For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"என்ன ஆதிகேசவன் அப்படி பார்க்கறீங்க .. ?“ ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (63)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சந்திரசூடன் நாற்காலிக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி, ஆதிகேசவனுக்காக காத்திருக்க, அடுத்த சில விநாடிகளில் அவர் உள்ளே வந்தார். களைத்து வியர்த்துப் போன முகம். கைகளைக் குவித்தார்.

" வணக்கம் ஸார் "

" வாங்க ஆதிகேசவன்.... உட்கார்ங்க..." எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டி, அவர் உட்கார்ந்ததும் கேட்டார்.
" கோபிகாவைக் கூட்டிட்டு ஹைதராபாத் போயிட்டு வந்துட்டீங்க போலிருக்கு.? "

" ஆமா ஸார்.. ஹைதராபாத்ல நீங்க சொன்ன உங்க நண்பரான ஆயுர்வேத டாக்டர் பிரம்மய்யாவைப் போய்ப் பார்த்தேன். கோபிகாவுக்கு இருக்கிற பிராப்ளத்தை விளக்கமா எடுத்துச் சொன்னேன். ஒரு வாரம் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்"

" அந்த ஒரு வார ட்ரீட்மெண்ட்ல கோபிகாகிட்ட ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுதா... டாக்டர் பிரம்மய்யா என்ன சொன்னார்.. ? "

ஆதிகேசவன் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு தான் கொண்டு போயிருந்த, தோல்பையைப் பிரித்து, ஒரு கடிதக் கவரை எடுத்து சந்திரசூடனிடம் நீட்டினார்.

Flat number 144 adhira apartment episode 63

" உங்களுக்கு டாக்டர் பிரம்மய்யா கொடுத்த லெட்டர் இது "

சந்திரசூடன் குழப்பத்தோடு கவரை வாங்கிப் பிரித்து, உள்ளே இருந்த கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்த கடிதம் அது. டைப் செய்யப்பட்டிருந்த அந்த வரிகளைப் படிக்க படிக்கவே, மனதுக்குள் தமிழாக்கம் ஒடியது.

அன்புக்குரிய நண்பர் சந்திரசூடன் அவர்களுக்கு,

பிரம்மய்யா எழுதிக்கொண்டது. சுகநிவாஸ் என்ற பெயரில் நான் நடத்திவரும் ஆயுர்வேத சிகிச்சைக்கான மருத்துவமனை மீது நம்பிக்கை வைத்து நீங்கள் அனுப்பிய கோபிகா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நான் ஒரு வாரகாலம் சிகிச்சையளித்தேன். சிகிச்சை என்றால் அது சாதாரண சிகிச்சை அல்ல. ஆயுர்வேதத்திலேயே விலை உயர்ந்த வெகு அரிதான சிகிச்சையான பூத வித்யா வை கோபிகாவுக்கு கொடுத்து தனிப்பட்ட முறையில் கவனித்து வந்தேன். பொதுவாக பூத வித்யா ட்ரீட்மெண்ட்டை மேற்கொள்ளும் இது போன்ற நோயாளிகளுக்கு இரண்டு மூன்று நாட்களிலேயே ஒரு இருபது சதவீத முன்னேற்றம் தெரியும். ஆனால் கோபிகாவுக்கு ஒரு வார ட்ரீட்மெண்ட் கொடுத்தும், ஒரு சதவீதம் கூட பலன் கிடைக்கவில்லை. எனக்கு இது அதிர்ச்சியாகவும் ஒரு புது அனுபவமாகவும் இருந்தது.

மிஸ்டர் சந்திரசூடன்... இந்த கடிதம் மூலமாக உங்களுக்கும், கோபிகாவின் தந்தை ஆதிகேசவன் அவர்களுக்கும் ஒரு விஷயத்தை தெரியபடுத்த விரும்புகிறேன். இறந்துபோன தன்னுடைய கணவர் தனசேகர் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு சந்தோஷமாய் இருக்கும் கோபிகாவை நாம் மனநோயாளியாக நினைத்து அலோபதி மூலமாகவோ, ஆயுர்வேத அல்லது மற்ற மருத்துவ சிகிச்சைகள் மூலமாகவோ குணப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டால் அந்த சிகிச்சைகள் கோபிகாவின் மூளைத்திறனை பாதித்து பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது என்னுடைய தீர்க்கமான முடிவு. ஆகையால் கோபிகா இப்போது இருக்கிற மனநிலையிலேயே கணவர் உயிரோடு இருக்கிறார் என்கிற சந்தோஷத்திலேயே தன்னுடைய வாழ்நாட்களை கழித்துவிடுவதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன். நான் எடுத்த முடிவுகள் என்றைக்குமே சரியானதாகவே இருக்கும் என்று என் பழைய நண்பரான உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. என்னுடைய இந்த முடிவைப்பற்றி ஏற்கனவே நான் கோபிகாவின் தந்தை ஆதிகேசவனிடம் சொல்லிவிட்டேன். கோபிகா மகிழ்ச்சியோடு இருக்க என்னுடைய வாழ்த்துக்கள். அடுத்த மாதம் சென்னையில் ஒரு திருமணத்திற்கு வரவேண்டியுள்ளது. அப்போது உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்

பிரம்மய்யா

கடிதத்தை முழுமையாய் படித்து முடித்த சந்திரசூடன் அதை மறுபடியும் மடித்துக்கொண்டே ஆதிகேசவனிடம் நிமிர்ந்தார்.

" டாக்டர் பிரம்மய்யா.. உங்ககிட்ட நேர்ல என்ன சொன்னாரோ அதைத்தான் இந்த லெட்டர்லேயும் மென்ஷன் பண்ணியிருக்கார். பிரம்மய்யா ஒரு மிகச்சிறந்த ஆயுர்வேத டாக்டராய் இருந்தாலும் அலோபதி வைத்திய முறையும் அவர்க்கு நல்லாவே தெரியும். ஒரு பேஷண்ட்டுக்கு ட்ரீட்மெண்ட் தரணுமா வேண்டாமாங்கிற விஷயத்துல அவர் ஒரு முடிவு எடுத்தா அது சரியாய் இருக்கும்... அவரோட முடிவைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க ஆதிகேசவன்.. ? "

" அவர் சொல்றதுதான் சரின்னு என்னோட மனசுக்கும்படுது ஸார்.. கணவர் உயிரோடு இருக்கார்ங்கிற நினைப்போடு கோபிகாவோட மீதி வாழ்நாட்கள் சந்தோஷமாய் கழியட்டும்.. எனக்குப் பின்னாடி அவளோட வாழ்க்கை எப்படியிருக்குமோ என்கிற ஒரு கவலைதான் இப்ப எனக்கு "

" அந்தக் கவலை கூட உங்களுக்கு வேண்டாம் ஆதிகேசவன். கோபிகா மாதிரியான பெண்களை அன்பான அரவணைப்போடு பார்த்துக்கொள்ள, எத்தனையோ தரமான காப்பகங்கள் இருக்கு... உங்களுக்கு எந்த மாதிரியான உதவி தேவைப்பட்டாலும் சரி நேரம் காலம் பார்க்காமே எனக்கு நீங்க போன் பண்ணலாம் "

" தேங்க்யூ ஸார்.... இப்ப நீங்க சொன்ன இந்த ஆறுதல் வார்த்தைகள்தான் எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பலம் "

ஆதிகேசவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரசூடனின் மேஜையின் மேலிருந்த லேண்ட்லைன் டெலிபோன் பெரிதாய் அலற, அதன் ரிஸீவரை எடுத்து காதில் வைத்தார்.
மறுமுனையில் டெப்டி கமிஷனர் பேசினார்.

" சந்திரசூடன் "

" ஸார்.... "

" எனி ப்ராக்ரஸ் இன் அதிரா அப்பார்ட்மெண்ட் ப்ரோப் .. ? "

" அடுத்த சில மணி நேரத்துக்குள்ளே அந்த ப்ரோப் சம்பந்தமாய் ஒரு பிரேக்கிங் நியூஸ் கிடைக்கலாம் ஸார் "

" அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கா.. ? "

" ஹண்டரட் பர்ஸண்ட் ஸார் "

" இப்படி சொல்லிவிட்டு ஒரு மணி நேரம் ஸாரி சொல்லிடமாட்டீங்களே.. ? "

" யூ கேன்..... ட்ரஸ்ட் மீ ஸார் "

" இட்ஸ் ஒ.கே... அதிரா அப்பார்ட்மெண்ட் ஒய் ப்ளாக்கிலிருந்து தப்பிச்சுட்டுப்போன அந்த சஞ்சய் பட்டேல் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதா.. ? "

" சஞ்சய் பட்டேலைப் பிடிக்க ஒரு கமேண்டோ படை மும்முரமாய் செயல்பட்டுகிட்டு இருக்கு ஸார்... எந்த நிமிஷத்திலும் அவங்ககிட்டயிருந்து ஒரு நல்ல தகவலை எதிர்பார்க்கலாம் "

" இந்த விவகாரத்தை நீங்க நல்ல முறையில் விசாரணை பண்ணிட்டிருக்கீங்க கீப் இட் அப் "

" தேங்க்யூ ஸார்.... "

எதிர்முனையில் டெப்டி கமிஷனர் பேச்சை முடித்துக்கொள்ள சந்திரசூடன் டெலிபோனின் ரிஸீவரை வைத்துவிட்டு, ஆதிகேசவனிடம் திரும்பிய போது அவர் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்துவிட்டு மெலிதான புன்முறுவல் பூத்தபடி கேட்டார்.

" என்ன ஆதிகேசவன் அப்படி பார்க்கறீங்க .. ? "

" ஒண்ணுமில்ல ஸார்... நீங்க இப்ப போன்ல பேசும்போது சஞ்சய் பட்டேல்ன்னு பேரைச் சொன்னீங்க இல்லையா.. ? "

" ஆமா..... "

" அந்த சஞ்சய் பட்டேல் அதிரா அப்பார்ட்மெண்ட் ஒய் ப்ளாக்கில் இருந்தவன் தானே.. ? "

" அவனேதான் "

" அவனை எதுக்காக தேடறீங்க.. ? "

" நீங்க ஊர்ல இல்லாததுனால உங்களுக்கு விஷயம் தெரியலைன்னு நினைக்கிறேன் " என்று சொன்ன சந்திரசூடன் சில நிமிஷ நேரத்தை செலவிட்டு, சஞ்சய் பட்டேல் செய்து கொண்டிருந்த பீடோஃபைலிக், செக்ஸ்டூரிஸம் பிசினஸைப் பற்றியும், கொலை செய்யப்பட்ட லட்சணா அவனோடு தொடர்பில் இருந்ததைப் பற்றியும் சொல்ல ஆதிகேசவன் அதிர்ந்து போனவராய் சந்திரசூடனை ஏறிட்டார்.

" லட்சணா இவ்வளவு மோசமான பெண்ணாயிருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை ஸார் "

" எனக்கும் அதிர்ச்சிதான். சஞ்சய் பட்டேலோட நண்பர்களான பாலா, திரவியம் இந்த ரெண்டுபேருமே முன்னாள் குற்றவாளிகள். அவங்க ரெண்டு பேரையும் வேறு ஒரு கேஸ் சம்பந்தமாய் விசாரிக்கும்போதுதான் இந்த உண்மையெல்லாம் வெளியே வந்தது. சஞ்சய் பட்டேலை அதிரடியாய் கைது பண்ண உடனே அதிரா அப்பார்ட்மெண்ட்டோட ஒய் ப்ளாக்குக்கு கான்ஸ்டபிள்களோடு போனோம். ஆனா நாங்க வர்றதை அவன் எப்படியோ தெரிஞ்சுகிட்டு ஃப்ளாட்டை உள்பக்கமாய் தாழ் போட்டுட்டு பின்பக்க வழியாய் தப்பிச்சு ஒடிட்டான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிற வேலையில் இப்போ ஒரு போலீஸ் படை ஈடுபட்டிருக்கு..... "

சந்திரசூடன் பேசப்பேச ஆதிகேசவன் பதட்டத்துடன் குறுக்கிட்டார்.

" ஸ...ஸார் "

" என்ன .. ? "

" அந்த சஞ்சய் பட்டேலை நான் பார்த்தேன் "

சந்திரசூடனின் பார்வை ஆச்சர்யத்தில் விரிந்தது.

" பார்த்தீங்களா எங்கே.. ? "

" நேற்றைக்கு ஹைதராபாத்ல நானும் கோபிகாவும் சலார்ஜங் மியூஸியத்துக்கு போய்ட்டு வெளியே வந்து, ஹோட்டல் ரூமுக்கு போறதுக்காக, டாக்ஸியைத் தேடிட்டு இருந்தோம். நாங்க நின்னுட்டிருந்த இடத்துக்கு நேர் எதிர்லதான் ஆந்திரபிரதேஷ் டூரிஸம் டெலவப்மெண்ட் கார்ப்பரேஷனோட ஒரு பிராஞ்ச் ஆபீஸ் இருந்தது. ஏதேச்சையாய் என்னோட பார்வை அந்த ஆபீஸூக்குள்ளே போனப்போது முன்புற அறையில் ஒரு கம்ப்யூட்டர்க்கு முன்னால் சஞ்சய் பட்டேல் உட்கார்ந்துட்டு இருந்தான். லேசா தாடி வளர்ந்து அவனோட முகமே மாறியிருந்தது. அவன் சஞ்சய் பட்டேல்தானான்னு எனக்கு சந்தேகம் வரவே, கோபிகாவுக்கு அவனைக்காட்டி கேட்டேன். கோபிகா பார்த்துட்டு அவன் சஞ்சய் பட்டேல்தான்னு உறுதியான குரலில் சொன்னா. எனக்கும் அவனுக்கும் அதிகப்படியான பழக்கவழக்கம் இல்லாததினால நான் அவன்கிட்ட போய் பேச விரும்பலை,,, பார்த்துட்டிருக்கும்போதே டாக்ஸி கிடைக்கவே அங்கிருந்து புறப்பட்டுட்டோம்... போலீஸ் அவனைத் தேடிகிட்டு இருக்கிற விபரம் நேற்றைக்கே எனக்குத் தெரிஞ்சிருந்தா நான் அந்த நிமிஷமே உங்களுக்கு போன் பண்ணியிருப்பேன்..... "

" இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடலை ஆதிகேசவன். சரியான நேரத்துல மிகச் சரியான தகவல் ஒண்ணை கொடுத்திருக்கீங்க. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே ஆந்திர போலீஸ் சஞ்சய் பட்டேலை கைது பண்ணியிருப்பாங்க " சொன்னவர் விருட்டென்று நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்து போய் சுவரோடு பொருத்தப்பட்டிருந்த வயர்லஸ் போர்டை நெருங்கி அதில் இருந்த இண்டர் ஸ்டேட் போலீஸ் வயர்லஸ் ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டு தெளிவான ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

********
மதுராந்தகம் நகராட்சி உங்களை இனிதே வரவேற்கிறது பெயர்ப்பலகையை கார் கடந்தது.

ராவ்டேபிந்தர் தன் கையில் வைத்திருந்த ரிவால்வரால் காரை ஒட்டிக் கொண்டிருந்த திருமூர்த்தியின் தோளைத் தட்டினார்.

" மதுராந்தகம் ஏரிக்குப் பக்கத்துல "பாரடைஸ் பாய்ண்ட்" ங்கிற பேரில் ஒரு ரிசார்ட் இருக்கு தெரியுமா.. ? "

" தெரியாது ஸார்.... "

" நான் வழி சொல்றேன்.... நேராப் போய் ரைட்ல கட் பண்ணு. லேக் ஏரியா வரும். அந்த ஏரியா பூராவும் ரிசார்ட்ஸ்தான். நாம போக வேண்டிய "பாரடைஸ் பாய்ண்ட்" ரிசார்ட் கடைசியில இருக்கு.... "

ராவ்டேபிந்தர் பேசிக்கொண்டிருக்கும்போதே காரின் வேகம் சட்டென்று குறைந்தது.

" என்னாச்சு.. ? "

" எதிர்ல டோல்கேட் வருது ஸார் "

ரிவால்வரை அதிஜாக்கிரதையாய் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்தார் ராவ்டே.
மஞ்சள் கறுப்பு பெயிண்ட் பூசப்பட்ட மூங்கில் கம்பம் ஒன்று தடுப்பாக மாறியிருக்க, அந்த டோல்கேட் பார்வைக்குத் தட்டுபட்டது. சற்றுத்தள்ளி போலீஸ் ஜீப் ஒன்று தலைக்கு மேல் நீல சிவப்பு விளக்குகளை சுழலவிட்டபடி நின்றிருப்பதும் தெரிந்தது.

ராவ்டேபிந்தரின் இருதயம் சறுக்கியது.

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 , 61 , 62 ]

English summary
Flat number 144 adhira apartment episode 63 by Rajesh Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X