• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

“ அ..அ..அவரைச் சுட்டுக்கொல்லப் போறீங்களா.. ?“ ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (64)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

டோல்கேட்டுக்குப் பக்கத்தில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் ராவ்டேபிந்தரின் முகம் நிறம் தப்பி உடம்பில் பதட்டம் பரவியது. இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் திருமூர்த்தியிடம் குரலைத் தாழ்த்தினார்.

" இதோ பார்... போலீஸ் அங்கே நிக்கறாங்க. அவங்க என்ன காரணத்துக்காக நின்னுட்டிருந்தாலும் சரி, நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. அவங்க கேட்கிற கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்லுவேன். எனக்கு ஏதாவது பிரச்சினை வர்ற மாதிரி நீ நடந்துகிட்டா அந்த விநாடியே உன்னோட உடம்புல தோட்டா பாய்ஞ்சுடும் " இறுகிப்போன முகத்தோடு சொன்ன ராவ்டேபிந்தர் ரிவால்வரை மறைவாய் கீழே இறக்கி திருமூர்த்தியின் இடுப்புப் பகுதியில் வைத்தார்.

Flat number 144 adhira apartment episode 64

திருமூர்த்தி குரல் கம்மினார். " ஸார் நீங்க எது சொன்னாலும் நான் கேக்கறேன். என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க "

" நீ நடந்துக்கிறதைப் பொறுத்துத்தான் என்னோட நடவடிக்கையும் இருக்கும். மொதல்ல மூஞ்சியை நல்லாத் துடைச்சுக்கோ. வேர்த்து வழியாமே காரை ஒட்டு "

மெதுவாய் கார் நகர்ந்தது. டோல்கேட்டில் ஏற்கெனவே காத்திருந்த வாகனங்களுக்குப் பின்னால் போய் நின்றது. மெல்ல மெல்ல ஊர்ந்து மூங்கில் தடுப்பைக் கடந்ததும் ஒரு கான்ஸ்டபிள் காரை நெருங்கி ராவ்டேபிந்தரிடம் குனிந்தார். தன் கையில் வைத்திருந்த போட்டோவை ஒரு முறை தீர்க்கமாய் பார்த்தார். பிறகு ராவ்டேபிந்தரையும், திருமூர்த்தியையும் மாறி மாறி பார்வையால் நனைத்துவிட்டு ராவ்டேபிந்தரிடம் கேட்டார்.

" எங்கிருந்து வர்றீங்க .. ? "

" சென்னையிலிருந்து "

" எங்கே போயிட்டிருக்கீங்க.. ? "

" ஏரிக்கரையில் இருக்கிற பாரடைஸ் பாயிண்ட் ரிசார்ட்டுக்கு"

" காரோட டிக்கியை ஒப்பன் பண்ணுங்க"

திருமூர்த்தி குனிந்து தன் காலுக்கு அருகேயிருந்த டிக்கிக்கான லாக்கரை அன்லாக் செய்ய, "ப்ளக்" என்ற சத்தத்தோடு காரின் டிக்கி திறந்து கொண்டது. ஒரு கான்ஸ்டபிள் காரின் பின்பக்கம் போய் டிக்கியைத் திறந்து பார்த்துவிட்டு குரல் கொடுத்தார்.

" சண்முகம்....டிக்கியில் ஒண்ணுமில்லை. காரை அனுப்பிடு.... "

" நீங்க போங்க ஸார்.... "

" ராவ்டேபிந்தர் தலையை வெளியே நீட்டி கான்ஸ்டபிளிடம் கேட்டார். எதுக்காக இந்த சோதனை.. ? "
" செங்கல்பட்டு சப்ஜெயிலிலிருந்து கைதி ஒருத்தன் தப்பிச்சுட்டான்... ஏதாவது ஒரு கெட்டப்பில் அவன் இந்தப்பக்கமாய் க்ராஸ் பண்ணிப் போக வாய்ப்பிருக்குங்கிற நம்பிக்கையில் வர்ற வெகில்ஸையெல்லாம் சோதனை போடறோம். நீங்க போங்க.... "

ஒரு தேங்க்ஸை கான்ஸ்டபிளுக்கு கொடுத்துவிட்டு ராவ்டேபிந்தர் திருமூர்த்தியைப் பார்த்து தலையசைத்தார்.

" வண்டியை எடு... "

மெதுவாய் நகர்ந்த கார் வேகம் பிடித்து டோல்கேட்டின் போக்குவரத்து நெரிசலை முடித்துக்கொண்டு பிரதான சாலைக்கு வந்தது.

தொலைவில் ராமர் காத்த ஏரி அண்மையில் பெய்த மழையின் காரணமாய் கரையே தெரியாத அளவுக்கு ஒரு கடல் மாதிரி காட்சியளிக்க இன்னொரு பக்கம் வரிசையாய் இருந்த பனைமரக்கூட்டம் சொற்ப விநாடிகளுக்கு மட்டுமே பார்வையில் தட்டுப்பட்டு உடனே காணாமல் போனது.

ராவ்டேபிந்தர் மறுபடியும் துப்பாக்கியை உயர்த்தி திருமூர்த்தியின் நெற்றியை பார்த்துக்கொண்டே பேசினார்.

" இப்ப நான் சொல்லப்போறதை நல்லா கவனி. இது உனக்கு புது இடம். ஆனா நான் அடிக்கடி வந்து போகிற இடம். நாம் இப்ப போகப் போகிற பாரடைஸ் பாயிண்ட் ரிசார்ட்டில் வேலை பார்க்கிற தோட்டக்காரனிலிருந்து ரிசார்ட்டின் எம்.டி.வரை எனக்கு எல்லாருமே பழக்கம். நீ இங்கிருந்து தப்பிச்சுப் போக நினைக்கிறது தற்கொலை பண்ணிக்கிறதுக்கு சமம்..... உன்னோட மனசுக்குள்ளே இப்போ ஒரு நப்பாசை இருக்கலாம். அந்த அஸிஸ்டெண்ட போலீஸ் கமிஷனர் சந்திரசூடன், நீயும் நானும் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சு வந்துடமாட்டாரான்னு நினைக்கலாம். அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் மனசுக்குள்ளே இருந்தா இப்பவே அதையெல்லாம் துடைச்சு எடுத்து வீசிடு... ஏன்னா நான் எக்ஸ் ஆர்மி மேன். இந்த அரைகுறை அஸிஸ்டெண்ட் கமிஷனர் மாதிரியான ஆட்கள் எல்லாம் நான் காலுக்கு கீழே மிதிச்சு நடக்கிற புல்லுக்கு சமம் "

ராவ்டேபிந்தர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் வைபரேஷனில் உறுமியது. இடது கையில் செல்போனை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினார்.

" ஹலோ "

மறுமுனையில் ஒரு பெண் குரல் உருகிய ஜஸ்க்ரீம் போல் வழிந்தது.

" மிஸ்டர் ராவ்டே.... நான் தாரிகா.... பாரடைஸ் பாயிண்ட் எம்.டியின் பி.ஏ. பேசறேன் "

" சொல்லும்மா என்ன விஷயம்.. ? "

" நீங்க மதுராந்தகம் வந்துட்டீங்களா.. ? "

" ம்... வந்தாச்சு... இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல ரிசார்ட்ல இருப்பேன். எனக்கு ரூம் போட்டாச்சா.. ? "

" போட்டாச்சு ஸார்.... க்ரெளண்ட் ஃப்ளோரிலேயே சூட் நெம்பர் லெவன்... நீங்க நேரா ரூமுக்கே போயிடலாம்.. எம்.டி. இன்னிக்கு மத்தியானம் ஆறு மணிக்கு மேல வந்து உங்களைப் பார்க்கிறதாய் எனக்கு போன் பண்ணினார் "

" அவர் கூட வேற யாராவது வர்றாங்களா.. ? "

" இல்ல ஸார்.... அவர் மட்டும்தான்... "

" சரி.... என்னோட ருமுக்கு அட்டெண்டர் யாரு.. ? "

" வழக்கம் போல் சோலையப்பன்தான். நீங்க ரிசார்ட் வந்து சேரும்போது அவன் உங்களுக்காக காத்திட்டிருப்பான். உங்களுக்கு வேற உதவி ஏதாவது தேவைப்பட்டா எனக்கு போன் பண்ணுங்க ஸார் "

" கண்டிப்பா.... "

********
பாரடைஸ் பாயிண்ட் ரிசார்ட் அந்த முற்பகல் வேளையிலேயே நூறு சதவீத நிசப்தத்தோடு தெரிய, சூட் நெம்பர் பதினொன்றில் ராவ்டேபிந்தர் அந்த அகலமான லெதரட்டி சோபாவில் புதைந்து கால்மேல் கால் போட்டபடி சாய்ந்திருந்தார். அவர்க்கு எதிரே பத்தடி தொலைவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் திருமூர்த்தி பயம் வழியும் கண்களோடு உட்கார்ந்திருக்க சற்றுத்தள்ளி ரூம் அட்டெண்டர் சோலையப்பன் வலுவான புஜங்களோடு கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான். அவனை கையசைத்துக் கூப்பிட்டார் ராவ்டே.

" சோலை "

" அய்யா "

" வயிறு பசிக்குது.... நான்வெஜ் அயிட்டம் என்னென்ன இருக்கோ அதையெல்லாம் ஒரு பிளேட் கொண்டு வந்து வைய்யி..... "

" சரிங்கய்யா " என்று சொல்லிவிட்டு அவன் திரும்பிப்போக முயன்ற விநாடி ராவ்டே மறுபடியும் குரல் கொடுத்தார்.

" ஒரு நிமிஷம் "

அவன் நின்றான்

" அய்யா "

" லஞ்ச் எனக்கு மட்டும்தான். இந்த திருமூர்த்திக்குக் கிடையாது. அவன் தண்ணி கேட்டா கூட ஒரு அரைமணி நேரம் கழிச்சு அரைடம்ளர் தண்ணிதான் கொடுக்கணும். என்ன புரியுதா.. ? "

" சரிங்கய்யா.... "

சோலையப்பன் தலையை ஆட்டிவிட்டு அந்த அறையை விட்டு அகன்று போனதும், திருமூர்த்தி கெஞ்சலான குரலில் கண்களில் மின்னும் நீரோடு ராவ்டேயை பார்த்து பேச ஆரம்பித்தார்.

" ஸ...ஸ....ஸார்.... நான் என்ன தப்பு பண்ணினேன்னு இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க.. ? "

" உன்னை இப்படி டார்ச்சர் பண்ணினால்தானே எனக்கு வேண்டியது கிடைக்கும். நினைச்சது நடக்கும் "

" உங்களுக்கு என்ன வேணும் ஸார்.. ? "

" உன்னோட ரியல் எஸ்டேட் பிசினஸ் பார்ட்னர் அருளானந்தம் எனக்கு வேணும்... இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணி வரைக்கும் உனக்கு டயம். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. அருளானந்தத்தை இந்த பாரடைஸ் பாயிண்ட் ரிசார்ட்டுக்கு நீ வரவழைக்கணும் "

திருமூர்த்தி திகைத்தார்.

" ஸார்.. நாம அருளானந்தத்தைப் பார்க்கத்தானே உத்திரமேரூர் போயிட்டிருந்தோம். அங்கேயே நீங்க அவரைப் பார்த்து இருக்கலாமே.. ? "

" கோயில் வாசல்ல வெச்சு அருளானந்தத்தை சுட்டுக்கொன்னா போலீஸ்ல நான் மாட்டிக்க வேண்டி வருமே.. ? "

திருமூர்த்தியின் விழிகள் நிலைகுத்தின.

" அ..அ..அவரைச் சுட்டுக்கொல்லப் போறீங்களா.. ? "

" ஆமா.....
"
" எ...எ...எதுக்காக.. ? "

" அந்த காரண காரியத்தையெல்லாம் உன்கிட்ட விலாவரியா சொல்லிட்டிருக்க வேண்டியதில்லை... அந்த அருளானந்தம் எனக்குப் பண்ணின துரோகத்துக்கு எப்பவோ அவனோட கதையை முடிச்சிருக்கணும். ஸ்ரீலங்காவுக்கு அவன் தப்பிச்சுட்டு போனதும் என்னால அவனைக் கண்டுபிடிக்க முடியலை. இப்ப அவனே வசமா வந்து மாட்டியிருக்கான். நான் உன்கூட உத்திரமேரூர்க்கு வர்றது அவனுக்கு ஒரு வேளை தெரிய வந்தா கண்டிப்பா அங்கே... வரமாட்டான். அந்த துரோகிக்கு இப்போ அவசரமா பணம் தேவை. பணத்தை வாங்கிறதுக்காக அவனை நீ எந்த இடத்துக்கு கூப்பிட்டாலும் தவறாமே அங்கே வந்துடுவான். உடனே நீ போன் பண்ணி இந்த பாரடைஸ் பாயிண்ட் ரிசார்ட்டுக்கு வரச்சொல்லு "

சொன்ன ராவ்டேபிந்தர் தன் சட்டைப்பையில் வைத்திருந்த திருமூர்த்தியின் செல்போனை எடுத்து வீச, திருமூர்த்தி அதை பாதுகாப்பாய் தன்னுடைய கரங்களில் ஏந்திக்கொண்டார்.

" ம்.... போன் பண்ணு "

" ஸ...ஸ...ஸார் "

" என்ன.. ? "

" அருளானந்தத்துக்கு நான் போன் பண்ணி பேச முடியாது. ஏன்னா அவரோட உண்மையான செல்போன் நெம்பர் எனக்குத் தெரியாது. நேற்றிலிருந்து அவர் என்கூட நாலைஞ்சு தடவை பேசியிருப்பார். ஆனா அந்த நெம்பர்கள் எல்லாமே ஒரு தடவை மட்டுமே உபயோகப்படுத்திப் பேசக்கூடிய ஒன் டைம் சிம் கார்ட் நெம்பர்ஸ்... அந்த நெம்பர்களுக்கு நான் போன் பண்ணிப் பார்த்தேன். ரெஸ்பான்ஸ் இல்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அருளானந்தம் எனக்கு போன் பண்ணி ஏன் உத்திரமேரூர் கோயிலுக்கு
வரலைன்னு கேட்பார். அந்த சமயத்துல நான் அவர்கிட்ட பேசறேன்.. ஆனா.. ? "

" என்ன ஆனா.. ? "

" நான் அவரை ... இந்த ரிசார்ட்டுக்கு வரச்சொன்னா காரணம் கேட்பார். நான் என்ன சொல்லட்டும்.. ? "

" நீ என்ன வேணும்ன்னாலும் சொல்லிக்க. ஆனா அந்த நன்றி கெட்ட நாய் இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணிக்குள்ளே இங்கே இருக்கணும் "

" ஸார்..... அருளானந்தம் என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்பவும் நல்ல டைப். அவர் மேல உங்களுக்கு என்ன கோபம்ன்னு தெரியலை. அவர் எதுமாதிரியான தப்பு பண்ணியிருந்தாலும் சரி, போலீஸ்ல ஹேண்ட் ஒவர் பண்றதுதான் சரி..... "

" அவன் எப்பேர்ப்பட்ட நம்பிக்கைத் துரோகின்னு எனக்குத்தான் தெரியும். கடந்த ஆறு வருஷகாலமாய் அவனை தேடிட்டு இருக்கேன். என் வாழ்க்கையோட சந்தோஷத்தை நாசம் பண்ணினவனை தோட்டாக்களால துளைச்சு சாகடிக்கத்தான் நான் இந்த லைசென்ஸ்ட் ரிவால்வரை வெச்சிருக்கேன். அதிரா அபார்ட்மெண்ட்டில் நடந்த அத்தனை அட்டூழியங்களுக்கும், அசம்பாவித மரணங்களுக்கும் காரணம் அருளானந்தம்தான்னு எனக்கு முன்னாடியே தெரியும். நான் அந்த உண்மையை போலீஸ்ல சொல்லாததுக்குக் காரணம் அருளானந்தம் கைக்குக் கிடைச்சா போலீஸ் சட்ட ரீதியாய் கைது பண்ணி கோர்ட்ல நிறுத்தி வழக்கை பத்து வருஷம் நடத்தி மரண தண்டனையை வாங்கிக் கொடுப்பாங்க. அதுல எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை. அருளானந்தம் மாதிரியான ஒரு அயோக்கியனை இந்த மாதிரியான தனி இடத்துக்கு கொண்டு வந்து அரைநாளாவது வெச்சிருந்து சித்ரவதை பண்ணி அதுக்கப்புறம் அவனை சுட்டுத்தள்ளனும். இந்த ரிவால்வரில் இருக்கிற ஆறு தோட்டாக்களும் அவனோட இதயத்தை சதைத்துணுக்குகளாய் சிதறடிக்கணும். அப்பத்தான் என்னோட மனசு ஆறும் "

ராவ்டேபிந்தர் வெறி பிடித்த நபரைப்போல் கத்திக்கொண்டிருக்கும்போதே திருமூர்த்தியின் கையில் இருந்த செல்போன் டயல்டோனை வெளியிட்டது. திருமூர்த்தி பதட்டமானார்.

" ஸ....ஸ....ஸார்... ஒரு புது நெம்பரோடு எனக்கு போன் கால் வருது. அது அருளானந்தமாய் இருக்கலாம் "
" ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசு "

கை நடுக்கத்தோடு ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு மெல்ல குரல் கொடுத்தார் திருமூர்த்தி.

" ஹலோ "

மறுமுனையில் குரல் கேட்டது.

" நான் அருள் பேசறேன் திரு. உத்திரமேரூர் வர ஏன் லேட்.. ? "

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 , 61 , 62 , 63 ]

English summary
Flat number 144 adhira apartment episode 64 by Rajesh Kumar Novelist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X