• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெட்ட வெளிச்சத்துக்கு வந்த குற்றங்கள்! ப்ளாட் நெம்பர்–144 அதிரா அப்பார்ட்மெண்ட் இறுதி அத்தியாயம்(69)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சந்திரசூடன் திருமூர்த்தியை ஒரு கேலிப்புன்னகையோடு பார்த்துக்கொண்டே சொன்னார்.

" மொதல்ல அது யார்ன்னு நீ சொல்லு... அதை நம்பறதா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணிக்கறேன் "

திருமூர்த்தி ஐந்து விநாடிகள் மெளனம் காத்துவிட்டு தயக்கமான குரலில் முனகினர்.

" அவர் வேறு யாருமில்லை ஸார்.... கோபிகாவோட கணவர் தனசேகர்தான்

" த..த...தனசேகரா.....? "

" ஆமா ஸார்.. "

" நீ என்ன சொல்றே.... ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டு செத்துப்போன ஆறுபேர்கள்ல தனசேகரும் ஒருத்தர். அவர் எப்படி கொலையாளியாய் இருக்க முடியும்.....? "

" ஸார்.... 144ம் ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்த தங்கியிருந்த நடிகை சொர்ணரேகா, தர்ஷினி, நம்பின்னை, வான்மதி, அன்வர் அலி இந்த அஞ்சு பேரையும், ரொம்பவும் புத்திசாலித்தனமான முறையில் ஜெல்பால் ப்ளாஸ்டர் என்கிற ஒரு ரசாயனப் பொருளை பயன்படுத்தி தீர்த்துக்கட்டினது தனசேகர்தான். நம்பறதுக்கு கஷ்டமாய் இருந்தாலும் அதுதான் உண்மை "

Flat number 144 adhira apartment episode 60 - Final

" கோபிகாவோட கணவர் தனசேகர் இந்த அஞ்சு பேரோட கொலைகளில் எப்படி சம்பந்தப்படறார்...
எதுக்காக அவர் இந்தக் கொலைகளைச் செய்யணும்..? "

" ஸார்.... தனசேகர் எம்.ஏ. எல்.எல்.பி. படிச்ச ஒரு திறமையான வக்கீல். என் பார்ட்னர் அருளானந்தத்தோட ஃப்ரண்ட்டும் கூட. அருளானந்தம் பண்ணின எத்தனையோ நில மோசடி வழக்குகளிலிருந்து தனசேகர் தன்னோட திறமையான வாதத் திறமையால் அவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாத்தியிருக்கார். தனக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சரி, அதை தனசேகர்கிட்டே சொல்லி தீர்வு காணக் கூடியவர் அருளானந்தம். 144ம் நெம்பர் ஃப்ளாட் விவகாரத்தையும் தனசேகர்கிட்டே கொண்டு போயிருக்கார். இந்த விஷயம் எனக்கும், நாகண்ணாவுக்கும் தெரிஞ்சதும், அருளானந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு கண்டிச்சோம். அவர் எங்களை சமாதானப்படுத்தினார். அவர் சொன்ன ஒரு விஷயம். எங்க மனசுக்கு சரின்னு பட்டதால நாங்களும் ஒத்துக்கிட்டோம் "

" அப்படி அவர் என்ன சொன்னார்..? "

" தனசேகர் ஒரு கிரிமினல் லாயர். அவர் இந்த 144ம் நெம்பர் ஃப்ளாட் விவகாரத்தைப் புத்திசாலித்தனமாய் டீல் பண்ணி புனேவில் இருக்கிற ஃப்ளாட் ஒனர் கன்ஷிராமை எப்படியும் ஃப்ளாட்டை விற்கும்படியான ஒரு மனோநிலைக்கு கொண்டு வந்துடுவார்ன்னு சொன்னார் "

" சரி.... ஜெல்பால் ப்ளாஸ்டர் ரசாயனத்தை உபயோகப்படுத்தி ஒரு நபரை கொலை செய்ய முடியும்ங்கிற யோசனையை முதல் முதல்ல சொன்னது யாரு..? "

" அருளானந்தம்தான். அவர் இந்த ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு வர்றதுக்கு முந்தி ஸ்ரீலங்காவில் ஆடு மாடுகளை ஸ்லாட்டரிங்க் பண்ணி இறைச்சியை பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு சப்ளை பண்ணிட்டிருந்தார். அதுக்கப்புறம் அந்தத் தொழிவ் பிடிக்காமே அதுவரையிலும் சம்பாதிச்ச பணத்தை எடுத்துகிட்டு சென்னைக்கு வந்து ரியல் எஸ்டேட் பிசினஸுக்குள்ளே நுழைஞ்சார். அந்த பிசினஸில் ஏற்கனவே இருந்த நானும், ராவணனும் பழக்கமானோம். அதிரா கன்ஸ்ட்ரக்சனை ஆரம்பிச்சோம். 144 நெம்பர் ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்து தங்கறவங்களை அது கொலைன்னு தெரியாத அளவுக்கு தீர்த்துக்கட்டறது எப்படின்னு யோசனை பண்ணின போது ஸ்லாட்டரிங்கில் ஆடு மாடுகளை கொல்றதுக்காக உபயோகப்படுத்தக்கூடிய ஜெல்பால் ப்ளாஸ்டரைப் பத்தி அருளானந்தம் சொன்னார். மனிதர்களுக்கு இந்த ரசாயன மருந்தை ஒரு ஆம்பியூல் அளவுக்கு அவங்க உடம்புக்குள்ளே இஞ்செக்ட் பண்ணினா போதும், அடுத்த 24 மணி நேரத்துக்குள் ரத்தம் அடர்த்தியாகி கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்கிற நிலைமை உருவாகி மரணம் ஏற்படும்ன்னும் சொன்னார் "

" கொலை செய்யப்பட்ட அஞ்சு பேர்க்கும் அந்த இஞ்செக்சனைப் போட்டது யாரு..? "

" தனசேகர் "

" அவங்களுக்கே தெரியாமே தனசேகரால எப்படி ஊசி போட முடிஞ்சுது..? "

திருமூர்த்தி சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு அந்தக் கேள்வியைக் கேட்டார்.

" மைக்ரோ பின் "இஞ்செக்சன் கன்" என்கிற பேர்ல நம்ம உள்ளங்கை அளவே இருக்கக்கூடிய துப்பாக்கியைபத்தி நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா ஸார் ..? "

" இல்லை.... "

" அப்படியொரு மினி துப்பாக்கியை தனசேகர் வெச்சிருந்தார். அதைப் பார்த்தா துப்பாக்கின்னு சொல்ல முடியாது. ஒரு ஸ்பிரேயர் மாதிரிதான் இருக்கும். அதில் ஜெல்பால் ப்ளாஸ்டர் ரசாயனத்தை நிரப்பி ஒரு பயோ பிளாஸ்டிக் ஊசி வழியாய், கொலை செய்யப்பட வேண்டிய நபரோட பின் கழுத்தில் போய், பாயும்படியா ட்ரிக்கரை அழுத்தினா போதும். அந்த அரையங்குல நீளமுள்ள பிளாஸ்டிக் ஊசி கழுத்துச் சதையில் புதைந்து அடுத்த சில விநாடிகளில் கரைந்து, உடம்பு முழுவதும் பரவும். கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தத்தோட அடர்த்தியை அதிகப்படுத்தி, கார்டியோ வேஸ்குலார் அரஸ்ட் என்கிற உடல்ரீதியான பிரச்சினையை உருவாக்கி எதிர்பாராத ஒரு விநாடியில் அந்த நபர்க்கு மரணத்தை ஏற்படுத்தும்"

" அந்த "மைக்ரோ பின் பிளாஸ்டிக் இஞ்செக்சன்" ஊசி கழுத்தில் பாயும்போது வலி இருக்குமே..? "

" துளி கூட வலியை ஏற்படுத்தாத ஒரு பெய்ன்லஸ் இன்ஸ்ட்ரூமெண்ட் ஸார் அது. கேப்ஸ்யூல் மாத்திரைகளின் மேல் இருக்கிற பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட ஊசி என்பதால் கழுத்துச் சதைக்குள் பாய்ந்ததுமே வலியில்லாமல் கரைய ஆரம்பிச்சுடும். தனசேகர் அந்த அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற எல்லார் கூடவும் ஜோவியலா பேசிப் பழகக்கூடியவர். சட்ட ரீதியான பிரச்சினைகள் யார்க்காவது ஏற்பட்டால் வலிய போய் இலவச சட்ட ஆலோசனைகளை தரக்கூடியவர். அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை இருந்ததின் காரணமாகவே அவரால அந்த ஜெல்பால் ப்ளாஸ்டர் ரசயானத்தை மைக்ரோ பின் இஞ்செக்சன் கன் மூலமாக ரொம்பவும் சுலபமாய் அந்த நான்கு பெண்கள் மேலேயும், அன்வர் அலி மேலேயும் உபயோகிக்க முடிஞ்சுது"

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மெளனமாய் இருந்த ராவ்டே பிந்தர் திருமூர்த்தியை பெருமூச்சோடு ஏறிட்டார்.

" தனசேகர் அந்த அஞ்சுபேரையும் நீ சொன்ன அந்த இஞ்செக்சன் மூலம் தீர்த்துக்கட்டினார் சரி. அவரை தீர்த்துக்கட்டினது யாரு..? "

" அருளானந்தம்..... "

" என்ன காரணம் ..? "

" ஒரு நாள் தனசேகர், நான், அருளானந்தம், நாகண்ணா நாலுபேரும் உட்கார்ந்து லிக்கர் சாப்பிட்டுக்கிட்டே பேசிட்டு இருக்கும்போது திடீர்ன்னு தனசேகர் போதையில் தன்னையும் அறியாமே, தன்னோட மனசுக்குள்ளேயிருந்த ஒரு விஷயத்தை வெளிப்படுத்திவிட்டார். அதைக் கேட்ட எங்க மூணு பேர்க்கும் பெரிய அதிர்ச்சி "

" தனசேகர் அப்படி என்ன சொன்னார் ..? "

" 144 நெம்பர் ஃப்ளாட் விவகாரத்துல நான் ஒருத்தன்தான் ரிஸ்க் எடுத்து புத்திசாலித்தனமா எல்லா வேலைகளையும் பண்ணிட்டிருக்கேன். நீங்க மூணு பேரும் தள்ளி நின்னு வசதியா வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க... அதனால ஃப்ளாட் மூலமா நமக்கு கிடைக்கப் போற தங்கச் செங்கற்கள் விஷயத்துல நாம புதுசா ஒரு அக்ரிமெண்ட்டைப் போடணும்ன்னு சொன்னார். அதாவது அவர்க்கு 40 பர்சென்ட்டும், எங்க மூணு பேர்க்கும் தலா 20 பர்சென்ட்தான் தரமுடியும்ன்னு சொல்லிட்டார். அதற்கு அடுத்த நாளே அருளானந்தம் என்னையும், நாகண்ணாவையும் தனியாய் வந்து பார்த்தார். தங்கச் செங்கற்களில் 40 பர்சென்ட் பங்கு கேட்ட தனசேகர் நாளைக்கு 50 பர்சென்ட் கேட்டாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை. இனிமே அவர் நமக்குத் தேவையில்லை... அந்த ஃப்ளாட்ல இருந்த அஞ்சு பேரும் எப்படி செத்தாங்களோ அது மாதிரிதான் அவரும் சாகப் போறார். இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே அவர் உபயோகப்படுத்தின அதே மைக்ரோ பின் இஞ்செக்சன் கன்னை வெச்சு அவர் வாங்கற மூச்சுக்காத்துக்கு முற்றுப்புள்ளி வெக்கப்போறேன்னு சொன்னார். சொன்னபடியே செஞ்சும் காட்டினார்"

" ஸோ..... ஆறாவது கொலையும் அதிரா அப்பார்ட்மெண்ட்டில இப்படித்தான் நடந்தது..? "

" ஆமா ஸார் "

" ஆயுதத்தை கையில் எடுத்தவன் ஆயுதத்தாலதான் சாவான்னு சொல்லுவாங்க. அதுதான் நடந்திருக்கு. சரி, இப்போ ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அருளானந்தம் தனசேகரைப் போட்டுத்தள்ளினார். நீ அவரோட கதையை முடிச்சே. இந்த விவகாரத்துல சம்பந்தப்பட்ட இன்னொரு ஆள் நாகண்ணாவாவது உயிரோடு இருக்காரா... இல்லை அவரையும்.....? "

திருமூர்த்தி அவசரக்குரலில் குறுக்கிட்டார். " அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கார். அருளானந்தத்தை தீர்த்துக்கட்ற விஷயத்தில் நான் ரொம்பவுமே தயங்கிட்டிருந்தேன். ஆனா அவர் தனசேகரை முடிச்ச மாதிரி என்னையும் முடிச்சிடுவாரோன்னு பயந்துதான் நான் முதல்ல முந்திகிட்டேன் "

" அருளானந்தத்தை எங்கே வெச்சு எப்படி முடிச்சு டிஸ்போஸ் பண்ணினே..? "

" அருளானந்தத்துக்கு குடும்பம், சொந்தபந்தம்ன்னு யாரும் கிடையாது ஸார். சாந்தோம்லதான் அவர்க்கு வீடு... அவர் ஸ்ரீலங்காவில் பிறந்து வளர்ந்ததுனால அடிக்கடி அங்கே போயிடுவார். ஸ்லாட்டரிங் தொழிலைப் பார்த்துகிட்டு மாசக்கணக்கில் அங்கே தங்கியிருப்பார். திடீர்ன்னு சென்னைக்கு புறப்பட்டு வந்து என்னைப் பார்த்து, 144 நெம்பர் ஃப்ளாட்டோட நிலவரம் இப்போ எப்படியிருக்குன்னு கேட்பார். புனேவில் இருக்கிற கன்ஷிராம் ஃப்ளாட்டை விக்கிற முடிவுக்கு வந்தா, தனக்குத்தான் முதல் தகவல் கொடுக்கணும்ன்னு மிரட்டலா சொல்லிட்டுப் போவார். போன ஆறுமாசத்துக்கு முன்னாடி சென்னை வந்தப்ப கிராமத்துல இருக்கிற என்னோட வீட்டுக்கு வந்தார். அந்த சமயத்துல என் வீட்ல யாருமில்லை. வெளியூர்ல ஒரு கல்யாணத்தில் கலந்துக்க எல்லாரும் கிளம்பிப்போயிருந்தாங்க. அருளானந்தத்தை தீர்த்துக்கட்ட இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு நினைச்சு இளநீர் சாப்பிடலாம்ன்னு சொல்லி பக்கத்திலிருந்த என்னோட தென்னந்தோப்புக்கு கூட்டிட்டு போனேன். அருளானந்தத்தோட மனசு சந்தோஷப்படற மாதிரி பேசிகிட்டே இளநீர் சீவி கொடுத்தேன். அவர் தலையை அண்ணாந்து இளநீரை குடிச்சிட்டிருக்கும்போது கையிலிருந்த அரிவாளால கழுத்துல ஒரு போடு போட்டேன். நாலாபுறம் ரத்தத்தை தெளிச்சுகிட்டே மல்லாந்து விழுந்து, அஞ்சு நிமிஷம் துடிச்சார். அவ்வளவுதான் உடம்பைத் தூக்கி தோப்புல இருந்த உபயோகப்படாத ஒரு சின்ன பாழுங்கிணத்துல வீசிட்டு அதே கையோடு சொந்த உபயோகத்துக்காக வெச்சிருந்த பொக்லைனை நானே ஒட்டி மண்ணை அள்ளிப்போட்டு அந்தக் கிணத்தையே மூடிட்டேன். அருளானந்தத்தை பத்தி கவலைப்படறவங்க யாரும் இல்லாத காரணத்தால அவரைக் காணோம்ங்கிற புகார் போலீஸூக்கு போகவேயில்லை. ஆனா நீங்க என்னை..? " என்று சொல்லி திருமூர்த்தி குரலை இழுக்க.

" எப்படி மோப்பம் பிடிச்சோம்ன்னு கேட்கறியா..? " என்று சொல்லி புன்னகை புரிந்த சந்திரசூடன் ராவ்டே பிந்தரிடம் திரும்பினார்.

" ராவ்டே அதை நீங்களே உங்க வாயால திருமூர்த்திக்கு சொல்லுங்க "

" யூ ஆர் கரெக்ட் ஸார்.... நான் சொன்னாத்தான் இவனுக்குப் புரியும் " என்று சொல்லி சிரித்த ராவ்டே பிந்தர் திருமூர்த்தியை ஏறிட்டபடி கேட்டார்.

" நாலைஞ்சு நாளைக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும் எங்கே சந்திச்சோம்ன்னு உனக்கு ஞாபகம் இருக்கா..? "

" இ...இ...இருக்கு ஸார் "

" எங்கே..? "

" போரூர் ராமச்சந்திரா ஹாஸ்பிடல்ல எதிர்பாராதவிதமாய் சந்திச்சுகிட்டோம்"

" எதிர்பாராதவிதமான்னு சொல்றது தப்பு. நான் என்னோட மகள் பத்மஜாவை பிரசவத்துக்காக அந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு மெட்டர்னிட்டி டாக்டரைப் பார்த்து கன்சல்ட் பண்றதுக்காக ஒ.பி.வார்டுல காத்திட்டிருந்தேன். அந்த சமயத்துல நீ இன்பேஷண்ட் வார்டுக்குப் பக்கத்துல வந்துட்டிருந்தே. நானும் உன்னைப் பார்த்தேன். நீயும் என்னைப் பார்த்தே. ஆனா நீ என்னைப் பார்க்காத மாதிரி நடந்து ஒரு பில்லர்க்குப் பின்னாடி போய் மறைவா நின்னுகிட்டே ஒரு நிமிஷம் வரைக்கும். அந்தப் பில்லர்க்குப் பின்னாடி நின்னுட்டிருந்த நீ, நான் போயிட்டேனா இல்லை இன்னமும் அங்கேயே இருக்கேனான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக மெல்ல எட்டிப் பார்த்தே.... நான் இருக்கேன்னு தெரிஞ்சதும் உன்னோட முகத்துல தெரிஞ்ச பதட்டமும் பயமும்தான் உன்கிட்டே ஏதோ தப்பு இருக்குன்னு எனக்குள்ளே இருக்கிற அலாரம் மணியடிச்சது. நீ அந்த இடத்திலிருந்து தப்பிச்சு போயிடக் கூடாதுங்கிறதுக்காக நானே ஏதேச்சையாய் அந்தப் பக்கமாய் இருக்கிற ரெஸ்ட் ரூமூக்குப் போற மாதிரி பாவ்லா பண்ணிகிட்டே பில்லர்கிட்ட வந்தேன். நீயும் வேற வழியில்லாமே அப்பத்தான் என்னைப் பார்க்கிறமாதிரி ஆச்சர்யப்பட்டு செயற்கையாய் சந்தோஷப்பட்டே. நீ என்னத்தான் உற்சாகமாய் பேசிட்டிருந்தாலும் உன் கண்ணுல ஒரு பயம் இருந்தது. அந்த சமயத்தில அதிரா அப்பார்ட்மெண்டல நடந்த மரணங்களைப்பத்தி பேசினோம். அப்படி பேசும்போது, உன்மேல எந்த ஒரு சந்தேகமும் எனக்கு வந்துடக்கூடாதுங்கிறதுக்காக போலீஸூக்கு உதவி பண்ற மாதிரி பேச ஆரம்பிச்சே.

என்கூட அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆபீஸூக்கும் வந்தே. நாங்களும் நீ பேசறதையெல்லாம் நம்பினோம். ஆனா உன்னால கொலை செய்யப்பட்ட அருளானந்தம் இன்னமும் உயிரோடு இருக்கிற மாதிரியும், அருளானந்தம்தான் அந்த ஆறு மரணங்களுக்கும் காரணம் என்கிறதை நிரூபிக்க உத்திரமேரூர் நாடகத்தை அரங்கேற்றம் பண்ண முயற்சி எடுத்ததுதான் உன்னோட ஹைலைட் தப்பு. நானும், ஏ.சி.பி.யும் நீ எவ்வளவு தூரம்தான் ஒட முடியும்ன்னு பார்க்கிறதுக்காக நீ சொல்றதையெல்லாம் நம்பிகிட்ட மாதிரி நடிச்சோம். உன்னை மதுராந்தகம் கெஸ்ட் ஹவுஸுக்கு கொண்டு வந்து தனிமைப்படுத்திட்டா.. உண்மையை பேச வெச்சுடலாம்ன்னு நினைச்சோம். நினைச்ச மாதிரியே பேச வெச்சுட்டோம். ஆனா எம் மனசுக்குள்ளே இன்னமும் ஒரே ஒரு சந்தேகம்தான் இருக்கு. அதைக் கேட்கலாமா..? "

மிரண்டு போன கண்களோடு தலையாட்டினார் திருமூர்த்தி.

" கேளுங்க ஸார்...."

" நீயும் நானும் கார்ல உத்திரமேரூர் போயிட்டிருக்கும்போது உனக்கு செல்போன் வந்துட்டேயிருந்தது. மறுமுனையில் அருளானந்தம் பேசறமாதிரி ஒருத்தன் பேசிட்டிருந்தான். அவன் யாரு..? "

" அது நாகண்ணா ஸார் " என்று திருமூர்த்தி மெலிதாய் முனகிய விநாடி.

சந்திரசூடனின் சட்டைப் பாக்கெட்டில ஒய்வெடுத்துக்கொண்டிருந்த செல்போன் வைபரேஷனில் மெலிதாய் அதிர்ந்தது.

எடுத்துப் பார்த்தார்.

மறுமுனையில் டி.ஜி.பி.ராம்பாபு.

" என்ன சந்திரசூடன்.... அந்த திருமூர்த்தியை கார்னர் பண்ணிட்டீங்களா..? "

" பண்ணிட்டோம் ஸார்.. அவனும் முரண்டு பிடிக்காமே இரண்டாம் வாய்ப்பாட்டை தப்பு இல்லாமே ஒப்புவிக்கிற மாதிரி எல்லாத்தையும் சொல்லிட்டான். கிட்டத்தட்ட அது ஒரு வாக்குமூலம் மாதிரிதான் "

" ப்ராப்பரா ரிக்கார்ட் பண்ணிகிட்டீங்களா..? "

" லேட்டஸ்ட் எம்.பி.3 மாடல் டேப்ரிக்கார்ட்ல ஒரு வார்த்தை பிசகாமே பதிவு பண்ணிட்டோம் ஸார்.. "
" தட்ஸ் குட்.... இப்ப உங்களுக்கு ரெண்டு ஹாட் நியூஸை கன்வே பண்ணப் போறேன் "

" சொல்லுங்க ஸார் "

" முதலாவது அந்த பீடோ ஃபைலிக் செக்ஸ் டூரிஸம் சம்பந்தப்பட்ட கிரிமினல் சஞ்சய்பட்டேலை தெலுங்கானா போலீஸார் கைது பண்ணிட்டாங்க. இரண்டாவது 144ம் நெம்பர் ஃப்ளாட்டை பாதுகாப்பான முறையில் இடிச்சு தங்க செங்கற்களை வெளியே எடுக்க ஹைகோர்ட் நீதிபதி உத்தரவு கொடுத்துட்டார் "
" க்ரேட் ஸார் "

" அப்புறம்... சந்திரசூடன்..? "

" சொல்லுங்க ஸார் "

" ஒரு மாசத்துக்கு முன்னாடி உங்க ஃப்ரண்ட் கங்காதரன் தன்னோட காரை காணோம்ன்னு சொல்லி உங்ககிட்ட புகார் கொடுத்தார். அந்தப் புகாரை விசாரிக்கப் போய்த்தான் இன்னிக்கு இவ்வளவு பெரிய விவகாரம் வெளியே வந்திருக்கு. இந்த அதிரா அப்பார்ட்மெண்டுக்கு பின்னாடி இருந்த அத்தனை கறுப்புச் சம்பவங்களையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வர உங்களுக்கு எத்தனையோ பேர் உதவி பண்ணியிருக்காங்க. அவங்க எல்லாரையும் ஸிஸ்ட் பண்ணி கமிஷனர் ஆபீஸூக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம் வரச்சொல்லிடுங்க. ஒரு பாராட்டு விழா நடத்தி டின்னர் கொடுத்துடுவோம் "
" நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க ஸார் " என்றார் சந்திரசூடன்.

**********

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 , 61 , 62 , 63 , 64 , 65 , 66 , 67 , 68 ]

நிறைவு

English summary
Flat number 144 adhira apartment episode 60 - Final
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X