For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"“ அப்படின்னா... ஏதோ தப்பு இருக்கு?" ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (59)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

பூபதி கதவின் சாவிதுவாரத்தில் கண்ணை வைத்து வெளியே நின்றிருக்கும் நபர் யார் என்பதைப் பார்த்ததும், லேசாய் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே சந்திரசூடனிடம் திரும்பி வந்து குரலை வெகுவாய்த் தாழ்த்தினார்.

" ஸார்.. வந்திருக்கிறவர் யார் தெரியுமா.. ? "

" யாரு.. ? "

" ராவ்டே பிந்தர் "

சந்திரசூடனின் நெற்றி வியப்பின் சுருக்கங்களுக்கு உட்பட்டு உதடுகள் தன்னிச்சையாய் முனகியது.

" அவர் எதுக்காக இப்ப இங்கே வந்திருக்கார்ன்னு தெரியலையே "

" நீங்க இந்த ஃப்ளாட்டுக்கு வந்ததைப் பார்த்துட்டு என்ன ஏதுன்னு விசாரிக்க வந்திருக்கலாம் ஸார் "

" மே..பி... நானும் அப்படித்தான் நினைக்கிறேன். போய் கதவைத் திறங்க "

" ஸ..ஸ...ஸார் " என்று தயக்கமாய் குரலை இழுத்தார் பூபதி.

" என்ன.. ? "

" அவர்க்கு இந்தத் தங்கச்செங்கல் விவகாரம்.. ? "

" தெரிய வேண்டாம். ராவ்டே உள்ளே வந்ததும் நான் மட்டும் அவர்கிட்டே பேசறேன். நீங்க யாரும் பேச வேண்டாம் "
பூபதி தலையசைத்துவிட்டு கதவை நோக்கிப் போய் தாழ்ப்பாளை விலக்க, ராவ்டே பிந்தர் உள்ளே வந்தார்.
சந்திரசூடன் ஒரு புன்முறுவலோடு தலையசைத்தார்.

Flat number 144 adhira apartment episode 59

" வாங்க மிஸ்டர் ராவ்டே "

" ஸாரி ஸார்... நீங்க ஏதோ ஒரு முக்கியமான விஷயமாய் ஃப்ளாட்டுக்கு வந்து டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கும்போது நான் வந்துட்டேன் "

" நோ ப்ராப்ளம்... இது ஒரு வழக்கமான ஒரு ஃப்ரான்ஸிக் இன்வெஸ்டிகேஷன்தான் மிஸ்டர் பூபதியை உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஹி ஈஸ் மிஸ்டர் நாராயண ரெட்டி, ரிடையர்ட் சீஃப் ஜியாலஜிஸ்ட். இந்த 144ம் நெம்பர் ஃப்ளாட்டில் சில தினங்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் இறந்துபோன பூச்சிகளைப்பற்றி கேள்விப்பட்டு அதுக்கான காரணம் என்னவாயிருக்கும்ன்னு டெஸ்ட் பண்ண வந்திருக்கார்... "

" டெஸ்ட்ல ஏதாவது தெரிய வந்ததா ஸார்.. ? "

" இல்லை... அவர்க்கு இந்த விஷயம் குழப்பமாயிருக்குன்னு சொன்னார்... "

" நீங்க இந்த ப்ளாட்டுக்குள்ளே வரும்போதே நான் உங்களை பார்த்துட்டேன். ஏதோ இன்வெஸ்டிகேஷனுக்காகத்தான் வந்திருக்கீங்கிறதையும் புரிஞ்சுகிட்டேன். இன்வெஸ்டிகேஷனை முடிச்சுட்டு வெளியே வரும்போது உங்ககிட்ட விபரத்தைக் கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு வெயிட் பண்ணிட்டிருந்த நேரத்துலதான் ஒரு முக்கியமான தகவல் எனக்குக் கிடைச்சுது. அதை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கத்தான் உடனே புறப்பட்டு வந்தேன் "

சந்திரசூடன் வியப்போடு புருவங்களை உயர்த்தியபடி கேட்டார்.

" என்ன விஷயம்... சொல்லுங்க.. "

" தனியாய்ப் போய் பேசலாமா ஸார் .. ? "

"வாங்க" என்று சொன்ன சந்திரசூடன் பக்கத்து அறைக்குள் நுழைந்து, ஜன்னலருகே போய் நின்று கொள்ள ராவ்டே பிந்தர் அவரை நெருங்கினார். சந்திரசூடன் கேட்டார்.

" ம் சொல்லுங்க ராவ்டே.. என்ன விஷயம்.. ? "

" ஸார்... ஸ்ரீலங்கா எம்பஸியிலிருந்து உங்களுக்கு அருளானந்தத்தைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைச்சுதா.. ? "
"ம்... கிடைச்சுது "

" அந்த தகவல் என்னான்னு நான் தெரிஞ்சுக்கலாமா.. ? "

" தாராளமாய் " என்று தலையசைத்த சந்திரசூடன் தொடர்ந்து பேசினார்.

" ஸ்ரீலங்காவுக்குப்போன அருளானந்தம் யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளான அரியாலை, கொக்குவில், நாவற்குழியில் அனிமல் ஸ்லாட்டரிங் பிசினஸ் நடத்திட்டு வந்திருக்கிறார். அந்தத் தொழிலில் நஷடம் ஏற்படவே, அந்த பிசினஸை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்துவிட்டதாக நாவற்குழி காவல்துறை ரிப்போர்ட் கொடுத்து இருக்கு "

" அருளானந்தம் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்து எவ்வளவு வருஷமாச்சுன்னு அந்த ரிப்போர்ட்ல மென்ஷன் பண்ணியிருக்கா ஸார்.. ? "

" ரெண்டு வருஷத்துக்கு முன்பே அவர் வந்துட்டதா அதுல சொல்லப்பட்டிருக்கு "

" அருளானந்தம் தமிழ்நாட்ல எங்கே இருப்பார்ன்னு எப்படி கண்டுபிடிக்கப் போறோம்.. ? "

" இனிமேல்தான் அதுக்கான முயற்சியில் இறங்கணும். க்யூ பிராஞ்ச் போலீஸ் பீப்பிள்ஸ்கிட்ட இந்தப் பொறுப்பை ஒப்படைச்சுட்டா அவங்க ஒரு வார காலத்துக்குள்ளே எப்படியும் அருளானந்தம் இருக்கிற இடத்தை ஸ்மெல் பண்ணி கண்டுபிடிச்சுடுவாங்க "

ராவ்டே பிந்தரின் உதடுகளில் ஒரு புன்னகை உதித்தது.

" அதுக்கு அவசியமே இல்லை ஸார் "

" என்ன சொல்றீங்க ராவ்டே .. ? "

" ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் அருளானந்தம் இருக்கிற ஏரியா எதுன்னு தெரிஞ்சுது..... "
சந்திரசூடனின் விழிகளில் சந்தோஷம் கலந்த அதிர்ச்சியலைகள் பரவியது.

" எ..எ...எப்படி .. ? "

" திருமூர்த்தி எனக்கு போன் பண்ணிச் சொன்னார் "

" அதிரா அப்பார்ட்மெண்ட் கன்ஸ்ட்ரக்சன் பார்ட்னர்களில் ஒருத்தரான திருமூர்த்தியைத்தானே சொல்றீங்க.. ? "

" அவரேதான் ஸார்... ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்த அருளானந்தம் உத்திரமேரூரிலிருந்து திருமூர்த்திக்கு போன் பண்ணி தான் பணக்கஷ்டத்தில் இருக்கிறதாகவும், அஞ்சு லட்ச ரூபாய் உடனடியாய் கொடுத்து உதவமுடியுமான்னு கேட்டிருக்கார். கண்டிப்பா பண உதவி பண்றதாய் சொன்ன திருமூர்த்தி பணத்தை எப்படி எங்கே கொண்டு வந்து தர்றதுன்னு கேட்டிருக்கார். அதுக்கு அருளானந்தம் தான் இப்ப குடிருக்கிற இடம் வெளியே யார்க்கும் தெரியக்கூடாதுன்னும், பணத்தை உத்திரமேரூர் கோயில்ல நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு வந்து வாங்கிக்கிறதாகவும் சொல்லியிருக்கார். இந்த விஷயத்தை திருமூர்த்தி உங்களுக்கு உடனடியாய் இன்ஃபாரம் பண்றதுக்காக உங்க செல்போனை காண்டாக்ட் பண்ணியிருக்கார். ஆனா டவர் கிடைக்காமே நாட் ரீச்சபிள்ன்னு வாய்ஸ் மெஸேஜ் பலதடவை வந்ததால திருமூர்த்தி எனக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார் "

சந்திரசூடனின் முகம் ஒரு பெரிய மலர்ச்சிக்கு உட்பட்டது.

" க்ரேட்..... அருளானந்தத்தைக் கண்டுபிடிக்கிற விஷயத்தில் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன். டி.ஜி.பி.கூட சில மாதங்கள் ஆகலாம்ன்னு சொன்னார். ஆனா நீங்க இப்ப சொன்னத் தகவலைக் கேட்கும்போது சில மணி நேரங்கள் போதும் போலிருக்கே.... "

சந்திரசூடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராவ்டே பிந்தரின் செல்போன் தன்னுடைய டயல்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தவரின் விழிகளில் ஒரு சந்தோஷ மின்னல் பளிச்சிட்ட சந்திரசூடனை ஏறிட்டார்.

" ஸார்... திருமூர்த்தி லைன்ல இருக்கார்... நீங்க பேசறீங்களா.. ? "

" ம்...குடுங்க " என்று சொன்னவர் வாங்கிப் பேசினார்.

" மிஸ்டர் திருமூர்த்தி.... நான் சந்திரசூடன் "

" வணக்கம் ஸார்.... ராவ்டே பிந்தர் உங்ககிட்டே அருளானந்தம் எனக்கு போன் பண்ணின விஷயத்தைச் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன் "

" இப்பத்தான் பேசிட்டிருந்தோம்... அதுக்குள்ளே உங்க போன். ஜெல்பால் பிளாஸ்டர் ரசாயனத்தோடு சம்பந்தப்பட்ட அனிமல் ஸ்லாட்டரிங் பிசினஸை பண்ணிட்டிருந்த அருளானந்தத்தை ட்ரேஸ் அவுட் பண்றது போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு பெரிய சவாலாயிருக்குன்னு நினைச்சேன். அது இப்ப ஈஸியா முடியும் போலிருக்கு "

" ஆமா... ஸார்... அதிரா அப்பார்ட்மெண்ட் கன்ஸ்ட்ரக்சனோட இன்னொரு பார்ட்னரான ராவணனைக் காட்டிலும் அருளானந்தம்தான் என்கூட நெருக்கமா பழகுவார். அவர்க்கு ஏதாவது ஒரு பிரச்சினைன்னா என்கிட்டத்தான் கன்ஸல்ட் பண்ணுவார். ரெண்டு தடவை கடனுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவி பண்ணியிருக்கேன். சொன்ன நேரத்துல பணத்தை திருப்பியும் கொடுத்திருக்கார். நான் எப்படியும் உதவுவேன்ங்கிற நம்பிக்கையில்தான் எனக்கு இப்பவும் போன் பண்ணி அஞ்சு லட்ச ரூபாய் பணம் உடனடியாய் வேணும்ன்னு கேட்டிருக்கார் "

" அருளானந்தம் எந்த செல்போன் நெம்பரிலிருந்து பேசினார்ங்கிறதை நோட் பண்ணி அந்த நெம்பரை ஸேவ் பண்ணிட்டீங்களா.. ? "

" ஸேவ் பண்ணிகிட்டேன் ஸார்... ஆனா மறுபடியும் அந்த நெம்பரை நான் காண்டாக்ட் பண்ணினபோது அது ஒரு தடவை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய சிம்கார்டு நெம்பர்ங்கிறது தெரிய வந்தது "

" ஸோ... அவர்கிட்ட ஏதோ தப்பு இருக்கு "

" மே....பி.... ஸார்.... ஆனா நிச்சயமா அவர் தப்பான ஆள் கிடையாது "

" திருமூர்த்தி... நீங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை. தப்பு பண்ணினவர் தப்பானவராகத்தானே இருக்க முடியும் .. ? "

" ஸார்.... அருளானந்தம் எனக்கு போன் பண்ணிப் பேச ஆரம்பிச்சதுமே, அவர்க்கும், எனக்கும் நடந்த ஆடியோ கான்வர்சேஷனை நான் ரெக்கார்ட் பண்ணிகிட்டேன். முதல் தடவை அந்த ரெக்கார்ட் வாய்ஸை கேட்கும்போது மனசுக்கு எதுவும் நெருடலாப்படலை. திரும்பத் திரும்ப கேட்கும்போதுதான் அவர் ஏதோ பிரச்சினையில் மாட்டிகிட்டு இருக்கிறமாதிரி தெரியுது. உங்களோட வாட்ஸ் ஆப் நெம்பர்க்கு அந்த ஆடியோ மெஸேஜை அனுப்பி வைக்கிறேன். நீங்களும் கேட்டுப் பாருங்க ஸார்.. அது எதுமாதிரியான நெருடல்ன்னு போலீஸ் அதிகாரியான உங்களுக்கு ஒரு வேளை புரியலாம்...... "

" அந்த வாய்ஸ் மெஸேஜை உடனடியாய் எனக்கு அனுப்பி வையுங்க. நான் அதைக் கேட்டுட்டு மறுபடியும் உங்க லைனுக்கு வர்றேன் "

" இதோ..... அஞ்சு நிமிஷத்துல அனுப்பி வைக்கிறேன் ஸார் "

********
சொன்னபடியே அடுத்த ஐந்தாவது நிமிடம் முடிவதற்குள் சந்திரசூடனின் வாட்ஸ் ஆப்புக்கு திருமூர்த்தி அந்த வாய்ஸ் மெஸேஜை அனுப்பி வைத்தார். அதை ஆன் செய்துவிட்டு செவிமடுத்தார்கள் சந்திரசூடனும், ராவ்டே பிந்தரும். வாய்ஸ் மெஸேஜ் காற்றில் சிதறியது.

" ஹலோ..... எப்படியிருக்கே திருமூர்த்தி .. ? "

" நீங்க யார் பேசறது.. ? "

" என்ன திருமூர்த்தி.... என்னோட வாய்ஸ் கூட உனக்கு அடையாளம் தெரியலையா.. நான் தான் அருளானந்தம் "

" அருள் நீயா....? எங்கே இருக்கே.... எப்படியிருக்கே.... ? ஸ்ரீலங்காவிலிருந்துதானே பேசிட்டிருக்கே .. ? "

" இல்ல திருமூர்த்தி.... நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஸ்ரீலங்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிட்டேன் "

" அப்படியா சரி.... தமிழ்நாட்ல இப்ப எங்கே இருக்கே.. ? "

" அந்த விபரம் உனக்கு வேண்டாம்... எனக்கு இப்ப வேண்டியது உங்கிட்டேயிருந்து ஒரு உதவி மட்டுமே

" என்ன உதவி... சொல்லு.. ? "

" எனக்கு ,,, அவசரமா அஞ்சு லட்ச ரூபாய் பணம் வேணும் "

" திடீர்ன்னு என்ன செலவு.. ? "

" அதையெல்லாம் கேட்காதே... உன்னால உதவி பண்ண முடியுமா முடியாதா.? "

" கண்டிப்பா... பணம் தர்றேன்.. பணம் வாங்க எப்ப என் வீட்டுக்கு வர்றே .. ? "

" நான் உன் வீட்டுக்கு வரலை... நாளைக்கு காலையில் பத்து மணிக்கு உத்திரமேரூர் கோயில் வாசல்ல உனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன். அங்கே சந்திப்போம் "

" சரி... நான் வந்துடறேன் "

" இது கடன்தான்.. ஆறு மாசத்துக்குள்ளே குடுத்துடறேன் "

" உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா.. ? "

" அப்புறம் ஒரு விஷயம்.... "

" என்ன.. ? "

" இந்த விஷயம் வெளியே யார்க்கும் தெரியக்கூடாது "

" ஏன் இப்படி பயப்படறே அருள்.. ? "

" காரணம் இருக்கு.. ஆனா என்னான்னு கேட்காதே..... "

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 ]

English summary
Flat number 144 adhira apartment episode 59 by Rajesh Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X