• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“என்ன ஏசிபி ஸார்.. மிரட்டறீங்களா .. ? “ ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (50)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

செல்போனின் மறுமுனையில் ரிங் போய் குரல் கேட்டதும் ராம்பாபு பேசினார்.

Flat number 144 adhira apartment episode 50

" தெய்வசிகாமணி.... நான் ராம்பாபு "

மறுமுனையில் அந்த தெய்வசிகாமணி சிரித்தார்.

" நானே உங்களுக்கு போன் பண்ணலாம்ன்னு நினைச்சேன். நீங்களே பண்ணிட்டீங்க.. ஏசிபி சந்திரசூடன் உங்களைப் பார்க்க வந்தாரா ....... ? "

" ம்.. வந்தார்.. இப்பத்தான் பேசிட்டு வெளியே போறார். நாம எதிர்பார்த்ததைவிட அந்த அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸ்ல ரொம்பவுமே ஸ்ட்ராங்காயிருக்கார். யார்க்கும் பயப்படறமாதிரி தெரியலை. பொதுவா எனக்கு கீழே இருக்கிற அதிகாரிகள் ஒரு விஷயத்தைப்பத்தி என்கிட்ட பேசும்போது டோனை ரெய்ஸ் பண்ணவே மாட்டாங்க. ஆனா இன்னிக்கு சந்திரசூடன் ஹார்ஷா "ஆர் யூ அஷேம்ட் டு பி ஏ போலீஸ் ஆபீஸர்....?"ன்னு கேட்டுட்டார். அதுக்கப்புறம் நான் என்னோட உண்மையான நிலைப்பாட்டைச் சொன்னதும்தான் மனுஷன் நார்மலான நிலைமைக்கு வந்தார்"

" ஸோ.. சந்திரசூடனை நம்பலாம்ன்னு சொல்றீங்க....... ? "

" தாராளமாய் நம்பலாம்.. நீதி, நியாயம், நேர்மை, தர்மம் இந்த வார்த்தைகள் எல்லாம் கால வெள்ளத்துல காணாமே போயிடக்கூடாதுன்னு கவலைப்படுகிற உங்களையும், என்னையும் மாதிரியான வெகு அரிதான நபர்களில் இந்த சந்திரசூடனும் ஒருத்தர். நாளைக்குக் காலையில் பத்து மணிக்கெல்லாம் உங்க மனித உரிமை கமிஷனுக்கு வான்மதி, அன்வர் அலி குடும்பத்தினர் சார்பாய் "பெட்டிஷன் ரிக்காடிங் வித் சஸ்பீஷியஸ் டெத்ஸ் அட் அதிரா அப்பார்ட்மெண்ட்" என்கிற கேப்ஷன்ல ரெண்டு மனுக்கள் வரும். அது உங்க பார்வைக்கு வந்ததும் உடனடியாய் பரிசீலனை பண்ணி, டெட்பாடீஸை தோண்டி எடுக்கறதுக்கான, உத்தரவை மாஜிஸ்ட்ரேட்டுக்கு அனுப்பிடுங்க.. உங்க உத்தரவுக்கு எதிரா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற யாரும் மூச்சு கூட விட மாட்டாங்க.. ஒருவேளை எனக்கு மேலே இருக்கிற ஹைஅஃபிஷியல்ஸ் உங்ககிட்ட பேச முயற்சி பண்ணலாம். அவங்களை சமாளிக்க வேண்டியது உங்களோட பொறுப்பு "

மறுமுனையில் தெய்வசிகாமணி சிரித்தார்.

" போன வருஷம் வரைக்கும் மனித உரிமை கமிஷன் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோட கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது. ஆனா நான் தலைவராய் வந்த பிறகுதான் அந்த வட்டத்துக்குள்ளேயிருந்து கமிஷனை வெளியே கொண்டு வந்தேன். போலீஸ் அதிகாரிகளோட அத்துமீறல்கள், லாக்கப் டெத் சம்பவங்கள், கணிசமாய் குறைஞ்சதுக்கு, நான் எடுத்த சில அதிரடியான நடவடிக்கைகள்தான் காரணம். உங்களை மாதிரியான நேர்மையான ஒரு சில அதிகாரிகள் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற தைரியத்தினால்தான் என்னால் துணிச்சலாய் செயல்பட முடிஞ்சது. பை..த..பை.. நாளைக்கு காலையில் எத்தனை மணிக்கு அந்த பெட்டிஷனை எதிர்பார்க்கலாம்....... ? "

" பத்து மணிக்கு... "

" அப்படீன்னா நான் ஒரு மணி நேரம் கழிச்சு அதாவது சரியாய் பதினோரு மணிக்கு வான்மதி, அன்வர் அலி உடம்புகளை தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் பண்றதுக்காக ஆர்டர்களை இஷ்யூ பண்ணிடறேன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ஸ் என்னோட கைக்கு வர்ற வரைக்கும் இந்த விஷயம் மீடியாக்களுக்கு தெரியாமே பார்த்துக்க வேண்டியதுதான் முக்கியம்.... "

" கவலையே படாதீங்க.. மீடியாக்கள் இன்னும் ஒரு வார காலத்துக்கு நாம கூப்பிட்டா கூட திரும்பிப் பார்க்கமாட்டாங்க, காரணம் என்ன தெரியுமா....... ? "

" என்ன....... ? "

" பிரபலமான நடிகை பிரபாஸ்ரீ மூணாவது புருஷனை விவாகரத்து பண்ணிட்டாளாம். அந்த விவாகரத்துக்கு காரணம் என்னவாயிருக்கும்ன்னு கண்டுபிடிக்க எல்லா மீடியாக்களும் களத்துல குதிச்சிருக்காங்க. அவங்க அந்த களத்திலிருந்து மீண்டு வர வாரம் பத்து நாளாயிடும். அதுக்குள்ளே நாம அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸை முடிச்சுடலாம்.... "

ராம்பாபு சொல்லிவிட்டு சிரிக்க, அந்தச் சிரிப்பில் செல்போனின் மறுமுனையில் இருந்த தெய்வசிகாமணியும் கலந்து கொண்டார்.

*******
சந்திரசூடன் கமிஷனர் ஆபீஸ் போய் சேர்ந்தபோது பிரதான வாசலிலேயே சர்வேஷ் காத்திருந்து எதிர்கொண்டார்.
காரைவிட்டு இறங்கியபடியே கேட்டார் சந்திரசூடன்.

" என்ன சர்வேஷ்.... சூளைமேடு உதயாவை கொண்டு வந்துட்டீங்களா....... ? "

" கொண்டு வந்துட்டேன் ஸார்.. செல்லில் உட்கார வெச்சிருக்கேன் "

" ஏதாவது பேசினானா ....... ? "

" பேசலை ஸார்.. எந்த ஒரு கேள்வியைக் கேட்டாலும் ஏசிபி வரட்டும்.. பேசிக்கிறேன்.. உனக்கெல்லாம் சொல்ல முடியாதுன்னு ரொம்பவும் திமிரா பேசறான். அவனுக்கு பின்னாடி ரொம்பவும் பவர்ஃபுல்லான பாலிடிக்ஸ் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. கொஞ்சம் பார்த்து ஹேண்டில் பண்ணனும் ஸார் "

" வாங்க.. பார்த்துக்கலாம்... " சொன்ன சந்திரசூடன் வேகமாய் நடக்க ஆரம்பித்துவிட, சர்வேஷ் பின் தொடர்ந்தார்.
சில நிமிட நடையில் அலுவலகத்துக்கு பின்புறம் இருந்த, அடர்த்தியான மரங்களுக்கு நடுவே, அரைகுறை வெளிச்சத்தோடு தெரிந்த அந்தச் சிறிய செல்லுக்கு முன்பாய் நின்றார்கள். கனமான செல் கதவில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டுக்கு சர்வேஷ் விடை கொடுக்க, சந்திரசூடன் உள்ளே நுழைந்தார்.
அறையின் சுவரோரமாய் போடப்பட்டிருந்த நீளமான பெஞ்சில், கைகளை தலைக்குப் பின்னால் கோர்த்துக்கொண்டு, மல்லாந்து படுத்து கண்களை மூடியிருந்தான் அந்த ஆறடி உயர திடகாத்திரமான உதயா. சந்திரசூடனை பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்து, நீளமாய் கொட்டாவி விட்டான். பான் கறை படிந்த பல்வரிசை ஒரு சில விநாடி பார்வைக்குப்பட்டு மறைந்தது. சந்திரசூடன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்தார். மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.

" இதோ பார்... உனக்குப் பின்னாடி இருக்கிற அந்த பவர்ஃபுல் பொலிடீஷியன் யாராக இருந்தாலும் சரி, அதைப்பத்தி நான் கவலைப்படமாட்டேன். ஒரு கேஸ் சம்பந்தமாய் எனக்குத் தேவைப்படுகிற விஷயங்கள் உன்கிட்ட இருக்குன்னு எனக்குத் தெரியும் "

" அப்படியா ....... ? " என்று சொன்ன உதயா எழுந்து நின்று தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிலும், பேண்ட் பாக்கெட்டிலும் கையை நுழைத்து எதையோ தேடுவதைப்போல் பாவனை செய்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான்.

" ஸாரி ஏசிபி ஸார்.. ரெண்டு பாக்கெட்டுகளையும் செக் பண்ணிப் பார்த்துட்டேன். உங்களுக்குத் தேவைப்படுகிற மாதிரியான விஷயங்கள் எதுவுமேயில்லையே ....... ? "

" இதுமாதிரியான நக்கல் பேச்செல்லாம் எனக்கு பிடிக்கும். ஆனா என்னோட ஃப்ரண்ட்டுக்கு பிடிக்காது "

" ஃப்ரண்டா ....... ? " உதயா திகைக்க, சந்திரசூடன் ஒரு புன்முறுவலோடு சொன்னார்.

" ம்... ஃப்ரண்ட்தான்.. நான் வீட்டைவிட்டு புறப்படும்போதே அவனும் என்கூட வந்துடுவான். பார்க்கறியா அவனை ....... ? "

சந்திரசூடன் சொல்லிக்கொண்டே தன்னுடைய இடுப்புப் பக்கம் கையைக்கொண்டு போய் அந்த டபுள் ஆக்சன் ரிவால்வரை எடுத்து மடியின் மேல் வைத்துக்கொண்டார்.

" இவன்தான் அந்த ஃப்ரண்ட் "

உதயாவின் கண்களில் நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு கலக்கம் தெரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் மெல்லச் சிரித்தான்.

" என்ன ஏசிபி ஸார்.. மிரட்டறீங்களா ....... ? "

" கரெக்டா கண்டு பிடிச்சுட்டே.... இது மிரட்டல்தான்... உனக்கு எந்த பாஷை புரியுமோ அந்த பாஷையில்தானே என்னால பேச முடியும்....... ? "

" இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட எடுபடாது ஸார். நான் இந்த செல்லுக்குள்ளே வந்து ஒரு மணி நேரமாச்சு... அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நீங்க என்னை வெளியே அனுப்ப வேண்டியிருக்கும்.. மொதல்ல ரிவால்வரை எடுத்து உள்ளே வையுங்க " உதயா பேசப்பேச சந்திரசூடன் கையமர்த்தினார்.

" நீ எந்த தைரியத்துல இப்படியெல்லாம் பேசறேன்னு எனக்குத் தெரியும். முன்னாள் மத்திய அமைச்சரான செங்குட்டுவனுக்கு நீதான் வலது கை, இடது கை எல்லாமே.. அந்த ஆள் பண்ற அடாவடித்தனமான கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, பண மோசடி மாதிரியான சட்ட விரோத காரியங்களுக்கு பின்னாடியிருக்கிற உண்மையான பிம்பம் நீதான். அந்த செங்குட்டுவன் இப்ப பதவியில் இல்லாமே போனாலும் பழைய செல்வாக்கை வெச்சுகிட்டு கவர்மெண்ட்ல இருக்கிற சில கருப்பு ஆடுகளுக்கு காசை அள்ளிக்கொடுத்து, உன்னை மாதிரியான ஆட்கள் எந்தத் தப்பைப் பண்ணினாலும் காப்பாத்திட்டு வர்றார். நான் சொன்னதெல்லாம் சரியா ....... ? "

உதயா முகம் மாறி சந்திரசூடனையே இமைக்காமல் பார்த்தான். அவர் குரலைத் தாழ்த்தினார்.

" என்ன அப்படி பார்க்கிறே..... ? இந்த விஷயமெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்ன்னு யோசிக்கிறியா... ?

நீ இருக்கிற அதே சூளைமேடு ஏரியாவில்தான் எனக்கு தெரிஞ்ச ஒரு போலீஸ் இன்ஃபார்மரும் இருக்கான். அந்த ஏரியாவில் அவனும் ஒரு ரெளடி மாதிரி நடிச்சுகிட்டே, எனக்குத் தகவல் கொடுத்துட்டிருப்பான். அதிரா அப்பார்ட்மெண்ட்ல நடந்த ஒரு டெட்பாடி டிஸ்போஸல் சம்பவத்துக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்குன்னு நம்பத்தகுந்த ஒருத்தர்கிட்டயிருந்து எனக்கு இன்னிக்கு மத்தியானம் ஒரு தகவல் வந்தது. அந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு சூளைமேடு உதயான்னா யார்ன்னே தெரியாது. நான் உடனே என்னோட இன்ஃபார்மருக்கு போன் பண்ணி விபரம் கேட்டேன். அந்த இன்ஃபார்மர் அடுத்த பத்து நிமிஷத்துக்குள்ளே உன்னைப்பத்தின ஒரு பயோடேட்டாவை டீடெய்லா குடுத்துட்டான். கூடவே இன்னொரு தகவலையும் ப்ரேக்கிங் நியூஸா சொன்னான் "
உதயாவின் முகம் இப்போது வெகுவாய் மாறியிருக்க, உடம்பில் ஒரு பதட்டம் பரவியிருந்தது.

" ப்...ப்... ப்ரேக்கிங் நியூஸா....... ? "

" ஆமா... உன்னோட பாஸ் மாஜி மந்திரி செங்குட்டுவனை ஒரு ஊழல் வழக்கு விசாரணை சம்பந்தமாய் விசாரிக்கிறதுக்காக, டெல்லியிலிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் வரப்போறதாய் தகவல். அந்தத் தகவல் உண்மையா பொய்யான்னு கூட தெரியாமே செங்குட்டுவன் விசாரணைக்கு பயந்து தலைமறைவாயிட்டார். நாங்க உன்னை கைது பண்ணும்போது நீ அவர்க்கு போன் போட்டிருந்தாலும் கூட உன்னோட லைனுக்கு அவர் வந்திருக்கமாட்டார். போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்திருக்கும். நீ ட்ரை பண்ணியிருப்பியே...? "

" ஆ....ஆமா..... "

" நீ இன்னும் ஒரு வாரத்துக்கு அந்த மாஜி மந்திரியை காண்டாக்ட் பண்ண முடியாது. அவராலேயும் யாரையும் காண்டாக்ட் பண்ணி உன்னை வெளியே கொண்டு வர்றதுக்கான முயற்சியை எடுக்க முடியாது. ஒருவேளை முயற்சி எடுத்தா, ஜி.பி.எஸ்.மூலமா அவர் இருக்கிற இடம் தெரிஞ்சு சி.பி.ஐ. ஆபீஸர்ஸ் அங்கே போயிடுவாங்க... அந்த தப்பை அவர் பண்ணுவாரா என்ன....... ? "

உதயாவின் குரல் உடைந்தது.

" ஸ...ஸ...ஸார்... நீங்க சொல்றது உண்மையா ....... ? "

" அந்த செய்தி உண்மையாய் இருந்ததாலத்தான் உன்னை அரஸ்ட் பண்ணி இங்கே கொண்டு வர முடிஞ்சுது " சொன்ன சந்திரசூடன் தனக்குப் பக்கவாட்டில் நின்றிருந்த சர்வேஷிடம் திரும்பினார்.

" உதயாவோட செல்போன் உங்ககிட்டத்தானே இருக்கு ....... ? "

" ஆமா ஸார் "

" போனை அவன்கிட்ட குடுங்க... யார் யார்க்கு போன் பண்ணிப் பேசணுமோ பேசட்டும்.. அப்பத்தானே நாம சொன்னது உண்மையா பொய்யான்னு அவனுக்குத் தெரியும்..... "

சர்வேஷ் தன் பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த செல்போனை எடுத்து உதயாவிடம் நீட்ட, அவன் அதைப் பறிக்காத குறையாக அவசர அவசரமாய் வாங்கி காண்டாக்ட் ஆப்ஷனுக்குப்போய் ஒவ்வொரு எண்ணாய்த் தொட்டு தொடர்பு கொள்ள ஆரம்பித்தான். எல்லா எண்களுமே "ஸ்விட்ச் ஆஃப்"பில் இருப்பதாக ரிக்கார்டட் வாய்ஸ் வரவே, அவனுடைய முகம் வெகுவாய் இருண்டது. முகம் வியர்த்து நாக்கு காகிதமாய் வறண்டது.

சந்திரசூடன் கேலியான குரலில் கேட்டார்.

" என்ன யார்கிட்டயாவது பேச முடிஞ்சுதா ....... ? "

எச்சில் விழுங்கினான். " எ..எ...எல்லா போனும் "ஸ்விட்ச் ஆஃப்"ல இருக்கு ஸார் "

" இப்போ உன்னோட நிலைமை என்னான்னு புரியுதா ....... ? "

" ஸ....ஸார்.... "

உதயா பேசத் திணற சந்திரசூடன் தன் கையில் வைத்திருந்த ரிவால்வரை மெல்ல உயர்த்தியபடி சொன்னார்.
" இதுவரைக்கும்... நான் என்னோட சர்வீஸ்ல நாலு என்கெளண்டர் பண்ணியிருக்கேன். அஞ்சாவதா.. ஒரு என்கெளண்டர் பண்ண வேண்டிய நிலைமை வந்துடக்கூடாதுன்னு நினைச்சுட்டிருக்கேன். அந்த நினைப்பை நிஜமாக்கிடாதே "

இப்போது உதயாவின் விழிகளில் உச்சபட்ச பீதி தெரிந்தது. பயத்தில் வார்த்தைகள் சிதறின.

" ஸ...ஸார்... என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க ஸார் "

" அப்படீன்னா எனக்கு உண்மை தெரியணும்.... "

" எ...எ....என்ன உண்மை ஸார் ....... ? "

" அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த கொலைச் சம்பவங்களுக்கும் உனக்கும் என்ன தொடர்பு....... ? "

பதில் சொல்லாமல் உதயா மெளனம் சாதிக்க சந்திரசூடன் ரிவால்வரையும், தன் குரலையும் உயர்த்தினார்.

" ம்.... சொல்லு "

" சொ....சொல்றேன் ஸார்.... ஆனா அதை நீங்க நம்பணும் "

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49 ]

English summary
Flat number 144 adhira apartment episode 50 by Novelist Rajesh Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X