• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க பூபதி .. ? “ ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (56)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சந்திரசூடனின் இரண்டு புருவங்களும் வியப்பில் முடிச்சிட்டுக்கொள்ள செல்போனில பேச்சைத் தொடர்ந்தார்.

" பூபதி என்ன சொன்னீங்க ஜியோ பிசிக்ஸ் அண்ட் ஜியோ கெமிஸ்டரியா.. ? "

" ஆமா ஸார் "

" எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இந்த ரெண்டு வார்த்தைகளுமே பூமியின் அறிவியல் சம்பந்தப்பட்டது. சரியா.. ? "

" யூ ஆர் கரெக்ட் ஸார். பூமியின் அறிவியலோடு சம்பந்தப்பட்ட இந்த வார்த்தைகள் அதிரா அப்பார்ட்மெண்ட்டின்
144வது எண்ணுள்ள ஃப்ளாட்டோடும் சம்பந்தப்பட்டிருக்கு "

" எந்த வகையில் .. ? "

" நேர்ல பேசலாமா ஸார் .. ? "

" ப்ளீஸ் கம்.... " சந்திரசூடன் செல்போனை அணைத்துவிட்டு டி.ஜி.பி.ராம்பாபுவை ஏறிட்டார்.

" ஸார்.. இந்த கேஸ் போகிற போக்கைப் பார்த்தா இது ஏதோ ஒரு பெரிய விவகாரத்துல போய்த்தான் முடியும் போலிருக்கு "

" என்னோட மனசுக்கும் அப்படித்தான் படுது. லெட் அஸ் வெயிட் ஃபார் மிஸ்டர் பூபதி. அவர் வந்து என்ன சொல்றார்ன்னு பார்ப்போம்.... "

Flat number 144 adhira apartment episode 56

" ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்டில் ஃபாரன்ஸிக் க்ரைம் சீன் இன்வெஸ்டிகேட்டராய் ஒர்க் பண்ற பூபதிக்கு இருபத்தஞ்சு வருஷ சர்வீஸ். பல சிக்கலான கேஸ்கள் ஒரு முடிவுக்கு வர, அவரோட பங்களிப்பு மிகப் பெரிய காரணமாய் இருந்திருக்கு ஸார். இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸையும் அவர் கொடுக்கப் போகிற தகவலை வெச்சுத்தான் கன்க்ளுட் பண்ண வேண்டி வரும்ன்னு நினைக்கிறேன் "

" எஸ்... வீ ஆர் நியரிங் அவர் டெஸ்டினேஷன் "
*********

சரியாய் முப்பது நிமிஷம்.
கதவை மெலிதாய் தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்த பூபதி உத்யோகபூர்வமான சல்யூட்டை கொடுக்க, டி.ஜி.பி.தலையசைப்பால் ஏற்றுக்கொண்டு சந்திரசூடனுக்கு அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.

" பீ.. ஸீட்டட் "

" தேங்க்யூ ஸார் "
பூபதி உட்கார்ந்ததும் கேட்டார். " டெல்லியில் இருக்கிற நேஷனல் ஃபாரன்ஸிக் கெமிஸ்டரி சென்டரிலிருந்து வந்த ரிப்போர்ட்டைக் கொண்டு வந்திருக்கீங்களா.. ? "

" எஸ்... ஸார் " என்று சொன்ன பூபதி தன் கையோடு கொண்டு போயிருந்த பிளாஸ்டிக் ஃபைலைப் பிரித்து அதில் கோர்க்கப்பட்டிருந்த சில பிரிண்ட் அவுட் தாள்களை எடுத்த நீட்டினார்.
டி.ஜி.பி. அதை வாங்கி ஒரு அவசர பார்வையோடு ரிப்போர்ட்டில் இருந்த ஆங்கில வார்த்தைகளை மேய்ந்துவிட்டு பூபதியிடம் நிமிர்ந்தார்.

" நீங்க செல்போனில் சொன்ன ஜியோ பிசிக்ஸ், ஜியோ கெமிஸ்டரி வார்த்தைகள் அதிரா அப்பார்ட்மெண்ட்டின் 144ம் நெம்பர் ஃப்ளாட்டோடு எப்படி சம்பந்தப்படுதுன்னு எக்ஸ்ப்ளைன் பண்ண முடியுமா .. ? "

" ஸார்... இந்த ஜியோ பிசிக்ஸ், ஜியோ கெமிஸ்டரி என்கிற இந்த ரெண்டுமே பூமியோட திடமான மற்றும் உருகிய பகுதிகளை ஆராய்ச்சி செய்து பூமியின் பரப்புக்கு கீழே ஆழமான பகுதிகளில் எதுமாதிரியான தாதுக்கள், கனிமங்கள் புதைஞ்சு கிடக்குன்னு கண்டுபிடிக்க உதவுகிற இயற்பியல் ரசாயன முறைகள். இதுக்கு இருக்கிற இன்னொரு பேரு ஜியோமேக்னீடிஸம். இந்த ஆராய்ச்சிக்கு உதவற இன்ஸ்ட்ரூமெண்ட்டோட நேம் மேக்னோடோமீட்டர். இந்த இன்ஸ்ட்ரூமெண்ட்டோடு ஏ.எஸ்.டி டெர்ராஸ்பெக் ஹாலோ மினரல் ஐடென்டிஃபையர் என்கிற இன்ஸ்ட்ரூமெண்ட்டையும் கனிமத் தேடல் ஆராய்ச்சிக்கு ஜியாலாஜிஸ்ட்கள் பயன்படுத்துவது வழக்கம் "
பூபதி சொன்னதையெல்லாம் கவனமாய் கேட்டுக்கொண்ட சந்திரசூடன் அவரை ஒரு குழப்பப் பார்வை பார்த்தபடி கேட்டார்.

" இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க பூபதி .. ? "

" ஸார்... இப்ப நான் சொன்ன மேக்னோடோமீட்டரையும், ஏ.எஸ்.டி டெர்ராஸ்பெக் ஹாலோ மினரல் ஐடென்டிஃபையர் என்கிற கருவியையும் யாரோ 144ம் நெம்பர் ஃப்ளாட்டுக்குள்ளே கொண்டு வந்து ஆப்ரேட் பண்ணி எதையோ தேடியிருக்காங்க "
டி.ஜி.பி.யும், சந்திரசூடனும் அதிர்ந்து போய் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

" பூபதி... ஆர் யூ ஜோக்கிங்.... பூமியின் பரப்பையும் அதனோட உட்புறத்தையும் ஆராய்ச்சி செய்ய உபயோகப்படுகிற கருவிகளுக்கு அந்த 144ம் நெம்பர் ஃப்ளாட்டுக்குள்ளே என்ன வேலை... எந்த ஆதாரத்தை வெச்சுகிட்டு இப்படியொரு தகவலைச் சொல்றீங்க .. ? "

" ஆதாரம் டெல்லியிலிருந்து வந்திருக்கிற ரிப்போர்ட்ல இருக்கு ஸார். ஃப்ளாட்டில் இறந்து கிடந்த நூற்றுக்கணக்கான பல்லிகளையும், கரப்பான் பூச்சிகளையும் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்துப் பார்த்தபோது அந்த உண்மை வெளிப்பட்டிருக்கு "

" என்ன உண்மை.. ? "

" அந்த பூச்சிகள் எல்லாமே கருவிகளிலிருந்து வெளிப்பட்ட காந்த கதிர்வீச்சால் இறந்து போயிருக்குங்கிற உண்மை "

" மிஸ்டர் பூபதி.. டெல்லி ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டு இருக்கிற விஷயங்கள் எல்லாமே சரியாய்...இருக்கும்ன்னு நீங்க நம்பறீங்களா .. ? "

" நான் நம்பறேன் ஸார்... காரணம் இறந்துபோன பூச்சிகளை டெல்லி ஃபாரன்ஸிக் கெமிஸ்டரி சென்டர்க்கு அனுப்பறதுக்கு முன்பாக நான் நம்ம ஃபாரன்ஸிக் லேப்பில் டிஸக்ட் பண்ணி சோதனைக்கு உட்படுத்திப் பார்த்தேன். அந்தப் பூச்சிகளின் உடம்பில் காந்த கதிர்வீச்சு இருப்பதையும் கண்டுபிடிச்சேன். ஆனா அந்த கதிர்வீச்சு 144ம் நெம்பர் ஃப்ளாட்டுக்குள்ளே எப்படி வந்தது என்கிற கேள்விக்கு டெல்லி ரிசார்ச் சென்டர் சரியான பதிலைக் கண்டுபிடிச்சதோடு மட்டுமில்லாமே அது எதுமாதிரியான இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் என்பதையும் தெளிவா மென்ஷன் பண்ணிட்டாங்க"

"அப்படீன்னா அந்த ஃப்ளாட்டுக்குள்ளே ஏதோ கனிமம் இருக்கு. அதைக் கண்டுபிடிக்கிறதுக்காக யாரோ கருவிகளோடு வந்திருக்காங்கன்னு சொல்ல வர்றீங்களா.. ? "

" கண்டிப்பா "

" அப்படிப்பட்ட கனிமம் எதுவாயிருக்கும்ன்னு நினைக்கிறீங்க.. ? "

" ஸாரி ஸார்... ஐ ஹேவ் நோ எனி கெஸ் வொர்க். சம் ஜியாலஜி பீப்பிளை வரவழைச்சு அந்த ஃப்ளாட்டை சோதனைப் பண்ணிப் பார்த்தாத்தான் நீங்க கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும். ஆனா இந்த சோதனை நடைபெறுகிற விஷயம் வெளியுலகத்துக்கு தெரியக்கூடாது "

" உங்களுக்குப் பரிச்சயமான ஒரு நம்பகமான ஜியாலஜிஸ்ட் பர்சன் யாராவது இருக்காங்களா.. ? "

" இருக்காங்க ஸார்.. ஜியாலஜி மைனிங் டிபார்ட்மெண்ட்டில் நாராயண ரெட்டின்னு ஒருத்தர் இருக்கார். நான் மெம்பராய் இருக்கிற லயன்ஸ் கிளப்லதான் அவரும் மெம்பர். மன்த்லி ஒன்ஸ் லயன்ஸ் கிளப் மீட்டிங் நடக்கும். அந்த மீட்டிங் முடிஞ்சதும் நானும் அவரும் தனியா ஒரு அரைமணி நேரமாவது பல தரப்பட்ட விஷயங்களை மனம் விட்டு பேசிக்குவோம். அவரோட டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லுவார். நான் சில சந்தேகங்களை கேட்கும்போது ஸாரி... இது ஹைலி கான்ஃபிடென்ஷியல். வெளியே யார் கூடவும் ஷேர் பண்ணிக்கக்கூடாதுன்னு சொல்லி நாசூக்காய் மறுத்துடுவார் "
பூபதி சொல்ல டி.ஜி.பி. குரலைத் தாழ்த்தினார்.

" 144ம் நெம்பர் ஃப்ளாட்டை ஆய்வு செய்கிற பொறுப்பை அந்த நாராயண ரெட்டிகிட்டே ஒப்படைச்சா, அந்த அசைண்மெண்ட்டை அவர் ரகசியமான முறையில் பண்ணிக் கொடுப்பாரா .. ? "

" அவர்கிட்டே பேசிப் பார்க்கணும் ஸார் "

" இன்னிக்கே அவர்கிட்ட பேசுங்க.. செல்போனிக் கான்வர்சேஷன் வேண்டாம்.. நேரிடையாய்ப் போய் பேசறதுதான் சரியாக இருக்கும் "

" எஸ் ஸார் " என்று பூபதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே டி.ஜி.பி.யின் செல்போனிலிருந்து வாட்ஸ் அப் மெஸேஜ் வந்ததற்கு அறிகுறியாக ஒரு அலர்ட் டோன் கேட்டது.
எடுத்துப் பார்த்தார்.
மனித உரிமை கமிஷனின் தலைவர் தெய்வசிகாமணி கொடுத்திருந்த ஒரு செய்தி இரண்டு வரிகளில் தெரிந்தது.

" எல்லா டி.வி.சானல்களிலும் இப்போது நெருப்பாய் ஒரு ப்ரேக்கிங் நியூஸ் போய்க் கொண்டிருக்கிறது. பார்க்கவும் "
ராம்பாபு உடனே மேஜையின் ஒரத்திலிருந்த ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, பக்கவாட்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்த டிவியை ஆன் செய்து ஒரு செய்தி சானலுக்குள் போக, அந்த டி.வி.சானல் வயிற்றைப் பிசைகிற பின்னணி இசையோடு பிரேக்கிங் செய்தியை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. ஒரு பெண் நியூஸ் ரீடர் உதட்டுச் சாயம் அழிந்து விடாமல் நிதானமான குரலில் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தாள்.

" மனித உரிமை கமிஷனின் அதிரடி உத்தரவு காரணமாய் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அதிரா அப்பார்ட்மெண்ட்டில் ஒரு குறிப்பிட்ட ஃப்ளாட்டில் குடியிருந்த நபர்கள் கடந்த ஆறு வருடங்களில் மர்மமான முறையில் இறந்து போனதைத் தொடர்ந்து ஒரு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறந்து போன ஆறு பேர்களில் நான்கு பேர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட நிலையில் மீதி இருந்த வான்மதி, அன்வர்அலி இருவரும் அடக்கம் செய்யப்பட்டு இருந்ததால் அவர்களுடைய உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த இரு உடல்களும் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மறுகூராய்வு செய்யப்பட்டது. அந்த கூராய்வு அறிக்கையில் இறந்து போன நபர்களின் எலும்புகளில் ஜெல்பால் ப்ளாஸ்டர் என்கிற ரசாயனம் ஒட்டியிருந்ததாகவும் அது ஹார்ட் அட்டாக்கைப் போன்று உடனடியாய் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு வகையான ரசாயனம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டு தூசி மண்டிப்போயிருந்த இந்த விவகாரம் மனித உரிமை கமிஷனின் தலைவர் தெய்வசிகாமணியின் அதிரடி நடவடிக்கையால் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக நமது தொலைக்காட்சி நிருபர் சுடர்மணி மருத்துவமனையில் வளாகத்திலிருந்து தமது கருத்துக்களைத் தொகுத்து அளிக்கப் போகிறார்"

டி.வியில் ப்ரேக்கிங் நியூஸ் போய்க் கொண்டிருக்கும்போதே மேஜையின் மீது இருந்த டி.ஜி.பியின் ஹாட்லைன் டெலிபோன் பீப் சத்தத்தை வெளியிட்டது.
ரிஸீவரை எடுத்து இடது காதுக்கு பொருத்த மறுமுனையில் சென்ட்ரல் விஜிலென்ஸ் ஆபீஸர் ஷிவ்ராம் ஆங்கிலத்தில் கேட்டார்.

" மிஸ்டர் ராம்பாபு.... உங்களுக்குப் பக்கத்தில் இப்போது யாராவது இருக்கிறார்களா.. ? "

" இல்லை ஸார் "

" உங்களுடன் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும் "

" தாராளமாய் பேசலாம் ஸார் "

" நான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறேன். அதிரா அப்பார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கண்டு கொள்ள வேண்டாமென்று. ஆனால் நான் சொன்னதை நீங்கள் பொருட்படுத்தவில்லை போலிருக்கிறது "
டி.ஜி.பி ராம்பாபு அப்பாவித்தனமான குரலில் கேட்டார்.

" எந்த விவகாரம் ஸார்.. ? "

"அதிரா அப்பார்ட்மெண்ட் விவகாரத்தை சொல்கிறேன். மனித உரிமை கமிஷன் இதில் தலையிட்டு சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. பொதுவாக அந்த கமிஷன் ஒரு டம்மி அமைப்பு. அதற்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த அதிகாரத்தின் பெயரால் நடவடிக்கைகளை எடுக்க கமிஷன் தலைவர்கள் தயங்குவார்கள். ஆனால் இப்போது கமிஷனின் தலைவராக தெய்வசிகாமணி வரம்பு மீறி செயல்பட்டிருக்கிறார். இதனால் அவருடைய உயிர்க்கு ஆபத்து ஏற்படலாம். உடனே நீங்கள் தலையிட்டு அவருடைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் "

" .............................. "

" ஹலோ ராம்பாபு... என்ன பதிலையேக் காணோம்.. ? "

" ஸாரி ஸார் "

" எதுக்கு ஸாரி .. ? "

" உங்கள் பேச்சை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். அது சரியாக பதிவாகிறதாவென்று ஒரு தடவை செக் செய்து கொண்டேன். இனி நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் ஸார் "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 ]

English summary
Flat number 144 adhira apartment episode 56 by rajesh kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X