• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ போன்ல யார் ஸார் .. ?" எதிர்பார்க்காத திருப்பம்..! ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட்(66)"

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

திருமூர்த்தியின் செல்போன் டயல்டோனை வெளியிட்டதும், ராவ்டே பிந்தர் ஒரு விநாடி நிதானித்து, ரிவால்வர்க்கு வேலை கொடுக்காமல் அந்த செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு எரிச்சலோடு " சை " என்றார்.

தாரிகா குழப்பத்தோடு அவரை ஏறிட்டாள்.

" போன்ல யார் ஸார் .. ? "

" அந்த ஏஸி சந்திரசூடன்தான்.... இப்ப எதுக்காக திருமூர்த்திக்கு அந்த ஆள் போன் பண்றார்ன்னு தெரியலையே .. ? "

" போனை அட்டெண்ட் பண்ணாமே விட்டுடுங்க ஸார் "

" போனை அட்டெண்ட் பண்ணி பேசலைன்னா ஏஸிக்கு சந்தேகம் வர வாய்ப்பிருக்கு. ஆனா போன்ல திருமூர்த்தி பேசக்கூடாது "

" அப்புறம்.. ? "

" நான் பேசறேன் " என்று சொன்னவர் திருமூர்த்தியிடம் திரும்பினார்.

Flat number 144 adhira apartment episode 66

" இதோ பார்.... ரிவால்வர் முனை இன்னும் உன்னோட காதுக்குள்ளேதான் இருக்கு. ட்ரிக்கரை அழுத்தினா போதும். உன்னோட தலை சில்லுச்சில்லாய் சிதறிடும். நான் அந்த ஏஸிகிட்ட போன்ல பேசும்போது, உன்கிட்டயிருந்து ஒரு சின்ன முனகல் சத்தம் கூட வெளியே வரக்கூடாது " ராவ்டே பிந்தர் அடிக்குரலில் திருமூர்த்தியைப் பார்த்து உறுமிவிட்டு செல்போனை ஆன் செய்தபடி காதில் வைத்தார். பேச்சில் பவ்யத்தை நிரப்பிக்கொண்டு " குட் ஆஃப்டர்நூன் ஸார் " என்றார்.

மறுமுனையில் சந்திரசூடனின் குரல் கேட்டது.

" பேசறது யாரு..... ராவ்டே பிந்தரா.. ? "

" ஆமா ஸார்

" நான் திருமூர்த்திக்குத்தானே போன் பண்ணினேன்... ? நீங்க பேசறீங்க... அவர் எங்கே.. ? "

" அவர் ஸ்பேர் பார்ட் ஒண்ணை வாங்கறதுக்காக பக்கத்துல இருக்கிற ஒரு கடைக்குப் போயிருக்கார் ஸார் "
" ஸ்பேர் பார்ட்டா அது எதுக்கு .. ? "

" ஸாரி ஸார்... நானே உங்களுக்கு போன் பண்ணி சொல்லலாம்ன்னு இருந்தேன். பரனூர்க்குப் பக்கத்துல கார் போயிட்டு இருக்கும்போது பிரேக்டவுன் ஆயிடுச்சு. நல்ல வேளையாய் பக்கத்திலேயே கார் மெக்கானிக் ஒருத்தர் இருந்தார். அவர் காரை செக் பண்ணிப் பார்த்துட்டு ஒரு ஸ்பேர் பார்ட் போயிருக்கு.... அதை மாத்தணும்ன்னு சொன்னார். திருமூர்த்தியும், மெக்கானிக்கும் அந்த ஸ்பேர் பார்ட்டை வாங்கறதுக்காக டூவீலர்ல பரனூர் போயிருக்காங்க. இப்ப கார்ல நான் மட்டும்தான் இருக்கேன். திருமூர்த்தி தன்னோட போனை கார்லயே விட்டுட்டு போயிட்டார். அதனால தான் நான் எடுத்துப் பேசிட்டிருக்கேன் ஸார்..... "
" கார் பிரேக்டவுன் ஆன விஷயத்தை உத்திரமேரூர் கோயில் வாசல்ல காத்திட்டிருக்கிற அருளானந்தத்துக்கு தகவல் கொடுத்துட்டீங்களா .. ? "

" கொடுத்துட்டோம் ஸார்... அவரும் வெயிட் பண்ணி பணம் வாங்கிட்டுப் போறதா சொல்லிட்டார் "

" சரி... உங்க செல்போனுக்கு என்னாச்சு.. நான் நாலைஞ்சு தடவை போன் பண்ணியும் நாட் ரீச்சபிள்ன்னு ரிக்கார்டட் வாய்ஸ் மட்டும் வருது "

" என்னோடது பழைய போன் ஸார்... ஒரு சில நேரங்கள்ல டவர் சரியா எடுக்காது.... "
" மொதல்ல போனை மாத்துங்க ராவ்டே. உங்க போனுக்கு டவர் கிடைக்காத காரணத்தாலதான் நான் திருமூர்த்திக்கு போன் பண்ண வேண்டியதாயிடுச்சு..... "

" ஸாரி ஸார்.... நாளைக்கே நான் புதுசா ஒரு ஆண்ட்ராய்ட் போன் வாங்கிக்கிறேன் "

" மொதல்ல அதைச் செய்யுங்க.... நீங்க ஒரு எக்ஸ் சர்வீஸ்மேன். இதையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லணுமா.. ? " சொன்ன சந்திரசூடன் மறுமுனையில் இணைப்பைத் துண்டித்துக்கொள்ள, ராவ்டேபிந்தர் கோபத்துடன் திருமூர்த்தியின் போனை ஸ்விட்ச் ஆப் செய்து, பக்கத்தில் இருந்த சோபாவில் தூக்கி எறிந்துவிட்டு தாரிகாவிடம் திரும்பினார்.

" இதோ பாரம்மா.... இனிமேலும் நாம ஒரு நிமிஷம் கூட லேட் பண்ணக்கூடாது. ஏதோ ஒரு பொய்யைச் சொல்லி தப்பிக்க நினைக்கிற இந்த திருமூர்த்தி இனிமேல் உயிரோடு இருந்தா என்ன.... இல்லாமே போனாத்தான் என்ன.... ? அந்த அருளானந்தத்தை இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே நானே தேடிக் கண்டுபிடிச்சு இங்கே கொண்டு வந்து வெச்சு நம்ம எம்.டி. முன்னாடி.... ரெண்டா வெட்டிப்போடப் போறேன். அதுக்கு முந்தி இவனை அனுப்பிடுவோம்.... " ராவ்டேபிந்தர் சொல்லிக்கொண்டே திருமூர்த்தியின் காதை ரிவால்வரால் அழுத்த, அவர் வலி தாளாமல் வீறிட்டார்.

" ஸ...ஸ...ஸார்... என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க ஸார்.... இனிமேல் நான் எதையும் உங்ககிட்டயிருந்து மறைக்க விரும்பலை. உண்மையைச் சொல்லிடறேன். ப்ளீஸ் என்னை சுட்டுடாதீங்க ஸார்.. "

" சொல்லு.... என்ன உண்மை.. ? "

திருமூர்த்தி வியர்த்த முகத்தோடு எச்சில் விழுங்கிவிட்டு ராவ்டேபிந்தரை ஏறிட்டார்.
" அதைச் சொல்றதுக்கு முந்தி எனக்கு உங்ககிட்டயிருந்து ஒரு உத்தரவாதம் வேணும் ஸார் "

வியப்பில் ராவ்டேயின் புருவங்கள் உயர்ந்தன.

" என்ன உத்தரவாதம்.. ? "

" என்னோட உயிர்க்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமே என்னை இங்கேயிருந்து அனுப்பிடணும் "

" நீ சொல்லப் போகிற விஷயம் உண்மயா பொய்யான்னு தெரியாமே உன்னை எப்படி உயிரோடு வெளியே அனுப்ப முடியும் .. ? "

" ஸார்.... நான் சொல்லப் போகிற விஷயம் கொஞ்சம் கூட பொய் கலக்காதது மட்டுமில்லை....அந்த விஷயம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கக்கூடியதும் கூட"

" என்னது சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய விஷயமா.. ? "

" ஆமா ஸார்.. என்னோட தொழில் பார்ட்னர் அருளானந்ததுக்கும் உங்களுக்கும் என்ன விரோதம்ன்னு எனக்குத் தெரியாது. அவர் உங்க கைக்கு கிடைச்சா அவரை சித்ரவதை பண்ணி கொலை செய்யணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க இல்லையா .. ? "

" ஆமா.... எங்க எம்.டி கையில அவன் துடிதுடிச்சு உயிர் விடறதைப் பார்க்கிறதுக்காகத்தான் நானும் தாரிகாவும் வெறியோடு காத்திட்டிருக்கோம் "

" அதுக்கு அவசியமே இல்லை ஸார் "

" என்ன சொல்றே நீ.. ? "

திருமூர்த்தி சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு சொன்னார்.

" இப்ப அந்த அருளானந்தம் உயிரோடு இல்ல ஸார் "

ராவ்டே பிந்தரும், தாரிகாவும் அதிர்ந்து போனவர்களாய் நிமிர்ந்தார்கள்.

" அ..அ... அருளானந்தம் உயிரோடு இல்லையா.. ? "

" ஆமா ஸார்... அவர் உயிரை விட்டு ஆறு மாசமாச்சு "

" எ...எ...எப்படி செத்தான்.. ? "

" கொலை... "

" கொ...கொ...கொலையா... பண்ணினது யாரு .. ? "

திருமூர்த்தி தலைகுனிந்தபடி " நான்தான் " என்றார் மெல்லிய குரலில்.

" நீயா... எதுக்காக அவனைக் கொன்னே.. ? "

" அருளானந்தம் என்னைக் கொல்றதுக்காக திட்டம் போட்டு காய்களை நகர்த்திகிட்டு இருந்தார்.. அந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சதுமே நான் முந்திகிட்டேன்"

" உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சினை .. ? "

" ஸார்... அருளானந்தத்துக்கும் எனக்கும் எவ்வளவோ பிரச்சினைகள். அதிரா அப்பார்ட்மெண்டைக்கட்ட ஆரம்பிச்ச நாளிலிருந்தே ரெண்டு பேர்க்கும் டெர்ம்ஸ் சரியில்லை. இன்னொரு பார்ட்னரான ராவணன்தான் எங்களை சமாதானப்படுத்தி சண்டை சச்சரவுகள் வராமே பார்த்துகிட்டார் "

திருமூர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே தாரிகாவின் இடது கையில் இடம் பிடித்து இருந்த செல்போன், மெலிதாய் டயல்டோனை வெளியிட, அழைப்பது யாரென்று போனின் டிஸ்ப்ளேயில் பார்த்துவிட்டு பதட்டத்தோடு ராவ்டே பிந்தரைப் பார்த்தாள்.

" ஸார் "

" என்ன.. ? "

" எம்.டி. லைன்ல இருக்கார் "

" ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசும்மா "

தாரிகா ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு சன்னமாக குரல் கொடுத்தாள்.

" ஸ...ஸ....ஸார்.... "

மறுமுனையில் அந்த கரகரப்பான குரல் கேட்டது.

" என்ன தாரிகா.... அந்தத் திருமூர்த்தி வாயைத் திறந்து ஏதாவது பேசினானா ..?"

" ஆமா ஸார்... இப்பத்தான் ஒரு அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னான்"

" என்ன அது .. ? "

" அந்த அருளானந்தம் உயிரோடு இல்லையாம்... ரெண்டு பேர்க்கும் ரொம்ப நாளா பகையாம். திருமூர்த்தி அவனைப் போட்டுத் தள்ளினானாம் "

" நம்பற மாதிரி இல்லையே.... திருமூர்த்தி நம்மை டைவர்ட் பண்ணப் பாக்கறான்னு நினைக்கிறேன் தாரிகா. அருளானந்தம் அசகாய சூரன். அவ்வளவு சுலபத்துல அவன் மேல கையை வைக்க முடியாது. சின்ன வயசிலிருந்தே எனக்கு அவனை தெரியும். பனிரெண்டு வயசிலேயே பக்கத்து வீட்டுக்காரன் ஏதோ கெட்ட வார்த்தை பேசிட்டான்ங்கிற காரணத்துக்காக, அவனை அரிவாளாலே வெட்டிட்டு சீர்த்திருத்தப்பள்ளிக்குப் போய் அஞ்சு வருஷம் இருந்துட்டு வந்தவன்... திருமூர்த்தி அருளானந்தத்தை உண்மையிலேயே கொலை பண்ணியிருந்தா, நான் அவனுக்கு ஒரு ஆளுயர மாலையைப் போட்டு பத்து லட்ச ரூபாயை பரிசா கொடுக்கத் தயாராய் இருக்கேன். ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த திருமூர்த்தி அந்த அயோக்கியனைக் காப்பாத்த நினைக்கிறான். அந்த காரணம் எதுவாகவோ இருந்துட்டு போகட்டும். ஆனா அருளானந்தம் எனக்கு உயிரோடு வேணும். என் கையால்தான் அவன் சாகணும்.... "

எம்.டியின் பேச்சை செல்போனில் கேட்டுக்கொண்டிருந்த திருமூர்த்தி பதட்டத்தோடு குரல் கொடுத்தார்.
" மேடம்.... போனை என் கையில குடுங்க. உங்க எம்.டி.கிட்ட நான் பேசறேன் "

தாரிகா அவர்க்குப் பதில் சொல்லாமல் மறுமுனையில் இருந்த எம்.டியிடம் பேசினாள்.

" ஸார்.... திருமூர்த்தி உங்ககிட்ட பேசணுமாம். செல்போனைத் தரட்டுமா.. ? "

" வேண்டாம். நான் இப்ப ரிசார்ட்ல என்னோட ஸ்பெஷல் சூட் ரூம்ல இருக்கேன். நீயும், ராவ்டேபிந்தரும் திருமூர்த்தியை கூட்டிகிட்டு அங்கே வந்துடுங்க.... நேர்லயே பேசிக்கலாம்.... நேரத்தைக் கடத்த வேண்டாம் "
மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட, தாரிகாவும் செல்போனை மெளனமாக்கிவிட்டு ராவ்டேபிந்தரை ஏறிட்டாள்.

" ஸார்..... திருமூர்த்தியை கூட்டிகிட்டு எம்.டி. அவரோட ஸ்பெஷல் சூட் ரூமுக்கு வரச் சொல்றார் "

" கூட்டிகிட்டு போயிடுவோம்.... அவரே நேர்ல இவனைப் பார்த்துப் பேசி உண்மையைத் தெரிஞ்சுக்கட்டும்.. அப்பத்தான் இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்" சொன்ன ராவ்டேபிந்தர் தன் கையில் வைத்து இருந்த ரிவால்வரால் திருமூர்த்தியின் பின்மண்டையை லேசாய்த் தட்டினார்.

" ம்.... எந்திரி.... எங்க எம்.டி. யாரையும் பார்த்துப்பேச உடனடியாய் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க மாட்டார். ஆனா உனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு... நீ என்னை ஏமாத்தலாம். எம்.டி.யை ஏமாத்த முடியாது. அவர் உன்னோட கண்ணைப் பார்த்தே நீ உண்மையைச் சொல்றியா பொய்யைச் சொல்றியான்னு கண்டுபிடிச்சுடுவார் "

திருமூர்த்தி வியர்வை நனைந்த முகத்தோடு எழுந்தார். " ஸ..ஸ...ஸார்... உங்ககிட்ட நான் என்ன சொன்னேனோ அதையேதான் உங்க எம்.டி. கிட்டேயும் சொல்லப் போறேன் "

" வா...வந்து சொல்லு.... அவர் நம்பறாரா இல்லையான்னு பார்ப்போம் "

திருமூர்த்தியை முன்னே நடக்கவிட்டு தாரிகாவும், ராவ்டேபிந்தரும் அறையினின்று வெளிப்பட்டு, ரிசார்ட்டின் காரிடாரில் நடந்து, முதல் மாடிக்கு வந்தார்கள். அந்த ராயல் சூட் அறைக்கு முன்பாய் நின்றார்கள்.

கதவு லேசாய் திறந்து இருந்தாலும் தாரிகா மெல்லக் கதவைத் தட்டினாள். உடனே ஒரு கரகரப்பான குரல் உள்ளேயிருந்து வெளிப்பட்டது.

" தாரிகா.... மொதல்ல நீ உள்ளே வா... ஒரு நிமிஷம் கழிச்சு ராவ்டேபிந்தரும், திருமூர்த்தியும் வரட்டும் "
தாரிகா கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள்.

அகன்ற விசாலமான அந்த அறையின் ஒரு ஒரத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் சந்திரசூடன் சாய்ந்து உட்கார்ந்தபடி செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, தாரிகா அவர்க்கு முன்பாய் போய் அட்டென்ஷனில் நின்று விறைப்போடு உத்யோகப்பூர்வமான போலீஸ் சல்யூட் ஒன்றை வைத்தாள்.

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 , 61 , 62 , 63 , 64 , 65 ]

English summary
Flat number 144 adhira apartment episode 66 by Rajesh Kumar novelist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X