• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“அந்த மரணங்களை எப்படி அமானுஷ்யம்ன்னு சொல்றீங்க?“ ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (47)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

திருமூர்த்தி ஒரு சில விநாடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

" ஸார்... அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டை கட்டறதுக்காக பூமி பூஜை போட்ட அன்னிக்கே, மனசு பதைபதைத்துப் போகிற அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. ஆனா வெளியுலகத்துக்கு அந்த சம்பவம் தெரியாதபடிக்கு நாங்க இருட்டடிப்பு பண்ணிட்டோம்.... "

சந்திரசூடனும், ராவ்டே பிந்தரும் இமைக்காத விழிகளோடு திருமூர்த்தியையே பார்க்க, அவர் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

" அந்த பூமி பூஜையை ஒரு புதன்கிழமை காலையில் விடியற்காலை அஞ்சு மணியிலிருந்து அஞ்சரை மணிக்குள்ளே போட்டோம். பதினைஞ்சு பேர் கொண்ட ஒரு என்ஜினியர் டீம், மேஸ்திரிகள், கட்டிடத் தொழிலாளர்கள்ன்னு ஒரு நூறு பேர் பூஜையில் கலந்துகிட்டாங்க. பிரபலமான கோயில்களிலிருந்து வரவழைக்கப்பட்ட அய்யர்கள்தான் பூஜையைப் பண்ணினாங்க. அஞ்சரை மணிக்கு பூஜை முடிஞ்சதும், ரெண்டு ஜே.சி.பி. வண்டிகளை விட்டு அஸ்திவாரம் தோண்டற வேலையை ஆரம்பிச்சோம். வேலை ஒரு பத்து நிமிஷம் நடந்திருக்கும். திடீர்ன்னு ஒரு பெண்ணோட அலறல் சத்தம் கேட்டது "

திருமூர்த்தி பேசுவதை நிறுத்திவிட்டு சில விநாடிகள் மெளனம் சாதிக்க சந்திரசூடன் பதட்டமான குரலில் கேட்டார்.

" என்னாச்சு....... ? "

" சித்தாள் வேலைக்கு வந்த ஒரு பொண்ணு ஜே.சி.பி. வண்டியோட சக்கரத்துக்கு அடியில் சிக்கிட்டா... அவளை மீட்டு எடுக்கிறதுக்குள்ளே உடல் சிதைஞ்சு ஸ்பாட்லயே எல்லா முடிஞ்சிடுச்சு...... "

" தப்பு யார் மேல....... ? "

" அந்தப்பொண்ணு மேலதான். ஜே.சி.பி. வண்டி பின்னாடி வந்துட்டிருக்கும்போது, தேவையில்லாமே அந்த இடத்தை க்ராஸ் பண்ணியிருக்கா. ஒரு கல் தடுக்கி கீழே விழுந்ததுல கண்ணிமைக்கிற நேரத்துக்குள்ளே வண்டியோட பேக் வீல் மேல ஏறிடுச்சு.... பூமி பூஜை போட்ட அன்னிக்கு அப்படியொரு அசம்பாவித சம்பவம் நடந்ததால நானும், அருளானந்தம், ராவணன் அதிர்ந்து போயிட்டோம். அந்த விபத்து விஷயம் வெளியே கசிஞ்சு மீடியாக்கள் முலமா பொதுமக்களுக்குத் தெரிஞ்சுட்டா, ஃப்ளாட் விற்பனை பாதிக்கப்படலாம்ன்னு நினைச்சு ஒரு அரசியல் தலைவர் மூலமாய் போலீஸ்கிட்ட பேசி பணம் செலவு பண்ணி அந்த விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சோம் "

Flat number 144 adhira apartment episode 47

" அந்த சித்தாள் பெண்ணோட பேர் என்னான்னு இப்ப உங்களுக்கு ஞாபகம்
இருக்கா....... ? "

" இருக்கு.... பேர் பர்வதம். அவளுக்கு அம்மா, அப்பா கிடையாது. கட்டின புருஷனும் அவளை கைவிட்டுட்டு, வேற ஒருத்தியோட போயிட்டதால அவ மட்டும் கூவம் கெனால் ரோட்டுப்பக்கமாய் இருக்கிற, ஒரு குப்பத்துல குடிசை போட்டுகிட்டு சித்தாள் வேலைக்கு போய் வாழ்க்கையை ஒட்டிட்டு வந்திருக்கா... பர்வதம் ஒண்டிக்கட்டையாய் இருந்ததால பிரச்சினை பெரிசாகாமே அப்படியே அமுங்கிடுச்சு "

சந்திரசூடன் திருமூர்த்தியை சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு கேட்டார்.

" சரி.... இப்ப நீங்க சொன்ன சம்பவத்துக்கும் அதிரா அப்பார்ட்மெண்ட்ல தற்சமயம் நடந்துட்டிருக்கிற சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம் ....... ? "

" உங்களுக்கு அமானுஷ்யமான விஷயங்களில் நம்பிக்கை இருக்கா ஸார் ....... ? "

" நீங்க எதை மீன் பண்றீங்க.... பேய் பிசாசு மாதிரியான விஷயங்களையா ....... ? "

" ஆமாம் " என்பது போல் தலையாட்டினார் திருமூர்த்தி.

" ஸாரி... எனக்கு நம்பிக்கையில்லை "

" எனக்கும் ஒரு காலத்துல இப்படித்தான் நம்பிக்கை இல்லாமே இருந்தது ஸார். ஆனா அதிரா அப்பார்ட்மெண்ட் கன்ஸ்ட்ரக்சன் வொர்க் நடந்துட்டிருந்தபோது அமானுஷ்யம்ன்னு ஒண்ணு இருக்குன்னு நம்ப வேண்டியதாயிடுச்சு. முதல் நாள் பூமி பூஜையன்னிக்கு ஒரு சித்தாள் பெண் இறந்த மாதிரியே அடுத்த ஒரு மாசத்துக்குள்ளேயே ஒரு என்ஜினியர். பேர் திலீப். இருபதடி ஆழ அஸ்திவார பில்லர் குழியில் தவறி தலைக்குப்புற விழுந்து ஸ்பாட்லயே மரணம். இதுவும் ஒரு விபத்துங்கிறதால விஷயத்தை மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு போகாமே வழக்கம்போல அரசியல் தலைவரின் செல்வாக்கோடும், போலீஸ் உதவியோடும் சம்பந்தப்பட்ட என்ஜினியர் குடும்பத்தோடு பேசி செட்டில் பண்ணிட்டோம்... "

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் இருந்த ராவ்டே பிந்தர் திருமூர்த்தியை ஏறிட்டார்.

" நடந்த ரெண்டு மரணங்களுமே விபத்துதானே ....... ? "

" ஆமா..... "

" அந்த மரணங்களை எப்படி அமானுஷ்யம்ன்னு சொல்றீங்க ....... ? "

" கன்ஸ்ட்ரக்சன் இடத்துல ஒண்ணு ரெண்டு விபத்துகள் நடக்கலாம். ஆனா அந்த மாதிரியான விபத்துகள் அதுக்கப்புறமும் தொடர்ந்து நடந்துட்டிருந்தா அதை அமானுஷ்யம்ன்னு சொல்லாமே வேற எப்படி சொல்ல முடியும் ....... ? "

சந்திரசூடன் திடுக்கிட்டார்.

" என்னது... தொடர்ந்து விபத்துகளா ....... ? "

" ஆமா ஸார்... அதிரா அப்பார்ட்மெண்ட்டை கட்டி முடிக்க ரெண்டரை வருஷ காலமாச்சு. இந்த ரெண்டரை வருஷ காலத்துல சித்தாள் பர்வதம், என்ஜினியர் திலீப் இவர்களைத் தவிர்த்து மேலும் அஞ்சு பேர் விபத்துகளில் இறந்துட்டாங்க... மேஸ்திரி சுப்பையன், எலக்ட்ரீஷியன் பரமேஷ்வரன், ப்ளம்பர் மோகனரங்கம், மணல் சப்ளை பண்ற காண்ட்ராக்டர் சுலைமான், செக்யூரிடி வீராசாமி. இந்த அஞ்சு பேர்ல ரெண்டு பேர் மின்சாரம் தாக்கியும் மூணு பேர் மாடிகளிலிருந்து கீழே விழுந்தும் இறந்துட்டாங்க... முதல் மூணு விபத்துகள் நடந்ததுமே நான், ராவணன், அருளானந்தம் மூணு பேரும் சதுரகிரி மலையில் இருக்கிற ஒரு சித்தர்கிட்ட போய் இந்தப் பிரச்சினையைப்பற்றி சொல்லி அருள்வாக்கு கேட்டோம். அவர் சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப் போயிட்டோம் "

" அந்த சித்தர் என்ன சொன்னார்....... ? "

" அப்பார்ட்மெண்ட் கட்டப்படுகிற இடம் அம்பது வருஷத்துக்கு முந்தி ஒரு மயான பூமியாய் இருந்ததாகவும், அந்த இடத்துல இன்னமும் துஷ்ட ஆவிகள் இருக்கிற காரணத்தினாலதான் துர்மரணங்கள் ஏற்படறதாகவும் சொன்னார் "
" மயான பூமின்னு... அவர் சொன்னது உண்மையா....... ? "

" உண்மைதான் ஸார்... அந்த உண்மைகூட பத்திர பதிவெல்லாம் முடிஞ்சு அப்பார்ட்மெண்ட்டை கட்டறதுக்கான ப்ளானிங் ஒர்க்கைப் பண்ணிட்டிருந்துபோது, வயசான ஒரு புரோக்கர் மூலமா தெரிஞ்சுது.... அம்பது வருஷத்துக்கு முந்தி ஒரு கட்சியைச் சேர்ந்த எம்.பி. மயானத்தையும், அதைச் சுத்தியிருந்த பகுதிகளையும் ஆக்ரமிச்சு போலி பட்டாவை தயார் பண்ணி ரெஜிஸ்ட்ரேஷனை முடிச்சிருக்கார். காலப்போக்கில் எல்லாத்தையும் வித்துட்டார். அந்த எம்.பி. இப்ப உயிரோடு இல்லை. கடந்த அம்பது வருஷ காலத்துல அந்த சொத்து எத்தனையோ கைகள் மாறி கடைசியாய் ஆறு வருஷத்துக்கு முந்தி எங்க கைக்கு வந்தது. ஏகப்பட்ட சந்தோஷத்தோடு அப்பார்ட்மெண்ட்டை கட்ட ஆரம்பித்தோம். அஸ்திவாரம் தோண்டும்போதே வெளியே வந்த மண்டையோடுகளையும், எலும்புகளையும் பார்த்து அரண்டு போயிட்டோம். அதையெல்லாம் ராத்திரியோடு ராத்திரியா டிஸ்போஸ் பண்றதுக்கே நிறைய செலவு செஞ்சோம். இந்த ஒரு காரணத்துக்காகவே ஒரு பார்ட்னரான ராவணன் பார்னர்ஷிப்பிலிருந்து விலகிட்டார். அப்பார்ட்மெண்ட்டை எப்படியோ கட்டி ஃப்ளாட்டுகளை வித்து முடிச்சதும் இன்னொரு பார்ட்னரான அருளானந்தம் சென்னையிலேயே இருக்கப் பிடிக்காமே குடும்பத்தோடு ஸ்ரீலங்கா போயிட்டார் "

" இந்த ஆறு வருஷ காலத்துல அந்த ரெண்டு பேரையும் நீங்க பார்க்கவேயில்லையா....... ? "

" பார்க்கலை.... ஆனா அருளானந்தம் மட்டும் ஒரு தடவை ஸ்ரீலங்காவிலிருந்து பேசினார் "

" ஸ்ரீலங்காவில் எந்த இடம் ....... ? "

" யாழ்ப்பாணத்துல ஏதோ ஒரு கிராமம். பேர் ஞாபகத்துல இல்லை ஸார் "

" அங்கே அவர்க்கு என்ன பிசினஸ் ....... ? "

" அனிமல் ஸ்லாட்டரிங் அண்ட் ப்ராஸ்ஸிங் சம்பந்தப்பட்ட ஒரு பிசினஸை நடத்திட்டு வர்றதாய் சொன்னார் "
சந்திரசூடனின் விழிகளில் வியப்பு ரேகைகள் பரவின.

" திருமூர்த்தி... இப்ப என்ன சொன்னீங்க.... அனிமல் ஸ்லாட்டரிங் அண்ட் ப்ராஸ்ஸிங் பிசினஸா....... ? "

" ஆமா.... ஸார் "

" அதாவது ஆடு மாடுகளை இறைச்சிக்காக வெட்டி அதை மார்க்கெட்டிங் பண்ற பிசினஸ்தானே ....... ? "

" அதேதான் ஸார்... நான்கூட அருளானந்ததுத்கிட்ட கேலியா சென்னையில் இருந்தவரைக்கும் நீ ரியல் எஸ்டேட் ஒனர். ஆனா ஸ்ரீலங்கா போனதுமே உனக்கு சம்பந்தமே இல்லாத கசாப்பு கடை பிசினஸ். எதுக்காக இதுன்னு கேட்டேன். அதுக்கு அவர் இந்த பிசினஸ்ல ஒரு நல்ல லாபத்தைப் பார்க்க முடியுதுன்னு சொன்னார் "

" உங்களுக்கு போன் பண்ணி எத்தினி நாள் இருக்கும் "

" நாலு வருஷம் இருக்கும்ன்னு நினைக்கிறேன் ஸார் "

" அதுக்கப்புறம் அவர் போன் பண்ணினாரா ....... ? "

" இல்ல ஸார்.... நடுவுல நான் ஒரு தடவை போன் பண்ணிப் பார்த்தேன். அந்தப்போன் உபயோகத்தில் இல்லைன்னு ரெக்கார்டட் வாய்ஸ் வந்தது. அதுக்கப்புறம் நான் அருளானந்ததை மறந்துட்டேன். இன்னிக்கு ராவ்டே பிந்தரை ஹாஸ்பிடல்ல பார்த்ததும்தான் எனக்குள்ளே இருக்கிற பழைய ஞாபகங்கள் எல்லாமே ஒவ்வொண்ணா எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது "

" அருளானந்தத்தோட அந்த பழைய போன் நெம்பர் இப்ப உங்ககிட்ட இருக்கா....... ? "

" இருக்கு ஸார்... ஆனா அந்த நெம்பர் நாட் இன் யூஸ் "

" பரவாயில்லை அந்த நெம்பரைக் குடுங்க... அப்படியே அருளானந்தம் யாழ்ப்பாணத்துல எந்த கிராமத்துல இருந்தார்ங்கிறதையும் கொஞ்சம் ரீ கால் பண்ணி சொல்லுங்க "

" அவர் ஏதோ ஒரு கிராமத்து பேரைச் சொன்னார் ஸார்... இப்ப எனக்கு சுத்தமா ஞாபகத்துல இல்லை.... அன்னிக்கு பேசும்போது அவரோட வாய்ஸூம் க்ளியரா இல்லை... இருந்தாலும் நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன் ஸார்.. கூகுள்ல போய் வில்லேஜ் நேம்ஸ் ஆஃப் யாழ்ப்பாணம்ன்னு டைப் பண்ணினா அங்கே இருக்கிற எல்லா கிராமங்களோட பேர்களும் ஆல்ப்படிக்கல் லிஸ்ட்டோடு கிடைச்சுடும். அதை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சுப் பார்த்தா ஏதாவது ஒரு பேர் பொறி தட்டக்கூடும் "

திருமூர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரசூடனின் செல்போன் வைபரேஷனில் உறுமியது.
எடுத்து டிஸ்ப்ளேயைப் பார்த்தார். லேசாய் முகம் மலர்ந்தார். மும்பையிலிருந்து இன்ஸ்பெக்டர் வால்சந்த் அழைத்துக்கொண்டிருந்தார். செல்போனை காதுக்கு ஒற்றியபடி

" சொல்லுங்க மிஸ்டர் வால்சந்த்.... ஏதேனும் தகவல் உண்டா ....... ? "

" எஸ் ஸார்... ஐ.ஸி.யூவில் இருந்த ஜெயராஜூக்கு இப்போது நினைவு திரும்பிவிட்டது. அவன் உங்களிடம் பேச வேண்டுமென்று விருப்பப்படுகிறான். இப்போது நீங்கள் ஃபீரியாய் இருக்கிறீர்களா ....... ? "

" ப்ரீதான்... ஜெயராஜிடம் செல்போனை கொடுங்கள் " சந்திரசூடன் சொல்லிவிட்டு காத்திருக்க, அடுத்த சில விநாடிகளில் ஜெயராஜின் குரல் சற்றே பலஹீனமாய் கேட்டது.

" நான் ஜெயராஜ் பேசறேன் ஸார் "

" என்ன ஜெயராஜ்.... உன்னோட கால்வலி இப்போ எப்படியிருக்கு....... ? "

" பரவாயில்ல ஸார்... " என்று சொன்னவன் சற்றே மெளனமாய் இருந்துவிட்டு சொன்னான்.

" ஸாரி ஸார் "

" எதுக்கு ஸாரி....... ? "

" அதிரா அப்பார்ட்மெண்ட்டில் எடுத்த வீடியோ பதிவைப் பார்த்துட்டு மாதுங்கா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோன்னு பொய் சொன்னதுக்காக"

" அப்படீன்னா வீடியோவில் இருந்தது உன்னோட ப்ரதர் இனிகோ செல்வராஜ்ன்னு உனக்கு தெரிஞ்சிருந்தும் நீ பொய் சொல்லியிருக்கே....... ? "

" ஆமா ஸார் "

" எதுக்காக அந்த பொய்....... ? "

" என்னோட ப்ரதர் இனிகோ ரொம்பவும் நல்ல டைப் ஸார். தப்பு செய்யறவங்க யாராக இருந்தாலும் அவனுக்குப் பிடிக்காது. நான் சேரக்கூடாத நபர்களோடு சேர்ந்து சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட ஆரம்பிச்சதுமே, என்கூட பேசறதை நிறுத்திட்டான். உன்னை மாதிரி... நான் இருக்கிறதே கேவலம்ன்னு சொல்லி ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணி முகத்தையே மாத்திக்க முயற்சி பண்ணினான். அவனோட ஃப்ரண்ட்ஸ் வேண்டாம்ன்னு சொன்னதால அந்த முயற்சியை கைவிட்டான். அந்த அளவுக்கு அவனுக்கு என் மேல வெறுப்பு இருந்ததால நான் அவன் கண்ணிலேயே படாமே ஒதுங்கிட்டேன். எனக்கொரு தம்பி இருக்காங்கிறதை நான் யார்கிட்டேயும் சொல்லிக்கப் பிரியப்படலை. ஆனா இனிகோவோட ஒய்ஃப் சுவாதிக்கு மட்டும் என் மேல் பரிதாபத்தோடு கூடிய அன்பு இருந்தது. நான் சென்னையில் இருந்தவரைக்கும் பத்து நாளைக்கு ஒரு தடவையாவது வந்த பார்த்துட்டு போவா. அந்த தொடர்பும் இருக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் நான் மும்பைக்கு வந்துட்டேன். என்னோட தம்பி ரொம்பவும் நல்லவன் ஸார். அவன் மேல சந்தேகப்படாதீங்க ...."

"இதோ பார் ஜெயராஜ்.... அந்த வீடியோ பதிவு ஒரு முக்கியமான ஆதாரம். உன்னோட தம்பி இனிகோ நல்லவன்னு நீ சொல்லலாம். ஆனா அதை கோர்ட் சொல்லணும்... அதுக்கு ஆதாரம் வேணும். இல்லேன்னா அவன் ஜெயிலுக்கு போக வேண்டியதுதான் "

" உங்களுக்கு ஆதாரம்தானே வேணும் ஸார் ....... ? "

" ஆமா.... "

" நான் தர்றேன் " என்றான் ஜெயராஜ்.

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 ]

English summary
Flat number 144 adhira apartment episode 47 by Novelist Rajeshkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X