For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஆறு மரணங்களின் பின்னணி என்ன...?" ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (44)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

அத்தியாயம் - 44

சந்திரசூடன் பைக்கில் பயணித்து டி.ஜி.பி.ஆபீஸ் போய் சேர்ந்தாற்போது காலை பதினோரு மணி. ஒட்டுமொத்த அலுவலகமும் பாலைவன வெறுமையோடு தெரிய, பைக்கை டூவீலர்ஸ் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, புல்வெளிக்கு நடுவில் போடப்பட்டிருந்த, சிமெண்ட் பாதையில் நடந்து, வாசற்படியில் ஏறும்போதே, டி.ஜி.பி.யின் உதவியாளர் நல்லசிவம் சல்யூட்டோடு எதிர்பட்டார்.

" குட்மார்னிங் ஸார் " " குட்மார்னிங் நல்லசிவம்..... டி.ஜி.பி. வந்துட்டாரா ? " " வந்துட்டார் ஸார்..... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கார். உங்களைப் பார்த்து பேசிட்டுத்தான் சி.ஒ.பி.ஆபீஸூக்கு போகணும்ன்னு சொல்லிட்டிருந்தார் " " நல்ல மூடில் இருக்காரா ? " " பார்த்தா அப்படித் தெரியலை.... வழக்கமா பதினோரு மணிக்கு சாப்பிடற டீயைக்கூட வேண்டாம்ன்னு சொல்லிட்டார். மனசுக்குள்ளே ஏதோ ஒரு பிரச்சினை ஒடிகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் ஸார் " " நம்ம போலீஸ் டிபார்ட்மெண்ட்ல பிரச்சினைகளுக்கா பஞ்சம் ? " சந்திரசூடன் மெல்லச் சிரித்தபடி, லிஃப்ட்டை நோக்கிப் போனார். மூன்றாவது மாடிக்கு உயர்ந்து வராந்தாவில் வெளிப்பட்டு, சாத்தப்பட்டிருந்த அந்த அறைக்கதவுக்கு முன்பாய் போய் நின்றார்.

எஸ்.ராம்பாபு ஐ.பி.எஸ். டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் என்கிற பெயர்ப்பலகைக்கு கீழே பட்டாணி சைஸில் இருந்த காலிங்பெல் பட்டனை அழுத்த, உள்ளே சிக்கனமாய் ஒரு மியூஸிக் நோட் ஒலித்தது. சில விநாடிகள் மெளனத்திற்குப்பிறகு "யூ மே கம் இன்சைட்" என்கிற ரிக்கார்டட் வாய்ஸ் கேட்க, சந்திரசூடன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார்.

Rajesh kumar Novel: Flat number 144 adhira apartment, episode 44

சென்டரலைஸ்ட் ஏ.ஸி.கசிந்து கொண்டிருந்த அறையின் நடுவே பாலிவினைல் சதுர மேஜைக்குப்பின்னால், போடப்பட்டிருந்த வயர் மெஷ் நாற்காலியில் ராம்பாபு தளர்வாய் சாய்ந்தபடி செல்போனில் எதையோ உன்னிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தார். ஐம்பது வயது. ஆறடி உயரம். முன் வழுக்கை. டையில் குளித்த கெட்டியான மீசை. சந்திரசூடன் அட்டென்ஷனுக்கு வந்து விருட்டென்று சல்யூட் அடித்ததை ஒரு சதவீதம் கூட பொருட்படுத்தாமல் சைகையிலேயே "உட்கார்" என்பது போல் தனக்கு எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினார் ராம்பாபு. தயக்கத்தோடு ஒரு தேங்க்யூவை உதிர்த்தபடி உட்கார்ந்தார் சந்திரசூடன். ராம்பாபு செல்போனிலிருந்து பார்வையை நகர்த்தாமல் கேட்டார்.

"இன்னிக்கு காலையில வந்த ஸ்மேஷ் பத்திரிக்கையை படிச்சீங்களா.......? "

"இல்ல ஸார்..."

"உங்களுக்கு வலதுபக்கமாயிருக்கிற மேஜையோரத்துல அந்தப் பத்திரிக்கை இருக்கு. அதை எடுத்து தலைப்புச்செய்தியாய் என்ன போட்டிருக்காங்கன்னு பார்த்து வாய்விட்டு படிங்க " சந்திரசூடன் அந்தப் பத்திரிக்கையை எடுத்துப் பிரித்து தலைப்புச் செய்தியின் மேல் பார்வையைப் போட்டார். மெல்லிய குரலில் படித்தார்.

"அதிரா அப்பார்ட்மெண்ட் நடந்த ஆறு மரணங்களின் பின்னணி என்ன .......? "

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வலை விரிப்பு பிடி இறுகிறது. அதிகாரிகள் கைது எப்போது .......?

" டி.ஜி.பி.ராம்பாபு தலையை ஒரு பக்கமாய் சாய்த்து, சந்திரசூடனை இறுக்கமான முகத்தோடு பார்த்தபடி கேட்டார்.

"அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸை நீங்கத்தானே இன்வெஸ்டிகேட் பண்றீங்க...? "

" ஆமா ஸார் "

" ஸ்மேஷ் பத்திரிக்கையில் இப்படியொரு செய்தி வந்திருக்கே இதுக்கு என்ன அர்த்தம்...? "

" ஸார்.... பொதுவா பிரஸ் மீடியா பீப்பிள் பரபரப்புக்காக இப்படித்தான் நியூஸ் போடுவாங்க. நாம அதை இக்னோர் பண்ணிட்டு போயிடணும்.... "

" அது எனக்கும் தெரியும்.... பரபரப்புக்காக நியூஸ் போடற பத்திரிக்கையைப் பற்றி கவலையில்லை. அது மாதிரியான பத்திரிக்கைகளில் இந்த செய்தி வந்திருந்தா அதை நான் பொருட்படுத்தியிருக்கமாட்டேன். ஆனா ஸ்மேஷ் பத்திரிக்கை அப்படி கிடையாது. அதில் ஒரு செய்தி வருதுன்னா அந்தப் பத்திரிக்கையின் எடிட்டர்கிட்டே ஏதோ ஒரு வலுவான ஆதாரம் இருக்குன்னு..... அர்த்தம் "

" யூ ஆர் கரெக்ட் ஸார்.... அந்த ஸ்மேஷ் பத்திரிக்கையைப்பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். எடிட்டர் வாஹினியையும் எனக்குத் தெரியும். லட்சணா என்கிற ஒரு பெண்ணின் கொலை சம்பந்தமாய் என்கிட்ட பேச வந்திருந்தாங்க. வெரி ப்ரேவ் அண்ட் கரேஜியஸ் வுமன் "

" வாஹினி... இந்த நியூஸைப் போடறதுக்கு முந்தி உங்ககிட்டே ஏதாவது கன்சல்ட் பண்ணினாங்களா ... ? "

" இல்ல ஸார்..... ஆனா அந்த அப்பார்ட்மெண்ட்டின் ஆறு மரணங்களுக்கு பின்னாடி உங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்டும் இருக்கலாம்ன்னு என்கிட்டே ஒரு தடவை சொல்லியிருக்காங்க...."

" ஆனா அதை நீங்க சீரியஸாய் எடுத்துக்கலை... ? "

" எஸ் ஸார்.... பிரஸ் மீடியா பீப்பிள் வழக்கமா இது மாதிரியான குற்றச்சாட்டை சுமத்தறது சகஜம்தானேன்னு நினைச்சுட்டேன் "

" யூ ஷூட் ஹேவ் பீன் ஏ லிட்டில் மோர் கேர்ஃபுல் "

" ஸாரி ஸார் "

" சிம்பிளா ஸாரி சொல்லிட்டு பேசற விஷயமில்லை இது. நீங்க உடனடியாய் ஒரு வேலை பண்ணனும் "

" சொல்லுங்க ஸார் "

" வாஹினிகிட்ட இதைப்பத்தி நீங்க பேசணும். மேற்கொண்டு அந்த ஸ்மேஷ் பத்திரிக்கையில் அதிரா அப்பார்ட்மெண்ட் பத்தின நியூஸ் எதுவும் வரக்கூடாதுன்னு இன்ஸ்ட்ரக்சன் கொடுக்கணும் "

" ஸ....ஸார்... டோன்ட் மிஸ்டேக் மீ.... லெட் மீ டெல்யூ மை ஒபினியன் " " என்ன சொல்லுங்க "

" இந்த ஸ்மேஷ் பத்திரிக்கை விஷயத்தை கண்டுக்காமே இருக்கிறது நல்லது "

" நீங்களும் நானும் கண்டுக்காமே இருந்துடலாம். ஆனா எனக்கு மேல இருக்கிற ஒரு பவர் என்னைத் தூங்க விடமாட்டாங்களே... நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியுதா ? "

" புரியுது ஸார்... நான் வாஹினிகிட்டே பேசிப் பார்க்கிறேன் "

" டூ இட் இம்மீடியட்லி " சந்திரசூடன் எழுந்து நின்று டி.ஜி.பிக்கு சல்யூட் ஒன்றைக்கொடுத்துவிட்டு அறையினின்றும் வெளிப்பட்டார்.

*******

பைக்கில் முப்பது நிமிஷப் பயணம்.

ஸ்மேஷ் பத்திரிக்கை அலுவலகத்தில் வாஹினியின் அறைக்குள், அவளுக்கு முன்பாய் ஒரு புன்முறுவலோடு உட்கார்ந்திருந்தார் சந்திரசூடன்.

" மேடம்.... நாம எய்த அம்பு சரியான இலக்கில போய்த்தான் பாய்ஞ்சிருக்கு. நான் சொன்ன மாதிரி உங்க பத்திரிக்கையில் நீங்க தலைப்புச் செய்தி போட்டதால எங்க டிபார்ட்மெண்ட்டுக்குள்ளே சத்தமில்லாமே ஒரு பூகம்பம் ஏற்பட்டிருக்கு. காலை எட்டு மணிக்கெல்லாம் டி.ஜி.பி.ராம்பாபுகிட்டயிருந்து போன். பதினோரு மணிக்கு வந்து மீட் பண்ணும்படியாய் ஒரு கட்டாய அப்பாய்ண்ட்மெண்ட்

" வாஹினியின் உதடுகளிலும் புன்னகை பரவியது. "

டி.ஜி.பி.யைப்போய் பார்த்தீங்களா ? " " போய் பார்த்துட்டுத்தானே வர்றேன் "

" என்ன சொன்னார் ? "

" மனுஷன் அரண்டு போயிருக்கார். ஸ்மேஷோட தலைப்புச்செய்தியை அவரால டைஜஸ்ட் பண்ணிக்க முடியலை. வாஹினிகிட்ட இதைப்பத்தி நீங்க பேசணும். மேற்கொண்டு அந்தப் பத்திரிக்கையில் அதிரா அப்பார்ட்மெண்ட் பத்தின நியூஸ் எதுவும் வரக்கூடாதுன்னு இன்ஸ்ட்ரக்சன் கொடுக்கணும்ன்னு என் கையைப் பிடிச்சு கெஞ்சாத குறைதான் "

" ஸோ...... இந்த விவகாரத்தில் போலீஸோட இன்வால்வ்மெண்ட் இருக்கிறது கன்ஃபார்ம் ஆயிடுச்சு "

" அப்சல்யூட்லி "

" டி.ஜி.பி. ராம்பாபுவுக்கு இதுல தொடர்பு இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா ? "

" இருக்க வாய்ப்பில்லை "

" எப்படி சொல்றீங்க ? "

" இந்த ஸ்மேஷ் பத்திரிக்கை விஷயத்தை கண்டுக்காமே இருந்தா என்னான்னு நான் கேட்டதுக்கு அவர் "

நீங்களும் நானும் கண்டுக்காமே இருந்துடலாம். ஆனா எனக்கு மேல இருக்கிற ஒரு பவர் என்னைத் தூங்க விடமாட்டாங்களே" ன்னு புலம்பினார்"

" அந்த பவர் யார்ங்கிறதை எப்படி கண்டுபிடிக்கப்போறோம் "

" அடுத்தடுத்த அம்புகளை விட வேண்டியதுதான் "

" அம்புகளா.......? "

" நான் தலைப்புச்செய்திகளைச் சொன்னேன் "

" நாளைக்கு என்ன தலைப்பு .......? "

"அதிரா அப்பார்ட்மெண்ட் மர்ம மரணங்கள் சிபிஐ விசாரிக்குமா.......? "

பொதுமக்கள் எதிர்பார்ப்பு. சந்திரசூடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் ரிங்டோனை காற்றில் சிதறடித்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

லூர்துவின் மனைவி புஷ்பா பெயர் டிஸ்ப்ளேயில் தெரிய செல்போனை காதுக்கு ஒற்றினார். மறுமுனையில் புஷ்பா அவசரக்குரலில் பேசினாள்.

" ஸார்... நான் புஷ்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் "

" என்ன விஷயம்ன்னு சொல்லு "

" அந்தப்பொண்ணு இருக்கிற இடம் தெரிஞ்சுடுச்சு ஸார் "

" எந்தப் பொண்ணு.......? "

" ஜெயராஜ் என்னோட கணவர்கிட்டே வேலை பார்த்துட்டு இருக்கும்போது, அவனைப் பார்த்து பேசறதுக்காக ஒரு பொண்ணு அடிக்கடி வந்துட்டு போவான்னு சொன்னேனே ஸார்..... அந்தப்பொண்ணுதான் " சந்திரசூடனின் உடம்பு ஒரு நிமிர்வுக்கு உட்பட்டது.

" எங்கேயிருக்கா அந்தப் பொண்ணு .......? "

" பள்ளிக்கரணையில் இருக்கிற அம்பேத்கர் நகர்ல குடியிருக்கா ஸார் "

" எப்படி தெரிஞ்சுது .......? "

" நம்மகிட்ட வேலை பார்க்கிற மரியசெல்வம் என்கிற ஆள் பள்ளிக்கரணையில் இருக்கிற அவனோட ஃப்ரண்டைப் பார்க்கப் போனப்ப, அந்தப்பொண்ணு ஒரு பஸ் ஸ்டாப்புல நின்னுட்டிருந்ததைப் பார்த்திருக்கான். நான் ஏற்கனவே நம்ம ஆட்கள்கிட்ட அந்தப் பொண்ணைப்பத்தி சொல்லி வெச்சிருந்ததால மரியசெல்வம் அவளைப் பார்த்துட்டு ஃபாலோ பண்ணிப் போயிருக்கான். வீட்டைக் கண்டுபிடிச்சுட்டு எனக்கு போன் பண்ணினான்"

" அந்தப்பொண்ணோட வீட்டு அட்ரஸைச்சொல்லு "

" நெம்பர் 133, பார்க் ரோடு, அம்பேத்கர் நகர், பள்ளிக்கரணை "

" உன்னோட ஆள் மரியசெல்வம் இப்ப எங்கே ? "

" அம்பேத்கர் நகர்க்குள்ளே பூங்கா ஒண்ணு இருக்கு ஸார். அங்கே அவன் உட்கார்ந்துட்டு உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கான். நீங்க இப்ப போனா அந்தப் பொண்ணை மடக்கிடலாம் ஸார் "

" மரியசெல்வத்தோட போன் நெம்பரை எனக்கு வாட்ஸ்அப்ல அனுப்பி வை. நான் இப்ப கிளம்பி அங்கே போறேன்..... "

" கொஞ்சம் சீக்கிரமா போங்க ஸார் "

சந்திரசூடன் செல்போனை அணைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த வாஹினியிடம் சுருக்கமாய் விஷயத்தை சொல்லிவிட்டு எழுந்தார். வாஹினி சொன்னாள்.

" அந்தப்பொண்ணைப் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணுங்க ஸார் "

" கண்டிப்பா மேடம் "

********

சென்னையின் அமில வெயிலில் நனைந்து வியர்வையில் குளித்தபடி, சந்திரசூடன் பைக்கை விரட்டிக்கொண்டு பள்ளிக்கரணை போய்ச் சேர்ந்து, அம்பேத்கர் நகரை கண்டுபிடித்து, பூங்காவின் வாசலில் காத்துக்கொண்டிருந்த மரியசெல்வம் முன்பாக நின்ற போது மதியம் ஒரு மணி முப்பது நிமிடம். அந்த மரியசெல்வம் குனிந்து பவ்யமாய் கும்பிடு போட்டபடி பக்கத்தில் வந்தான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சந்திரசூடன் கேட்டார்.

" அந்தப்பொண்ணோட வீடு எங்கே? "

" இதே ரோட்ல நேராய் போய் வலது பக்கமாய் கட் பண்ணினா முதல் வீடு ஸார் "

" அவளைப் பார்த்து இங்கே யார்கிட்டேயாவது விசாரிச்சியா ? "

" இல்ல ஸார்... ஆனா அவளுக்கு தெரியாம என்னோட செல்போன்ல அவளைப் போட்டோ எடுத்துகிட்டேன் "

" எங்கே காட்டு "

மரியசெல்வம் செல்வம் தன்னுடைய செல்போனின் காலரிக்குப்போய், அங்கே பதிவாகியிருந்த அந்தப்பொண்ணின் போட்டோவைக் காட்ட, சந்திரசூடன் ஆர்வமாய் வாங்கிப் பார்த்தார்.

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 ]

English summary
Flat number 144 adhira apartment episode 44 by Novelist Rajeshkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X