• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அந்த தகவல்கள் எல்லாம் உண்மைதானே?“ ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (61)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சில விநாடிகளுக்குப்பிறகு சந்திரசூடனின் மூளைப்பிரதேசத்தில் சின்னதாய் ஒரு மின்னல் அடித்தது.

வடநாட்டு நெடியோடு பேசும் இந்த தமிழை இரண்டொரு தடவை அவர் கேட்டிருந்த காரணத்தால் சட்டென்று பிடிபட்டு, இது கன்ஷிராமின் குரல்தான் என்பதை உறுதி செய்தது.

ஆச்சர்யப்பட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தார் சந்திரசூடன்.

டி.ஜி.பி. ராம்பாபுவும், கன்ஷிராமும் எதிரெதிர் சோபாக்களில் உட்கார்ந்து ஏதோ பேசியபடி பார்வைக்குத் தட்டுப்பட்டார்கள். கைகளில் தேநீர்க் கோப்பைகள்.

சல்யூட் செய்த சந்திரசூடனை ஒரு புன்னகையில் நனைத்த ராம்பாபு தனக்கு அருகே இருந்த ஒற்றை சோபாவைக் காட்டினார்.

Flat number 144 adhira apartment episode 61

" உட்கார்ங்க சந்திரசூடன்.... ஹேவ் சம் டீ..... "

"நோ தேங்க்ஸ் ஸார்.... " சொல்லி அவர் உட்கார்ந்துகொண்டிருக்கும்போதே கன்ஷிராம் ஒரு குறுஞ்சிரிப்போடு கேட்டார்.

" என்ன ஏ.ஸி. ஸார்.... என்னோட ஒய்ஃப்புக்கு போன் பண்ணி அவ.... பயப்படறமாதிரி ஃப்ளாட் நெம்பர் 144ஐப்பற்றி ஒரு டீப் என்கொயரி பண்ணியிருக்கீங்க போலிருக்கு.. ? "

சந்திரசூடன் மறுத்து தலையசைத்தார்.

" நோ....நோ....அது ஒரு சாதாரண என்கொயரிதான். உங்க மனைவி... அதை எமோஷனலாய் எடுத்துகிட்டா நான் என்ன செய்ய முடியும் மிஸ்டர் கன்ஷிராம்.. ? "

" இட்ஸ் ஒகே.... உங்களுக்கு இப்ப என்ன வேணும் ? நான் சிங்கப்பூர்ல என்னோட வேலைகளை அவசர அவசரமாய் முடிச்சுட்டு, நேத்து ராத்திரியே புறப்பட்டு வந்துட்டேன். அந்த 144ம் நெம்பர் ஃப்ளாட் சம்பந்தமாய் உங்க மனசுக்குள்ளே இன்னமும் என்னென்ன சந்தேகங்கள் இருக்கோ அந்த சந்தேகங்களையெல்லாம் ஒரேயடியாய் இன்னிக்கே டி.ஜி.பி. முன்னாடி என்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்குங்க... தேவையில்லாமே நான் ஊர்ல இல்லாத நேரத்துல வீட்டுக்கெல்லாம் போன் பண்ணி, என்னோட ஒய்ஃப்புக்கு டார்ச்சர் கொடுக்காதீங்க. ஷி ஈஸ் ஏ ஹார்ட் பேஷண்ட். பைபாஸ் சர்ஜரி பண்ணி ஆறுமாசம்கூட ஆகலை.... "

சந்திரசூடன் சற்றே குரலை உயர்த்தினார்.

" டோன்ட் மிஸ்டேக் மீ கன்ஷிராம்... உடல்ரீதியாய் யார்க்கு என்ன பிரச்சினையிருக்குன்னு தெரிஞ்சுகிட்டு, ஒரு போலீஸ் அதிகாரியால் விசாரணையை நடத்த முடியாது.... நான் உங்க நெம்பர்க்குத்தான் போன் பண்ணினேன். அந்த போன் காலை உங்க மனைவி அட்டெண்ட் பண்ணினா நான் அவங்ககிட்டதானே பேசியாகணும் "

ராம்பாபு தன் கையில் வைத்திருந்த காலி கோப்பையை டீபாயின் மேலே வைத்துக் கொண்டே சற்றே இறுக்கமான முகத்தோடு சந்திரசூடனை ஏறிட்டார்.

" லுக் மிஸ்டர் சந்திரசூடன்... கன்ஷிராம் யார்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, உங்க என்கொயரியும் கொஞ்சம் ரெஸ்பெக்டபிளா ஸாஃப்டா இருந்திருக்கும். அவர் யார்ன்னு தெரியாததால உங்க வழக்கமான பாணியில் விசாரணை பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன். அவர் யார்ன்னு இப்ப சொல்றேன். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஜோஷிதயாளோட ப்ரதர்தான் இவர்... எனக்கே இந்த உண்மை நேத்து ராத்திரிதான் தெரியும்.... "

டி.ஜி.பி. பேசப்பேச... கன்ஷிராம் குறுக்கிட்டார்.

" என்னோட ப்ரதர் ஒரு மாவட்டத்துக்கு கலெக்டராய் இருக்கிறார்ங்கிறதுக்காக நான் என்னிக்குமே யார்கிட்டேயும் போய் அவரோட பேரை யூஸ் பண்ணி எந்த ஒரு ஆதாயத்தையும் தேடினது கிடையாது. இந்த ஃப்ளாட் நெம்பர் 144 விவகாரத்தில் கூட நான் அவரோட பேரை உபயோகப்படுத்திக்காமே புனேயிலிருந்து உடனடியாய் சென்னை வந்து உங்களுடைய விசாரணைக்கு பூர்ண ஒத்துழைப்பைக் கொடுத்திருக்கேன்... ரெண்டு தடவை போன்ல பேசியிருக்கேன். அந்த ஃப்ளாட்டுக்குள்ளே.. என்ன பிரச்சினைன்னு எனக்கு உண்மையிலேயே தெரியாது... எனக்குத் தெரிஞ்ச எல்லா உண்மைகளையும் ஏற்கனவே சொல்லிட்டேன். இருந்தாலும் நீங்க அந்த விசாரணையில் திருப்தி அடையாமல் திரும்பத் திரும்ப ஏதேதோ கேள்விகளைக் கேட்டு டார்ச்சர் தர்றதினாலத்தான் டி.ஜி.பி.யைப் பார்க்க காலையிலேயே வந்துட்டேன். உங்களுக்கும் போன் பண்ணி வரச் சொன்னேன். நீங்க என்கிட்ட கேட்க விரும்பற கேள்விகள் எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. டி.ஜி.பி.க்கு முன்னால் நான் பதில் சொல்லத் தயாராயிருக்கேன். ஆனா... ஒரு கண்டிஷன்.... "

" என்ன.. ? " என்பது போல் பார்த்தார் சந்திரசூடன்.

" இதுவே நீங்க என்னை விசாரிக்கிற கடைசி விசாரணையாய் இருக்கணும்.... "

சந்திரசூடன் மெலிதாய் புன்னகைத்தார். " நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அநேகமாய் உங்களிடம் நான் நடத்தப்போகிற இந்த விசாரணைதான் கடைசி விசாரணையாக இருக்கும்ன்னு நானும் நம்பறேன். இப்ப என்னுடைய சின்னச் சின்ன கேள்விகளுக்கு மட்டும் நீங்க பதில் சொன்னா போதும் "

" ம்.. கேளுங்க.... "

" புனேவில் ஒரு மல்டி பிராடக்ட்ஸ் கம்பெனியை நடத்திகிட்டு அங்கேயே குடியிருக்கிற நீங்க எதுக்காக சென்னையில் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் ஒரு ஃப்ளாட் வாங்கணும்.. ? "

" இன்வெஸ்ட்மெண்ட் பர்ப்பஸூக்காகத்தான்ன்னு நான் ஏற்கனவே இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிட்டேன் "

" இந்தக் குறிப்பிட்ட 144ம் நெம்பர் ஃப்ளாட்தான் வேணும்ன்னு விருப்பப்பட்டு வாங்கினீங்களா.. ? "

" அப்படியெல்லாம் இல்லை... நான் அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில் ஃப்ளாட் வாங்க வந்த நேரத்துல ஏழெட்டு ஃப்ளாட்கள் மட்டுமே விற்கப்படாமே இருந்தது. நான் அந்த ஃப்ளாட்டுகளைப் பார்த்துட்டு 144 நெம்பர் ஃப்ளாட்டை செலக்ட் பண்ணினேன். மறுநாளே நல்ல நாளாய் இருந்ததால ஃப்ளாட்டை ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிகிட்டேன்"
" அந்தப் ஃப்ளாட்டை வாங்கின பிறகு அந்த ஃப்ளாட்டுக்குள்ளே ஏதாவது மாறுதல் செஞ்சீங்களா.. ? "

" நீங்க கேட்ட கேள்வி எனக்குப் புரியலை "

" ஃப்ளாட்டோட உட்கட்ட அமைப்பை அதாவது ஏற்கனவே இருந்த சுவர்களை இடிச்சுட்டு புதுசா சுவர்களைக் கட்டினீங்களா .. ? "

" இல்லை.... அப்படி கட்ட வேண்டிய அவசியம் ஏற்படலை. ஆமா இப்ப எதுக்காக இந்த கேள்வி.. ? "

" சொல்றேன். நீங்க அதிரா அப்பார்ட்மெண்ட்ல ஃப்ளாட் வாங்க வந்தபோது ஏழெட்டு ஃப்ளாட்டுகள் மட்டும் விற்கப்படாமல் இருந்ததாகவும் அதுல ஒரு ஃப்ளாட் 144 நெம்பரை வாங்கினதாக சொன்னீங்க... மற்ற ஃப்ளாட்களோட உட்கட்ட அமைப்புக்கும், 144ம் நெம்பர் ஃப்ளாட்டோட உட்கட்ட அமைப்புக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்ததா.. ? "

" இருந்தது "

" என்ன வித்தியாசம்.. ? "

" 144ம் நெம்பர் ஃப்ளாட்டில் இருந்த ஒரு பெரிய ஹால் குறுக்குச்சுவர்களாய் பிரிக்கப்பட்டு இருந்தது. அந்த அமைப்பு நேர்த்தியாய் இருந்ததால அதை வாங்க முடிவு பண்ணினேன்"

" இப்ப நீங்க என்கிட்ட சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மைதானே .. ? "

" எனக்கு பொய் சொல்லிப் பழக்கமில்லை ஏ.சி.ஸார்"

" ப்ளீஸ் டூ நாட் பி ஆங்கிரி மிஸ்டர் கன்ஷிராம். இனி ஒரே ஒரு கேள்விதான் "

" ம்.... கேளுங்க "

" நீங்க 144ம் நெம்பர் ஃப்ளாட்டை வாங்கினதும் சில மாதங்கள் அதில் குடியிருந்ததாகவும் அந்த சமயத்துல அங்கே எந்த ஒரு அசாதாரணமான சம்பவமும் நடக்கலைன்னு ஏற்கனவே ஒரு என்கொயரியில் சொல்லியிருக்கீங்க"

" ஆமா.... "

" அதுக்குப்பிறகு அந்த ஃப்ளாட்டை வாடகைக்கு விட்டுட்டு புனே போயிட்டீங்க. அப்படி போனதுக்கு என்ன காரணம்.. ? "

" வெரி சிம்பிள்..... நான் புனேயில் நடத்திட்டு வர்ற மல்டி பிராடக்ட்ஸ் கம்பெனியோட ஒரு கிளையை சென்னையில் ஆரம்பிச்சு நடத்தணும்ன்னு ஆசைப்பட்டு அதுக்கான முயற்சிகளில் இறங்கினேன். நம்பிக்கைக்குரிய ஒரு நபரை பார்டனராய் கம்பெனியில் சேர்த்துக்க முடிவு பண்ணி தேடினேன். அப்படிப்பட்ட நபர் யாரும் கிடைக்காததினால அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு புனே போயிட்டேன். ஃப்ளாட்ல யாராவது குடியிருந்தாத்தான் அது சுத்தமாய் இருக்கும்ன்னு நினைச்சு வாடகைக்கு விடற முடிவை எடுத்தேன்.. அந்தப் ப்ளாட்டுக்கு வாடகைக்கு வந்தவங்க எல்லாருமே ஆறு வருட காலத்துல அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போனதுக்கான காரணம்தான் இதுவரைக்கும் தெரியலை "

" டோண்ட் ஒர்ரி மிஸ்டர் கன்ஷிராம்... அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள அந்தக் காரணத்தைக் கண்டுபிடிச்சுடலாம் "

" எ..எ...எப்படி.... ? "

" சொல்றேன்... அதுக்கு முன்னாடி உங்க பர்மிஷன் வேணும் "

" பர்மிஷனா... எதுக்கு.. ? "

" உங்க ஃப்ளாட்டில் இருக்கிற உட்கட்ட குறுக்குச்சுவர்களை டெமாலிஷ் பண்றதுக்காக "

கன்ஷிராம் அதிர்ந்து போனவராய் கண்களில் கலவரம் காட்டினார்.

" சு...சு...சுவர்களை இடிக்கப் போறீங்களா.... என்ன காரணத்துக்காக.. ? "

" ஸாரி... இப்போதைக்கு எதையுமே சொல்ல முடியாது. இன்னிக்கு காலையில பதினோரு மணிக்கு ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அந்தச் சுவர்களை இடிக்கப் போறோம். இந்தத் தகவலை உங்ககிட்ட சொல்லி பர்மிஷன் கேக்கிறதுக்காகத்தான் நான் நேத்து உங்களுக்கு போன் பண்ணினேன். உங்க ஒஃய்ப்கிட்ட பேசி நான் விசாரணை பண்ணினதைத் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. அப்படி தப்பா புரிஞ்சுகிட்டதும் ஒரு வகையில் நல்லதுதான். இல்லேன்னா நீங்க சிங்கப்பூரிலிருந்து உடனடியாய் புறப்பட்டு நேரிடையாக சென்னைக்கு வந்து இருக்க மாட்டீங்களே..? பை..த..பை ஃப்ளாட்டோட உட்புற சுவர்களை இடிச்சுடலாமா.. ? "

கன்ஷிராமின் உதடுகளில் முதல்தடவையாய் ஒரு சிறு புன்னகை உதித்தது.

" பர்மிஷன் க்ரேண்டட் " என்றார்.

*****
மெரூன் நிற மாருதி அமேஸ் கார் எய்த ஒரு அம்பைப்போல் ஹைவேஸ் சாலையில் விரைந்து கொண்டிருக்க, ராவ்டே பிந்தர் காரின் ட்ரைவிங்கில் இருந்த திருமூர்த்தியிடம் கேட்டார்.

" உத்திரமேரூர்க்கு பரனூர் வழியாகத்தானே போகப் போறோம்.. ? "

" ஆமா... அந்த வழியா போனாத்தான் ஒன்றரை மணி நேரத்துக்குள்ளே கோயிலுக்கு போய்ச் சேரமுடியும். இதுக்கு முன்னாடி அந்த கோயிலுக்கு நீங்க போயிருக்கீங்களா ராவ்டே.. ? "

" இல்லை..... "

" ரொம்பவும் அருமையான கோயில். அந்தக் கோயிலில் இருக்கிற சிவனுக்கு கேதாரீஸ்வரர்ன்னு பேர். பெருமாளுக்கு ரெண்டு கோயில்கள் இருக்கு. வைகுண்ட பெருமாள் கோயில், சுந்தரவரதராஜ பெருமாள் கோயில். நான் நாலைஞ்சு தடவை அந்தக் கோயில்களுக்கு போயிருக்கேன். இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் விவகாரம் நல்லபடியா முடிஞ்சா ஒரு தடவை அந்தக் கோயில்களுக்கெல்லாம் போயிட்டு வரணும் "

திருமூர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே காரின் டேஷ் போர்டுக்கு அருகில் இருந்த அவருடைய செல்போன் வெளிச்சமாய் ஒளிர்ந்து டயல்டோனை வெளியிட்டது. காரின் வேகத்தை குறைத்தவர் செல்போனை எடுத்து "அழைப்பது யார் " என்று பார்த்தார்.

அருளானந்தத்தின் பெயர் "ஸ்க்ரால் " ஆகிக் கொண்டிருந்தது. ஸ்பீக்கரை "ஆன்" செய்துவிட்டு, காரை ரோட்டோரமாய் ஒரு மரத்துக்குக் கீழே கொண்டு போய் நிறுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார் திருமூர்த்தி.

" ஹலோ அருள்... "

" திருமூர்த்தி... நீ இப்போ எங்கே வந்துகிட்டு இருக்கே.. ? "

" செங்கல்பட்டுக்கு பக்கத்துல "

" நீ என்னைப் பார்க்க வர்றது வெளிநபர்கள் யார்க்கும் தெரியாதே.. .. ? "

" தெரியாது.. அது சரி.. நீ ஏன் இவ்வளவு பயப்படறே.. ? "

" பயப்படறதுக்கு பயப்பட்டுத்தானே ஆகணும் "

" நீ பேசறது எனக்குப் புரியலை அருள் "

"நேரம் வரும்போது உனக்குப் புரியும்... நான் கேட்ட அஞ்சு லட்சம் கிடைக்குமில்ல.. ? "

" நீ கேட்டு நான் இல்லேன்னு சொல்வேனா... சரியாய் பத்து மணிக்கெல்லாம் கோயில் வாசல்ல நான் இருப்பேன். அடுத்த நிமிஷம் உன்னோட கையில பணம் இருக்கும்"

" தேங்க்ஸ் நான் வெயிட் பண்றேன்.... " மறுமுனையில் செல்போனின் இணைப்பு அறுபட்டுவிட, திருமூர்த்தியும் செல்போனை அணைத்துவிட்டு ஏதோ பேசுவதற்காக ராவ்டே பிந்தரிடம் திரும்பினார்.

இதயத்தின் மையப்பகுதி அதிர்ந்தது.

ராவ்டே பிந்தரின் வலது கையில் இடம் பிடித்திருந்த அந்த வெளிநாட்டு ரிவால்வர் மெல்ல உயர்ந்து திருமூர்த்தியின் நெற்றிப் பொட்டைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது.

"ரா...ரா...ராவ்டே... என்ன இது.. ? "

"திருமூர்த்தி.. .நாம உத்தரமேரூர் போகப் போறதில்லை... அருளானந்தத்தையும் பார்க்க போறதில்லை. இனிமே நீ நான் சொன்னபடிதான் கேட்கணும்.. இப்போ நாம மதுராந்தகம் போறோம் "

ராவ்டே பிந்தரின் குரல் அடியோடு மாறியிருந்தது.

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 ]

English summary
Flat number 144 adhira apartment episode 61 by Rajesh Kumar Novelist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X