• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ராம்பாபு... இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்.." ப்ளாட் நெம்பர் – 144 ​அதிரா அப்பார்ட்மெண்ட் (57)

Google Oneindia Tamil News

செல்போனின் மறுமுனையில் இருந்த சென்ட்ரல் விஜிலென்ஸ் ஆபீஸர் ஷிவ்ராம் அதிர்ந்து போனவராய் குரலை உயர்த்தினார்.

" ராம்பாபு... இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள். என்னுடைய பேச்சை டேப்ரிக்கார்டரில் பதிவு செய்துகொண்டு இருக்கிறீர்களா.. ? "

" ஆமாம்... "

" எதற்கு.. ? "

" மனித உரிமை கமிஷன் தலைவராக இருக்கும் தெய்வசிகாமணியின் உயிர்க்கு நாளைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நீங்கள் சற்று முன் பேசிய பேச்சு ஒரு முக்கியமான ஆதாரமாக இருந்து கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க உதவியாய் இருக்குமே ஸார்... அதற்காகத்தான் "

" என்ன மிரட்டுகிறீர்களா.. ? "

ராம்பாபு மெல்லச் சிரித்தார்.

" ஸார்... நீங்கள் எனக்கு உயர் அதிகாரி. உங்களை நான் எப்படி மிரட்ட முடியும்? யூ ஹேவ் மிஸ்டேக்கன் மீ. நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ... அதை நான் செய்கிறேன். ஆனால் நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்துவிட்டால், அதிலிருந்து நான் மீள்வதற்கு எனக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா.. ? "

" நீங்கள் பேசுவது சரியில்லை " " நோ... ஸார்.. நான் சரியாகத்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் பேசுவதுதான் சரியில்லை. சென்ட்ரல் விஜிலென்ஸில் நீங்கள் ஒர் உயர் அதிகாரி. சட்ட விதிகளை மீறாமல் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையில்தான் அரசாங்கம் உங்களை அந்த உயர் பதவியில் அமர வைத்து இருக்கிறது. ஆனால் நீங்களோ ஏதோ ஒரு ஆதாயத்துக்காகவும், யாரோ ஒருவரை சந்தோஷப்படுத்துவதற்காகவும் நீதிக்கு புறம்பாக நடந்து கொள்கிறீர்கள். அது தவிர நீங்கள் செய்கிற தப்புக்கு என்னையும், உடந்தையாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம் ஸார்...

Writer Rajeshkumar oneindia: Flat number 144 adhira apartment episode 57

மனித உரிமை கமிஷன் தலைவர் பதவி ஒரு டம்மி போஸ்ட் என்று சொன்னீர்கள். ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் அது வெரி பவர்ஃபுல் போஸ்ட். இப்போது தலைவர் பதவியில் இருக்கும் தெய்வசிகாமணி சாதாரண நபர் கிடையாது. சென்னை ஹை கோர்ட்டில் நீதிபதியாய் இருந்து ஒய்வு பெற்றவர். தன்னுடைய பார்வைக்கு வருகின்ற எந்த ஒரு மனுவாக இருந்தாலும், அதைப்படித்து அந்த மனுவின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் தயங்காமல் நடவடிக்கை எடுக்கக்கூடியவர். அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையைத்தான் அதிரா அப்பார்ட்மெண்ட் விவகாரத்திலும் எடுத்திருக்கிறார். இங்கே சென்னையில் நடைபெறுகிற ஒரு விஷயத்தில் டெல்லியில் இருக்கிற நீங்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுவது எனக்கு வியப்பாக உள்ளது. இந்த விஷயத்திலிருந்து நீங்கள விலகி இருப்பது உங்களுக்கு நல்லது. சட்டம் இப்போது தன்னுடைய கடமையைச் செய்து கொண்டு இருக்கிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் இந்த விஷயத்தில் மெளனமாக இருந்தால், நான் டேப்ரிக்கார்டரில் பதிவு செய்துவைத்திருக்கும் உங்களுடைய பேச்சும் மெளனமாக இருக்கும். நீங்கள் பேசினால் நாளைக்கு அதுவும் பேசும். இது ப்ளாக் மெயிலிங் கிடையாது ஸார். இன்னும் சில மாதங்களில் பணியிலிருந்து ஒய்வு பெறப் போகிற ஒரு மூத்த அதிகாரியின் புத்திமதியாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். நான் பேசியது சரியென்று உங்களுடைய மனதுக்குப்பட்டால், நீங்கள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்போனின் இணைப்பைத் துண்டித்துவிடுங்கள் "

டி.ஜி.பி. ராம்பாபு பேசிவிட்டு காத்திருக்க, மறுமுனையில் சில விநாடிகள் நிசப்தம் நிலவி, பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

" கட் பண்ணிட்டார் " சொல்லிவிட்டு ராம்பாபு மெல்லச் சிரிக்க, சந்திரசூடனும், பூபதியும் அவருடைய சிரிப்பில் இணைந்து கொண்டார்கள்.

" ஸார்.... யூ ஹேவ் கிவன் ஏ ஸாஃப்ட் வார்னிங் டூ ஹிம்.... "

" நோ,,,, அதர்வே,,,, இது மாதிரியான உயர் அதிகாரிகளை இப்படிப் பேசித்தான் வழிக்குக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. அவர் பேசின பேச்சை நான் டேப்ரிக்கார்டரில் பதிவு பண்ணி வைக்கலை. ஆனா அதைப் பத்தின ஒரு பயத்தை மட்டும் அவரோட மனசுக்குள்ளே பதிவு பண்ணிட்டேன். அந்த பயம் இருக்கிறவரை இனிமேல் அவர் அதிரா அப்பார்ட்மெண்ட் விவகாரத்தில் தலையிடமாட்டார்" சொன்ன ராம்பாபு பூபதியிடம் திரும்பினார்.

" அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளே நாம சில நடவடிக்கைகளை உடனடியாய் எடுக்க வேண்டியிருக்கும். அதுல முதல் நடவடிக்கை நீங்கள் உங்களுக்குத் தெரிஞ்ச ஜியாலஜிஸ்ட் நாராயண ரெட்டியைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லி அதிரா அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற ஃப்ளாட் நெம்பர் 144ஐ ஒரு ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கணும்.... " பூபதி தலையசைத்தார்.

" அதுக்குத் தேவையான ஏற்பாடுகளை இந்த நிமிஷத்திலிருந்தே ஆரம்பிச்சுடறேன் ஸார் "

" தட்ஸ் குட் " என்று சொன்ன டி.ஜி.பி.யின் பார்வை சந்திரசூடனிடம் திரும்பியது.

" உங்களோட நெக்ஸ்ட் மூவ் என்ன... ஜெல்பால் ப்ளாஸ்டர் சம்பந்தப்பட்டது தானே? "

" ஆமாம் ஸார்... அதிரா அப்பார்ட்மெண்ட்டை கன்ஸ்ட்ரக்ட் பண்ணின மூணு பார்ட்னர்களில் ஒருத்தர் பேரு அருளானந்தம். அவர் இப்போ ஸ்ரீலங்காவில் அனிமல் ஸ்லாட்டரிங் பிசினஸ் பண்ணிட்டிருக்கிறதாய் கிடைச்ச தகவலின் அடிப்படையில் ஸ்ரீலங்கா தூதரகத்தில் அருளானந்தத்தோட போட்டோவைக் கொடுத்து விபரங்கள் கேட்டிருக்கேன்.. அவங்களும் ஒரு வார காலத்துக்குள்ளே யாழ்ப்பாணம் கிராமங்களில் விசாரிச்சுட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்றதா சொல்லியிருக்காங்க..... "

" ஸ்ரீலங்கா தூதரகத்துல நீங்க யாரைப் போய்ப் பார்த்து பேசிட்டு வந்தீங்க ? "

ஹெச்.ஆர்.ஒ.டிபார்ட்மெண்டல எக்ஸிக்யூடிவாய் ஒர்க் பண்ற ஹேமந்தான்னு ஒருத்தர். அவர்தான் நான் கொடுத்த அருளானந்தம் பற்றிய விபரங்களை எல்லாம் வாங்கி பதிவு பண்ணிகிட்டார் "

" அந்த ஹேமந்தாவுக்கு மறுபடியும் போன் போட்டு பேசினீங்களா ? "

" இல்ல ஸார் "

" எம்பஸி பீப்பிள் எப்பவும் பிஸியா இருப்பாங்க. நாமதான் அவங்களுக்கு ஒரு விஷயத்தைப்பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருக்கணும் "

" நான் இப்போ போன் பண்ணிப் பேசட்டுமா... ஸார் ? "

" வேண்டாம்... நேர்லயே போய்ப பார்த்துப் பேசிடுங்க... இந்தக் கேஸைப் பொறுத்தவரைக்கும் செல்போனிக் கான்வர்சேஷன் எதுவும் வேண்டாம். இன் பர்ஸன்

என்கொயரிதான் பெட்டர்மெண்டாய் இருக்கும் "

" யூ மே பி கரெக்ட் ஸார்.. நான் இன்னிக்கு மதியம் மூணு மணிக்கு போய் அவரைப் பார்த்துடறேன் "

" டூ இட் ஆஸ் யூ விஷ்.... " என்று சொன்ன ராம்பாபு பூபதியையும், சந்திரசூடனையும் ஏறிட்டபடி குரலைத் தாழ்த்தினார்.

" திஸ் ஈஸ் த டைம் ஃபார் போத் ஆஃப் யூ டு பி காஷியஸ். டேக் கேர் "

" வி நோ தட் டூ ஸார் "

********
ஸ்ரீலங்கா தூதரகம்.

மெலிதான நீலநிறக் கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்ட அந்த அறைக்குள் ஹெச்.ஆர்.ஒ. எக்ஸிக்யூடிவ் ஆபீஸர் ஹேமந்தாவுக்கு முன்பாய் உட்கார்ந்திருந்த சந்திரசூடன் தெளிவான ஆங்கிலத்தில் அழுத்தம் திருத்தமாய் பேசிக் கொண்டிருந்தார்.

" மிஸ்டர் ஹேமந்தா... ஸ்ரீலங்காவில் குடியேறிவிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அருளானந்தம் என்பவரைப் பற்றிய தகவல்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்கிற நம்பிக்கையில் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். அந்த நபரைப்பற்றிய ஏதாவது உபயோகமான தகவல் கிடைத்தால்தான் ஒரு முக்கியமான வழக்கின் விசாரணையை நல்ல முடிவை நோக்கி கொண்டு போக முடியும். அருளானந்தம் பற்றிய தகவல் ஏதாவது கிடைத்ததா .. ? "

நல்ல உயரத்தில் கரி பூசிய நிறத்தோடு இருந்த அந்த ஸ்ரீலங்கா ஹெச்.ஆர்.ஒ. எக்ஸிக்யூடிவ் ஹேமந்தா மையமாய் தலையை அசைத்துவிட்டு சிக்கனமான புன்னகையோடு அருகில் இருந்த இண்டர்காமின் ரிஸீவரை எடுத்தார். சிங்கள மொழியில் இரண்டு வரிகள் பேசிவிட்டு சந்திரசூடனை ஏறிட்டபடி சற்றே உடைந்துபோன ஆங்கிலத்தில் பேச்சை ஆரம்பித்தார்.

" மிஸ்டர் சந்திரசூடன்.... நீங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அருளானந்தம் என்ற நபரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ஸ்ரீலங்காவின் மாகாணக் காவல்துறையின் உதவியோடு ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியதில் எங்களுக்கு அந்த நபரைப்பற்றிய சில விபரங்கள் கிடைத்தது "
" ஈஸிட்.... ? " சந்திரசூடன் ஆச்சர்யப்பட்டுக்கொணடு இருக்கும்போதே அறையின் கண்ணாடிக் கதவை மெதுவாய் தட்டிவிட்டு செல்லூலாயிட் பொம்மையைப்போல் இருந்த ஒரு பெண் உள்ளே வந்து மேஜையின் மீது ஃபைல் ஒன்றை வைத்துவிட்டு பத்து விநாடி நேரத்திற்குள் காணாமல் போனாள். ஏ.ஸி. காற்றில் அவளுடைய உடம்பில் இருந்த ஃபெர்ப்யூம் மட்டும் மணத்தது.

ஹேமந்தா அந்தப் ஃபைலை எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு அதில் பார்வையை பதியவிட்டபடி பேச்சை மறுபடியும் தொடர்ந்தார். " அந்த அருளானந்தம் என்பவர் யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளான அரியாலை என்கிற ஊரில் இரண்டாண்டு காலம் இருந்துவிட்டு பின் கொக்குவில் என்கிற பகுதிக்கு குடி பெயர்ந்து அங்கு ஒரு வருடம் இருந்துவிட்டு பின் நாவற்குழியில் ஒன்றரை வருடகாலம் இருந்திருக்கிறார். பிறகு இரண்டு வருடத்திற்கு முன்பு அங்கிருந்து பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி அவர் இருக்கும் இடம் தமிழ்நாடு என்பது உறுதி செய்யப்ப்பட்டுள்ளது " சந்திரசூடன் குறுக்கிட்டு கேட்டார்.

" யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளான அரியாலை, கொக்குவில், நாவற்குழி பகுதிகளில் அவர் எதுமாதிரியான பிசினஸ் செய்து கொண்டிருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்ததா.. ? "

" ஆமாம்.... அனிமல் ஸ்லாட்டரிங் பிசினஸ். அந்தத் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் அந்த பிசினஸை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டுக்கு குடி பெயர்ந்துவிட்டதாக நாவற்குழி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கிருக்கும் நபர்களை விசாரித்துவிட்டு எங்களுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். அருளானந்தம் சம்பந்தப்பட்ட எல்லா விபரங்களும் இந்த ஃபைலில் இருக்கின்றன. நீங்கள் இதைப் படித்துப் பார்த்து தமிழ்நாட்டில் அவர் எந்தப் பகுதியில் இருப்பார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இத்துடன் எங்களுடைய வேலை முடிந்தது " ஹேமந்தா ஃபைலை நீட்ட. சந்திரசூடன் அதைப் பெற்றுக்கொண்டு எழுந்தார்.

" சிரமத்தை பொருட்படுத்தாமல் சிரத்தையோடு அருளானந்தம் பற்றிய தகவல்களை சேகரித்து அளித்தமைக்கு நன்றி " " இது எங்கள் கடமை.... ஆல் த பெஸ்ட் "
ஹேமந்தாவின் அகலமான உள்ளங்கையைப் பற்றி குலுக்கிய சந்திரசூடன் அறையினின்றும் வெளிப்பட்டு முன்புறம் இருந்த ரிசப்ஷன் கெளண்டரைத் தாண்டிய விநாடி, அவருடைய செல்போன் குரல் கொடுத்தது. அழைப்பது யாரென்று பார்த்தார். பூபதியின் பெயர் டிஸ்ப்ளேயில் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தது. பேசினார்.

“ இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க பூபதி .. ? “ ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (56) “ இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க பூபதி .. ? “ ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (56)

" சொல்லுங்க பூபதி "

" ஸார்... நீங்க இப்போ எங்கே இருக்கீங்க.. ? "

" ஸ்ரீலங்கா எம்பஸியிலிருந்து வெளியே வந்துட்டிருக்கேன் "

" அங்கிருந்து உடனடியாய் வேற எங்கேயாவது போக வேண்டியிருக்கா ஸார்.. ?"

" இல்லை... என்ன விஷயம்.. ? "

" நீங்க அதிரா அப்பார்ட்மெண்ட் ஃப்ளாட் நெம்பர் 144க்கு உடனடியா வர முடியுமா .. ? "

" எனி திங் இம்பார்ட்டண்ட் .. ? "

" எஸ்.. ஸார்... நானும் ஜியாலஜிஸ்ட் நாராயண ரெட்டியும் இப்போ அந்த 144 ஃப்ளாட்டில்தான் இருக்கோம்.

ரெட்டி தன் கையோடு கொண்டு வந்திருந்த ரெய்டர் எம்.டு.3010 என்கிற ஒரு டிவைஸை வெச்சு ஒட்டுமொத்த ஃப்ளாட்டையும் டிடெக்ட் பண்ணிப் பார்த்துட்டார். இன்னமும் பார்த்துட்டு இருக்கார் "

" ஏதாவது கண்டு பிடிக்க முடிஞ்சுதா .. ? "

" எஸ் ஸார் "

" டெல்லி கெமிக்கல் லேப் கொடுத்த ரிப்போர்ட்படி அங்கே ஏதாவது கனிம வளங்கள் இருக்கா .. ? "

" அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஸார் "

" அப்புறம் வேற என்னதான் அந்த ஃப்ளாட்ல இருக்கு .. ? "

" நேர்ல வந்து பாருங்க ஸார். நாள் பூராவும் ஆச்சர்யப்பட்டுகிட்டே இருக்கலாம்"

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 ]

English summary
Flat number 144 adhira apartment episode 57 by Rajesh Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X