• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

" அப்படியா என்ன பிரச்சினை சொல்லுங்க.. " ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (54)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சந்திரசூடனின் முகம் முழுவதும் வியப்பு வரிகள் ஒடியது. சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு, செல்போனின் மறுமுனையில் இருந்த ராவ்டே பிந்தரிடம் நிதானமான குரலில் கேட்டார்.

Flat number 144 adhira apartment episode 54

"என்ன சொன்னீங்க ராவ்டே...இப்ப நீங்க அந்த சஞ்சய் பட்டேல் வீட்ல இருக்கீங்களா.. ? "

" ஆமா ஸார் "

" என்ன விஷயமாய் அவனைப் பார்க்க போயிருக்கீங்க .. ? "

" நத்திங் இம்பார்ட்டண்ட் ஸார்.. அவன் குடியிருக்கிற ஃப்ளாட்டின் ஒனர் என்னோட நண்பர். பேரு குருபாதம். அவர் கடந்த ரெண்டு மூணு மாசமாவே என்கிட்ட ஒரு பிரச்சினையைச் சொல்லி அதை சால்வ் பண்ணி கொடுக்கும்படியாய் கேட்டுகிட்டேயிருந்தார்"

" என்ன பிரச்சினை.. ? "

" அவர்க்கு சொந்தமான ஃப்ளாட் நெம்பர் 202ல் குடியிருக்கிற சஞ்சய் பட்டேலை காலி பண்ணச்சொல்லி பல தடவை அவன்கிட்டே பேசியிருக்கிறார். ஆனா.. அவனோ... காலி பண்ண முடியாதுன்னு பிடிவாதமாய் மறுத்திருக்கான். அது விஷயமா பேசறதுக்காகத்தான் இங்கே வந்தேன். அவன்கூட பேசிட்டு இருக்கும்போதுதான் உங்க போன் வந்தது "
" பிரச்சினையை அவன்கிட்ட பேசி முடிச்சுட்டீங்களா.. ? "

" இல்ல ஸார்.. பேசிட்டிருந்தேன். அதுக்குள்ளே நீங்க போன்ல கூப்பிட்டீங்க "

" உங்க ஃப்ரண்ட் குருபாதம் சஞ்சய் பட்டேலை காலி பண்ணச்சொல்ல என்ன காரணம்.. ?"

" அவனோட நடவடிக்கைகள் சரியில்லைன்னு சொல்றார் "

" சரியில்லைன்னா எப்படி.. ? "

" ராத்திரி நேரங்கள்ல அந்த ஃப்ளாட்டுக்கு யார் யாரோ வந்து தங்கிட்டு போறதா சொல்றார் "

" அவர் சொல்றது உண்மையா.. ? "

" உண்மையாய் இருக்கலாம் ஸார்.. ஏன்னா இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு செக்யூரிட்டீஸ் கிடையாது. உள்ளே யார் வர்றாங்க, வெளியே யார் போறாங்கன்னு கண்டுபிடிக்கிறது ரொம்பவும் கஷ்டம்.. பை..த..பை.. அந்த சஞ்சய் பட்டேலைப்பற்றி எதுக்காக இவ்வளவு விரிவாய் விசாரிக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா.. ? "

சந்திரசூடன் செல்போனில் குரலை தாழ்த்தினார். " இப்ப அந்த சஞ்சய் பட்டேல் ஃப்ளாட்டுக்குள்ளேதான் இருக்கான்.. ? "
" ஆமா ஸார் "

" நீங்க இப்போ அவனோட பார்வைக்குப் படாத இடத்துல இருந்துகிட்டுதானே பேசிட்டிருக்கீங்க.. ? "
" ஆமா ஸார்.. கிட்டத்தட்ட ஃப்ளாட்டை விட்டு வெளியே வந்து மாடியோட வராந்தாவில் பேராபட் சுவர்க்குப் பக்கத்துல இருக்கேன் "

" சரி.. இப்ப மறுபடியும் நீங்க ஃப்ளாட்டுக்குப் போங்க.. கதவுக்கு வெளியே நின்னுகிட்டு உள்ளே அவன் என்ன பண்ணிட்டிருக்கான்னு பாருங்க "

" ஸார்.. எனக்கு டென்ஷனாயிருக்கு. விஷயம் என்னான்னு சொன்னா பரவாயில்லை.. ஹார்ட் பீட் எகிறுது "

" சொல்றேன்.. ஷாக் ஆயிடாதீங்க.. அந்த சஞ்சய் பட்டேல் நல்லவன் கிடையாது. கொலை செய்யப்பட்ட லட்சணாவோடு சேர்ந்து பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம் என்கிற ஒரு அருவெறுப்பான தொழிலைப் பண்ணிட்டு வந்திருக்கான். அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு தகராறு காரணமாய்த்தான் லட்சணா கொலை செய்யப்பட்டிருக்கணும்" சந்திரசூடன் சொல்லச் சொல்ல ராவ்டே பிந்தர் அதிர்ந்தார்.

" ஸ..ஸ..ஸார்.. சஞ்சய் பட்டேலை சாதாரணமா நினைச்சுட்டேன் "

" ஜெர்க் ஆகாதீங்க. நாம அவனை கார்னர் பண்ணனும். கொஞ்சம் அவசரப்பட்டாலும் அவன் தப்பிச்சுடுவான். அப்புறம் அவனைப் பிடிக்கிறது கஷ்டம் "

" ஸார்.. நான் இப்பவே போய் அவனை மடக்கறேன்..வீட்டுக்குள்ளதான் இருக்கான் "

" வேண்டாம் உங்களால முடியாது. நான் சொல்றதை கவனமா கேளுங்க. மெல்ல நடந்து போய், ஃப்ளாட்டுக்குள்ளே இப்ப அவன் என்ன பண்ணிட்டிருக்கான்னு பாருங்க "

" ஒரு நிமிஷம் லைன்ல இருங்க ஸார்.. நான் பார்த்துட்டு சொல்றேன் "

சந்திரசூடன் செல்போனில் காத்திருக்க, சில விநாடிகளுக்குப் பிறகு ராவ்டே பிந்தரின் குரல் கிசுகிசுப்பாய் கேட்டது.
" ஸார்.. அவன் ஹால் சோபாவில் உட்கார்ந்து டி.வி.கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டிருக்கான் "

" நீங்க அவனோட பார்வையில் படலையே .. ? "

" இல்லை "

" சரி.. அந்தப் ப்ளாட்டுக்கு வாசல் பக்கக் கதவைச் சாத்தி வெளிப்பக்கமாய் தாழ் போடற மாதிரி வசதியிருக்கா .. ? "

" இருக்கு "

" அப்படீன்னா முதல்ல... கொஞ்சம் கூட சத்தம் வராமே கதவைச் சாத்தி தாழ் போடுங்க. அவன் உள்ளே டி.வி.பார்த்துட்டு இருக்கட்டும். நான் இப்ப ஈஞ்சம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி அந்த ஸ்டேஷனோட இன்ஸ்பெக்டரையும், கான்ஸ்டபிள்களையும் அப்பார்ட்மெண்ட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்க ஸ்பாட்லயே இருங்க. முடிஞ்சா கோபிகாவோட ஃபாதர் ஆதிகேசவனுக்கு போன் பண்ணி அவரையும் துணைக்கு கூப்பிட்டுக்குங்க "

" ஆதிகேசவன் ஊர்ல இல்ல ஸார் "

" எங்கே போயிருக்கார்.. ? "

" ஹைதராபாத்தில் இருக்கிற ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டைப் பார்க்கிறதுக்காக தன்னோட டாட்டர் கோபிகாவையும் கூட்டிகிட்டு போயிருக்கார். போய் ரெண்டு நாளாச்சு. அநேகமாய் இன்னிக்கு ராத்திரி வந்துடுவார்ன்னு நினைக்கிறேன்"

" சரி.. நான் சொன்னபடி வெளிப்பக்கமாய் தாழ் போடுங்க. இன்னும் ஒரு கால் மணி நேரத்துக்குள்ளே இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்ஸூம் அங்கே வந்துடுவாங்க "

" ஸார்.. நீங்க பேசிகிட்டு இருக்கும்போதே கதவைச்சாத்தி தாழ்ப்பாள் போட்டுட்டேன். டி.வி.யோட சத்தத்துல அந்தச் சத்தம் அவனுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை ... "

" குட் ஜாப்.. நீங்க மாடி வராந்தாவிலேயே வெயிட் பண்ணிட்டு இருங்க. ஒருவேளை அந்த சஞ்சய் பட்டேல் வெளியே வர முயற்சி பண்ணி கதவைத் தட்டினாலும் அதை கண்டுக்க வேண்டாம். பக்கத்துல ஃப்ளாட்களில் இருக்கிற யாராவது வந்து கதவைத் திறந்துவிட முயற்சி பண்ணினாலும் அலவ் பண்ணிடாதீங்க "

" ஸார்.. இந்த "ஒய்" ப்ளாக்ல 202ம் நெம்பர் ஃப்ளாட்டைத் தவிர மற்ற ஃப்ளாட்களில் யாருமே குடியில்லை. இதுக்கு முன்னாடியிலிருந்த எல்லாருமே காலி பண்ணிட்டு போயிட்டாங்க. சஞ்சய் பட்டேல் கதவைத் தட்டினா அது எனக்கு மட்டும்தான் கேட்கும்.. நான் மாடி வராந்தாவில் வெயிட் பண்றேன். நீங்க போலீஸை கொஞ்சம் சீக்கிரமாய் அனுப்பி வையுங்க ஸார் "

" ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல அங்கே இருப்பாங்க. ஏதாவது பிரச்சினைன்னா எனக்கு உடனே போன் பண்ணுங்க "
சந்திரசூடன் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தார். பிறகு தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சர்வேஷிடம் திரும்பி புன்னகையோடு சொன்னார்.

" அந்த சஞ்சய் பட்டேல் இப்போ பொறிக்குள்ளே மாட்டிகிட்ட ஒரு எலி. நீங்க உடனடியா ஈஞ்சம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி இன்ஸ்பெக்டருக்கு விஷயத்தை கன்வே பண்ணிடுங்க "

சர்வேஷ் அடுத்த விநாடியே தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.

சரியாய் இருபது நிமிஷம்.

அதிரா அப்பார்ட்மெண்ட்டின் நுழைவாயிலைத் தொட்ட போலீஸ் வேன் வேகமாய் உள்ளே நுழைந்து "ஒய்" ப்ளாக்குக்கு முன்பாய் நின்றது.

துடிப்பான அந்த இள வயது இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஜீப்பினின்றும் குதிக்காத குறையாக கீழே இறங்கி, நான்கைந்து கான்ஸ்டபிள்கள் பின்தொடர, மாடிப்படிகள் ஏறி 202 நெம்பர் ஃப்ளாட் இருந்த வராந்தாப் பகுதிக்குள் பிரவேசித்தார்.
வராந்தாவின் கடைசியில் ஜன்னல் ஒரமாய் தவிப்போடு நின்றிருந்த ராவ்டே பிந்தர், இன்ஸ்பெக்டர் ராம்குமாரை எதிர்கொண்டார்.

" வாங்க இன்ஸ்பெக்டர் "

" ஆள் இன்னமும் உள்ளேதான் இருக்கானா .. ? "

" ஆமா "

" கதவைத் திறக்கச் சொல்லி சத்தம் போட்டானா.. ? "

" இல்லை.... "

இன்ஸ்பெக்டர் ராம்குமார் தனது இடுப்பின் இடது பக்கத்தில் தோல் பைக்குள் இடம் பிடித்திருந்த ரிவால்வரை உருவிக்கொண்டார்.

" ரகுபதி "

கான்ஸ்டபிள்களில் ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார்.

" ஸார் "

" டோரை ஒப்பன் பண்ணு "

கான்ஸ்டபிள் கதவுக்கு முன்பாய் போய் நின்று தாழ்ப்பாளை விலக்கி கதவைத் தள்ளினார்.
கதவு மெல்ல உள்வாங்க, ரிவால்வரை உச்சபட்ச எச்சரிக்கையோடு உயர்த்திப் பிடித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் தலையை மட்டும் உள்ளே நீட்டி எட்டிப்பார்த்தார்.

முன்புற ட்ராயிங் ரூமும், அதையொட்டியிருந்த ஹாலும் பார்வைக்குக் கிடைக்க, சுவரில் செவ்வகமாய் அப்பியிருந்த அந்த அல்ட்ரா ஹெச்.டி. ஸ்மார்ட் லெட் டிவி ம்யூட் வால்யூமில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது. ஃபேன் நிதான வேகத்தில் சுழன்று கொண்டிருக்க, ஜன்னல்களை போர்த்தியிருந்த திரைச்சீலைகள் மெலிதாய் அசைந்தது.
ராவ்டே பிந்தரை இன்ஸ்பெக்டர் பார்த்தார்.

" உள்ளே யாரும் இருக்கிற மாதிரி தெரியலையே .. ? "

" அவன் உள்ளேதான் இருப்பான் இன்ஸ்பெக்டர். தப்பிச்சு போக வழியில்லை... இது த்ரீ பெட்ரூம் ஃப்ளாட் ஏதாவது ஒரு ரூம்ல பதுங்கியிருக்கலாம் "

இன்ஸ்பெக்டரின் கண்ணசைவில் கட்டளைகள் பிறக்க, கான்ஸ்டபிள்கள் நான்கு பேரும் ஃப்ளாட்டுக்குள் நுழைந்தார்கள்.

" பி.. அலர்ட்.. அவன் கையில ஏதாவது வெப்பன் இருக்கலாம். ரூமுக்குள்ளே அவசரப்பட்டு எட்டிப் பார்த்துட வேண்டாம். பார்வை நாலாபக்கமும் இருக்கட்டும்.. "

எல்லோரும் ஹாலின் மையத்துக்கு வந்து நின்றார்கள். இன்ஸ்பெக்டர் ராம்குமார் ராவ்டே பிந்தரிடம் திரும்பினார்.
" இந்த ஃப்ளாட்டுக்கு பின்பக்க வழி எதுவும் இல்லைன்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா .. ? "

" தெரியும்... இது ரெண்டாவது மாடி. மொட்டைமாடிக்குப் போகணும்ன்னா கூட முன்கதவுப் பக்கமா வெளியே வந்துதான் போகணும்.. அவன் நிச்சயமா.. இந்த வீட்டுக்குள்ளதான் எங்கேயோ பதுங்கியிருக்கணும் "

ராவ்டே பிந்தர் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்ஸ்பெக்டர் அவரை கையமர்த்திவிட்டு குரலைத் தாழ்த்தி கிசுகிசுத்தார்.

" ஏதோ சத்தம் கேட்கலை.. ? "

" சத்தமா இல்லையே"

" கொஞ்சம் உன்னிப்பா கேளுங்க. எதையோ நகர்த்தி வைக்கிற மாதிரியான சத்தம் "

ராவ்டே பிந்தர் தன்னுடைய ஐம்புலன்களையும் காதுகளுக்கு கொடுத்தார். சில விநாடிகளின் நிசப்தத்திற்குப் பிறகு..
அந்தச் சத்தம் கேட்டது

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53 ]

English summary
Flat number 144 adhira apartment episode 54 by rajeshkumar .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X