For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதிலுக்கு உள்ளே நிசப்தம்... என்ன நடந்தது.. ? ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (55)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

ராவ்டே பிந்தரின் முகம் கலவரத்தில் விழுந்தது. தலையை உயர்த்தி இன்ஸ்பெக்டர் ராம்குமாரை ஏறிட்டார்.

" ஸார்... இப்ப சத்தம் நல்லாவே கேட்குது.. எதையோ நகர்த்தி வைக்கிற மாதிரி "

" அதே தான்.. ஆனா அந்த சத்தம் இந்த வீட்டோட எந்தப்பகுதியிலிருந்து வருதுன்னு தெரியலையே "

" ஓவ்வொரு ரூமாய் போய் தடாலடியாய் திறந்து பார்த்துட வேண்டியதுதான்" சொன்ன இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்களோடு ஓவ்வொரு அறையையும் நெருங்கி விருட்டென்று திறந்து கொண்டு உள்ளே போனார். ஹாலை ஒட்டியிருந்த முதல் அறையில் யாருமில்லை. பார்வையால் ஓவ்வொரு சதுர அடியையும் கழுவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.

அது இரண்டாவது படுக்கையறை. தலையணை ஒன்று கீழே விழுந்து கிடக்க, கட்டிலின் மேல் சரியாய் மடித்து வைக்கப்படாத போர்வை குவியலாய் தெரிந்தது. ஆன் செய்யப்பட்டிருந்த ஏர்க்கண்டிஷனர் மெலிதாய் உறுமிக்கொண்டிருந்தது. அட்டாச்சடு பாத்ரூமின் கதவைத் திறந்து பார்த்துவிட்டு மூன்றாவது அறையை நோக்கிப் போனார் இன்ஸ்பெக்டர். பத்தடி நடந்திருப்பார்.

Flat number 144 adhira apartment episode 555

சமையலறையை ஒட்டியிருந்த மூன்றாவது அறையின் கதவைத் திறக்க முயன்றுக் கொண்டிருந்த அந்த கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் குரல் கொடுத்தார்.

" ஸார் "

" என்ன.. ? "

" இந்த ரூமோட கதவு உள்புறமா லாக் ஆகியிருக்கு "

கான்ஸ்டபிள் சொன்னதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் வேகமாய் கதவை நெருங்கி அதைத் தள்ளி பார்த்தார். கதவு அசைய மறுக்கவே ராவ்டே பிந்தரைப் பார்த்தார்.

" அவன் இந்த ரூமுக்கு உள்ளேதான் இருக்கான் போலிருக்கு"

" மே..பி...ஸார்....."

" நீங்க அவனோட பேரைச் சொல்லி கூப்பிட்டுப் பாருங்க"

சரியென்று தலையசைத்த ராவ்டே பிந்தர் கதவைத் தட்டிக்கொண்டே கூப்பிட்டார்.

" சஞ்சய் "

பதிலுக்கு உள்ளே நிசப்தம்.

மறுபடியும் கூப்பிட்டார் ராவ்டே பிந்தர்.

" சஞ்சய்.. கதவைத் திற... உன்னால தப்பிச்சு போக முடியாது "

இன்ஸ்பெக்டரும் கோபமாய் குரலை உயர்த்தி கத்திக்கொண்டே பூட்ஸ் காலால் கதவை உதைத்தார்.
" ஒப்பன் த டோர்... இந்த கதவை உடைச்சுட்டு உள்ளே வர ரொம்ப நேரமாயிடாது"

உள்ளேயிருந்து எந்த பதிலும் வராமல் அறைக்குள்ளே அசாத்திய அமைதி நிலவியது.

சில விநாடிகள் மெளனமாய் இருந்த இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளைப் பார்த்து கண் அசைக்க, அவர்கள் வீட்டுக்குள் ஒரு ஐந்து நிமிஷம் தேடி சிறிய கடப்பாரையையும், கனமான ஸ்பேனர் ஒன்றையும் கொண்டு வந்தார்கள். கதவின் தாழ்ப்பாள் இருந்த பகுதியை பலமனைத்தையும் திரட்டி உடைக்க ஆரம்பித்தார்கள்.

ஐந்தே நிமிடம்.

ப்ளைவுட் பலகையினாலான அந்தக் கதவு தன் மீது விழுகிற இடி போன்ற அடிகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், சிறிது சிறிதாய் நெகிழ்ந்து பின்னுக்கு சாய்ந்து பிறகு பெரிய சத்தத்தோடு மல்லாந்து விழுந்தது. சுற்றிலும் தூசி பறந்தது.

இன்ஸ்பெக்டர் ராம்குமார் ரிவால்வரை எச்சரிக்கையோடு உயர்த்திப் பிடித்தபடி அறைக்குள் நுழைய, அவர்க்குப் பின்னால் ராவ்டே பிந்தரும், கான்ஸ்டபிள்களும் தொடர்ந்தார்கள்.

அது சற்றே பெரிதான படுக்கையறை. சுவரின் ஒரத்தில் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் 22 அங்குல எஃப்.ஹெச்.டி. டெஸ்க் கம்ப்யூட்டர் ஒன்று இடம் பிடித்திருக்க, அதன் திரையில் உலக வரைபடம் வண்ணமாய் நகர்ந்து கொண்டிருந்தது.

கான்ஸ்டபிள்கள் அந்த அறை முழுவதும் பரவினார்கள். இரண்டு பக்க சுவர்களிலும் பொருத்தப்பட்டிருந்த வார்ட்ரோப் கதவுகளைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்த விநாடிகளில் அந்த அறையின் கடைசிப்பகுதியில் நின்று கொண்டிருந்த ராவ்டே பிந்தர் பெரிதாய் குரல் எழுப்பிக் கத்தினார்.
" ஸ..ஸார் அவன் தப்பிச்சுட்டான் "

முகம் மாறி, பதட்டமடைந்த இன்ஸ்பெக்டர் ராவ்டே பிந்தரை நோக்கிப் போனார்.
" எ..எ..என்ன சொல்றீங்க .. ? "

" இ.. இ.. இங்கே வந்து பாருங்க ஸார் "

அவர் சுட்டிக்காட்டிய இடத்தை இன்ஸ்பெக்டர் பார்த்தார்.

அறையின் குறுக்குச்சுவர்க்குப் பின்புறம் இருந்த க்ரில் ஜன்னலின் ஃப்ரேம் கழற்றப்பட்டு தரையில் கிடத்தப்பட்டிருக்க, இரண்டரை சதுர பரப்பளவோடு ஜன்னல் இருந்த இடம் இப்போது வெறுமையாய் நூலாம்படையோடு காட்சியளித்தது.

" ஸார்... இது சுவரோடு சுவராய் பொருத்தப்பட்ட டம்மி ஜன்னல் மாதிரி தெரியுது. ஜன்னலோட நாலு கார்னரையும், சுலபமாய் கழற்றுகிற அளவுக்கு ஸ்க்ரூ பண்ணியிருக்கான். இது போன்ற இக்கட்டான நேரங்களில் தப்பிக்க முன்கூட்டியே இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை பண்ணியிருக்கலாம் "

இன்ஸ்பெக்டர் ஜன்னல் இருந்த இடைவெளியில் தலையை நுழைத்து வெளியே எட்டிப் பார்த்தார்.
அகலமான சன் ஷேடும், அதையொட்டி வசதியாய் கீழே இறங்க ஆறு அங்குல விட்டத்தோடு கூடிய பி.வி.சி.குழாயும் அவருடைய பார்வைக்குத் தட்டுப்பட்டது.

ஒரு உஷ்ணமான பெருமூச்சோடு இன்ஸ்பெக்டர் நெற்றியைப் பிடித்துக்கொண்ட விநாடி அவருடைய செல்போன் அழைத்தது. எடுத்துப்பார்த்தார். மறுமுனையில் சந்திரசூடன்.

செல்போனை காதுக்குக் கொடுத்து " ஸார் " என்றார்.

சந்திரசூடன் ஆர்வமாய்க் கேட்டார்.

" என்ன சஞ்சய் பட்டேலை மடக்கிட்டீங்களா.. ? "

" ஸாரி ஸார் "

" ஸாரி பார் வாட்...? "

" தப்பிச்சுட்டான் ஸார் "

" எ..எ..என்னது தப்பிச்சுட்டானா... எப்படி...? "

இன்ஸ்பெக்டர் ராம்குமார் விபரம் சொல்லி முடித்த விநாடி சந்திரசூடனிடமிருந்து கட்டளைகள் பிறந்தன.
" ராம்குமார்... நீங்க இந்த விஷயத்தை உடனடியாய் கண்ட்ரோல் ரூமுக்கு கன்வே பண்ணிட்டு, அவனை சேஸ் பண்ணி பிடிக்க கான்ஸ்டபிள்களை அனுப்பி வையுங்க. அவன் இன்னமும் அந்த ஏரியாவில் தான் இருக்க வாய்ப்பு அதிகம்.. கொஞ்சம் முயற்சி செஞ்சா பிடிச்சுடலாம். ராவ்டே பிந்தர் உங்க பக்கத்துலதானே இருக்கார்...? "

" ஆமா ஸார் "

" நீங்களும், அவரும் அந்த ஃப்ளாட்டை சர்ச் பண்ணி இந்த கேஸூக்கு உபயோகப்படற மாதிரி தகவல்கள் ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க... "

" எஸ்.. ஸார் "

" உங்ககிட்டயிருந்து வரப்போகிற ஒரு நல்ல தகவலுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்"
" அடுத்த அரைமணி நேரத்துக்குள்ளே உங்களுக்கு மறுபடியும் போன் பண்றேன் ஸார் " செல்போனை அணைத்தார் இன்ஸ்பெக்டர்.

*********
மாலை ஆறு மணி

டி.ஜி.பி. அலுவலகம்.

சந்திரசூடன் இருண்டு போன முகத்தோடு டி.ஜி.பி. ராம்பாபுவுக்கு முன்பாய் உட்கார்ந்திருக்க, அறைக்குள் ஒரு அசாதாரண மெளனம் நிலவிக் கொண்டிருந்தது. அரை நிமிட அமைதிக்குப்பின் ராம்பாபு பேச ஆரம்பித்தார்.
" அயாம் ஹைலி டிஸப்பாயிண்டெட் மிஸ்டர் சந்திரசூடன். அந்த சஞ்சய் பட்டேல் நம்ம கைக்கு மாட்டியிருந்தா இந்நேரம் எல்லா உண்மைகளும் வெளிய வந்திருக்கும். அவன் இப்படி புத்திசாலித்தனமா தப்பிச்சுட்டு போவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை... "

" எஸ் ஸார்... இப்ப இருக்கிற கிரிமினல்ஸ் எல்லாருமே பின்விளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்ங்கிறதை முன்கூட்டியே கெஸ் பண்ணி அதுக்கு ஏற்றமாதிரியான ஏற்பாடுகளை செஞ்சு, சட்டத்தோட பிடியிலிருந்து எப்படியோ தப்பிச்சிடறாங்க.. அப்படிப்பட்ட நபர்களில் சஞ்சய் பட்டேலும் ஒருத்தன். தனி போலீஸ் படை ஒண்ணு அவனைப் பிடிக்கிறதுக்கான முயற்சியில் முழு வீச்சோடு ஈடுபட்டிருக்கு ஸார். கண்டிப்பாய் மடக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன் "

" ஐ ஹேவ் தட் ஹோப் மீ டூ... பை... த .....பை அந்த சஞ்சய் பட்டேலோட ஃப்ளாட்டை சர்ச் பண்ணினதில் நமக்கு யூஸ்ஃபுல் ட்ரேஸஸ் ஏதாவது கிடைச்சுதா...? "

" ஒரு முக்கியமான தடயம் கிடைச்சிருக்கு ஸார் "

" என்ன...? "

" அதிரா அப்பார்ட்மெண்ட்டில் போன வாரம் நான் தாட்சாயணி அம்மாவோடு பேசிட்டு இருக்கும்போது ஒய் ப்ளாக் மொட்டை மாடியிலிருந்து ஒரு நபர் வாட்டர் டேங்க் ஸின்க்குக்குப் பின்னாடி நின்னுகிட்டு, வீடியோ எடுத்துட்டு இருந்தபோது, கோபிகாவோட அப்பா ஆதிகேசவன் தன்னோட மொட்டை மாடியிலிருந்து அதைப் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி தகவல் சொன்னார். நான் உடனே ராவ்டே பிந்தர்க்கு தகவல் கொடுத்து அந்த வீடியோவை எடுக்கிற பேர்வழியை மடக்கும்படியாய் சொன்னேன். ஐ திங்க் இட் ஈஸ் ரிமைண்டட் ஆஃப் யூ ஸார்...? "
" எஸ்.. நல்லாவே ஞாபகம் இருக்கு. ராவ்டே பிந்தர் அந்த வீடியோவை எடுக்கிற நபரை மடக்கப்போனதும், ஆனா அங்கே எதிர்பாராதவிதமாய் ஏதோ ஒரு சம்பவம் நடந்து, ராவ்டே பிந்தர் நினைவு இழந்த நிலையில் அங்கே விழுந்து கிடந்ததும், அவர் அணிந்திருந்த உடைகள் மாற்றப்பட்டு வீடியோ எடுத்த நபரின் ஆடைகள் அவர்க்கு அணிவிக்கப்பட்டும் இருந்ததாய் நீங்க சொன்னதும் எனக்கு நினைவிருக்கு.... "

" அது சம்பந்தப்பட்ட ஒரு தடயம் கிடைச்சிருக்கு ஸார்"

" என்ன தடயம்...? "

"அன்னிக்கு வீடியோ எடுத்த பேர்வழி சஞ்சய் பட்டேல்தான்னு தெரிய வந்திருக்கு ஸார்"

" எதை வெச்சு அந்த முடிவுக்கு வந்தீங்க ...? "

" ராவ்டே பிந்தரோட ட்ரஸ் சஞ்சய் பட்டேலோட படுக்கையறையோட லாஃப்ட் மேல ஒரு ந்யூஸ் பேப்பர்ல சுத்தி வைக்கப்பட்டு இருந்தது ஸார் "

சந்திரசூடன் சொல்ல ராம்பாபு நெற்றியை சுருக்கினார்.

"அந்த ட்ரஸ்ஸை டிஸ்போஸ் பண்ணாமே அவன் ஏன் பாதுகாப்பா வெச்சிருக்கணும்...? "

" ராவ்டே பிந்தர் ராணுவத்தில் இருந்ததால அவரோட ட்ரஸ் சென்ஸ் எப்பவுமே வித்தியாசமாயிருக்கும் ஸார். டார்க் க்ரே கலர்லதான் பெரும்பாலும் அவரோட பேண்ட் சர்ட் இருக்கும். சஞ்சய் பட்டேல் அந்த ட்ரஸை பயன்படுத்தி சட்ட விரோதமான சில வேலைகளைப் பண்ண நினைச்சிருக்கலாம். திஸ் ஈஸ் மை கெஸ் வொர்க் ஸார் "

" மே..பி.... நீங்க சொல்றது கூட சரியான காரணமாய் இருக்கலாம். இந்த ட்ரஸ் தவிர வேற ஏதாவது தடயங்கள் அந்த ஃப்ளாட்ல கிடைச்சுதா ...? "

" சஞ்சய் பட்டேல் ஒரு லேட்டஸ்ட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை யூஸ் பண்ணிட்டு வந்திருக்கான் ஸார். பொதுவா இண்டர்நேஷனல் லெவல்ல பிசினஸ் பண்றவங்கதான் அது மாதிரியான காஸ்ட்லி கம்ப்யூட்டரை
உபயோகப்படுத்துவாங்க. அந்த கம்ப்யூட்டரை ஒப்பன் பண்ண முயற்சி செஞ்சோம். அது பாஸ்வேர்டையும் சீக்ரெட் கோட் நெம்பர்ஸையும் கேட்டதால ஒப்பன் பண்ண முடியலை. அவன் கைக்கு கிடைச்சாத்தான் கம்ப்யூட்டரில் இருக்கிற விஷயங்கள் நமக்கு தெரிய வரும் ஸார் "

டி.ஜி.பி. ராம்பாபு மேற்கொண்டு பேசுவதற்காக முயற்சித்த விநாடி, சந்திரசூடனின் செல்போன் அவருடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்த லோ டெஸிபல் வாய்ஸில் கூப்பிட்டது. அழைப்பது யாரென்று எடுத்து பார்த்துவிட்டு டி.ஜி.பி.யை ஏறிட்டார்.

" ஸார்.. ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்டிலிருந்து போன். ஃபாரன்ஸிக் க்ரைம் சீன் இன்வெஸ்டிகேட்டர் பூபதி லைன்ல இருக்கார் "

" ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டுப் பேசுங்க "

சந்திரசூடன் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு " சொல்லுங்க பூபதி " என்றார்.

" ஸார்.. நீங்க இப்ப டி.ஜி.பி ஆபீஸ்ல இருக்கிறதாய் சர்வேஷ் சொன்னார் "

" ஆமா.. இப்ப அங்கேதான் இருக்கேன். என்ன விஷயம்...? "

பூபதி தயக்கத்தோடு கேட்டார். " நான் இப்ப டி.ஜி.பி ஆபீஸூக்கு வரலாமா ஸார்...? "

" ஏதாவது முக்கியமான விஷயமா ...? "

" ஆமா ஸார்.. போன வாரம் ஃப்ளாட் நெம்பர் 144ல் நூற்றுக்கணக்கில் கரப்பான் பூச்சிகளும், பல்லிகளும், பூரான்களும் செத்துக் கிடந்ததுக்கான காரணம், இன்னிக்குத்தான் தெரிய வந்திருக்கு.. அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் டெல்லியில் இருக்கிற நேஷனல் ஃபாரன்ஸிக் கெமிஸ்டரி சென்டரிலிருந்து ரிப்போர்ட் வந்தது. நான் உடனே சர்வேஷை காண்டாக்ட் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். அவர்தான் நீங்க டி.ஜி.பி ஆபீஸிலி இருக்கிறதாய் சொன்னார்"

குரலில் ஆர்வம் சிதற சந்திரசூடன் கேட்டார்.

" ரிப்போர்ட்ல என்ன போட்டிருக்கு ...? "

" 144 ஃப்ளாட்டில் நடந்த சம்பவம்.. சாதாரணமானது அல்ல. அப்நார்மல்ன்னு சிவப்பு எழுத்துக்களில் டைப் பண்ணி அனுப்பியிருக்காங்க ஸார் "

" அப்நார்மல் ...? "

" எஸ் ... ஸார் "

" எனக்குப் புரியற மாதிரி சொல்லுங்க பூபதி "

" ஜியோ பிசிக்ஸ் அண்ட் ஜியோ கெமிஸ்டரி இந்த வார்த்தைகளை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா ஸார்...? "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 ]

English summary
Flat number 144 adhira apartment episode 55 by Rajeshkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X