"“ எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதே? “ ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (60)
-ராஜேஷ்குமார்
திருமூர்த்தி அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ் அத்தோடு முடிந்து போயிருக்க, சந்திரசூடன் செல்போனை அணைத்துவிட்டு ராவ்டே பிந்தரை பெருமூச்சோடு பார்த்தார்.
" வாய்ஸ் மெஸேஜைக் கேட்டீங்களா ராவ்டே.. ? "
" கேட்டேன் ஸார் "
"அருளானந்தம் இப்படி பயப்படுகிற அளவுக்கு காரணம் என்னவாயிருக்கும்ன்னு நினைக்கிறீங்க.. ? "
" குற்றமுள்ள மனசு ஸார்.. எதையும் வெளிப்படையாய் சொல்ல முடியாத அளவுக்கு குறுகுறுன்னுதான் இருக்கும்... நாளைக்கு காலையில் பத்துமணிக்கு உத்திரமேரூர் கோயில் வாசல்ல, அருளானந்தம் திருமூர்த்திகிட்ட பணம் வாங்க வரும்போது, போலீஸை விட்டு அவரை மடக்கணும். ஸ்டேஷனுக்கு கொண்டு போய் லாக்கப்புக்குள்ளே வெச்சு விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளே நடந்த எல்லா விஷயங்களுமே வரிசையா வந்து நிற்கும்... ஸார்.... "
ராவ்டே பிந்தர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரசூடனின் செல்போன் டயல்டோனை வெளியிட்டது. எடுத்து காதுக்கு ஒற்றினார்.
மறுமுனையில் திருமூர்த்தி பேசினார்.
" ஸார்... வாட்ஸ் அப்ல நான் அனுப்பி வெச்ச வாய்ஸ் மெஸேஜைக் கேட்டீங்களா.. ? "
" ம்.... கேட்டேன்... "
" நாளைக்குக் காலையில் சரியா பத்து மணிக்கெல்லாம் உத்திரமேரூர் கோயில் வாசல்ல அருளானந்தத்தைப் பார்த்து அஞ்சு லட்ச ரூபாயைக் கொடுக்கப்போறேன். நீங்க உங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்டை மூலம் அவரை கைது செய்து எதுமாதிரியான நடவடிக்கை எடுக்கப்போறீங்க? ஏன்னா அவர் என்னைத் தப்பா நினைச்சுடக்கூடாது ஸார் "
" மிஸ்டர் திருமூர்த்தி... அருளானந்தம் ஒரு சாதாரண குற்றவாளி கிடையாது. அவர்க்குப்பின்னால் வலுவான அரசியல் ரீதியான பின்புலம் இருக்கலாம்ன்னு நான் நினைக்கிறேன். அவரை கோயில் வாசல்ல வெச்சு கைது பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போறது சுலபம். ஆனா அவர்கிட்டயிருந்து நமக்குத் தேவையான உண்மைகளை வரவழைக்கிறது ரொம்ப கஷ்டம். இந்தப் பிரச்சினையை வேறுவிதமாய்த்தான் டீல் பண்ணனும். அவரை போலீஸ் கைது செய்யப் போவதில்லை "

" வேறுவிதமான்னா எப்படி ஸார்.. ? "
செல்போனை காதோடு ஒட்டவைத்தபடி சந்திரசூடன் குரலைத் தாழ்த்தினார்.
" போன்ல.... இப்போ எதுவும் பேச வேண்டாம். பக்கத்து ரூம்ல பூபதியும், ஜியாலஜிஸ்ட் நாராயண ரெட்டியும் இருக்காங்க. அருளானந்தத்தை எப்படி மடக்கி, எங்கே கொண்டு போயி விசாரணை செஞ்சா... உண்மைகள் வெளியே வரும்ங்கிறதை நான் ஒரளவு யூகம் பண்ணி வெச்சிருக்கேன். நாளைக்கு காலையில் நான் சொல்ற இடத்துக்கு சரியா ஏழு மணிக்கெல்லாம் நீங்களும் ராவ்டே பிந்தரும் வந்துடுங்க. பேசுவோம் "
" எங்கே வரணும் ஸார்.. ? "
" சொல்றேன். பேப்பர்ல நோட் பண்ணிக்குங்க "
*******
மறுநாள் காலை ஏழு மணி.
மயிலாப்பூர் லஸ் கார்னர்க்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய சந்துக்கு முன்பாக, தன்னுடைய பைக்கை நிறுத்திக்கொண்ட சந்திரசூடன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அந்த சந்துக்குள் நுழைந்து வேகமாய் நடக்க ஆரம்பித்தார்.
அறவே ஜனநடமாட்டம் அற்ற சந்தில் ஒரு நிமிட நேரம் நடந்து "மெஸ் நளபாகம்" என்ற பெயர்ப் பலகையோடு பார்வைக்குத் தட்டுப்பட்ட அந்த வீட்டுக்குள் நுழைந்தார். பூரி கிழங்கின் வாசனை காற்றில் நிரம்பியிருக்க, நான்கைந்து பேர் நீளமான மேஜைகளில் திசைக்கொருவராய் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
"ஃபேமிலி ரூம்" என்று சாக்பீஸால் எழுதப்பட்ட கதவைத் தள்ளிக்கொண்டு சந்திரசூடன் உள்ளே நுழைந்தார். வாழை இலைகளில் பரிமாறப்பட்ட இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்த ராவ்டே பிந்தரும், திருமூர்த்தியும் எழுந்து நிற்க முயற்சி செய்ய, அவர்களை ஒரு புன்சிரிப்போடு கையமர்த்திக்கொண்டே பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
" சரியா நான் சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்க போலிருக்கு "
" கொஞ்சம் முன்னாடியே வந்துட்டோம் ஸார்... இப்ப மணி ஏழு. ஒரு ஏழரை மணிக்கு புறப்பட்டாலும் உத்திரமேரூர் போய்ச் சேர ஒன்பது மணி ஆயிடும். நீங்க வர்றதுக்கு கொஞ்ச நேரமாகலாம்ன்னு நினைச்சு டிஃபன் சாப்பிட ஆரம்பிச்சுட்டோம் " ராவ்டே பிந்தர் இட்லி சாம்பார் வாயோடு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வெயிட்டர் ஒருவர் உள்ளே வந்தார். சந்திரசூடனிடம் கேட்டார்.
" சாப்பிட என்ன கொண்டு வரட்டும் ஸார்.. ? "
" இட்லி தவிர வேற என்ன சூடா இருக்கு.. ? "
" ரவா பொங்கல் ஸார் "
" போய்க் கொண்டா... "
வெயிட்டர் தலையை ஆட்டிவிட்டு கதவைத் திறந்துகொண்டு வெளியேறிவிட, சந்திரசூடன் திருமூர்த்தியிடம் கேட்டார்.
" அருளானந்தம் மறுபடியும் உங்களுக்கு போன் பண்ணினாரா.. ? "
" காலையில ஆறு மணிக்கு பேசினார் "
" என்ன சொன்னார்.. ? "
" நேத்திக்கு என்ன பேசினாரோ அதையேதான் இன்னிக்கும் பேசினார். நான் மட்டும்தான் தனியா அஞ்சு லட்ச ரூபாய் பணத்தோடு உத்திரமேரூர் கோயிலுக்கு வரணும். கூட யாரையும் கூட்டிகிட்டு வரக்கூடாதுன்னு கண்டிப்பான குரல்ல சொன்னார். அவர் தமிழ்நாட்ல இருக்கிறது வெளியே யார்க்கும் தெரியக்கூடாதுன்ன் நினைக்கிறார் ஸார் "
" நீங்களும் ராவ்டே பிந்தரும் தனித்தனியாகத்தானே இந்த மெஸ்ஸூக்கு வந்தீங்க.? "
" ஆமா ஸார்... நான் கார்ல வந்தேன். இவர் டூவீலர்ல வந்தார்.... "
" உங்க காரை எங்கே பார்க் பண்ணியிருக்கீங்க.. ? "
" கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரே இருக்கிற கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியிருக்கேன் ஸார் "
சந்திரசூடனின் பார்வை ராவ்டே பிந்தரிடம் திரும்பியது.
" நீங்க உங்க டூவீலரை எங்கே நிறுத்தியிருக்கீங்க.. ? "
" கச்சேரி ரோட்ல ஒரு பெட்டிக்கடைக்குப் பக்கத்துல "
" சரி.. நான் சொல்றதை நீங்க ரெண்டு பேரும் இப்ப நல்லா கவனிங்க.. இந்த மெஸ்ஸூக்கு பின்பக்கம் இருக்கிற ரோட்ல ஆலமரத்துக்கு கீழே மெரூன் கலர் மாருதி அமேஸ் கார் ஒண்ணு நின்னுட்டிருக்கும். கார்க்கு ட்ரைவர் கிடையாது. உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் ஒட்டணும். அந்தக் கார்லதான் உத்திரமேரூர் போகப் போறீங்க....
ராவ்டே பிந்தர் குறுக்கிட்டார்.
" ஸார்... எனக்கு லாங் ட்ரைவ் பண்ணி பழக்கமில்லை "
" காரை நான் ட்ரைவ் பண்றேன். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.... " சொன்ன திருமூர்த்தி தயக்கமான குரலில் கேட்டார்.
" எதுக்காக ஸார் இப்படியொரு ஏற்பாடு.. ? "
" எங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன். தெரிஞ்சா அருளானந்தத்துக்கு எப்படியும் அந்த தகவல் போய் சேர்ந்துடும். அவர் உத்திரமேரூர் கோயிலுக்கு வரமாட்டார். நீங்க உங்களோட கார்ல போனால் அது உங்க கார்தான்னு போலீஸூக்கும் சரி, அருளானந்தத்துக்கும் சரி, அடையாள்ம் தெரிஞ்சுடும்.. இப்ப நீங்க ரெண்டு பேரும் பயணம் பண்ணப்போற காரை உத்திரமேரூர் போய் சேர்ந்ததும் யார் கண்ணுக்கும் படாமே சற்றுத்தள்ளி மறைவான இடத்துல நிறுத்திவிட்டு நீங்க மட்டும் கீழே இறங்கி பணத்தோடு அருளானந்தத்துகிட்ட போகணும். ராவ்டே பிந்தர் கார்ல இருந்தபடியே அருளானந்தத்தோட நடவடிக்கைகளையும், கோயில் வளாக சுற்றுப்புறத்தில் அந்நிய நபர்கள் யாராவது சந்தேகப்படும்படியா இருக்காங்களான்னு வாட்ச் பண்ணுவார். அப்படி யாராவது இருந்தா இந்தக் காமிராவில் வீடியோவா பதிவு பண்ணிக்குவார்"
சொன்ன சந்திரசூடன் தன் கையோடு கொண்டு போயிருந்து தோல்பையைப் பிரித்து ஒரு மினி ஹேண்டி காமிராவை எடுத்து ராவ்டே பிந்தரிடம் கொடுத்தார். லேசான தயக்கத்தோடு குரலை இழுத்தார் ராவ்டே. " ஒரு சின்ன சந்தேகம் ஸார் "
" என்ன.. ? "
" ஒரு நபரை மடக்கறதுக்கு இவ்வளவு முன்னேற்பாடுகள் தேவையா ஸார்.. ? "
" ரொம்பவும் தேவை... நீங்க நினைக்கிற மாதிரி 144 ஃப்ளாட் நெம்பர் அதிரா அப்பார்ட்மெண்ட் சாதாரண விஷயமில்லை.. அருளானந்தம் மூலமாகத்தான் பல உண்மைகள் வெளியே வரவேண்டியிருக்கு. நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டுட்டு கிளம்புங்க.. இந்தாங்க... கார் சாவி....." சந்திரசூடன் சொல்லிக்கொண்டே தன் கையில் வைத்திருந்த சாவியை திருமூர்த்தியிடம் நீட்டினார்.
சாவியை வாங்கிக்கொண்ட திருமூர்த்தி மெல்லிய குரலில் "ஸ...ஸார்... " என்றார்.
" என்ன சொல்லுங்க.. ? "
" நான் வீட்டை விட்டு புறப்படும்போது தைரியமாய் இருந்தேன். ஆனா நீங்க இவ்வளவு முன்னேற்பாடுகளை செய்யறதைப் பார்க்கும்போது ஒரு பயம் வருது. எங்க ரெண்டு பேர்க்கும் மறைமுகமாகவாவது போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியுமா.. ? "
" ஸாரி.... இந்த விஷயத்துல என்னோட போலீஸ் டிபார்ட்மெண்ட்டை நம்ப நான் தயாராயில்லை... அருளானந்தத்தை மடக்கணும்ன்னா இப்படிப்பட்ட ஒரு ரிஸ்க்கை எடுத்துத்தான் ஆகணும்... ராணுவ அதிகாரியாய் இருந்து ரிடையரான ராவ்டே பிந்தர் உங்க கூட வரும்போது என்ன பயம்.. ? "
ஒரு சிறிய சிரிப்போடு சந்திரசூடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் கூப்பிட்டது. எடுத்துப் பார்த்தவரின் முகம் லேசாய் நிறமிழந்தது. போனின் டிஸ்ப்ளேயில் டி.ஜி.பி.ராம்பாபுவின் பெயர் நகர்ந்து கொண்டிருக்க, செல்போனை பவ்யமாய் காத்துக்கு பொத்தி " குட்மார்னிங் ஸார் " என்றார்.
" குட்மார்னிங் சந்திரசூடன்... நீங்க இப்போ எங்கே இருக்கீங்க.. ? "
" மைலாப்பூர்ல ஃப்ரண்ட் ஒருத்தரை பார்க்க வந்தேன் ஸார் "
" பார்த்துட்டீங்களா.. ? "
" பார்த்துட்டேன் ஸார் "
" வேற வேலை ஏதாவது இருக்கா.. ? "
" இல்லை ஸார் "
" சரி.... உடனடியாய் புறப்பட்டு என்னோட வீட்டுக்கு வாங்க "
" வீட்டுக்கா.. ? "
" எஸ்... காரணத்தைக் கேட்காமே புறப்பட்டு வாங்க "
" ஒரு அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன் ஸார் "
" அயாம் வெயிட்டிங் "
மறுமுனையில் செல்போன் மெளனமாகிவிட, சந்திரசூடனும் செல்போனை அணைத்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ராவ்டே பிந்தரையும், திருமூர்த்தியையும் ஏறிட்டார்.
" டி.ஜி.பி.அவசரமாய் கூப்பிடறார். எதுக்குன்னு தெரியலை... "
ராவ்டே பிந்தர் கேட்டார்.
" நானும் திருமூர்த்தியும் உத்திரமேரூர்க்குப் போகிற விஷயம் அவர்க்குத் தெரியுமா ஸார் .. ? "
" தெரியாது... நான் சொல்லலை. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்தபிறகு அருளானந்தம் விஷயத்துல ஏதாவது க்ளூ கிடைச்சா அவர்கிட்ட சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன். இட்ஸ்... ஒ.கே... நான் அவரைப் பார்க்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் உத்திரமேரூர் போறது இப்போதைக்கு வெளியே யார்க்கும் தெரிய வேண்டாம்"
சந்திரசூடன் சொல்லிக்கொண்டே எழ முயன்ற விநாடி பேரர் கதவைத் திறந்தபடி ரவா பொங்கல் தட்டோடு உள்ளே வர ஒரு சிரிப்போடு பேரரின் தோள் மீது கையை வைத்தார்.
" ஸாரி தம்பி... சாப்பிட நேரமில்லை.. ஆர்டர் கான்சல்... இன்னொரு நாளைக்கு வர்றேன்.... " கதவைத் திறந்துகொனிடு வெளியேறினார் சந்திரசூடன்.
******
அடையார் கஸ்தூரிபாய் நகரின் பதினோராவது தெருவில் இருந்த டி.ஜி.பி. ராம்பாபுவின் பங்களாவை சந்திரசூடன் அடைந்தபோது சரியாய் எட்டு மணி.
காம்பெளண்ட் கேட் வாசலில் நின்றிருந்த செண்டரி சந்திரசூடனைப் பார்த்ததும் சல்யூட் அடித்துவிட்டு தளர்ந்தார்.
போர்டிகோ அருகேயிருந்த காலியிடத்தில் தன்னுடைய பைக்கை நிறுத்திய சந்திரசூடன் வாசற்படிகள் ஏறிக்கொண்டிருக்கும்போதே டி.ஜி.பி.யின் உதவியாளர் எதிர்பட்டு "குட்மார்னிங்" சொல்லிவிட்டு மாடியைக் காட்டினார்.
"மாடியில் ரெண்டாவது ரூம்ல ஸார் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார்"
அந்த உதவியாளருக்கு தலையசைத்துவிட்டு மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தார் சந்திரசூடன்.
அரை நிமிட நடை.
மாடி வராந்தா வந்தது. மெல்ல நடை போட்டு இரண்டாவது அறையை நெருங்க உள்ளே பேச்சுக்குரல்கள் கேட்டது.
சுவரோரமாய் ஒதுங்கி நின்று காதுகளுக்கு உன்னிப்பைக் கொடுத்தார். பேசுவது புரியவில்லையென்றாலும் குரல்கள் தெளிவாக இருந்தது.
ஒரு குரல் டி.ஜி.பி. ராம்பாபுவின் குரல்.
" இன்னொரு குரல்? "
" எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதே? "
" யாருடைய குரல்? "
சந்திரசூடனின் ஒட்டு மொத்த மூளையின் நியூரான் செல்களும் ஒரு அவசர கூட்டம் போட்டு யோசிக்க ஆரம்பித்தன.
" **********
( தொடரும்)
[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 ]
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications