“ தகவலா.. என்ன தகவல் ... சொல்லுங்க?“ - ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (46)
-ராஜேஷ்குமார்
அத்தியாயம் - 46
சந்திரசூடன் சுவாதியை ஒரு ஆச்சர்யப் பார்வையால் நனைத்தார்.
" நீ இப்ப என்ன பேர் சொன்னே..... கங்காதரனா ....... ? "
" ஆமா ஸார்... "
" அவரை எதுக்காக நீயும் உன்னோட கணவரும் பார்க்கப் போனீங்க ....... ? "
" அந்த கங்காதரனுக்கு அதிரா அப்பார்ட்மெண்ட்ல ஒரு ஃப்ளாட் இருக்கு ஸார். அந்த ஃப்ளாட்டை விக்கப் போறதா பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருந்தார். என்னோட ஹஸ்பெண்ட்டுக்கு ரொம்ப நாளாவே ஒரு ஃப்ளாட் வாங்கணும்ன்னு ஆசை. விளம்பரத்தை பார்த்துட்டு அவர்க்கு போன் பண்ணினோம்.. அவர் டயத்தை பிக்ஸ் பண்ணி நேரா ஃப்ளாட்டுக்கே வரச் சொன்னார். நாங்களும் அந்த டயத்துக்குப் போனோம். அப்பத்தான் நீங்க வீடியோவில் காட்டின சம்பவம் நடந்தது. அந்த கங்காதரனை உங்களுக்குத் தெரியுமா ஸார்? நீங்க ஆச்சர்யப்பட்டு கேட்கிறதைப் பார்த்தா உங்களுக்கு அவர் தெரிஞ்சவராய் இருக்கணும்ன்னு நினைக்கிறேன் "
" நீ சொன்னது சரிதான்.... கங்காதரன் என்னோட நண்பர்தான். லட்சணாவோட டெட்பாடியை அவரோட கார் டிக்கியில் வெச்சுத்தான் அந்தக் கொலையாளிகள் டிஸ்போஸ் பண்ணியிருக்காங்க. அது டெட்பாடின்னு தெரியாமே, உன்னோட கணவரும் ஏதோ வீட்டுச் சாமான் மூட்டைன்னு நினைச்சு உதவி பண்ணியிருக்கார். அப்படித்தானே....... ? "
" ஆமா ஸார்..... அதுதான் உண்மை "
"அது உண்மைதான்னு நீயும் உன்னோட கணவரும் எப்படி நிரூபிக்கப் போறீங்க .... ?" சந்திரசூடன் சொன்னதைக் கேட்டு சுவாதி திடுக்கிட்டாள்.
" அப்படீன்னா..... எங்களை நீங்க சந்தேகப்படறீங்களா ஸார் ....... ? "
" ஏன் சந்தேகப்படக்கூடாது .... ?
நீ நினைக்கிற மாதிரி இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. லட்சணாங்கிற ஒரு பெண்ணை ரொம்பவும் கொடூரமான முறையில் கொலை பண்ணி, உடம்புக்கு கருப்பு பெயிண்ட் பூசின கொலையாளிகள் கங்காதரனோட கார் டிக்கியில் வெச்சு டிஸ்போஸ் பண்ணியிருக்காங்க. அந்தக் கொலையாளிகளுக்கும் உன்னோட கணவர்க்கும் ஏன் ஒரு மறைமுகமான தொடர்பு இருந்திருக்கக் கூடாதுங்கிறதுதான் என்னோட சந்தேகம் ....... ? "
சுவாதியின் முகம் பயத்தில் வெளிறிப்போக கண்களில் நீர் நிரம்பி மினுமினுத்தது. குரல் தழுதழுக்கப் பேசினாள்.

" ஸார்... இது வீணான சந்தேகம்..... நான்தான் நடந்த எல்லா உண்மைகளையும் சொல்லிட்டேனே.... நாங்க அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்குப் போனது ஃப்ளாட் ஒனர் கங்காதரனைச் சந்திச்சுப் பேசத்தான். மூட்டையைத் தூக்க கஷ்டப்படறாங்களேன்னு நினைச்சு என்னோட கணவர் முன்னே பின்னே தெரியாதவங்களுக்கு உதவப் போனது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் எனக்குத் தெரியுது. இந்த விஷயம் பெங்களூர்ல இருக்கிற அவர்க்குத் தெரிஞ்சா இடிஞ்சு போயிடுவார் "
" அவர்க்கு போன் போட்டு குடு..... நான் பேசறேன் "
" வேண்டாம்.... ஸார்.... இன்னிக்கு வெள்ளிக்கிழமை. நாளைக்குக் காலையில் அவர் இங்கே வந்துடுவார். சனி, ஞாயிறு ரெண்டு நாள் இருந்துட்டு திங்கட்கிழமை காலையிலதான் பெங்களூர்க்குப் புறப்பட்டு போவார். நாளைக்குக் காலையில நானும் என்னோட கணவரும் நீங்க சொல்ற இடத்துக்கு வந்து உங்களைப் பார்க்கிறோம் ஸார் "
சுவாதி அழுகையோடு பேசிக்கொண்டிருக்கும்போதே, சந்திரசூடன் தன்னுடைய செல்போனை எடுத்தபடி வீட்டுக்கு வெளியே வந்து, ஒரமாய் நின்றபடி ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டார். மறுமுனையில் ரிங் போய் கங்காதரனின் குரல் கேட்டது.
" ஹலோ சந்திரசூடன்..... உங்களுக்கு ஆயுசு நூறு. நானே உங்களுக்கு போன் பண்ணனும்ன்னு நினைச்சுட்டிருந்தேன். நீங்களே பண்ணிட்டீங்க...... "
சந்திரசூடன் குரலைத் தாழ்த்தினார்.
" என்ன விஷயம் கங்காதரன்... எதுக்காக எனக்கு போன் பண்ணனும்ன்னு நினைச்சீங்க..... எனிதிங்க் இம்பார்ட்டண்ட் ....... ? "
" நத்திங் இம்பார்ட்டண்ட். என்னோட கார் டிக்கியில் இருந்த அந்தப் பெண்ணோட டெட்பாடி சம்பந்தப்பட்ட கேஸ் என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கிற ஒரு ஆர்வம்தான். இன்வெஸ்டிகேஷன்ல டெவலப்மெண்ட்ஸ் ஏதாவது உண்டா ....... ? "
" சம்பவம் நடந்து ரெண்டு வாரகாலத்துக்கு மேலே ஆயிடுச்சு. டெவலப்மெண்ட்ஸ் இல்லாமே இருக்குமா ? நேர்ல பார்க்கும்போது எல்லாத்தையும் சொல்றேன்... இப்ப நான் உங்களுக்கு போன் பண்ணினது ஒரு தகவலைக்கேட்டு தெரிஞ்சுக்கத்தான் "
" தகவலா..... என்ன தகவல் ....... ? "
" உங்களுக்கு இனிகோ செல்வராஜ் என்கிற பேர்ல யாரையாவது தெரியுமா ....... ? "
" இனிகோ செல்வராஜ்..... ? "
" ஆமா...... "
" கேள்விப்பட்ட பேர் மாதிரி இருக்கே ..... ? "
" கொஞ்சம் யோசனை பண்ணுங்க கங்காதரன் "
" யோசனை பண்ண வேண்டிய அவசியமேயில்லை. இப்ப ஞாபகம் வந்துடுச்சு. அதிரா அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எனக்கு சொந்தமான ஃப்ளாட்டை வாங்க ஆர்வப்பட்டு என்னை பார்க்க வந்திருந்தார் "
" எப்போ..... ? "
" ரெண்டு வாரத்துக்கு முந்தி "
" எங்கே..... ? "
" அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்குத்தான். அவர் பார்க்க வந்த அன்னிக்குத்தான்... அந்த சம்பவம் நடந்தது "
" அதாவது.....உங்க கார் டிக்கியில் பெண்ணோட டெட்பாடி வைக்கப்பட்ட சம்பவம் ..? "
" ஆமா..... "
" அந்த இனிகோ செல்வராஜூக்கு என்ன வயசு இருக்கும்..... ? "
" நாற்பது.... ப்ளஸ் "
" அவரை மறுபடியும் பார்த்தா உங்களால ரெகக்னைஸ் பண்ணிக்க முடியுமா ..... ? "
" கண்டிப்பாய்.... பை...த....பை.... இப்போ எதுக்காக இந்த என்கொயரி.... அந்த இனிகோ செல்வராஜால் ஏதாவது பிரச்சினையா ..... ? "
" பிரச்சினையில்லை.... ஒரு சின்ன குழப்பம்.....உங்களை நேரில் பார்க்கிறப்ப சொல்றேன். பை..த....பை.... அவர் அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு உங்களைப் பார்க்க வந்தப்ப தனியா வந்தாரா..... ? "
" இல்லை.... மனைவியோடு வந்தார் "
" மனைவியோட பேர் ஞாபகமிருக்கா ..... ? "
" ஒய்ஃப்பை அறிமுகம் பண்ணி வெச்சார். பேர் இப்ப ஞாபகத்துக்கு வரலை....."
" சரி.... ஃப்ளாட் அவங்களுக்கு பிடிச்சுதா ..... ? "
" பிடிச்சிருந்தது..... ஆனா விலை படியலை.... நான் சொன்ன விலைக்கும், அவங்க கேட்ட விலைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. யோசனை பண்ணிட்டு வர்றோம்ன்னு கிளம்பிப் போய்ட்டாங்க "
" அதுக்குப்பிறகு அவங்க உங்களை காண்டாக்ட் பண்ணாங்களா ..... ? "
" இல்லை..... "
" கங்காதரன்... இப்ப ஒரு முக்கியமான கேள்வி "
" என்ன..... ? "
" இனிகோ செல்வராஜும், அவரோட ஒய்ஃப்பும் உங்ககிட்ட ப்ளாட் சம்பந்தமாய் பேசிட்டிருக்கும்போது டென்ஷனோடு இருந்தாங்களா ..... ? "
" அப்படி இருந்த மாதிரி தெரியலை..... ? "
" எவ்வளவு நேரம் பேசிட்டிருந்தீங்க ..... ? "
" இருபது நிமிஷம் இருக்கலாம்.... நானும், என்னோட ஒய்ஃப்பும் கல்யாண ரிசப்ஷனுக்கு போக வேண்டியிருந்ததால சீக்கிரமாவே பேசிட்டு கிளம்பிட்டோம் "
" இட்ஸ் ஒ.கே. கங்காதரன்... நாளைக்கு காலையில் உங்களை சந்திக்கும்போது இந்த கேஸோட ப்ராக்ரஸ்ஸைப் பத்தி சொல்றேன் "
செல்போனில் பேச்சை முடித்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தார் சந்திரசூடன்.
வியர்த்துப் போயிருந்த முகத்தை சேலைத் தலைப்பால் ஒற்றிக்கொண்டே நாற்காலியினின்றும் எழுந்தாள் சுவாதி. கை உதற கும்பிட்டாள்.
" ஸ....ஸார்... என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் கூட்டுட்டு போயிடாதீங்க ஸார்"
" இதோ பார்.... இந்த கேஸ்ல நீயும் உன்னோட ஹஸ்பெண்ட்டும் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தர்றீங்கங்கிறதைப் பொறுத்துதான் என்னோட நடவடிக்கைகளும் இருக்கும். நாளைக்கு காலை பத்துமணிக்கெல்லாம் நீயும், உன்னோட ஹஸ்பெண்ட்டும் கமிஷனர் ஆபீஸூக்கு வந்து என்னைப் பார்க்கணும் "
" கண்டிப்பா வர்றோம் ஸார் "
*********
சந்திரசூடன் தன்னுடைய அலுவலகம் போய்ச் சேர்ந்து அறைக்குள் நுழைந்தபோது சாயந்தரம் ஆறு மணி.
அறையின் சுவரோரமாய் போடப்பட்டிருந்த நீளமான பெஞ்சில் உட்கார்ந்திருந்த ராவ்டே பிந்தர் எழுந்து நின்று " வணக்கம் ஸார் " என்று சொல்ல சந்திரசூடன் வியப்பில் மலர்ந்தார். குரலில் உற்சாகம் தெறித்தது.
" வணக்கம் ராவ்டே... என்ன திடீர்ன்னு ஆபீஸ் பக்கம் வந்திருக்கீங்க ..... ? "
ராவ்டே தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு நடுத்தர வயது நபரை சுட்டிக்காட்டியபடி சொன்னார்.
" நானும் இவரும் உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம் ஸார் "
" ஸார்..... யாரு ..... ? "
" சொன்னா ஆச்சர்யப்படுவீங்க "
" மொதல்ல உட்கார்ங்க...... " காலியான இருக்கைகளை காட்டிவிட்டு சந்திரசூடன் தன்னுடைய இருக்கைக்குப் போய் சாய்ந்தார். அவர்கள் உட்கார்ந்ததும் கேட்டார்.
" இப்ப சொல்லுங்க ராவ்டே.... யார் இவர்..... ? "
" அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்கு அந்த அதிரான்னு பேர் வர என்ன காரணம்ன்னு நீங்க ஒரு தடவை கேட்டப்ப நான் சொன்ன பதில் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.... ஸார் "
" நல்லாவே ஞாபகம் இருக்கு. அந்த அப்பார்ட்மெண்ட்டைக் கட்டின மூணு ரியல் எஸ்டேட் ஒனர்களான
அருளானந்தம், திருமூர்த்தி, ராவணன் மூணு பேர்களோட முதல் எழுத்துக்கள்தானே அதிரா ..... ? "
" யூ...ஆர்.... கரெக்ட் ஸார்... யூ ஹேவ் ஏ குட் மெமரி. அந்த மூணு பேர்ல ஒருத்தர்தான் இவர். திருமூர்த்தி "
ராவ்டே பிந்தர் சொல்ல சற்றே ஒடிசலாய், உயரமாய் இருந்த அந்த திருமூர்த்தி எழுந்து நின்று "வணக்கம்" சொல்ல சந்திரசூடன் புன்முறுவல் பூத்தார்.
" உட்கார்ங்க திருமூர்த்தி.... உங்க பார்ட்னர்ஸ் மத்த ரெண்டு பேர் இப்ப எங்கே இருக்காங்க ..... ? "
" தெரியலை ஸார்... அந்த அப்பார்ட்மெண்ட்டைக் கட்ட பூமி பூஜை போட்டதிலிருந்து பிரச்சினைக்கு மேல் பிரச்சினை. ஒண்ணு போனா இன்னொண்ணு வந்துட்டேயிருந்தது. பாதி அப்பார்ட்மெண்ட் வேலைகள் இருக்கும்போதே ஒரு பார்ட்னரான ராவணன் விலகிட்டார். நானும், அருளானந்தமும் ரொம்பவும் சிரமப்பட்டு பேங்க் லோன் வாங்கி மீதி போர்ஷனை கட்ட ஆரம்பிச்சோம். கவர்ன்மெண்ட் ஸைடிலிருந்து அதிகாரிகள் வந்து என்கொயரிங்கிற பேர்ல் டார்ச்சர் பண்ண, அதையும் எப்படியோ சமாளிச்சோம். எல்லா பிரச்சினைகளையும் சால்வ் பண்ணி ஒட்டு மொத்த ஃப்ளாட்டுகளையும் ஸேல் பண்ணி நாங்க ரெண்டு பேரும் ரியல் எஸ்டேட் தொழிலை விட்டுட்டு தனித்தனியா வேற வேலைளை பார்க்க ஆரம்பிச்சுட்டோம். அருளானந்தம் தான் குடியிருந்த வீட்டை வித்துட்டு ஒய்ஃபோடு ஸ்ரீலங்காவுக்கு போய் செட்டில் ஆகப்போறதாச் சொன்னார். அதே மாதிரி போயிட்டார் "
" ராவணன் இப்ப எங்கேயிருக்கார்..... ? "
" அவர் ஃபேமிலியோடு வடநாட்டுப்பக்கம் போயிட்டார். எந்த ஊர்ல இருக்கார்ன்னு எனக்குத் தெரியாது ஸார் "
" சரி... நீங்க இப்போ எங்கேயிருக்கீங்க ..... ? "
" நான் இப்ப காஞ்சிபுரத்துக்கு பக்கத்துல "தாமல்"ங்கிற கிராமத்துல ஃபேமிலியோடு செட்டில் ஆயிட்டேன். சொந்தத்துல ஒரு ஏக்கர் நிலம் இருக்கு..... நானும், என்னோட மகனும் விவசாயத்தை பார்த்துட்டிருக்கோம்... இன்னிக்கு மத்தியானம் போரூர் ராமச்சந்திரா ஹாஸ்பிடலுக்கு ஒரு மெடிக்கல் செக்கப்புக்காக வந்தேன். தன்னோட பொண்ணை பிரசவத்துக்காக அங்கே அட்மிட் பண்ணியிருந்த ராவ்டே பிந்தரை ஏதேச்சையாய் பார்த்தேன். அப்பார்ட்மெண்ட் கன்ஸ்ட்ரக்சன்ல இருக்கும்போது ஃப்ளாட் வாங்க வந்த முதல் பத்து பேர்ல ராவ்டே பிந்தரும் ஒருத்தர். அதனாலத்தான் அவரைப் பார்த்த உடனேயே எனக்கு ஞாபகம் வந்துடுச்சு. இன்னிக்கு அவர் என்கிட்ட பேசின கொஞ்ச நேரத்துக்குள்ளேயே அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த அசாதாரணமான சம்பவங்களைக் கேட்டு அதிர்ந்து போயிட்டேன். அது சம்பந்தமாய் சில விஷயங்களை உங்ககிட்ட சொல்லி ஷேர் பண்ணிக்க வந்தேன் ஸார் "
சந்திரசூடன் நாற்காலியின் நுனிக்கு ஆர்வம் தாங்காமல் தன்னிச்சையாய் நகர்ந்தார்.
" சொல்லுங்க... அந்தக்கொலைகளைப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? "
" ஸார்..... நான் இப்ப உங்ககிட்ட சொல்லப்போகிற விஷயம் ஆஃப் த ரிக்கார்ட்டாய் இருக்கணும். நான்தான் சொன்னேன்னு வெளியே தெரியக்கூடாது..... "
திருமூர்த்தியின் குரலில் ஒருவித நடுக்கம் தெரிந்தது.
**********
( தொடரும்)
[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45 ]
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications