For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ எதுக்காக அந்தக் கொலை ..? ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (52)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

Flat number 144 adhira apartment episode 52

சூப்பரிண்டென்ட் கணேசபாண்டியன் ஜெயிலர் சம்பத்தை வியப்போடு பார்த்தார்.

" என்ன சொல்றீங்க சம்பத்.. பண்டிகையைக் கொண்டாட அவசியம் இருக்காதா.... ? "

" ஆமா ஸார் "

" என்னாச்சு.... ? "

" நாம யாரை வெச்சு பண்டிகையைக் கொண்டாட நினைச்சோமோ அவங்களே நேரிடையாய் வந்து எல்லா உண்மைகளையும் சொல்றேன்னு ஒத்துகிட்டாங்க "

" யாரு திரவியமும், பாலாவுமா.... ? "

" ஆமா ஸார் "

" இப்ப அவங்க எங்கே.... ? "

" வெளியே நின்னுட்டிருக்காங்க ஸார் " என்று சொன்ன ஜெயிலர் சம்பத் அறைக்கு வெளியே எட்டிப்பார்த்து கையசைத்தபடி குரல் கொடுத்தார்.

" ம்.. உள்ளே வாங்க "

கணேசபாண்டியன், சந்திரசூடன், சர்வேஷ் மூன்று பேரும் திகைப்பு பரவிய முகங்களோடு காத்துக்கொண்டிருக்க, அடுத்த சில விநாடிகளில் திரவியமும், பாலாவும் தயக்க நடைபோட்டபடி மிரட்சியான பார்வைகளோடு உள்ளே வந்தார்கள். சற்றே அழுக்கான அந்த வெள்ளைநிற கைதிகளுக்கான யூனிபார்மில் அவர்களுடைய திடகாத்ரமான உடம்புகள் சிரமத்தோடு சிறைப்பட்டிருந்தன.

நல்ல உயரத்தோடு மாநிறத்தில் இருந்த திரவியமும், நடுத்தர உயரத்தோடு சிவப்பாய் இருந்த பாலாவும் கணேசபாண்டியனுக்கு ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு, பவ்யமாய், மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியபடி எதிரே வந்து நின்றார்கள்.

இருவரையும் ஒரு கூர்மையான பார்வையால் துளைத்தபடி கணேசபாண்டியன் கேட்டார்.

" பண்டிகை கொண்டாடப் போகிற விஷயம் உங்க ரெண்டு பேர்க்கும் எப்படி தெரிஞ்சுது.... ? "

திரவியம் பவ்யமாய் ஒரடி முன்னால் வந்தபடி சொன்னான். " ஸார்... இந்த ஜெயில் வாழ்க்கை எங்களுக்கு பழகிப்போன ஒண்ணு. அதனால இங்கே எதுமாதிரியான விசாரணை நடந்தாலும் அதுக்குப்பின்னாடி ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சிடும். நேத்து சாயந்தரமே நீங்க எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு அந்த காசிமேடு அடிதடி கேஸைப்பத்தி விசாரிக்கிற மாதிரி தேவையில்லாத சில கேள்விகளைக் கேட்டீங்க.

ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிற அதிரா அப்பார்ட்மெண்ட்டோட பேரையும் ஒரு தடவை சொன்னீங்க.அப்படி பேசிட்டு இருக்கும்போதே எங்க ரெண்டுபேரோட முகபாவனைகளையும் உன்னிப்பா கவனிச்சீங்க. பக்கத்துல நின்னுட்டிருந்த ஜெயிலரையும், வார்டனையும் நிமிஷத்துக்கு ஒரு தடவை பார்த்து, லேசா சிரிச்சீங்க. அப்பவே நானும் பாலாவும் உஷாராயிட்டோம். இன்னிக்குக் காலையில் எங்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமே செல்லுக்குள்ளேயே உட்கார்த்தி வெக்கவும், எங்களோட சந்தேகம் அதிகமாயிடுச்சு.. அதனால நாங்க ஒரு முடிவுக்கு வந்தோம். பண்டிகை என்கிற பேர்ல நீங்க எங்களை டார்ச்சர் பண்றதுக்கு முன்னாடியே உண்மைகளை ஒத்துக்கறதுதான் நல்லதுன்னு நினைச்சு அதை ஜெயிலர்கிட்ட சொன்னோம். அவர் இங்கே கூட்டிட்டு வந்துட்டார்"
திரவியம் பேசி முடிக்க கணேசபாண்டியன் தனக்கு முன்பாய் உட்கார்ந்திருந்த சந்திரசூடனை ஒரு சிறு சிரிப்போடு பார்த்தார்.

" பண்டிகை என்கிற அந்த வார்த்தை எப்படி வேலை செஞ்சிருக்குன்னு பார்த்தீங்களா ஸார்... ? இனி நீங்க இவங்க்கிட்ட என்ன கேள்விகளை கேட்கணுமோ அதை கேட்கலாம்... "

சந்திரசூடன் அந்த இருவரையும் உன்னிப்பாய் பார்த்தபடி நிதானமான குரலில் கேட்டார்.

" ரெண்டு பேரும் உண்மையை ஒத்துக்கத்தானே இங்கே வந்திருக்கீங்க... ? "

" ஆமா ஸார் "

" லட்சணாவை கொலை பண்ணினது யாரு... ? "
திரவியம் சில விநாடிகள் மெளனித்துவிட்டு " நா....நாங்கதான் ஸார் ... ? " என்றான்.

" எதுக்காக அந்தக் கொலை ... ? "

" காரணம் என்னான்னு ... எங்களுக்கு தெரியாது ஸார் "

" கொலையை செய்யச்சொன்னது யாரு... ? "

" அதுவும் தெரியாது ஸார். அவங்க யார்ன்னும் கண்டுபிடிக்கவும் முடியாது. அது ஒரு அசைன்மெண்ட். செஞ்சு முடிச்சோம். நிறைய பணம் கொடுத்தாங்க "

" எவ்வளவு... ? "

" இருபது லட்சம்.. வழக்கமாய் அஞ்சு லட்சத்தோடு பேரம் முடிஞ்சுடும்.. ஆனா இதுக்கு இருபது லட்சம் வரை பேரம் பேசினோம். கொடுத்துட்டாங்க..

" நிஜமா அவங்க யார்ன்னு உங்க ரெண்டு பேர்க்கும் தெரியாதா... ? "

" தெரியாது ஸார்.. இது மாதிரியான ஆளைத் தீர்த்துக் கட்டற வேலையெல்லாம் ரகசியமான முறையில் காதும் காதும் வெச்சமாதிரி நடந்து முடிஞ்சுடும் "

சில விநாடிகள் வரை அவர்களையே மெளனமாய் பார்த்துக்கொண்டிருந்த சந்திரசூடன் பிறகு நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

" லட்சணாவை எந்த இடத்துல வெச்சு மர்டர் பண்ணீங்க.. இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லாதே.. " என்றவர் பாலாவிடம் திரும்பினார் " நீ சொல்லு "

பாலா மிரண்ட பார்வையோடு முன்னால் வந்து பயம் கலந்த குரலில் பேச ஆரம்பித்தான்.

" ஸார்... பெருங்குடி பக்கம் இருக்கிற ஒரு அநாதை இல்லத்துக்கு போயிட்டு அந்த மத்தியான நேரத்துல யாருமில்லாத ரோட்ல லட்சணா வந்துட்டிருந்தா. நாங்க ஒரு வேன்ல போய் அட்ரஸ் கேட்கிற மாதிரி நடிச்சு அவளை மடக்கினோம். அவ முகத்துக்கு ஒரு செடக்டீவ் செண்ட்டை ஸ்பிரே பண்ணினோம். லட்சணா மயக்கமாயிட்டா. தூக்கி போட்டுகிட்டு எங்க இடத்துக்கு கொண்டு வந்தோம். அவளுக்கு மயக்கம் தெளிஞ்சதும் நானும், திரவியமும் அவளைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு ஃபோர்ஸ் பண்ணினோம். கோபத்துல அவளை அடிச்சோம். அந்த அடியை தாங்கிக்க முடியாமே.... "

பாலா பேசப்பேசவே சந்திரசூடன் தன்னுடைய வலது பூட்ஸ்காலை உயர்த்தி, அவனுடைய அடி வயிற்றில் பலங்கொண்டவரைக்கும் ஒங்கி ஒரு உதைவிட்டார்.

பாலா ஒரு சதைப்பந்தாய் மாறி எகிறிப்போய் சுவரோரமாய் விழுந்தான். உதட்டோரம் ரத்தத்துளியொன்று எட்டிப்பார்த்து வழியலாமா வேண்டாமாவென்று யோசித்தது. பின்னந்தலையில் வலி தெறித்தது.
அவன் கைகளை ஊன்றி சிரமமாய் எழுந்து உட்கார்ந்தபடி சந்திரசூடனைப் பார்த்து மெல்லச் சிரித்தான்.
" ஸார்... இப்படியெல்லாம் மோசமா அடி வாங்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் எல்லா உண்மைகளையும் உங்ககிட்ட சொல்ல வந்தோம். ஆனா இப்படி அடிக்கிறது எந்த வகையில நியாயம் ஸார்.. ? "

" ஒரு பெண்ணை கொலை பண்ணிட்டு வந்து நியாய அநியாயத்தைப்பத்தி நீ பேசறியா .. ? "

சந்திரசூடன் சொல்லிக்கொண்டே மேலும் ஆவேசமாகி, எழுந்து பாலாவை மறுபடியும் உதைக்க முயன்ற விநாடி திரவியம் குரல் கொடுத்தான்.

" ஒரு நிமிஷம் ஸார் "

கோபம் குறையாமல் திரும்பினார் சந்திரசூடன்.

" நீ என்னடா... சொல்லப்போறே .. ? "

" ஸார்... நீங்க நினைக்கிற மாதிரி அந்த லட்சணா பொண்ணு அவ்வளவு நல்லவ கிடையாது. அவளைப்பத்தி வெளியே விசாரிச்சுப் பார்த்துட்டுத்தான் போட்டுத் தள்ளற முடிவுக்கு வந்தோம் "

" என்ன... பிளேட்டைத் திருப்பிப் போட்டு நீயும் அவனும் சேர்ந்து பண்ணின கொலையை நியாயப்படுத்தப்படுத்த பார்க்கறீங்களா .. ? "

" ஸார்.. நாங்க இப்ப என்ன சொன்னாலும் அதை நம்பறதுக்கு உங்களுக்கு கஷ்டமாய்த்தான் இருக்கும். ஆனா அதை நீங்க நம்பித்தான் ஆகணும்... கொஞ்சம் பொறுமையா நாங்க சொல்றதைக் கேளுங்க ஸார் "

சந்திரசூடன் சற்றே கோபம் தணிந்தவராய் நாற்காலிக்கு சாய்ந்தார்.

" நீ இப்ப என்ன சொல்லப்போறே... சொல்லு "
திரவியம் குரலைத் தாழ்த்தினான்.

" ஸார்... "பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம்" என்கிற வார்த்தைகளை நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா.. ? "

சந்திரசூடன் தன்னையும் அறியாமல் நிமிர்ந்து உட்கார்ந்தார். மூளைப் பிரதேசத்துக்குள் ஒரு வெளிச்சம் அடித்தது.
" ஸ்மேஷ் பத்திரிக்கையின் எடிட்டர் வாஹினி சொன்ன அதே வார்த்தைகளை இவனும் சொல்கிறான்.. ? "

"ஆனால் இந்த வார்த்தைகள் தெரியும் என்பது போல நாம் காட்டிக்கொள்ளக்கூடாது"

திரவியம் பேச்சைத் தொடர்ந்தான்.

" என்ன ஸார்.. அந்த வார்த்தைகளை நீங்க கேள்விப்பட்டதில்லைன்னு நினைக்கிறேன் "

" ஆமா.. இன்னிக்குத்தான் அதுவும் நீ சொல்லித்தான். அது என்ன "பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம்.. ? "

" அது வந்து ஸார்.. சமீப காலமா பனிரெண்டு வயசிலிருந்து பதினைஞ்சு வயசுக்குள்ளே இருக்கிற சின்னப் பொண்ணுகளை கடத்திகிட்டு போய் விபச்சாரத்தில் ஈடுபடுத்தற ஒரு கும்பலோட பேருதான் பீடோ ஃபைலிக். நம்ம நாட்டை சுத்திப் பார்க்கிறதுக்காக வர்ற வெளிநாட்டு டூரிஸ்ட்களுக்கு இந்த சின்னப் பொண்ணுகளை அனுப்பி... கட்டாயமா.... "

" சொல்லாதே ... புரியுது... அது தான் செக்ஸ் டூரிஸம் இல்லையா.. ? "

" ஆமா ஸார்... "

" சரி, நீ இப்ப சொன்ன வார்த்தைகளுக்கும், லட்சணாவுக்கும் என்ன சம்பந்தம்.. ? "

" அந்த லட்சணா பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸத்துக்கு எதிராய் போராடுகிற மாதிரி பாவ்லா பண்ணிகிட்டே அந்தத் தொழிலை பண்ணிட்டு இருக்கிற நபர்களோடு தொடர்பு வெச்சுகிட்டு பணத்தை டாலர் கணக்குல சம்பாதிச்சுட்டு இருக்கா ஸார் "

சந்திரசூடனை அதிர்ச்சி புரட்டிப் போட்டது. உறைந்து போன பார்வையோடு திரவியத்தையே பார்த்தார்.

" இப்ப நீ சொன்னது உண்மையா .. ? "

" அப்பட்டமான உண்மை ஸார்... நாங்க இங்கே வந்ததே.. எங்களுக்குத் தெரிஞ்ச எல்லா உண்மைகளையும் சொல்லத்தான்.. இப்ப நானும் பாலாவும் சொன்னதை நீங்க எங்களோட வாக்குமூலமாவே எடுத்துகிட்டாலும் சரிதான்.. நாளைக்கு கோர்ட்லேயும் இதையேதான் சொல்லப் போறோம் "

" லட்சணாவோட பின்னணியைப் பார்த்தா நீ சொல்ற மாதிரி அவ டாலர் கணக்குல பணம் சம்பாதிச்ச மாதிரி தெரியலையே ? வெஸ்ட் மாம்பலத்தில் இருக்கிற ஒரு லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கிகிட்டு ஜர்னலிஸ்ட் வேலையைப் பார்த்துட்டு இருந்திருக்கா .. ? "

" அப்படி நடிச்சிருக்கா ஸார் "

" அது நடிப்புன்னு உனக்கு எப்படி தெரியும் .. ? "

" அந்த பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம் க்ரூப்பைச் சேர்ந்த ஒருத்தன் சொன்னான் ஸார்.. அவன் அதிரா அப்பார்ட்மெண்ட்ல தான் குடியிருக்கான் "

" என்னது... அதிரா அப்பார்ட்மெண்ட்டா.. .. ? "

" ஆமா ஸார் "

" அவன் பேரு என்ன.. ? "

" சொல்றேன் ஸார்... ஆனா நாங்கதான் சொன்னோம்ன்னு அவனுக்குத் தெரியாமே விசாரணை பண்ணுங்க ஸார் "

" நீ மொதல்ல ஆள் யார்ன்னு சொல்லு "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51 ]

English summary
Flat number 144 adhira apartment episode 52 by novelist rajesh kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X