• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ எ..எ..என்னது ஜெயில்லயா..? ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (51)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

உதயா சொன்னதைக்கேட்டு சந்திரசூடன் தன் உதடுகளில் மெலிதான புன்னகையொன்றை தவழ விட்டார்.

" மொதல்ல நீ விஷயத்தைச் சொல்லு. அதை நம்பறதா வேண்டாமான்னு நான் சொல்றேன்"

உதயா சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு சற்றே கம்மிப்போன குரலில் பேச ஆரம்பித்தான்.

" ஸார்... நீங்க நினைக்கிற மாதிரி அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த கொலைச் சம்பவங்களில் எனக்கோ, மாஜி மினிஸ்டர் செங்குட்டுவனுக்கோ எந்த ஒரு தொடர்பும் இல்லை "

" அந்தப் பத்திரிக்கைகாரப்பெண் லட்சணாவை கொலை பண்ணினது நீதான்னு எனக்கொரு தகவல் வந்ததே....... ? "

" அது பொய் ஸார் "

" யாரோ ஒரு ஆள் உனக்கு போன் பண்ணி லட்சணாவை தீர்த்துக்கட்டற பொறுப்பை உன்கிட்ட கொடுத்தப்ப நீ சரின்னு சொன்னதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு. நீ பொய் சொல்லி தப்பிக்க முடியாது"

Flat number 144 adhira apartment episode 51

" ஸார்... அந்தப்பெண் லட்சணாவை தீர்த்துக்கட்டற பொறுப்பை நான் ஏத்துக்கிட்டது உண்மைதான். ஆனா அதுக்கப்புறம் ரெண்டு நாள் கழிச்சு நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் "

" ஏன்....... ? "

" மனசு கேட்கலை ஸார்.. எனக்கு அனுப்பி வெச்சிருந்த போட்டோவைப் பார்த்தேன். பொண்ணு ரொம்ப அழகாயிருந்தா.. பணத்தை வாங்கிட்டு நான் கொலை பண்றவன்தான் ஸார். ஆனா அந்தப் பொண்ணோட முகத்தைப் பார்த்ததும் எனக்கு மனசு வரலை. வேண்டாம்ன்னு விலகிட்டேன்"

" நம்ப முடியலையே....... ? "

" ஸார்.. நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. உண்மை இதுதான். அந்தப் பொண்ணை நான் கொல்லலை "

" சரி.. லட்சணாவை தீர்த்துக்கட்டற பொறுப்பை உனக்கு கொடுத்தது யாரு....... ? "

" தெரியாது ஸார்... நான் இப்படி சொல்றதும் பொய்ன்னு நீங்க நினைக்கலாம். ஆனா இதுதான் நிஜம்.. எனக்கு போன் பண்ணி ஒருத்தரை கொலை செய்யும் பொறுப்பை கொடுக்கிற நபர்கள் தங்களை யார்ன்னு வெளிப்படுத்திக்க விரும்பறதில்லை.. அடையாளம் தெரியாமே இருக்கிறதுக்காக ஒரு தடவை மட்டுமே உபயோகிக்கக்கூடிய போலியான சிம் கார்டுகளை போட்டு பேசுவாங்க. பேசின பணத்தை ரகசியமான ஒரு இடத்துல வெச்சுட்டு தகவல் கொடுப்பாங்க. நான் என்னோட ஆட்களை அனுப்பி எடுத்துக்குவேன்"

"லட்சணாவை கொலை செய்யற முயற்சியிலிருந்து நீ விலகிட்டதா சொல்றே. ஆனா அந்தப்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கா.. அதைப் பண்ணினது யாரு.. ? "

உதயா மெளனமாய் இருந்தான்.

" சந்திரசூடன் தன் கையில் வைத்திருந்த ரிவால்வரை அசைத்தபடி கேட்டார்.

"நீ மெளனமாய் இருக்கிறதைப் பார்த்தா உனக்கு பதில் தெரியும்ன்னு நினைக்கிறேன்"

" தெரியும் " என்பது போல் தலையசைத்தான் உதயா.

" யாரு.. ? "

" போன வருஷம் வரைக்கும் என்கிட்ட வேலை பார்த்த ரெண்டு பேர். ஒருத்தன் பேரு திரவியம். இன்னொருத்தன் பேரு பாலா. ஒரு சின்ன கருத்து வேறுபாடு காரணமாய் ரெண்டு பேரும் என்னை விட்டு, விலகிப்போய் காசிமேடு ஏரியாவில் தனியாய் தொழில் பண்ணிட்டிருந்தாங்க. நான் லட்சணாவை முடிக்கிற முயற்சியிலிருந்து பின்வாங்கியதும் அந்தப் பொறுப்பை திரவியத்துக்கும், பாலாவுக்கும் அந்த பார்ட்டி கொடுத்து காரியத்தை நிறைவேத்திகிட்டாங்க"

" லட்சணாவை கொலை பண்ணினது திரவியமும், பாலாவும்தான்னு உனக்கு நிச்சயமா தெரியுமா.. ? "

" தெரியும் ஸார் "

" எப்படி தெரியும்.... ? "

" அவங்களே என்கிட்ட சொன்னாங்க "

" அந்த ரெண்டு பேரும் இப்ப எங்கே இருக்காங்க "

" ஜெயில்ல ஸார் "

" எ..எ..என்னது ஜெயில்லயா.. ? "

" ஆமா ஸார்... போன வாரம் காசிமேட்ல ஒரு அடிதடி சம்பவம். அந்தச் சம்பவத்துக்கு காரணம் இவங்கதான்னு போலீஸ் நினைச்சு அரஸ்ட் பண்ணி, கோர்ட்ல கொண்டு போய் நிறுத்த ஜட்ஜ் பதினைஞ்சு நாள் ரிமாண்ட்ல வெக்கச் சொல்லி ஆர்டர் குடுத்துட்டார்"

" எந்த ஜெயில்.... ? "

" சென்ட்ரல் ஸார் "

சந்திரசூடன் சர்வேஷிடம் திரும்பினார்.

" சர்வேஷ்... அங்கே இப்ப ஜெயில் சூப்ரிண்டெண்ட் யாரு.... ? "

" கணேசபாண்டியன் ஸார் "

" அவரோட நெம்பர் உங்ககிட்ட இருக்கா .... ? "

" ம்... இருக்கு ஸார் "

" போன் போட்டு பேசி அந்த ரெண்டு பேரைப்பத்தியும் விசாரிங்க "

" எஸ்... ஸார் "

சர்வேஷ் தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு அந்த அறையினின்றும் வெளியேறினார்.
சந்திரசூடன் பார்வை மறுபடியும் உதயாவின் பக்கம் திரும்பியது. வார்த்தைகள் கனல் துண்டங்களாய் தெறித்தன.
" இதோ பார்.. இப்ப நீ என்கிட்ட பேசினதில் ஒரு வார்த்தை பொய்யாய் இருந்தால் கூட இந்த துப்பாக்கியில் இருக்கிற தோட்டாக்களுக்கு உன்னோட மார்புல இடம் கொடுக்க வேண்டியிருக்கும். ஏதோ உன்னை மிரட்டறதுக்காக நான் இந்த வார்த்தைகளை சொல்லலை.. ஒரு பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கா. 144ம் நெம்பர் அதிரா அப்பார்ட்மெண்ட்டோடு சம்பந்தப்பட்ட ஆறு பேர் மர்மமான முறையில் இறந்து போயிருக்காங்க. அந்த ஆறு பேர்ல நாலு பேர் பெண்கள். இந்த மரணங்களுக்குப் பின்னாடி இருக்கிற நபர்கள் யாராக இருந்தாலும் சரி, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவங்க. அந்த குற்றவாளிகளுக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ யாராவது உதவி பண்ணியிருந்தா அவங்களும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது "

உதயா கைகள் நடுங்க கும்பிட்டான்.

" ஸார்... நான் இப்ப உங்க கூட பேசினதில் ஒரு வார்த்தை கூட பொய்யில்லை... பணத்துக்காக நான் இதுவரைக்கும் ஏழெட்டு பேரை போட்டுத் தள்ளியிருக்கேன். அந்த ஏழெட்டு பேரும் நல்லவங்க இல்லை. அரசியலிலும், பொது வாழ்விலும் நல்லவங்க மாதிரி நடிச்சுகிட்டே பலவிதமான குற்றங்களைப் பண்ணினவங்க. கந்துவட்டி, கள்ளசாராயம், கட்டப்பஞ்சாயத்து மூலமா பல குடும்பங்களை நாசம் பண்ணினவங்க. அவங்களுக்கு எதிராய் இருக்கிற ஒரு போட்டி கும்பல் என்னை மாதிரியான கூலிப்படை ஆட்களுக்கு பணம் கொடுத்து அவங்களைப் போட்டுத்தள்ளச் சொல்றாங்க. அப்படிப்பட்ட வேலையைச் செய்யும்போது அவங்களையெல்லாம் ஏதோ என்கவுண்டர் பண்ணினமாதிரியான ஒரு சந்தோஷம் எனக்கு கிடைக்கும். அதுக்காக நான் செஞ்சது நியாயம்ன்னு சொல்லமாட்டேன். கோர்ட்ல எம்மேல பத்துக்கும் மேற்பட்ட கேஸ் இருக்கு... அந்த கேஸெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து, தீர்ப்பு சொல்றதுக்கு எப்படியும் இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு வருஷமாவது ஆயிடும். அதுவரைக்கும் நான் உயிரோடு இருப்பேனா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஏன்னா எனக்கும் எதிரிகள் இருக்காங்க. நான் எங்கேயாவது வசமா மாட்டும்போது எப்படியும் என்னையும் போட்டுத்தள்ளிடுவாங்க "
உதயா குரல் உடைய பேசிக்கொண்டிருக்கும்போதே சர்வேஷ் உள்ளே வந்து, தன் கையில் இருந்த செல்போனை சந்திரசூடனிடம் நீட்டியவாறு மெதுவான குரலில் சொன்னார்.

" ஸார்... ஜெயில் சூப்பரிண்டென்ட் கணேசபாண்டியன் லைன்ல இருக்கார். உங்ககிட்ட பேசணும்ன்னு சொன்னார். ஏ லிட்டில் சீக்ரெட்டிவ் "

சந்திரசூடன் செல்போனை வாங்கிக்கொண்டு அறையினின்று வெளிப்பட்டார்.

*******
மறுநாள் காலை பத்துமணி

மத்திய சிறையின் சூப்பரிண்டென்ட் கணேசபாண்டியனுக்கு முன்பாய் சந்திரசூடனும், சர்வேஷும் உட்கார்ந்திருந்தார்கள். மேஜையின் மேல் இருந்த பீங்கான் கோப்பைகளில் சூடான டீ தன்னுடைய ஆவியை சிறிது சிறிதாக விட்டுக் கொண்டிருக்க, ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால் தொலை தூரத்தில் கைதிகளின் நடமாட்டம் நிசப்தமாய் தெரிந்தது.

கணேசபாண்டியன் தனக்கு முன்பாய் இருந்த டெலிபோனின் இண்டர்காம் ரிஸீவரை எடுத்துக்கொண்டு ஒரு பட்டனை அழுத்திவிட்டு பேசினார்.

" ஜாபர், எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டீங்களா .... ? "

" பண்ணிட்டேன் ஸார் "

" மொத்தம் எத்தனை பேர் .... ? "

"அஞ்சு பேர் ஸார் "

" போதுமா.... ? "

" போதும் ஸார் "

" பண்டிகை விஷயம் வெளியில் கசியலையே .... ? "

" இல்ல ஸார் "

" இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல நாங்க செல்லில் இருப்போம். வார்டன் பத்ரி ஸ்பார்ட்ல இருக்காரா.... ? "

"இருக்கார் ஸார் "

" தட்ஸ் ஃபைன் " என்று சொன்ன கணேசபாண்டியன் டெலிபோன் ரீஸிவரை வைத்து விட்டு சந்திரசூடனை ஏறிட்டார்.

" ஸார் .... டீ சாப்பிடுங்க. ஒரு அஞ்சு நிமிஷத்துல நாம புறப்பட வேண்டியிருக்கும் "

சந்திரசூடனும், சர்வேஷும் டீ கோப்பைகளை கையில் எடுத்துக் கொண்டார்கள். ஒரு வாய் டீயை விழுங்கியதும் சந்திரசூடன் கேட்டார்.

" மிஸ்டர் கணேசபாண்டியன்.. நேத்திக்கு நீங்க என்கூட செல்போன்ல பேசும்போது பண்டிகை என்கிற ஒரு வார்த்தையைச் சொன்னீங்க. அந்த வார்த்தைக்கு என்ன விளக்கம்ன்னு உங்ககிட்டே நான் கேட்டப்ப, நாளைக்கு நேர்ல ப்ரிஸனுக்கு வந்துடுங்க. உங்களுக்குப் புரியும்ன்னு சொன்னீங்க. இப்போ நானும் சர்வேஷும் உங்களுக்கு முன்னாடி உட்கார்ந்துட்டிருக்கோம். இப்பவாவது அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னான்னு சொல்லலாமே.... ? "

கணேசபாண்டியன் மெல்லச் சிரித்து விட்டு சொன்னார்.

" ஸார் ..உங்களுக்கு இது தெரியாத விஷயமில்லை. எந்த ஒரு சிறைச்சாலையை எடுத்துக்கிட்டாலும் சரி, அங்கே மூணு வகையான குற்றவாளிகள் இருப்பாங்க. முதல்வகை ஒரு குற்றத்தை பண்ணிட்டு முதல்தடவையாய் சிறைக்கு வர்றவங்க... ரெண்டாவது வகை குற்றம் செய்யாமலேயே சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளுன்னு கோர்ட்டால் தீர்ப்பு கொடுக்கப்பட்டு சிறைக்கு வந்தவங்க. மூணாவது வகை சிறைக்கு வர்றதையே வழக்கமா வெச்சுகிட்டு எதுக்கும், யாருக்கும் பயப்படாமே இருக்கிற குற்றவாளிகள். இதுல முதல் ரெண்டு வகை குற்றவாளிகளை ஒரு சாதாரண விசாரணைக்கு உட்படுத்தினாலே போதும், பயந்து எல்லா உண்மைகளையும் சொல்லிடுவாங்க. ஆனா மூணாவது வகை குற்றவாளிகளிடமிருந்து அவ்வளவு சுலபத்துல ஒரு சின்ன உண்மையைகூட வரவழைக்க முடியாது. அவங்ககிட்டயிருந்து உண்மையை வரவழைக்கணும்ன்னா வேற ஒரு மாதிரியான விசாரணையை கையாளுவோம். அந்த விசாரணை முறைக்கு நாங்க வெச்சிருக்கிற ஒரு கோட்வோர்ட் வார்த்தைதான் "பண்டிகை". திரவியம், பாலா ரெண்டு பேருமே கொடுரமான குற்றவாளிகள். அவங்ககிட்டயிருந்து லட்சணா மர்டர் .சம்பந்தப்பட்ட உண்மையை வரவழைக்கணும்ன்னா இப்படிப்பட்ட ஒரு பண்டிகையைக் கொண்டாடுவது அவசியம் "

ஜெயில் சூப்பரிண்டென்ட் கணேசபாண்டியன் சொல்லி கொண்டிருக்கும்போதே அறைக் கதவருகே நிழல் அசைந்தது.

திரும்பி பார்த்தார்.

தொப்பையை தள்ளிக்கொண்டு ஜெயிலர் சம்பத் நின்றிருந்தார். ப்ரோட்டோகால் சல்யூட் ஓன்றை வைத்துவிட்டு " ஸார்" என்று தயக்கமாய் குரல் கொடுத்தார்.

" என்ன சம்பத்....... ? "

" பண்டிகையைக் கொண்டாட அவசியம் இருக்காது போலிருக்கு ஸார் "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50 ]

English summary
Flat number 144 adhira apartment episode 51 by novelist rajesh kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X