• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

““ என்ன சொல்றீங்க குந்தவை ?.. முன்னாடியே தெரியுமா?“ ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (43)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

அத்தியாயம் - 43

சந்திரசூடன் சற்றே குழப்பமான முகத்தோடு வாஹினி, குந்தவை, இதிகாசன் மூன்று பேர்களையும் உன்னிப்பான ஒரு பார்வையால் நனைத்தபடி கேட்டார்.

"அன்வர் அலி, வான்மதி இந்த ரெண்டு பேரோட டெட் பாடீஸைத் தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் பண்ணிப் பார்த்தா ஜெல்பால் ப்ளாஸ்டர்ங்கிற ரசாயனம் அவங்க எலும்புகளிலும் சதைத்துணுக்களிலும் நிச்சயமாய் இருக்கும்ன்னு நீங்க நம்புறீங்களா? "

குந்தவை அவசர அவசரமாய் இடைமறித்துச்சொன்னாள். "ஷ்யூர்லி ஸார்.... மேடம் வாஹினிக்கும், இதிகாசனுக்கும் ஜெல்பால் ப்ளாஸ்டரைப் பற்றி இப்பத்தான் தெரியும். ஆனா எனக்கு கடந்த ஆறு வருஷ காலமாய் அதைப்பற்றித்தெரியும்.... அதே நேரத்தில் அதிரா அப்பார்ட்மெண்ட்டைப்பற்றியும், அங்கே நடந்த ஆறு மர்மான மரணங்களைப்பற்றியும் கடந்த சில மாதங்களாய்த்தான் தெரியும். அதுவும் இறந்து போனவர்களில் ஒருவரான அன்வர் அலியோட ஃபேமிலி மூலமாகத்தான் தெரியும்..... "

சந்திரசூடனின் முகத்தில் திகைப்பு பரவியது.

" என்ன சொல்றீங்க குந்தவை ? அன்வர் அலியை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா.......? "

" தெரியும் "

" எப்படி.......? "

" ரெண்டு வருஷத்துக்கு முந்தி வரை அவரும், அவரோட ஃபேமிலியும் இதே நல்வாழ்வு நகர்ல பாரதி தெருவுல குடியிருந்தாங்க... அன்வர் அலி ஒரு ரியல் எஸ்டேட் ஒனர். அந்த பிசினஸ் நல்ல பிக்அப்பாகி ஒரளவுக்கு அவர்க்கு வசதி வந்ததும், ஒரு பெரிய வீட்டுக்கு குடி போகணும்ன்னு ஆசைப்பட்டார். அதிரா அப்பார்ட்மெண்ட்டில் 144 நெம்பர் ஃப்ளாட் குறைவான வாடகைத்தொகைக்கு கிடைச்சதும் முதன் முதல்ல என்கிட்டதான் வந்து சொன்னார். வாடகை என்ன இவ்வளவு குறைச்சலாய் இருக்கேன்னு நான் கேட்டதுக்கு அவர் சிரிச்சுகிட்டே அந்த ஃப்ளாட்ல பேய் இருக்குன்னு கிளப்பிவிட்ட புரளியால யாரும் குடி போகலை .... எனக்கு இந்த பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத்தினால தைரியமாய் குடிபோக முடிவு எடுத்தேன். ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்டேயும் சொன்னேன். அவங்களும் அதை நம்பலை... அடுத்த மாசம் ஒரு நல்ல நாள் பார்த்து குடிபோயிடலாம்ன்னு இருக்கேன்னு சொன்னார். சொன்னபடியே குடி போனார். அவர் அங்கே குடி போன அன்னிக்கு ஆடு வெட்டி எல்லோரையும் கூப்பிட்டு பிரியாணி விருந்து வெச்சார். என்னையும் கூப்பிட்டார். ஆனா நான் போகலை. காரணம் நான் ப்யூர் வெஜ். பொதுவாக அசைவம் சமைக்கிற இடத்துக்கு நான் போறதில்லை. அன்வர் அலி கூப்பிட்டதால என்னிக்காவது ஒருநாள் அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு கர்ட்டஸிக்காக போயிட்டு வரணும்ன்னு நினைச்சுட்டிருந்தேன். அதுக்குள்ளே அன்வர் அலி ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டதாய் அவரோட ஒய்ஃப் ஃபரிதா எனக்கு போன் பண்ணிச் சொன்னப்ப, அதிர்ந்து போயிட்டேன். எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாத, நாற்பத்தஞ்சு வயசேயான அன்வர் அலிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பேயில்லைன்னு யோசிச்சேன். அவர்க்கு முன்னாடி அதே ஃப்ளாட்ல நாலு பெண்கள் அன்வர் அலிக்கு வந்த ஹார்ட் அட்டாக் மாதிரியே வந்து, இறந்து போன தகவல் எனக்கு கிடைச்சபோது, என்னோட மனசுக்குள்ளே ஒரு சந்தேக கீறல் விழுந்தது. பின்னணி என்னவாயிருக்கும் யோசிச்சுப் பார்த்தேன். எதுவும் பிடிபடலை.... ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் அடிமனசுக்குள்ளே உறுத்திகிட்டேயிருந்தது"
குந்தவையின் பேச்சை கவனத்தோடு கேட்டுக்கொண்டிருந்த சந்திரசூடன் குறுக்கிட்டு கேட்டார்.

Flat number 144 adhira apartment episode 43

" என்ன உறுத்தல்.......? "

" அன்வர் அலி இறந்த உடனே பத்து நிமிஷத்துக்குள்ளே அவரேட ஃபேமிலி டாக்டர் ரஹ்மான் வந்து பரிசோதிச்சுப் பார்த்துட்டு கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்கிற முறையில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இயற்கையான முறையில் மரணம்ன்னு சொல்லி, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே டெத் சர்ட்டிஃபிகேட்டை தயார் பண்ணி, அன்வர் அலியோட ஃபேமிலி மெம்பர்ஸ்கிட்ட கொடுத்துட்டார். டாக்டர் இவ்வளவு அவசரப்பட ஏதோ ஒரு காரணம் இருக்கணும்ங்கிற உறுத்தல் அந்த நிமிஷத்திலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு கேள்விக்குறியோடு எம் மனசுக்குள்ளே இன்னமும் இருந்துட்டேயிருக்கு..... ஸார் "

" டாக்டர் ரஹ்மான்கிட்ட இதைப்பத்தி கேட்டீங்களா .......? "

" நேர்ல பார்த்து கேட்கலை... போன் பண்ணி பேசினேன். அந்த குறிப்பிட்ட 144ம் நெம்பர் ஃப்ளாட்ல அன்வர் அலிக்கு முன்பு குடியிருந்த டி.வி.நடிகை சொர்ண ரேகா, ஏர் ஹோஸ்டஸ் தர்ஷிணி, தமிழ்ப்பேராசிரியை நப்பின்னை, ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்த வான்மதி, இந்த நாலு பேருமே கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்கிற இதய பாதிப்புக்கு உள்ளாகி, ஹார்ட் அட்டாக்கில் இறந்து போயிருக்காங்க. அன்வர் அலியும் அதே மாதிரி இறந்து போயிருக்கார். இந்த மரணங்களில் உங்களுக்கு சந்தேகம் வரலையான்னு கேட்டேன் "

" நல்ல கேள்விதான். இந்த கேள்விக்கு அவரோட பதில் என்ன.......? "

அவர் பதில் சொல்லாமே ஒரு சில விநாடிகள் மெளனமாய் இருந்துட்டு என்னை ஒரு கேள்வி கேட்டார்.

" என்ன கேள்வி.......? "

" போலீஸ் டிபார்ட்மெண்ட்ல நீங்க எப்ப வேலைக்கு சேர்ந்தீங்கன்னு கேட்டார். அந்தக் கேள்வியில் இருந்த கிண்டலை நான் புரிஞ்சுகிட்டேன். இருந்தாலும் விடாப்பிடியாய் நான் சிரிச்சுகிட்டே இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறதுக்காக நான் போலீஸ்ல போய் சேரவேண்டியதில்லை டாக்டர்.... அந்த 144 நெம்பர் ஃப்ளாட்ல குடியிருந்த அஞ்சு பேருமே கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்கிற பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோயிருக்காங்க. இது ஒரு அப்நார்மலான விஷயம்ன்னு உங்களுக்கு ஏன் தோணலைன்னு கேட்டேன். உடனே டாக்டர் ரஹ்மானுக்கு கோபம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டார் "

" என்னதான் சொன்னார்.......? "

" அன்வர் அலிக்கு முன்னாடி அந்த ஃப்ளாட்ல தங்கியிருந்தவங்க எப்படி செத்தாங்கன்னு எனக்குத் தெரியாது. அன்வர் அலி சுய உணர்வு இல்லாமே மயக்கமா விழுந்துட்டார்ன்னு அவரோட மனைவி ஃபரிதா எனக்கு போன் பண்ணிச் சொன்னதும், நான் உடனே புறப்பட்டு போனேன். அவரை சோதிச்சுப் பார்த்தப்ப அவர் ஹார்ட் அட்டாக்ல இறந்து போன விஷயம் எனக்கு தெரியவந்தது. இறுதிச்சடங்குகளை நடத்தறதுக்கு டெத் சர்டிபிகேட் அவசியம்ங்கிறதுல உடனடியாய் சர்டிபிகேட் குடுத்தேன். உங்களுக்கு அந்த மரணத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தா, நாளைக்கே போலீஸ் கமிஷனரைப போய்ப் பார்த்து ஒரு மனு கொடுத்துட்டு வாங்க. வீணா எனக்கு போன் பண்ணி உங்க மனசுல தோணிகிட்டு இருக்கிற ஸ்பாய்லர் தாட்ஸை எல்லாம் சொல்லிட்டிருக்காதீங்க... இது விஷயமா இனிமே நீங்க எனக்கு போன் பண்ணி பேசினா, அதுக்கப்புறம் என்னோட நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்ன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டார் "

சந்திரசூடன் இறுக்கமான முகத்தோடு குந்தவையை ஏறிட்டார்.

" அதாவது மறைமுகமாய் உங்களை மிரட்டியிருக்கார்.......? "

" அதேதான் ஸார்.... ஆனா நம்மகிட்ட சரியான சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாமே அந்த டாக்டரை கார்னர் பண்ண முடியாது. அப்படி அவரை கார்னர் பண்ணனும்ன்னா அன்வர் அலி, வான்மதி இந்த ரெண்டு பேரோட உடம்புகளை தோண்டி எடுத்து ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி மரணங்களுக்கு காரணம் ஜெல்பால் ப்ளாஸ்டர்தான்னு உறுதிப்படுத்தணும்.... அதுக்கான முயற்சிகளை எங்களால பண்ண முடியாது ஸார். அதிகாரத்தில் இருக்கிற உங்களால்தான் முடியும்

" மிஸஸ் குந்தவை.... நான் லட்சணாவோட கொலையைப்பத்தி விசாரிக்கத்தான் அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு போனேன். ஆனா இப்போ அந்த ஆறு பேரோட மரணங்கள்தான் ஹாட் நியூஸா மாறிடுச்சு..... ஒருவேளை இந்த மரணங்கள் தொடர்பாய் கூட லட்சணா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் " வாஹினி குறுக்கிட்டாள்.

" தேர் ஈஸ் நோ டவுட் ஸார். திஸ் ஈஸ் ஆல்ஸோ மை இன்டென்ஷன்......"

சந்திரசூடன் மேற்கொண்டு ஏதோ பேச முயன்ற விநாடி அவருடைய செல்போன் முணுமுணுத்தது. எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தார். மும்பையிலிருந்து இன்ஸ்பெக்டர் வால்சந்த்.

ஆர்வத்துடன் செல்போனை காதுக்கு கொடுத்தார் சந்திரசூடன்

" சொல்லுங்கள் வால்சந்த்...... உங்களுடைய போனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் "

" ஸார்.... ஜெயராஜ் இன்னமும் அனஸ்தீஷியாவின் பாதிப்பிலிருந்து மீளவில்லை... சீஃப் டாக்டரிடம் பேசினேன். 24 மணி நேரம் போக வேண்டும் என்று சொல்கிறார்... ஐ.ஸி.யூ.வில் இருந்த ஜெயராஜைப் பார்த்துவிட்டு சற்று முன்புதான் வெளியே வந்தேன்.. ஹி ஈஸி இன் ஏ ஸ்டேட் ஆஃப் டீப் அனஸ்தீஷியா "

" இட்ஸ் ஒ.கே. ஜெயராஜுக்கு செல்போன் கொடுத்தது யார் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா .......? "

" இல்லை ஸார்... அது சம்பந்தமாய் மறைமுகமான விசாரணை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறேன். விரைவில் ஏதாவது க்ளூ கிடைக்கும் என்கிற நம்பிக்கையும எனக்கு இருக்கிறது. அதேசமயம் இன்னொரு சின்ன பயமும் மனதுக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை ஸார் "

" என்ன பயம் .......? "

" ஜெயராஜின் உயிர்க்கு வெளியிலிருந்து வரும் நபர்களாலோ அல்லது ஹாஸ்பிடல் ஊழியர்களாலோ ஆபத்து ஏற்படலாமோ என்கிற பயம்தான் "

" சீஃப் டாக்டரிடம் இதைப்பற்றி சொன்னீர்களா .......? "

" சொன்னேன்.... ஆனால் அதை அவர் ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.... ஜெயராஜ் இப்போது ஐ.ஸி.யூனிட்டுக்குள் இருப்பதால் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிவிட்டார். இருந்தாலும் டாக்டரின் அனுமதியோடு ஐ.ஸி.யூனிட்டுக்கு முன்பாய் செக்யூர்டி போலீஸ் ஆபீஸர்ஸ் மூன்று பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருக்கிறேன் ஸார் "

" குட் ஜாப் மிஸ்டர் வால்சந்த்.... "

" ஐ ஹேவ் டன் மை ட்யூட்டி ஸார்..... 24 மணி நேரம் கழித்து ஐ.ஸி.யூ.வில் ஜெயராஜைப் பார்க்க சீஃப் டாக்டர் எனக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார். அப்போது ஜெயராஜ் பேசக்கூடிய நிலைமையில் இருந்தால் அவனை உங்களோடு பேச வைக்கிறேன் ஸார் "

" தட்ஸ்குட்...... ஜெயராஜ் சுயஉணர்வுக்கு வந்து என்னோடு பேசக்கூடிய அந்த விநாடிக்காக இந்த நிமிஷத்திலிருந்தே காத்துக்கொண்டிருக்கிறேன்...... "

" இட் ஈஸ் டெஃபனட்லி கோயிங் டு பி ஹேப்பன் ஸார் " மறுமுனையில் இன்ஸ்பெக்டர் வால்சந்த் உறுதியான குரலில் சொல்லிவிட்டு, செல்போனின் இணைப்பினின்றும் விலக, சந்திரசூடனும் செல்போனின் உயிர்ப்பை அணைத்துவிட்டு, தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த வாஹினி, குந்தவை, இதிகாசன் மூன்று பேரையும் ஏறிட்டபடி மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார். வார்த்தைகளில் கவலை தெரிந்தது.

" அதிரா அப்பார்ட்மெண்ட்டின் மர்மமான ஆறு மரணங்களுக்கு என்ன காரணம் என்கிற கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க வேண்டிய ஒரு கட்டாயமான நிலைமைக்கு இப்ப நாம வந்திருக்கோம். காரணம் அது சம்பந்தமான தொடர்பு சம்பவங்கள் அதிர்ச்சி தர்ற மாதிரி நம்மைச்சுற்றிலும் நடந்துட்டிருக்கு. இந்த நிமிஷத்திலிருந்தே நாம செயல்பட்டாகணும். அதுக்கு உங்க மூணு பேரோட ஒத்துழைப்பு வேணும்..... "

வாஹினி குறுக்கிட்டாள்.

" ஸார்..... நாங்க உங்களுக்கு எங்களோட முழு ஒத்துழைப்பையும் தரத் தயாராய் இருக்கோம்... டெல் அஸ் வி நீட் டூ டூ ஃபர்ஸ்ட் ....... "

" நாளைக்குக் காலையில்தானே உங்க ஸ்மேஷ் பத்திரிக்கையில் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த மரணங்களைப்பத்தின நியூஸ் வரப்போகுது மேடம்.......? "

" ஆமா.... ஸார் "

" அது தலைப்புச் செய்திதானே .......? "

" எஸ் "

" என்ன கேப்ஷன்ல .......? "

" ஃப்ளாட் நெம்பர் 144

" அதிரா அப்பார்ட்மெண்ட்

" ஆறு மரணங்கள்

" இதன் பின்னணியில் இருப்பது யார் .......? "

" நோ மேடம்.... இந்த தலைப்பு சரியில்லை. நான் சொல்கிற மாதிரி தலைப்பை மாத்தி போட முடியுமா .......? "

" சொல்லுங்க... எப்படி போடலாம்.......? "

சந்திரசூடன் தலைப்பைச் சொல்ல வாஹினி, குந்தவை, இதிகாசன் மூன்று பேரின் முகங்களிலும் அதிர்ச்சி அலைகள் பரவின.

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 ]

English summary
Flat number 144 adhira apartment episode 43 by Novelist Rajeshkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X