• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு போலிருக்கு.. ?" ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட்(67)"

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

விறைப்பாய் சல்யூட் வைத்து தளர்ந்த தாரிகாவை ஒரு மினி புன்னகையோடு ஏறிட்டார் சந்திரசூடன்.
" என்ன தாரிகா.... திருமூர்த்தி என்கிற பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு போலிருக்கு.. ? "

" ஆமா ஸார்.... தன்னோட உயிர்க்கு ஆபத்துன்னு தெரிஞ்சதுமே வேற வழியில்லாமே அருளானந்தத்தை கொலை பண்ணினதை திருமூர்த்தி ஒத்துக்கிட்டார். அப்படி அவர் ஒத்துகிட்டதுக்கு முக்கியமான காரணம் ராவ்டே பிந்தர்தான். அவரோட மிரட்டலான பேச்சும், பாடி லாங்க்வேஜும் ரொம்பவும் அற்புதம் ஸார்... அவர் திருமூர்த்தியை ஏக வசனத்தில் பேசி அவரோட காதுல ரிவால்வரை வெச்சு பயமுறுத்திய மொமண்ட் எனக்கே அடி வயிறு கலங்கி வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு...... "

சந்திரசூடன் சிரித்தார். " அவர் ஒரு திறமையான ஆர்மி மேன். அப்படிப்பட்ட ஒரு நபரால் மட்டுமே திருமூர்த்தி மாதிரியான ஆட்களை வழிக்குக் கொண்டு வர முடியும்.. இட்ஸ் ஒகே.... நாம ஏற்கெனவே போட்டு வெச்சிருக்கிற "அஜண்டா"படி நெக்ஸ்ட் ஸ்டெப்புக்குப் போயிடுவோம்.... ராவ்டே பிந்தரையும், திருமூர்த்தியையும் உள்ளே அனுப்பு.... "

Flat number 144 adhira apartment episode 67

"எஸ் ஸார் " என்று சொல்லி மறுபடியும் சல்யூட் வைத்து அந்த அறையிலிருந்து வெளியேறிய தாரிகா கதவருகே காத்திருந்த ராவ்டே பிந்தரையும், திருமூர்த்தியையும் பார்த்து கையசைத்தாள்.
" உள்ளே எம்.டி. வெயிட் பண்ணிட்டிருக்கார் வாங்க "

இருவரும் உள்ளே வந்தார்கள்.

சோபாவுக்கு சாய்ந்து கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருந்த சந்திரசூடனை பார்த்த விநாடியே, வெலவெலத்துப்போன திருமூர்த்தி உடனடியாய் வியர்த்து சுற்றும் முற்றும் பார்வையை ஒடவிட்டார்.
ராவ்டே பிந்தர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அவருடைய தோளைத் தட்டியபடி சிரித்தார்.
" யாரைத் தேடறே திருமூர்த்தி ...... எம்.டியையா ? எனக்கும் சரி, தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் பிரிவில் இன்ஸ்பெக்டராய் வேலை பார்க்கிற மிஸ் தாரிகாவுக்கும் சரி, நம்ம ஏ.சி.பி.தான் எம்.டி. நீ உன்னோட வாழ்க்கையில் எத்தனையோ அதிர்ச்சிகளைப் பார்த்திருப்பே... ஆனா இதுதான் உனக்கு அதிரடி அதிர்ச்சியாயிருக்கும்ன்னு நான் நினைக்கிறேன் "

வியர்வை வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த திருமூர்த்தியை ஏறிட்ட, சந்திரசூடன் நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

" இப்படி முன்னாடி வந்து அந்த நாற்காலியில் உட்கார்" திருமூர்த்தி இருட்டடித்த முகத்தோடு தயக்கமாய் நடை போட்டு ஏதோ முள்ளின் மேல் உட்கார்வது போல் நாற்காலியின் நுனியில் அவஸ்தையாய் உட்கார்ந்தார்.

" பயத்துல தொண்டை காய்ஞ்சு போயிருக்கும்.... குடிக்க தண்ணி வேணுமா.. ? "

" வே....வே...வேண்டாம் ஸார் "

" சரி.... உன்னை ரொம்ப நேரம் விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை. பத்தே பத்து நிமிஷம் மட்டும்தான் பேசப்போறேன். ஆனா அந்த பத்து நிமிஷமும் நீ உண்மையை மட்டும்தான் பேசணும்... நீ பேசற வார்த்தைகளில் ஒரு வார்த்தை பொய்யாக இருந்தாலும் சரி, ராவ்டே பிந்தர் கையில் இருக்கிற ரிவால்வருக்கு பிடிக்காது. முதல் தடவை பொய் சொன்னா உன்னோட வலது கால் முட்டிக்குக் கீழே தோட்டா பாயும். ரெண்டாவது தடவை பொய் சொன்னா இடது கால் முட்டி சிதறும். மூணாவது தடவையும் பொய் சொன்னா......... "

திருமூர்த்தி பதறிக்கொண்டே தன்னுடைய இரண்டு கைகளையும் ஆட்டினார்.

" ஸார்..... என்னோட வாயிலிருந்து இனி வர்ற வார்த்தைகள்ல ஒரு எழுத்து கூட பொய்யாய் இருக்காது. நீங்க கேட்கிற கேள்வி எதுவாயிருந்தாலும் நான் உண்மையைத்தான் சொல்லப் போறேன்... சட்ட ரீதியான உங்க நடவடிக்கைக்கு நான் கட்டுப்படறேன் ஸார் "

சில விநாடிகள் மெளனமாய் இருந்த சந்திரசூடன் திருமூர்த்தியை தீர்க்கமான பார்வையோடு ஏறிட்டபடி கேட்டார்.

" உன்னோட பார்ட்னர் அருளானந்தம் இப்போ உயிரோடு இருக்காரா இல்லையா...? "

" உயிரோடு இல்லை ஸார்.... "

" அவரை தீர்த்துக் கட்டினது நீதான்னு சொல்லியிருக்கே... அது உண்மையா.....? "

" உண்மைதான் ஸார்"

" கொலைக்கு என்ன காரணம்.....? "

திருமூர்த்தி சில விநாடிகள் நிசப்தம் காத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
" அதிரா அப்பார்ட்மெண்ட் ஃப்ளாட் நெம்பர் 144 சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்துல அருளானந்தம் எனக்கு ஒரு பெரிய தலைவலியாய் இருந்தார் ஸார் "

" அந்த விவகாரம் என்னான்னு விளக்கமா சொல்ல முடியுமா.....? "

" அது... வந்து.... ஸார்"

" தொண்டை அடைக்கிற மாதிரி இருந்தா கொஞ்சம் தண்ணி சாப்பிட்டுட்டு பேசு" சொன்ன சந்திரசூடன் தனக்கு முன்னால் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலை திருமூர்த்தியின் பக்கமாய் தள்ளி வைத்தார்.
" வே...வேண்டாம் ஸார்..... "

" அப்ப பேசு.... "

புறங்கையால் வியர்வையை துடைத்துக்கொண்டே திருமூர்த்தி சந்திரசூடனை ஏறிட்டபடி தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தார்.

" ஸார்.... நாங்க அதிரா அப்பார்ட்மெண்ட்டை கட்ட ஆரம்பிச்ச ஒரு வாரத்துக்குள்ளேயே கர்நாடகா சிக்மகளூர் ஏரியாவிலிருந்து ஒரு எக்ஸ் மினிஸ்டரோட பி.ஏ. வந்து என்னைப் பார்த்தார். அவர் என்கிட்டே அப்பார்ட்மெண்ட் கட்டறதைப் பற்றி அக்கறையோடு விசாரிச்சார்.... "

திருமூர்த்தி பேசப் பேச சந்திரசூடன் கையமர்த்தினார்.

" இதோ பார்..... இப்படி மொட்டைக் கடுதாசி மாதிரி பேசக்கூடாது. யார் அந்த கர்நாடகா எக்ஸ் மினிஸ்டர்..... அவரோட பேர் என்ன.....? "

" தேஜா பசவப்பா ஸார் "

" உன்னை வந்து பார்த்த பி.ஏ. யாரு.....? "

" நாகண்ணா "

" எதுக்காக உன்னை பார்க்க வந்தார்.....? "

" அதைத்தான்.. சொல்ல வந்தேன் ஸார் "

" சொல்லு "

" அந்த நாகண்ணா என்னை கன்ஸ்ட்ரக்சன் ஆபீஸ்ல வந்து பார்த்தப்ப என்னோட பார்ட்னர்களான அருளானந்தம், ராவணன் ரெண்டு பேருமே இல்லை.... வெளியே போயிருந்தாங்க. கட்டப்போகிற அப்பார்ட்மெண்ட்ல எவ்வளவு ப்ளாக்ஸ், ஒவ்வொரு ப்ளாக்கிலேயும் எத்தனை ஃப்ளாட் இருக்குன்னு சாதாரணமான முறையில் என்கிட்ட விபரங்களைக் கேட்டுகிட்டு இருந்த நாகண்ணா ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் முக்கியமான விஷயத்துக்கு வந்தார் "

"என்ன சொன்னார்.....? "

சந்திரசூடன் கேட்ட கேள்விக்கு திருமூர்த்தி பதில் சொல்லாமல் தான் அணிந்திருந்த அந்த தடிமனான மூக்குக் கண்ணாடியைக் கழற்றி ஒரு பக்கத்து பிரேமை இடது வலமாக நான்கைந்து தடவை சுழற்றி உள்ளேயிருந்து பெரிய பட்டன் சைஸில் இருந்த அந்த டிவைஸை எடுத்து நீட்டினார்.

" என்ன இது .....? "

" மினி யூ எஸ்.பி. ஃப்ளாஷ் பென் ட்ரைவ் ஸார்... முக்கியமான நபர்கள் யாராவது என்னைப் பார்த்து பேச வந்தா, அவங்களுக்குத் தெரியாமே நான் எங்களுக்குள்ளே நடக்கிற பேச்சு வார்த்தையை ரெக்கார்ட் பண்ணி அதை இது மாதிரியான ஒரு மினி பட்டன் சைஸ் பென்ட்ரைவ்ல சேவ் பண்ணி வெச்சுக்கிறது என்னோட வழக்கம். அதே மாதிரிதான் எக்ஸ் மினிஸ்டர் தேஜா பசவப்பாவோட பி.ஏ. நாகண்ணா என்னைப் பார்க்க வந்தப்போது நானும், அவரும் பேசின எல்லா விஷயங்களையுமே இந்த பென் ட்ரைவ்க்குள்ளே பதிவு பண்ணிகிட்டேன்... இங்கே லேப்டாப் இருந்தா அதுல இந்த பென் ட்ரைவைப் போட்டு கேட்டுப் பார்த்துடலாம் ஸார். நான் சொல்றதைவிட இதுல கேட்டா உங்களுக்கு யூஸ்ஃபுல்லாயிருக்கும் "

திருமூர்த்தி சொல்ல சந்திரசூடன் தன் பார்வையை சற்றுத்தள்ளி நின்றிருந்த தாரிகாவின் மேல் பதித்தார்.
" ஒரு லேப்டாப்க்கு ஏற்பாடு பண்ணம்மா "

தாரிகா தன்னுடைய செல்போனை எடுத்து ரிசார்ட் மானேஜர்க்கு போன் செய்து விபரம் சொல்ல, அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு டெல் லேப்டாப் சந்திரசூடனுக்கு முன்பாய் இருந்த டீபாயின் மேல் வந்து உட்கார்ந்தது. திருமூர்த்தி லேப்டாப்பை நெருங்கி அதன் பக்கவாட்டில் இருந்த சிறிய செவ்வக துவாரத்தில் பென் ட்ரைவை நுழைத்துவிட்டு ஒரு பட்டனைத் தட்ட குரல்கள் வெளியே சிதறியது. அறிமுக உரையாடல்களை ஃபாஸ்ட் பார்வர்ட் செய்து விட்டு உரையாடலின் முக்கிய பகுதி வந்ததும் மறுபடியும் பட்டனைத் தட்ட சில விநாடிகளுக்குப்பின் திருமூர்த்தியின் குரல் கேட்டது.

" அப்பார்ட்மெண்ட்டை கட்டி முடிக்க எப்படியும் ரெண்டு வருஷ காலம் பிடிக்கும் ஸார்..... "

" ஒரு வருஷத்துக்குள்ளே நாலைஞ்சு ப்ளாக்குகளாவது ஃபினிஷிங் ஸ்டேஜூக்கு வர வாய்ப்பில்லையா.....? "

" ஸாரி மிஸ்டர் நாகண்ணா.... நீங்க ஒரு எக்ஸ் மினிஸ்டர்கிட்டே பர்சனல் செக்ரட்ரியா வொர்க் பண்றீங்க.. ஒரு அப்பார்ட்மெண்ட்டை கட்டி முடிக்கிறதுக்குள்ளே எவ்வளவோ சட்ட திட்டங்களுக்கும்,
ஃபார்மலீடீஸ்களுக்கும் அதனோட ப்ரமோட்டர்ஸ் கட்டுப்பட வேண்டியிருக்குன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன.....? "

" தெரியும்... இருந்தாலும் முயற்சி செஞ்சா முடியாத விஷயம் ஏதாவது உண்டா என்ன.....? "

"நான் உங்ககிட்ட ஒரு சந்தேகத்தைக் கேட்கலாமா.....? "

" ம்.... கேளுங்க "

" கர்நாடகாவில் இருக்கிற எக்ஸ் மினிஸ்டர் தேஜா பசவப்பா சென்னையில் அதுவும் இந்த ஈஞ்சம்பாக்கம் ஏரியாவில், மிடில் க்ளாஸ் பீப்பிள்ஸூக்காக நாங்க கட்டிகிட்டு இருக்கிற அதிரா அப்பார்ட்மெண்ட்டில் அவசர அவசரமாய் ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டிய அவசியம் என்ன .....? "

நாகண்ணா சிரித்தார்.

" வெரி சிம்பிள். அவர் விருப்பப்படறார். அவ்வளவுதான்.... நீங்க ஃப்ளாட்டுக்கு ஃபிக்ஸ் பண்ற விலையைக் காட்டிலும் ஒரு மடங்கு சேர்த்து தரவும் அவர் தயார். அதாவது ஒரு ஃப்ளாட்டோட விலை அம்பது லட்சம்ன்னு நீங்க சொன்னா அவர் ஒரு கோடி குடுத்து வாங்கவும் தயங்க மாட்டார் "

" அவர் இவ்வளவு ஆசைப்படும்போது நான் ஒரு விஷயம் சொல்லலாமா.....? "

" ம்... .சொல்லுங்க "

" நானும் என்னோட பார்ட்னர்கள் ரெண்டு பேரும் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில் இருபத்தியாறு ப்ளாக்குகளைக் கட்டப்போறோம். அதுல எக்ஸ், ஒய், இஸ்ட் மூணு ப்ளாக்குகள் மட்டும் ஹைஃபை ரேஞ்சில் இருக்கும். விலை ஒண்ணேகால் கோடி. எக்ஸ் ப்ளாக்குகளில் மும்முரமா வேலைகள் நடந்துட்டிருக்கு. அந்த ப்ளாக்ல வேணும்ன்னா ஒரு ஃப்ளாட்டை வேகமா கட்டி முடிச்சு ஒரு ஆறு மாசத்துக்குள்ளே கொடுத்துடலாம். ஆனா லேபர்ஸ் நிறைய பேரைப் போட்டு வேலை வாங்க வேண்டியிருக்கும்.... ரேட் கூடும் "

" ரேட் என்ன சொன்னீங்க.....? "

" ஒண்ணேகால் கோடி "

" ரெண்டு கோடி தர்றோம்... அந்த ஃப்ளாட்டை நீங்க சொன்னபடி ஆறு மாசத்துக்குள்ளே முடிச்சு கொடுத்துடணும் "

" கண்டிப்பா.... ஆனா இதுல இருக்கிற இன்னொரு மைனஸ் விஷயத்தையும் சொல்லிடறேன் "

" என்ன.....? "

" நாங்க கட்டப்போகிற இருபத்தியாறு ப்ளாக்குகளில் இந்த எக்ஸ், ஒய், இஸ்ட் ப்ளாக்குகள் மட்டும் கொஞ்சம் தள்ளி ரிமோட்டட இருக்கும். அப்புறம் மெயின்டனஸ் சார்ஜ் மாசத்துக்கு பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் போகலாம் "

" இதெல்லாம் ஒரு பிரச்சினையில்லை.... அடுத்த ஆறு மாசத்துக்குள்ளே எங்களுக்கு ஃப்ளாட் வேணும் அவ்வளவுதான். அட்வான்ஸ் எவ்வளவு "பே" பண்ணனும்ன்னு சொல்லுங்க உடனே பண்ணிடலாம் "

" அட்வான்ஸ் எவ்வளவுன்னு நான் என்னோட மத்த ரெண்டு பார்ட்னர்ஸ்கிட்டே கலந்து பேசி முடிவு பண்ணிட்டு சொல்றேன்... இப்ப இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டோட ப்ளூ பிரிண்ட் மேப்பைப் பாருங்க.... இதுதான் எக்ஸ் ப்ளாக். உங்களுக்கு அலாட் செய்யப்பட்ட ஃபளாட்டோட நெம்பர் 144. இது ஆறு மாசத்துக்குள் ரெடியாயிடும் "

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 , 61 , 62 , 63 , 64 , 65 , 66 ]

English summary
Flat number 144 adhira apartment episode 67 by Rajesh Kumar novelist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X