For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அந்த ஃப்ளாட்ல அப்படி என்னதான் இருக்கு..?" ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (58)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சந்திரசூடன் ஸ்ரீலங்கா தூதரகத்திலிருந்து புறப்பட்டு, அதிரா அப்பார்ட்மெண்ட் போய்ச் சேர்ந்து, பேஸ்மெண்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்தினார். பின் லேசாய் மூச்சு வாங்கிக் கொண்டு மாடிப்படிகள் ஏறி, ஃப்ளாட் நெம்பர் 144ன் கதவுக்கு முன்பாய் போய் நின்றார். மொத்த அப்பார்ட்மெண்ட்டும் வேண்டாத ஒரு நிசப்தத்தில் இருந்தது.

ஃப்ளாட்டின் கதவைத் தள்ளிப் பார்த்தார். அது உட்பக்கமாய் சாத்தப்பட்டு இருக்கவே, காலிங் பெல் பட்டனின் மேல கையை வைத்தார்.

அடுத்த சில விநாடிகளில் கதவு திறக்கப்பட, பூபதியின் வியர்த்துப்போன முகம் பார்வைக்குக் கிடைத்தது.

" கம் இன் ஸார் "

சந்திரசூடன் உள்ளே நுழைந்தபடி ஆர்வம் தாங்கமாட்டாமல் கேட்டார்.

" பூபதி..... இந்த ஃப்ளாட்ல அப்படி என்னதான் இருக்கு.. ? "

" இப்ப பார்த்துடலாம் ஸார்.... " சொன்ன பூபதி அந்தச் சிறிய ஹாலைக் கடந்து பக்கத்து அறைக்குள் நுழைய உள்ளே அறுபது வயது மதிக்கத்தக்க அந்த வழுக்கைத் தலை மனிதர் பார்வைக்குத் தட்டுப்பட்டு கையை நீட்டினார்.

Flat number 144 adhira apartment episode 58

" அயாம் நாராயண ரெட்டி... ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இண்டியாவின் சீஃப் ஜியாலஜிஸ்டாய் வேலை பார்த்து ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் ரிடையரானேன். ப்ளீஸ்ட் மீட் யூ..... "

சந்திரசூடன் அவர் கையைப்பற்றிக் குலுக்கினார்.

" பூபதி உங்களைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கார். இந்த ஃப்ளாட்டை ஒரு ஆய்வுக்கு உட்படுத்தி, அதைப்பத்தின ஒரு ரிப்போர்ட்டை கொடுக்க நீங்க முன்வந்ததுக்காக எங்க டிபார்ட்மெண்ட் சார்பாய் நன்றி "

" நோ ஃபார்மாலிட்டிஸ் ஸார்.. உங்களுக்கு உதவி செய்யறதுக்காக எனக்கு கிடைச்ச ஒரு வாய்ப்பு இது... "

" இட்ஸ் ஒகே... நாள் முழுவதும் பார்த்து ஆச்சர்யப்படக்கூடிய அளவுக்கு இந்த ஃப்ளாட்ல அப்படி என்னதான் இருக்கு.. ? "

" நவ் ஐ வில் எக்ஸ்ஃப்ளைன் யூ ஸார் " சொன்ன நாராயண ரெட்டி சுவரோரமாய் வைக்கப்பட்டிருந்த ஒரு ஃபோர்டபிள் டிவைஸை எடுத்துப் பிரித்தார். அதன் முன்புறம் இருந்த காமிரா போன்ற அமைப்பை சரி செய்து கொண்டே பேசினார்.

" ஸார்... இந்த டிவைஸோட பேரு ரெய்டர் எம்.டி.3010. இது ஒரு நவீன மெட்டல் டிடெக்டர். இதை உபயோகப்படுத்தி ஃப்ளாட்டோட ஒவ்வொரு சதுர அடியையும் டிடெக்ட் பண்ணிப் பார்த்தபோதுதான் அந்த ஆச்சர்யம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஆச்சர்யத்தை தான் இப்ப நீங்க பார்க்கப் போறீங்க... "

ரெய்டரை இயக்கினார் நாராயண ரெட்டி. அது "ஹம்" என்ற சத்தத்தோடு ரீங்காரம் செய்ய ஃப்ளாட்டின் உட்புறமாய் கட்டப்பட்டு இருந்த ஒரு குறுக்கு சுவரின் அருகே அதைக் கொண்டு போனார். ட்வைஸின் உலோகக் கைகள் சுவரின் மீது பட்டதும் சிவப்பு விளக்கு எரிந்து பீப் சத்தம் கேட்டது. காமிராவின் திரை வெளிச்சம் பிடித்துக்கொண்டு சுவரின் உட்புறத்தைக் காட்ட, சிமெண்ட் பூச்சையும் கடந்த காந்தக் கதிர்கள் வரிசையாய் தெரிந்த செங்கற்களை நேர்த்தியாய் அடையாளப்படுத்தியது.

சந்திரசூடனிடம் நாராயண ரெட்டி கேட்டார்.

" ஸார்... நீங்க இப்ப டிவைஸோட காமிரா திரையில் எதைப் பார்த்துட்டு இருக்கீங்கன்னு சொல்ல முடியுமா .. ? "

" வரிசையா ப்ரிக்ஸ் ஐ மீன் செங்கல்தான் தெரியுது "

ரெட்டி மெல்லச் சிரித்தார்.

" நீங்க நினைக்கிற மாதிரி அது ப்ரிக்ஸ் கிடையாது"

" தென் .. ? "

" கோல்டு பார்ஸ்.... அதாவது தங்கத்தாலான செங்கற்கள்.... "

சந்திரசூடன் அதிர்ந்து போனவராய் நாராயண ரெட்டியை ஏறிட்டார்.

" ஆர்.. யூ ஷ்யூர் .. ? "

" நோ டவுட்.... இந்த ரெய்டர் எம்.டி.3010 பொய் சொல்லாது "

" அது தங்கமாய் இருந்தா மஞ்சள் நிறத்துல தெரியணுமே "

" எஸ்... ஆனா செங்கல் மாதிரி தெரியணும்ங்கிறதுக்காக கோல்டு பார்ஸ் மேல சிவப்பு பெயிண்ட்டை பூசியிருக்காங்க. தி க்ரிமினல்ஸ் ஆர் நவ் வெரி க்ளவர் "

" மைகுட்னஸ்... இந்த குறுக்கு சுவர்ல இருக்கிற எல்லா செங்கற்களுமே தங்கம்தானா.. ? "

" எஸ் ஸார்.... இந்த எண்பது அடி நீளமுள்ள உட்புற சுவர்களில் இருக்கிற எல்லா செங்கல்லுமே தங்கம்தான்.. ஆனா ஃப்ளாட்டோட வெளிப்புற சுவர்களில் சாதாரண செங்கல்தான்.. அதையும் செக் பண்ணிப் பார்த்துட்டேன்.. அப்புறம் இன்னொரு விஷயம் ஸார் "

வியப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு "என்ன " என்பது போல் பார்த்தார் சந்திரசூடன்.

" இந்த ஃப்ளாட்டை வாங்கின நபர் யாரோ, அவர்தான் இந்த ஃப்ளாட்டோட உட்புற அமைப்பையே மாத்தியிருக்கார். அதாவது தனிப்பட்ட முறையில் அவருடைய நம்பிக்கைக்குரிய ஆட்களை வெச்சு இந்த தங்க செங்கற்களை வெச்சு சுவர்களை கட்டியிருக்கணும். இந்த ஃப்ளாட்டோட ஒனர் யாரு.. ? "

" அவரோட பேர் கன்ஷிராம்.. சொந்த ஊர் புனே. நான் அவரை போன்ல ஒரு தடவை என்கொயரி பண்ணும்போது இந்த ஃப்ளாட்டை அவர் இன்வெஸ்ட்மெண்ட் பர்ப்பஸூக்காக வாங்கினதாகவும், ஃப்ளாட்டுக்கு குடி வந்தவங்க இறந்து போனதுக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாதுன்னு சொன்னார். ஃப்ளாட்டை பூட்டி சீல் வெச்ச அன்னிக்கு எனக்கு அவர் போன் பண்ணி சீக்கிரமே விசாரணையை முடிச்சு ஃப்ளாட்டை அவர்கிட்டே ஒப்படைக்கும்படியாய் கேட்டுகிட்டார்.. ஆனா நான் இதுவரைக்கும் அவரை நேர்ல பார்த்ததில்லை "

சந்திரசூடன் சொன்னதைக்கேட்டு நாராயணரெட்டி மெலிதாய் புன்முறுவல் பூத்தார்.

" இப்ப வேணும்ன்னா கன்ஷிராமுக்கு போன் பண்ணி இந்த ஃப்ளாட்டை விலைக்கு விக்கிற எண்ணம் இருக்கான்னு கேட்டுப் பாருங்க.. அவரோட ரியாக்சன் எப்படின்னு தெரிஞ்சுடும் "

" இதுவும் நல்ல யோசனைதான் " சொன்ன சந்திரசூடன் தன்னுடைய செல்போனை எடுத்து கன்ஷிராமின் இணைப்பு எண்ணைத் தொடர்பு கொண்டார். மறுமுனையில் ரிங் போய் பத்து விநாடிகளுக்குப் பிறகு ஒரு பெண் குரல் ஹிந்தி பேசியது.

" கோன்.. ? "

சந்திரசூடன் தனக்கு தெரிந்த ஹிந்தி புலமையை வைத்துக்கொண்டு பேசினார்.

" நான் சென்னையிலிருந்து அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சந்திரசூடன் பேசுகிறேன். கன்ஷிராம் செல்போன் நெம்பர்தானே இது.. ? "

" ஆமாம்... என்ன விஷயம்.. ? "

" அவருடன் பேச வேண்டும்... "

" அவர் இங்கு இல்லையே.. ? "

" நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா .. ? "

" நான் அவருடைய மனைவி "

" பெயர் .. ? "

" ராஷ்மி தேவி.... "

" உங்கள் கணவர் கன்ஷிராம் இப்போது எங்கே இருக்கிறார்..

" சிங்கப்பூரில் "

சந்திரசூடன் சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டார்.

" சிங்கப்பூரா .. ? "

" ஆமாம் "

" எப்போது அவர் சிங்கப்பூருக்குப் போனார்.. ? "

" சென்ற வாரம் " என்று சொன்ன ராஷ்மி தேவி சற்றே கோபமான குரலில் கேட்டாள்.

" எதற்காக இந்த விசாரணை .. ? சென்னையில் நாங்கள் வாங்கி வைத்து இருக்கும் அதிரா அப்பார்ட்மெண்ட் ஃப்ளாட்டையும் சீல் வைத்து முடக்கி உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை என்கிற பெயரில் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடந்த மரணச் சம்பவங்களுக்கும் எங்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று நூறு தடவையாவது என்னுடைய கணவர் உங்களிடம் சொல்லியிருப்பார். அவர் அப்படி சொன்னதை நீங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அவரை டார்ச்சர் செய்து கொண்டு இருப்பது எந்த வகையில் சரியென்று எனக்குத் தெரியவில்லை .. ? "

" மிஸஸ் ராஷ்மி... விபரம் புரியாமல் பேசாதீர்கள். அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில் குறிப்பாக உங்களுக்கு சொந்தமான 144ம் நெம்பர் ஃப்ளாட்டில் எதுமாதிரியான பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா... நியாயப்படி பார்த்தால் உங்கள் கணவர் கன்ஷிராம் சென்னைக்கு வந்து போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் "

" என்னுடைய கணவர் தேவையான அளவுக்கு உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விட்டார். அவர்க்கு அவருடைய பிசினஸை கவனிக்கவே இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை. இப்போது கூட அவர் பிசினஸ் விஷயமாகத்தான் சிங்கப்பூர் போயிருக்கிறார் "

" சிங்கப்பூரிலிருந்து அவர் எப்போது திரும்புவார்.. ? "

" எனக்குத் தெரியாது.. அவர் சிங்கப்பூருக்கு புறப்படுவதாக இருந்தால் கடைசி ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் அந்த விபரம் எனக்குத் தெரிய வரும். அதேபோல் சிங்கப்பூரிலிருந்து புனே வர ஏர்போர்ட்டில் இருக்கும்போதுதான் எனக்கு போன் பண்ணி சொல்லுவார் "

" சரி.. இப்போது நான் அவரோடு பேச வேண்டும். அவருடைய போன் நெம்பர் சொல்லுங்கள் "

" ஸாரி.. அந்த செல்போன் நெம்பரை யார்க்கும் தரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் "

" அவரோடு நான் பேசப் போவது ஒரு முக்கியமான விஷயம் "

" விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் சரி, கேட்கிற நபர் யாராக இருந்தாலும் சரி... சிங்கப்பூரில் இருக்கும்போது செல்போன் நெம்பர் தரக்கூடாது என்பது அவருடைய கட்டளை. அந்தக் கட்டளையை நான் மீற முடியாது. புனே திரும்பியதும் அவரே உங்களுக்கு போன் செய்து பேசுவார் "

மறுமுனையில் கன்ஷிராமின் மனைவி ராஷ்மி தேவி படபடவென்று பேசிவிட்டு செல்போனை அணைத்துவிட சந்திரசூடன் ஒரு பெருமூச்சோடு பூபதியை ஏறிட்டார்.

" கன்ஷிராமோட மனைவியே இவ்வளவு தைரியமாய் பேசறாள்ன்னா கன்ஷிராமோட பின்புலம் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கலாம்ன்னு என்னோட மனசுக்குப்படுது பூபதி"

" யூ மே பி கரெக்ட் ஸார்.. வட இந்தியாவில் இருக்கிற கன்ஷிராம் சென்னைக்கு வந்து எதுக்காக அதிரா அப்பார்ட்மெண்ட்ல ஒரு ஃப்ளாட் வாங்கணும்... இதுவே சந்தேகத்துக்குரிய மிகப் பெரிய கேள்விதான் "

" இன்னொரு விஷயம்... அடிக்கடி சிங்கப்பூர் போயிட்டு வர்ற அளவுக்கு அவர் அப்படியென்ன பிஸினஸ் பண்றார்ன்னும் தெரியலை.. அந்த ஆள் சிங்கப்பூரிலிருந்து புனே திரும்பறதுக்குள்ளே இந்த ஃப்ளாட்டிலிருக்கிற குறுக்குச்சுவர்களையெல்லாம் டெமாலிஷ் பண்ணி எந்த அளவுக்கு தங்கம் செங்கல் சைஸ்ல பதுக்கப்பட்டிருக்குன்னு பார்த்துடணும்.. என்னிக்கு அந்த வேலையை ஸ்டார்ட் பண்ணலாம் மிஸ்டர் ரெட்டி.. ? "

" இன்னிக்கே அந்த வேலையை ஆரம்பிச்சுடலாம் ஸார். என்னோட கெஸ்வொர்க் படி இந்தப் ஃப்ளாட்டுக்குள்ளே ரெண்டு டன் தங்கம் வரைக்கும் இருக்கலாம் "

தீர்க்கமான குரலில் நாராயணரெட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஃப்ளாட் வாசலில் அழைப்புமணியின் சத்தம் கேட்டது.

சந்திரசூடன், பூபதி, ரெட்டி மூணு பேரும் சற்றே திடுக்கிட்டு போனவர்களாய் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொண்டார்கள்.

" நான் போய் பார்க்கறேன் ஸார் "

மெதுவான குரலில் சொன்ன பூபதி வாசல் கதவை நோக்கிப்போனார். வந்திருப்பது யார் என்று தெரிந்து கொள்வதற்காக சாவி துவாரத்தில் கண்ணை வைத்துப் பார்த்தார்.

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 ]

English summary
Flat number 144 adhira apartment episode 58 by rajesh kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X