• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரபர திருப்பங்கள்..! கிளைமேக்ஸை நெருங்கும் "ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட்(65)"

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

மறுமுனையில் அருளானந்தம் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல், திருமூர்த்தி மெளனம் காக்க குரல் மறுபடியும் ஒலித்தது.

" என்ன திரு..... நான் பேசறது கேட்குதா..... உத்திரமேரூர் வர ஏன் இவ்வளவு லேட்...... மணி இப்ப எவ்வளவு தெரியுமா ? பனிரெண்டரை "

" அ...அ...அது வந்து அருள்.... வர்ற வழியில் கார்ல ஒரு பிரச்சினை.... மேற்கொண்டு ட்ரைவ் பண்ண முடியலை.... கார் பிரேக் டவுன் சர்வீஸூக்கு போன் மூலமா தகவல் கொடுத்திருக்கேன். அந்த சர்வீஸ் பீப்பிள் வந்து பார்த்த பின்னாடிதான் கார்ல என்ன பிரச்சினைன்னு தெரியும்.... அதுக்கப்புறம்தான் புறப்பட்டு வர முடியும் "

" நீ சொல்றதைப் பார்த்தா ரொம்பவுமே லேட்டாகும் போலிருக்கே .. ? "

" ஆமா.... எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடும்
" எனக்கு உடனடியாய் பணம் வேணுமே.... சரி நீ இப்போ எங்கே இருக்கேன்னு சொல்லு. அந்த இடத்துக்கு நானே வந்து பணம் வாங்கிக்கறேன் "

Flat number 144 adhira apartment episode 65

" அப்படீன்னா நீ மதுராந்தகத்துக்கு வந்துடு..ஏன்னா ரிப்பேரான காரோடு இந்த அத்துவான ஏரியாவில் ரொம்ப நேரம் என்னால வெயிட் பண்ணிட்டிருக்க முடியாது. வெய்யில் தலைக்கு மேல நெருப்பாட்டம் இருக்கு. பிரேக் டவுன் சர்வீஸ் பீப்பிள் உடனடியாய் ஸ்பாட்டுக்கு வர்ற மாதிரி எனக்குத் தோணலை. இப்போதைக்கு நான் இங்கே பக்கத்துல இருக்கிற ஒரு ரிசார்ட்டுக்குப் போய் ஸ்டே பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். நீ அந்த ரிசார்ட்டுக்கு வந்து பணத்தை வாங்கிட்டுப் போயிடு.... "

" நீ ஒரு டாக்ஸி பிடிச்சு உத்திரமேரூர் வர முடியாதா திரு.. ? "

" இது என்ன சென்னையா... ? உடனடியா போன் பண்ணி ஒரு ஒலாவையோ, ஃபாஸ்ட் ட்ராக்கையோ பிடிச்சு வர்றதுக்கு ? நான் இப்ப நின்னுட்டிருக்கிற இடம் ஒரு பொட்டல் காடு.... நான் யார்கிட்டயாவது லிஃப்ட் கேட்டுத்தான் பக்கத்துல இருக்கிற பாரடைஸ் பாயிண்ட் என்கிற ரிசார்ட்டுக்குப் போகணும். நீ அங்கே வந்துடு அருள்... உத்திரமேரூரிலிருந்து மதுராந்தகம் 29 கிலோமீட்டர் தூரம்தான். அங்கே உனக்கு டாக்ஸி கிடைக்கும். நீ இப்போ கோயில் வாசல்லதானே இருக்கே .. ? "

" ஆமா "

" அப்புறம்மென்ன.... கோயில் வாசல்ல எப்பவுமே நாலைஞ்சு டாக்ஸிகள் நின்னுட்டிருக்கும்... அதுல ஒண்ணை பிடிச்சு பாரடைஸ் பாயிண்ட் ரிசார்ட்டுக்கு வந்து சேரு... பணத்தை உடனே வாங்கிட்டுப் போயிடலாம் "

" இதோ கிளம்பி புறப்பட்டு வர்றேன். பணத்தை வாங்கிட்டு அந்த நிமிஷம் கிளம்பிடுவேன். நீ லேட் பண்ணிடாதே "

" பணம் ரெடியாய் இருக்கு. நீ... வா "

திருமூர்த்தி பேசிவிட்டு செல்போனை அணைத்தபடி எதிரே உட்கார்ந்திருந்த ராவ்டேபிந்தரைப் பார்க்க அவர் மையமாய் தலையாட்டினார்.

" குட்... நீ போன்ல அருளானந்தத்துக்கிட்ட எப்படி பேசணும்ன்னு நான் நினைச்சேனோ அதே மாதிரிதான் தெளிவா அவன் நம்பற மாதிரி பேசியிருக்கே... "

அவர் புன்சிரிப்போடு சொல்லிக்கொண்டிருக்கும்போதே சோலையப்பன் மொபைல் டைனிங் டேபிளைத் தள்ளியபடி அறைக்குள் நுழைந்தான். டேபிளின் மேல் வரிசையாக தட்டுகள் தெரிய, அதில் விதவிதமான அசைவ அயிட்டங்கள் பார்வைக்குத் தட்டுப்பட்டு அதன் மசாலா வாசனை ஏ.சி. காற்றில் பரவியது.
ராவ்டேபிந்தர்க்கு முன்பாய் அந்த டைனிங் டேபிள் வந்து நின்றது.

" சோலை "

" அய்யா "

" இன்னிக்கு ஸ்பெஷல் அயிட்டம் எது.. ? "

" மலபார் ஃபிஷ் பிரியாணியும், தந்தூரி லேம்ப் சாப்ஸூம்...... "

" ரெண்டுமே எனக்கு பிடிச்ச ரெசிபிஸ்தான்.... இது என்ன... சிக்கன் க்ளியர் சூப்பா....? "

" ஆமாங்கய்யா.... "

சூப் நிரம்பிய அந்த பீங்கான் கண்ணாடி கோப்பையை கையில் எடுத்துக்கொண்ட ராவ்டே அதை முன் உதடுகளில் வைத்து சிப் செய்துவிட்டு " ஆஹா "சூப்"ன்னா இதுதான் சூப் " என்றார். ஒரு சில்லி சிக்கன் துண்டை ஃபோர்க்கால் குத்தி வாய்க்குள் திணித்துக் கொண்டே திருமூர்த்தியைப் பார்த்தார்.

" அந்தப் பக்கமா கொஞ்சம் திரும்பி உட்கார்ந்துக்கோ. நான் சாப்பிடறதை நீ பார்த்தா எனக்கு வயிறு வலிக்கும் "

" ஸ...ஸ....ஸார் " திருமூர்த்தி தயக்கமான குரலில் கூப்பிட " சொல்லு" என்றார் ராவ்டே.

" மயக்கம் வர்ற மாதிரி இருக்கு....குடிக்க தண்ணி வேணும் "

கடைவாயில் சிக்கன் துண்டை அரைத்துக்கொண்டே கொஞ்சம் தள்ளி நின்றிருந்த சோலையப்பனைப் பார்த்து கையசைத்தார் ராவ்டே. அவன் பக்கத்தில் வந்ததும் கேட்டார்.

" இப்ப மணி எவ்வளவு....? "

சோலையப்பன் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு சொன்னான்.

" 12.40 ஆகுதுங்கய்யா.... "

" இப்ப இவன் தண்ணி கேட்டிருக்கான். எத்தனை மணி நேரம் கழிச்சு தண்ணி கொடுக்கணும்ன்னு நான் உனக்கு சொல்லியிருக்கேன் ....? "

" அரைமணி நேரம் கழிச்சுங்கய்யா "

" எவ்வளவு தண்ணி ....? "

" அரை டம்ளர் "

" ஞாபகம் வெச்சுட்டு கொடு.... " சொன்ன ராவ்டேபிந்தர் தந்தூரி லேம்ப் சாப்ஸை ஃபோர்க்கால் குத்தினார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஒரு சின்ன ஏப்பத்தோடு எழுந்து போய் வாஷ்பேசினில் கை கழுவி, வாயைக் கொப்பளித்துக் கொண்டிருந்தபோது அறைக்கதவை மெலிதாய் தட்டிவிட்டு அந்த இளம்பெண் உள்ளே வந்தாள்.

திரும்பிப் பார்த்த ராவ்டே அகலமாய் மலர்ந்தார்.

" வாம்மா தாரிகா....சாயந்தரம் ஆறு மணிக்குத்தான் நீயும், எம்.டியும் வருவீங்கன்னு நினைச்சேன். நீ மட்டும் இப்ப வந்திருக்கே ....? "

" எம்.டி.ஆறுமணிக்குத்தான் வருவார் ஸார். நான் இங்கே முன்னாடியே புறப்பட்டு வந்ததுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு... "

" என்ன காரணம் சொல்லம்மா...... " ராவ்டேபிந்தர் கர்ச்சீப்பால் வாயை ஒற்றியபடி லெதரேட் சோபாவுக்கு வந்து சாய்ந்தார்.

தாரிகா அவர்க்கு எதிரேயிருந்த காலியான இருக்கையில் உட்கார்ந்தபடியே கேட்டாள்.
" அருளானந்தம் உத்திரமேரூரிலிருந்து புறப்பட்டாச்சா ....? "

" ம்.... இந்நேரம் வந்துட்டிருப்பான். இன்னும் ஒரு பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளே இங்கே இருப்பான் "

தாரிகாவின் உதடுகளில் ஒரு சிரிப்பு நெளிய ராவ்டே அவளைக் குழப்பமாய்ப் பார்த்தார்.

" இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் "

" அந்த அருளானந்தம் இங்கே வரமாட்டான்னு அர்த்தம்... "

ராவ்டே திகைத்து நிமிர்ந்தார். " நீ என்ன சொல்றேம்மா.... அவன் வரமாட்டான்னா....? "

" வரமாட்டான் ஸார் "

" எப்படி அவ்வளவு நிச்சமாய் சொல்றே....? "

" அவன் உத்திரமேரூர்க்கே வராத போது இங்கே மதுராந்தகத்துக்கு எப்படி வருவான்....? "

ராவ்டேபிந்தரின் புருவங்கள் சற்றே உயர்ந்தன.

" உத்திரமேரூர் கோயில் வாசலிலிருந்து ஒரு அரை மணிநேரத்துக்கு முன்னாடி அருளானந்தம் திருமூர்த்திகிட்டே பேசினானே... ஸ்பீக்கர் ஆன்ல இருந்ததால அந்தப் பேச்சை நானும் கேட்டேனே ....? "

" பேசினது அருளானந்தம்தான்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா ஸார் ....? "

" குரல் அதுமாதிரிதானே இருந்தது ....? "

" குரலைக் கேட்டுட்டு அது அருளானந்தம்தான்ங்கிற முடிவுக்கு வந்துடலாமா..? "

" .நீ இப்ப என்னம்மா சொல்றே ....? "

" ஸார்... நம்ம எம்.டியோட ஆட்கள் காலையில ஒன்பது மணியிலிருந்து மத்தியானம் ஒரு மணி வரைக்கும் கோயிலோட எல்லாப் பக்கங்களிலும் மறைவான இடங்களில் நின்னுகிட்டு அருளானந்தம் எந்த திசையிலிருந்து வந்தாலும் மடக்கத் தயாரா வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. ஆனா அருளானந்தம் வரவேயில்லை.. நாம அருளானந்தத்தைக் கொல்லப் போறோம்ங்கிற விஷயம் அவனோட காதுக்கு யார் மூலமாவோ போயிருக்கணும்ன்னு எம்.டி. சந்தேகப்படறார். அது யாராக
இருக்கும்ங்கிறதையும் ஒரளவு கெஸ் வொர்க்கும் பண்ணிட்டார்"

" யாரது....? "

தாரிகாவின் இடதுகை சுட்டுவிரல் நீண்டு திருமூர்த்தியைக் காட்டியது.

" இவன்தான் "

ராவ்டேபிந்தரின் கண்கள் உடனடியாய் சிவந்து ஸ்டூலில் உட்கார்ந்திருந்த திருமூர்த்தியை கோபமாய் அளவெடுத்தது. கையில் ரிவால்வரோடு அவரை நோக்கி நடை போட, வியர்த்து வழிந்தபடி அரற்றினார் திருமூர்த்தி.

" ஸ....ஸார்..... போன்ல பேசினது அருளானந்தம்தான். அவர் ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிறார்ன்னு எனக்குத் தெரியலை "

" இதோ பார்.... எங்க எம்.டி சந்தேகப்பட்டார்ன்னா அதுல நூறு சதவீதம் உண்மை இருக்கும்ன்னு அர்த்தம். உனக்கு ரெண்டு சாய்ஸ் தர்றேன். முதலாவது நீ உண்மையைச் சொல்லிட்டா உயிரோடு இருப்பே.... ரெண்டாவது உனக்கு உண்மைதான் முக்கியம்ன்னு நினைச்சா உயிரோடு இருக்க மாட்டே..... " ராவ்டேபிந்தர் சொல்லிக் கொண்டே திருமூர்த்தியின் இடது காதுக்குள் ரிவால்வரை நுழைத்தார். அவர் வலி தாளாமல் நெளிந்தார்.

" ஸ....ஸார்... எனக்கு ஒண்ணும் தெரியாது ஸார் "

நீ இப்படியெல்லாம் புலம்பிகிட்டு இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை. உனக்கு சரியா ஒரு நிமிஷம் தர்றேன். எனக்கு உன்கிட்டயிருந்து உண்மை வேணும். இல்லேன்னா உன் உயிர் வேணும். கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ், 60, 59, 58, 57 என்று விநாடிகளை எண்ண ஆரம்பித்தார்.

" ஸார்..... "

" 56, 55, 54, 53 " ராவ்டே எண்ணிக்கொண்டிருக்கும்போதே தாரிகா நிதான நடை போட்டு மெல்ல திருமூர்த்திக்கு முன்பாய் வந்து நின்றாள்.

" இதோ பார்.... உன்னை கொல்லணும்ங்கிறது எங்களோட நோக்கம் கிடையாது. அந்த நம்பிக்கைத்துரோகி அருளானந்தம் எங்க எம்.டிக்கு பண்ணின துரோகத்துக்கு அவனை அணுஅணுவாய் அடிச்சுக் கொல்லணும். அதுக்காகத்தான் இத்தனை நாளும் பொறுமையோடு காத்திருந்தோம். எங்க கைக்கு அவன் கிடைக்கப் போகிற நேரத்துல எப்படியோ ஸ்மெல் பண்ணி தப்பிச்சுட்டான். நீதான் செல்போன்ல அவன் கூட பேசும்போது மறைமுகமா ஏதோ ஒரு சங்கேத வார்த்தையை யூஸ் பண்ணி அவனை இங்கே வரவிடாமே தப்பிக்க வெச்சுட்டேன்னு நான் நினைக்கிறேன்"

திருமூர்த்தி பதறிப்போனவராய் கைகளை ஆட்டினார்.

" இ...இ...இல்ல மேடம்... நான் அருளானந்தத்துகிட்ட போன்ல பேசும் போதெல்லாம் ஸ்பீக்கர் ஆன்லதான் இருந்தது. ராவ்டேபிந்தர் ஸாரும் அதைக் கேட்டுட்டுத்தான் இருந்தார். நான் எந்த ஒரு சங்கேத வார்த்தையையும் யூஸ் பண்ணலை.... என்னை நம்புங்க மேடம்.... "

ராவ்டேவின் கையில் இருந்த ரிவால்வர் திருமூர்த்தியின் காதை இம்சையாக குடைந்தது.

" நீ இப்ப சொன்னது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, இனிமேல் இந்த இடத்திலிருந்து உயிரோடு போக முடியாது. ஏன்னா நாங்க யார்ன்னு உனக்கு அடையாளம் தெரிஞ்சிடுச்சு. உன்னை உயிரோடு விட்டா நாங்க ஒவ்வொரு நிமிஷமும் பயந்து பயந்து வாழ வேண்டியிருக்கும். அதனால நீ நல்லவனாய் இருந்தாலும் என்னோட இந்த ரிவால்வருக்கு வேலை தர வேண்டியிருக்கு "

சொன்ன ராவ்டேபிந்தர் திருமூர்த்தியின் காதுக்குள் பத்து சதவீதம் உள்ளே நுழைத்திருந்த ரிவால்வரின் ட்ரிக்கரை அழுத்த முயன்ற விநாடி திருமூர்த்தியின் செல்போன் வெளிச்சம் பிடித்துக்கொண்டு டயல்டோனை வெளியிட்டது.

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 , 61 , 62 , 63 , 64 ]

English summary
Flat number 144 adhira apartment episode 65 by Rajesh Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X