For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லட்சணாவை எப்படி சாகடிச்சதாய் சொன்னீங்க .. ? ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (53)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

திரவியம் ஒரு ஐந்து விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு சந்திரசூடனை ஏறிட்டபடி மெல்ல பேச ஆரம்பித்தான்..

Flat number 144 adhira apartment episode 53

" ஸார்.... அதிரா அப்பார்ட்மெண்ட்டில் ஒய் ப்ளாக்கில் 202 நெம்பர் ஃப்ளாட்டில்தான் அவன் குடியிருக்கான். பேரு சஞ்சய் பட்டேல். வடநாட்டுக்காரன். சொந்த ஊரு கோலாப்பூர். கடந்த ஆறு வருஷ காலமாய் அந்த ஃப்ளாட்லதான் தங்கியிருக்கான். ஆரம்ப நாட்களில் அவன் ஒரு பிம்ப். அப்புறம் ட்ரக்ஸ் ஸேல்ஸ். இப்போ பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம் க்ரூப்போடு சேர்ந்து தொழில் பண்ணிட்டிருக்கான். எனக்கும் பாலாவுக்கும் அவனை ரெண்டு வருஷ காலமாய்த்தான் தெரியும் "

சந்திரசூடன் குறுக்கிட்டு கேட்டார்.

" லட்சணாவுக்கும், சஞ்சய் பட்டேலுக்கும் தொடர்பு இருக்குங்கிற விஷயம் உனக்கு எப்படி தெரியும் .. ? "

" இப்ப... அதைத்தான் சொல்ல வர்றேன் ஸார். காசிமேடு ஏரியாவில் இருக்கிற ஒரு பெரிய புள்ளிக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சினிமாவில் நடிக்கிற துணை நடிகையொருத்தி தேவைப்பட்டா. அந்த நடிகையை ஏற்பாடு பண்ணிக் கொடுக்க முடியுமான்னு அவர் எங்ககிட்ட கேட்டார். நானும், பாலாவும் அது விஷயமாய் பேச, அதிரா அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற சஞ்சய் பட்டேலை பார்க்க போனோம். அது விஷயமாய் பேசவும் ஆரம்பிச்சோம். பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே சஞ்சய் பட்டேலுக்கு ஒரு செல்போன் கால் வந்தது. போன் பண்ணினது யார்ன்னு எங்களுக்குத் தெரியாது. அவன் இந்தியில் பேசினான். பேச்சுக்கு நடுவுல ரெண்டு மூணு தடவை "லட்சணா" என்கிற பேர் அடிபட்டது. அவன் போன் பேசி முடிச்சதும் நான் அவன்கிட்ட "யார் அந்த லட்சணா"ன்னு கேட்டேன். அவன் முதல்ல பிடி கொடுத்துப் பேசலை. அப்புறம் நானும் பாலாவும் வற்புறுத்தி கேட்கவும், அவன் தன்னோட செல்போனை எடுத்து அதில் சேவ் பண்ணி வெச்சிருந்த லட்சணாவோட போட்டோவைக் காட்டி, செக்ஸ் டூரிஸம் தொழிலில் இவதான் என்னோட பார்ட்னர்ன்னு சொன்னான். அவன் அப்படி சொன்ன விநாடியிலிருந்தே எனக்கும், பாலாவுக்கும் லட்சணா மேல இருந்த கொஞ்ச நஞ்ச இரக்கமும் காணாமே போயிடுச்சு. இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட பெண்ணைப் போட்டுத் தள்ளறதுல தப்பேயில்லைன்னு நினைச்சோம் ஸார் "

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மெளனமாய் இருந்த சர்வேஷ் தன்னுடைய ஆட்காட்டி விரலை திரவியத்தை நோக்கி நீட்டியபடி கேட்டார்.

" இப்ப நீ சொன்னதெல்லாம் உண்மையா.. ? "

" ஒரு எழுத்து கூட பொய் கிடையாது ஸார் "

" லட்சணா கொலை செய்யப்பட்ட விஷயம் சஞ்சய் பட்டேலுக்கு தெரியுமா .. ? "

" தெரிய வாய்ப்பில்லை ஸார்.. ஏன்னா லட்சணா கொலை செய்யப்பட்ட விவகாரம் இன்னும் மீடியாவுக்கே போகலை "

" அவன் இன்னமும் அதிரா அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கானா.. ? "

" ஆமா ஸார் "

" நீயும் பாலாவும் அவனை என்னிக்கு கடைசியா பார்த்தீங்க .. ? "

" ரெண்டு வாரத்துக்கு முந்தி பார்த்ததோடு சரி, அதுக்கப்புறம் நாங்க அவனை சந்திக்கலை ஸார் "

சந்திரசூடன் இப்போது பேச்சில் குறுக்கிட்டு கேட்டார்.

" லட்சணாவை எப்படி சாகடிச்சதாய் சொன்னீங்க .. ? "

" நானும் இவனும் குடிபோதையில் அவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினோம்.. ஒரு கட்டத்துல தப்பிச்சு ஒடப் பார்த்தா.... கோபத்துல அடிச்சோம்.. சுருண்டு விழுந்து செத்துட்டா "

" செத்த உடம்புக்கு கருப்பு பெயிண்ட்டைப் பூசி டிஸ்போஸ் பண்ண என்ன
காரணம்.. ? "

" அது லட்சணான்னு யார்க்கும் அடையாளம் தெரிஞ்சுடக்கூடாதுன்னு நினைச்சோம் "

" சரி... பாடியை சிட்டியோட அவுட்டர்க்கு கொண்டு போய் டிஸ்போஸ் பண்ணாமே, அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளே வந்து பார்க்கிங் ஏரியாவில் நின்னுட்டிருந்த ஒரு காரோட டிக்கிக்குள்ளே போட்டு ஏன் டிஸ்போஸ் பண்ணனும் .. ? "

" அ..அ..அது.... வந்து..... "

என்ன சொல்லு.. ? "

" அது எதிர்பாராமே நடந்த சம்பவம் ஸார் "

" எதிர்பாராத சம்பவமா .. ? "

" ஆமா ஸார்.... லட்சணா இறந்தப்ப சாயந்தரம் ஆறுமணி இருக்கும்... பாடியை மிட்நைட்டுக்கு மேல் வேன்ல கொண்டு போய் சிட்டியோட அவுட்டர்ல ஏதாவது ஒரு சவுக்கு தோப்புக்குள்ளே போட்டுட்டு வந்துடலாம்ன்னு நினைச்சோம்... ஆனா..... " திரவியம் பேசப்பேச சந்திரசூடன் கையமர்த்தியபடி கேட்டார்.

" வேன் யாரோடது .. ? "

" எங்க வேன்தான் ஸார்.. மூணு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு பழைய வேனை வாங்கினோம்.. நாங்க பண்ற சில சட்ட விரோதமான வேலைகளுக்கு வெளியே இருந்து வேனை வாடகைக்கு எடுக்க முடியாது. ரிஸ்க். அதனால நாங்களே சொந்த்ததுல ஒரு வேனை வாங்கிகிட்டோம். அந்த வேன்லதான் லட்சணாவோட பாடியைக்கொண்டு போனோம். மொதல்ல மிட்நைட்டுக்கு மேலே போலாம்ன்னு நினைச்சோம். ஆனா பதினோரு மணிக்கு மேலத்தான் போலீஸோட ரோந்து அதிகமாயிருக்கும்ன்னு பாலா சொன்னதால, சாயந்தரம் ஏழு மணிக்கே லட்சணாவோட பாடியை டிஸ்போஸ் பண்ண கிளம்பிட்டோம். ஆனா அன்னிக்கு ஜானாதிபதி டெல்லியிலிருந்து சென்னைக்கு வர இருந்ததால சிட்டியோட அவுட்டர் ஏரியாக்களில் போலீஸோட கெடுபிடியான சோதனைகளுக்கு பயந்து, சிட்டிக்குள்ளேயே ஏதாவது ஒரு இடத்துல பாடியை டிஸ்போஸ் பண்ணிடலாம்ங்கிற முடிவுக்கு வந்தோம். உடனே எங்களுக்கு அதிரா அப்பார்ட்மெண்ட்தான் ஞாபகத்துக்கு வந்தது. ஏன்னா அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்லதான் சிசிடிவி காமிராக்களோ, செக்யூரிட்டிக்களோ கிடையாது. கிளம்பிப்போனோம். வேனை பேஸ்மெண்ட்டோட பார்க்கிங் ஏரியாவுல கொண்டு போய் நிறுத்தினபோது பக்கத்திலேயே ஒரு ப்ளு கலர் கார் நின்னுட்டிருந்ததைப் பார்த்தோம் "

" உடனே லட்சணாவோட பாடியை காரோட டிக்கிக்குள்ளே போட்டு டிஸ்போஸ் பண்ணிடலாம்ங்கிற முடிவுக்கு வந்தீங்க .. ? "

" ஆமா ஸார் "

" சரி.. டிக்கியை எப்படி திறக்க முடிஞ்சுது .. ? "

" பாலாவுக்கு அது கை வந்த கலை ஸார் " என்று சொன்ன திரவியம் பாலாவைப் பார்க்க, பாலா சற்றே தயக்கமான குரலில் பேச ஆரம்பித்தான்.

" ஸார்... ஒரு காரோட டிக்கியை அன்லாக் பண்றதுக்கு பத்துக்கும் மேற்பட்ட மெத்தாட்ஸ் இருக்கு. அதுல ஒரு மெதாட் " இன்ஃப்ளாட்டபிள் வெட்ஜ்" என்கிற ஒரு கருவியை வெச்சு ஏர்ஃபைட்டர் மூலமா காத்தை உள்ளே பம்ப் பண்ணினா எப்பேர்ப்பட்ட காரோட சாத்தப்பட்ட டிக்கியும் அன்லாக் ஆயிடும். அந்த ப்ளு கலர் காரையும் அப்படித்தான் ஒப்பன் பண்ணினோம் "

" அது யாரோட கார் தெரியுமா .. ? "

" தெரியாது ஸார் "

" சரி.. லட்சணாவோட டெட்பாடியை வேன்லயிருந்து எடுத்து காரோட டிக்கிக்கு கொண்டு போக, நீங்க ரெண்டு பேரும் முயற்சி பண்ணிட்டு இருக்கும்போது, அது ஏதோ ஒரு லக்கேஜ்ன்னு நினைச்சு ஒருத்தர் ஹெல்ப் செய்ய வந்தாரா.. ? "

" ஆ..ஆ..ஆமா ஸார்.... "

" அந்த நபர் யார்ன்னு தெரியுமா .. ? "

" தெரியாது ஸார் "

" அவரோட பேர் இனிகோ செல்வராஜ். இந்தப் பேரைக் கேள்விப்பட்டதுண்டா .. ? "

" இல்ல ஸார் "

" ஜெயராஜ்ங்கிற பேர்ல யாரையாவது தெரியுமா .. ? "

" தெரியாது ஸார் "

" அந்த ஜெயராஜை உங்க ரெண்டு பேரோட முன்னாள் பாஸ் சூளைமேடு உதயாவுக்கு நல்லாவே தெரியும். ஜெயில் தண்டனை அனுபவிச்சுட்டு வெளியே வந்த ஜெயராஜ் மனம் திருந்தி ஒரு புது வாழ்க்கையை வாழ மும்பை போயிட்டான். அந்த ஜெயராஜோட தம்பிதான் இனிகோ செல்வராஜ்"

" ஸார்.. இந்த விபரமெல்லாம் நீங்க இப்ப சொல்லித்தான் எங்களுக்கு தெரியும். சூளைமேடு உதயாவுக்கு கீழே நாங்க வேலை பார்த்து இருந்தாலும் பல விஷயங்கள் எங்களுக்குத் தெரியாது "

சில விநாடிகள் மெளனமாய் இருந்த சந்திரசூடன் குரலைத் தாழ்த்தி நிதானமான குரலில் திரவியத்தைப் பார்த்துக் கேட்டார்.

" லட்சணாவோட டெட்பாடி இருந்த மூட்டையைத் தூக்கும்போது இனிகோ செல்வராஜூக்கு எந்த சந்தேகமும் வரலையா.. ? "

" சந்தேகம் வரலை ஸார்.. ஆனா என்ன இவ்வளவு கனமாய் இருக்கு.. உள்ளே என்ன இருக்குன்னு கேட்டார். நாங்க தேக்கு மரச்சாமான்கள்ன்னு சொல்லி சமாளிச்சோம்.. அவரும் அதை நம்பிட்டார் "

" லட்சணா கொலை செய்யப்பட்ட விவகாரத்துல அந்த இனிகோ செல்வராஜூக்கு எந்த சம்பந்தமும் இல்லையா .. ? "

" ஒரு துளி கூட சம்பந்தமில்லை ஸார் "

" சரி, அந்த பீடோ ஃபைலிக், செக்ஸ் டூரிஸம் தொழில் பண்ற சஞ்சய் பட்டேலோட செல்போன் நெம்பர் உன்கிட்ட இருக்கா.. ? "

" இல்ல ஸார் "

" பொய் சொல்லாதே "

" இதுல பொய் சொல்ல என்ன இருக்கு ஸார்... லட்சணாவை கொலை பண்ணினது நாங்கதான்னு பகிரங்கமா ஒத்துகிட்டோம். அப்புறம் இந்த சின்ன விஷயத்துக்காக ஏன் பொய் சொல்லணும்... அவனோட செல்நெம்பர் தெரியாது "

திரவியம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரசூடன் தன்னுடைய செல்போனை எடுத்து ஆன் செய்து ஒரு எண்ணைத் தேய்த்துவிட்டு காதில் வைத்தார்.

மறுமுனையில் ரிங் போய் குரல் கேட்டது.

" ஹலோ "

" குட்மார்னிங் ராவ்டே பிந்தர்.. நான்தான் ஏசிபி பேசறேன்"

" குட்மார்னிங் ஸார்.. என்ன ஸார் திடீர்ன்னு போன் பண்ணியிருக்கீங்க .. ? "

" ஒரு தகவல் உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன். உங்க அதிரா அப்பார்ட்மெண்ட்டில் ஒய் ப்ளாக்கில் 202 நெம்பர் ஃப்ளாட்டில் யார் குடியிருக்காங்க தெரியுமா .. ? "

" ஒரு நிமிஷம் ஸார்... உங்க வாய்ஸ் ப்ரேக் ஆகுது. வெளியே வந்து பேசறேன் "

சந்திரசூடன் காத்திருந்தார்.

அரை நிமிஷ நேரத்திற்குப்பிறகு ராவ்டே பிந்தரின் குரல் தாழ்ந்த ஸ்தாயில் கேட்டது.

" சொல்லுங்க ஸார் "

" உங்க அதிரா அப்பார்ட்மெண்ட் "ஒய்" ப்ளாக்கில் 202 நெம்பர் ஃப்ளாட்டில் யார் இருக்காங்கன்னு சொல்ல முடியுமா.. ? "

" சஞ்சய் பட்டேல் ஸார் "

" அந்த ஆளை உங்களுக்கு தெரியுமா.. ? "

" சொல்லுங்க ஸார்.. என்ன விஷயம்.. ? "

" சொல்றேன்.. அந்த ஆளைத் தெரியுமா.. ? "

" தெரியும் ஸார்.. இப்ப கூட அவனோட ஃப்ளாட்டில்தான் இருக்கேன். உங்க போன் வந்தப்ப அவனுக்கு முன்னாடிதான் உட்கார்ந்துட்டிருந்தேன். "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ]

English summary
Flat number 144 adhira apartment episode 53 by rajeshkumar .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X