டு நிற்க, சந்திரசூடன் வீட்டுக்குள் நுழைந்தார். அவள் கதவை வேகவேகமாய் சாத்தினாள்.

வெளியே இருந்து பார்ப்பதற்கு சிறிய வீடு போல் தோன்றினாலும் உள்ளே பெரிதாக தெரிந்தது. லேட்டஸ்ட் டி.வி.சுவரில் ஒட்டியிருந்தது.

அவள் தன் புடைவைத் தலைப்பால் வியர்த்துவிட்ட முகத்தை ஒற்றிக்கொண்டே சோபாவைக் காட்டினாள்.
" உட்கார்ங்க ஸார்..... "

சந்திரசூடன் சோபாவுக்கு நன்றாக சாய்ந்து உட்கார்ந்தபடி வீட்டை நோட்டமிட்டவாறு கேட்டார்.

" உம் பேரென்ன ? "

" சுவாதி "

" கல்யாணமாயிருச்சுன்னு நினைக்கிறேன் "

" ஆமாம் " என்பது போல் தலையசைத்தாள்.

" ஹஸ்பெண்ட் என்ன பண்றார் ? "

" ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை "

" சென்னையில்தானே ? "

" இல்லை..... பெங்களூர்ல... வாரத்துல சனி, ஞாயிறு இங்கே வந்துடுவார் "

" அவர் பேர் என்ன? "

" இனிகோ செல்வராஜ் "

" லூர்துகிட்ட வேலை பார்த்துட்டிருந்த ஜெயராஜை நீ அடிக்கடி பார்க்கப் போனது உண்மையா ? "

" உண்மைதான் ஸார் "

" எதுக்காகன்னு சொல்ல முடியுமா ? "

சுவாதி பேசுவதற்கு தயங்க, சந்திரசூடன் சற்றே குரலை உயர்த்தினார்.

" இதோ பாரம்மா.... ஒரு முக்கியமான கேஸ் விஷயமா உன்னை விசாரிக்கிறதுக்காக வந்திருக்கேன்... நீ பொய்யான தகவல்களைக் கொடுத்தா பெரிய பிரச்சினையில் மாட்டிக்க வேண்டி வரலாம், உன்னோட வாயிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாய் இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன் "
" எனக்கு பொய் சொல்லிப் பழக்கமில்லை ஸார் "

" குட் பாலிஸி..... இப்ப உண்மையைச் சொல்லு..... எதுக்காக ஒரு பழைய குற்றவாளியான ஜெயராஜைப் பார்க்கப் போனே? "

" குடும்பத்துல சில பிரச்சினைகள்.... அதைப்பத்தி பேசறதுக்காக அவர்கிட்டே போவேன்"

" உன்னோட குடும்பப் பிரச்சினைகளை ஜெயராஜ்கிட்ட சொல்ற அளவுக்கு அப்படியென்ன அவன்கிட்ட நெருக்கம் ? "

" ஜெயராஜ் வேறு யாருமில்லை ஸார். என் கணவர் இனிகோ செல்வராஜோட அண்ணன்"

சந்திரசூடனின் கண்களில் ஆச்சர்யம் அலையடித்தது.

" கூடப்பிறந்த அண்ணனா ? "

" ஆமா ஸார்... ஜெயராஜ் சட்ட விரோதமான காரியங்களைப் பண்ணி ஜெயிலுக்கு போனதால, அவரை என்னோட கணவர்க்கு பிடிக்காது. ஒதுங்கியே இருந்தார். ஆனா ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்னாடி ஜெயராஜ் ரொம்பவுமே திருந்திட்டார். நேர்மையா உழைச்சுத்தான், இனிமே சாப்பிடுவேன்னு சொல்லி, லூர்துகிட்டபோய் வேலைக்குச் சேர்ந்தார். அதிலும் திருப்தியடையாமே செய்த பாவத்துக்கு பிராயச்சித்தமா மும்பையில் இருக்கிற அந்தோணியார் சர்ச்சுக்கு ஒரு சர்ச் வாலண்டியரா போய் சேர்ந்துட்டார்.... ஜெயராஜ் இந்த அளவுக்கு நல்லவராய் மாறின பின்பும்கூட, என் கணவர்க்கு அவர்மீதான கோபம் கொஞ்சம் கூட குறையலை.... ஆனா எனக்கு மட்டும் அவர் மேல சின்னதாய் சாஃப்ட் கார்னர் இருந்தது. அவரோட மனசுக்கு ஆறுதலாய் இருக்குமேன்னு நினைச்சுத்தான் பத்துநாளைக்கு ஒரு தடவையாவது போய்ப் பார்த்து பேசிட்டு வருவேன். அதுல எனக்கொரு சந்தோஷம் "

" இந்த விஷயம் உன் கணவர்க்குத் தெரியுமா? "

" தெரியும்..... ஆனா அவர் என்னைக் கண்டிக்கலை. உன்னோட இஷ்டம்ன்னு சொல்லிட்டார் "

" சரி.... ஜெயராஜ் திருந்திட்டதாய் நீ நினைக்கிறியா ? "

" ஆமா .... ஸார் அவர் ரொம்பவே மாறிட்டார் "

" உன்னோட நினைப்பு தப்பு. அவன் திருந்தலை "

சுவாதி லேசாய் திடுக்கிட்டாள்.

" என்ன ஸார் சொல்றீங்க.... அவர் திருந்தலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும் ? "

" திருந்தினவன் ஒரு பெண்ணை கொலை பண்ணுவானா ? "

" கொலையா ? "

" ம்..... கொலைதான்..... லட்சணாங்கிற ஒரு பெண்ணை கொடூரமான முறையில் கொலை பண்ணி, அவ உடம்புக்கு கருப்பு பெயிண்ட்டை பூசி ஒரு காரோட டிக்கிக்குள்ளே வெச்சு டிஸ்போஸ் பண்ணியிருக்கான் "
" ஸ....ஸார்..... நீங்க சொல்றதை என்னால நம்ப முடியலை..... "

" வீடியோவைப் பார்த்த பின்னாடியாவது நம்புவே இல்லையா....? " சொன்ன சந்திரசூடன் தன்னுடைய செல்போனை எடுத்து அந்த வீடியோ பதிவை ஆன் செய்து காட்டினார்.

சுவாதி அதைத் திகைப்போடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே சந்திரசூடன் பேச ஆரம்பித்தார்.

" இந்த வீடியோ பதிவை எடுத்தது அதிரா அப்பார்ட்மெண்ட்டில் குடியிருக்கிற ராவ்டே பிந்தர் என்கிற ஒய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியின் மகளான பத்மஜா சம்பவம் நடந்த அன்னைக்கு காத்து வாங்கறதுக்காக அவங்க ஃப்ளாட்டோட மொட்டை மாடிக்கு போயிருக்கா. மாடியில் வாக்கிங் பண்ணிட்டிருக்கும்போது எகஸ் அப்பார்ட்மெண்ட்டோட பார்க்கிங் ஏரியாவில் ஒரு வேன் வந்து நின்னதையும், அந்த வேனிலிருந்து ரெண்டு பேர் இறங்கி மூட்டை மாதிரி எதையோ தூக்கிட்டு வந்து, பக்கத்துல நின்னுட்டிருந்த ஒரு காரோட டிக்கியை ஒப்பன் பண்ணி திணிச்சதையும் பத்மஜா பார்த்திருக்கா. அந்த செயல்பாட்டில் அவளுக்கு சந்தேகம் வரவும், அதை தன்னோட செல்போனிலிருந்து வீடியோவாகவும் எடுத்துட்டா. அந்த மூட்டைக்குள்ளே இருந்தது லட்சணாங்கிற ஒரு பெண்ணோட டெட்பாடி. மூட்டையைத் தூக்கிட்டு வர்ற ரெண்டு பேர்ல ஒருத்தன்தான் உன் ஹஸ்பெண்ட்டோட அண்ணன் ஜெயராஜ். முகத்தை நல்லா உன்னிப்பா பாரு.... உனக்கேத் தெரியும் "

வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்த சுவாதி அதிர்ந்து போனவளாய் நெற்றியைப் பிடித்துக்கொண்டு தளர்வாய் சாய்ந்தாள். விழிகளில் திகில் உறைந்து போயிருந்தது.

சந்திரசூடன் ஒரு சிறிய சிரிப்போடு கேட்டார்.

" என்ன ஷாக்கிங்கா இருக்கா....? "

" ஷா....ஷா.... ஷாக்கிங்தான் ஸார்... ஆனா இது வேற மாதிரியான ஷாக்கிங்....... "

" வேற மாதிரியான ஷாக்கிங்கா....... ? "

" ஆமா ஸார்...... இந்த வீடியோ பதிவில் இருக்கிறது ஜெயராஜ் இல்லை.... "

சந்திரசூடனின் கண்கள் வியப்பில் நிலைத்தன.

" என்னது...... ஜெயராஜ் இல்லையா ஜெயராஜ் இல்லேன்னா வேற யாரு....... ? "

" அது....அது.... வந்து "

" சொ....சொல்லு யாரது ....... ? "

" எ..எ....என்னோட ஹஸ்பெண்ட் இனிகோ செல்வராஜ் "

சந்திரசூடன் உச்சபட்சமாய் அதிர்ந்து, உட்கார்ந்திருந்த சோபாவைவிட்டு தன்னிச்சையாய் எழுந்தார்.
" நீ....நீ....என்ன சொல்றே ....... ? "

" உண்மையைச் சொல்லிட்டிருக்கேன் ஸார்....இந்த வீடியோ பதிவில் இருக்கிறது என்னோட கணவர்தான்.... ஆனா நடைபெற்ற கொலைச் சம்பவத்துக்கும், அவர்க்கும் ஒரு சதவீதம் கூட சம்பந்தமில்லை "

சொன்ன சுவாதி தன்னுடைய செல்போனை எடுத்து காலரி ஆப்ஷனுக்குப்போய் ஒரு போட்டோவைத் தொட்டு பெரிதாக்கி சந்திரசூடனிடம் நீட்டினாள்.

" இந்தப் போட்டோவை கொஞ்சம் பாருங்க ஸார் "

வாங்கிப் பார்த்தார்.

பரஸ்பரம் தோளின் மேல் கைபோட்டபடி அந்த இரண்டு இளைஞர்களும் சிரித்தபடி காமிராவைப் பார்த்து சிரித்திருந்தார்கள். இருவரின் முக ஒற்றுமை கிட்டத்தட்ட எண்பது சதவீதம் ஒத்துப் போயிருந்தது.
சந்திரசூடன் அதிர்ச்சி அகலாத பார்வையுடன் சுவாதியை ஏறிட்டபடி கேட்டார்.

" ரெண்டு பேரும் ட்வின்ஸா ....... ? "

" இல்ல ஸார்.... ரெண்டு பேர்க்கும் ஒரு வருஷம் வித்தியாசம்.. என்னோட கணவர் நல்ல சிவப்பு. ஆனா ஜெயராஜ் மாநிறம். போட்டோவில் பார்க்கும்போது இந்த நிற வித்தியாசம் தெரியாது. இது கொஞ்சம் பழைய போட்டோ. ரெண்டுபேரும் ஒற்றுமையாய் இருந்த நாட்கள்ல எடுக்கப்பட்ட போட்டோ "

சந்திரசூடன் இன்னமும் பிரமிப்பினின்றும் விடுபட முடியாமல் சுவாதியைப் பார்த்தார்.

" இந்த வீடியோ பதிவில் இருக்கிறது உன்னோட கணவர் இனிகோ செல்வராஜ்தான்னு உனக்கு எப்படித் தெரியும் ....... ? "

" ஸார்.... இந்தப் பதிவு என்னிக்கு செய்யப்பட்டதுன்னு தெரியுமா ....... ? "

" பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி "

" அதாவது அன்னிக்கு சனிக்கிழமை ....... ? "

" ஆமா...... "

" அந்த சனிக்கிழமைதான் நானும் என்னோட கணவரும் அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு போயிருந்தோம். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கீழே இறங்க முயன்ற விநாடி அடுத்த பேஸ் பார்க்கிங் ஏரியாவில் ஒரு வேன் வந்து நின்னதைப் பார்த்தோம். அந்த வேனிலிருந்து இறங்கிய ரெண்டு பேர் ஒரு மூட்டையை கீழே இறக்க முயற்சி பண்ணிட்டிருந்தாங்க. அந்த மூட்டையில என்ன இருந்ததுன்னு எங்களுக்குத் தெரியாது. ஏதோ வீட்டு உபயோக சாமான் இருக்கலாம்ன்னு நினைச்சோம். மூட்டையை வேனிலிருந்து இறக்கின அவங்க திரும்பவும் அந்த மூட்டையைத் தூக்க கஷ்டப்பட்டபோது, அவங்களுக்கு உதவறதுக்காக என்னோட கணவர் போனார். அந்த மூட்டையை பக்கத்துல நின்னுட்டிருந்த ஒரு காரோட டிக்கியில் அடைக்க உதவி பண்ணிட்டு வந்துட்டார் "

" வேன்ல வந்த அந்த ரெண்டு பேர் யார்ன்னு உனக்கும், உன்னோட கணவர்க்கும் தெரியாதா ....... ? "

" தெரியாது "

" அந்த மூட்டையில் என்ன இருந்ததுன்னு தெரியாதா ....... ? "

" தெரியாது "

" சரி... அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு எதுக்கு போனீங்க ....... ? "

" கங்காதரன் என்கிற ஒரு ஃப்ளாட் ஒனரைப் பார்க்கப் போயிருந்தோம் "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 ]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+