• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்

By Staff
|

ஜயேந்திரர் மீதான கொலை வழக்கில் கொலையைப் பற்றி மட்டும் விசாரித்தால் போதும். தேவையில்லாமல் இதர பாலியல்குற்றச்சாட்டுகள், நிதி நிர்வாகம் பற்றியெல்லாம் காவல் துறை விசாரித்துக் கொண்டிருப்பது கொலை வழக்கின்பலவீனத்தையே காட்டுகிறது. மடத்தின் பெயரை களங்கப்படுத்துவது மட்டுமே நோக்கம் என்றாகிவிடுகிறது என்கிற ரீதியில்ஹிந்துபத்திரிகை கட்டுரைகளும் செய்திகளும் வெளியிடுகிறதே ?

Jnaniமடத்தைக் காப்பாற்றவும் ஜயேந்திரரைக் காப்பாற்றவும் அல்லது இரண்டில் ஒருவரைக் காப்பாற்றவும் முயற்சிப்பவர்களின் பல முயற்சிகளில்இத்தகைய சித்திரிப்பும் ஒன்று. மடத்தின் பாலியல் தொடர்புகளும் நிதி நிர்வாகமும் எல்லாமே கொலை வழக்குக்கு சம்பந்தமுடையவைதான்.எப்படி ? சங்கர் ராமன் என்பவரைக் கொலை செய்ய சதி செய்ததாகவும் கொலைக்கு ஏற்பாடு செய்ததாகவும் ஜயேந்திரர் மீது குற்றச்சாட்டு.இப்படி செய்வதற்கு அவருக்கான நோக்கம் ( மோட்டிவ்) என்ன என்று வழக்கில் நிரூபித்தாக வேண்டும். சங்கர்ராமன் ஜயேந்திரருக்கும்மடத்துக்கும் எதிராக கடிதங்கள் எழுதி வந்தார். அதனால் ஜயேந்திரர் ஆத்திரமடைந்தார் .

ஏன் அந்தக் கடிதங்களால் அவர் ஆத்திரமடைய வேண்டும் ? அவற்றில் என்ன சொல்லப்பட்டது ? மடத்தின் பாலியல் தொடர்புகளும் நிதிஒழுங்கீனங்களும்தான் சங்கர் ராமனால் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஜயேந்திரருக்கு ஆத்திரம் வரும் அளவுக்கு ஒன்று அவைஉண்மையாக இருக்க வேண்டும். அல்லது பொய்யாக இருக்க வேண்டும். இரு காரணங்களினாலும் ஆத்திரம் வரலாம். பொய்யாகஇருந்தால் புறக்கணித்துவிட்டுக் கூடப் போய் விடலாம். உண்மையாக இருந்தால், அவற்றை மறைக்க சங்கர் ராமனை நிரந்தரமாகமெளனப்படுத்த நினைக்கலாம். எப்படிப் பார்த்தாலும் ஜயெந்திரரின் மோட்டிவை நிரூபிக்க, சங்கர் ராமன் வைத்த பாலியல், நிதிகுற்றச்சாட்டுகளை விசாரித்தால்தான் கொலை வழக்கே முழுமையடைய முடியும்.

ஜயேந்திரர் வழக்கில் தீர்ப்பு எப்படி அமையும் ?

தீர்ப்பு எப்படி அமையவேண்டும் என்ற நம் விருப்பத்தைத்தான் சொல்ல முடியுமே தவிர என்ன நடக்கும் என்று ஆரூடம் சொல்ல முடியாது.ஜயேந்திரர் முதலானவர்கள் குற்றம் செய்யும் மன நிலையுடையவர்கள்தான் என்பதை அவர்களுடைய பல முந்தைய நடவடிக்கைகள்காட்டியுள்ளன. இந்தக் குறிப்பிட்ட குற்றத்தை அவர் செய்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசுடையது. நிரூபிக்கத் தவறினால்அது பெரும் தவறாகிவிடும். வழக்கைப் பொறுத்த மட்டில் ஜயேந்திரர் ஒரு தனி மனிதராக கூலிப்படையை ஏவி பணம் கொடுப்பது உட்படஎல்லா ஏற்பாடுகளையும் தானே செய்தார் என்பது நம்ப முடியாதது. மடத்தில் வேறெவருக்கும் தெரியாமல் இதை செய்யும் சாத்தியமும்இல்லை. எனவே அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மடத்தினர் யார் யார் என்பதையும் விசாரித்து வழக்கில் குற்றவாளிகளாகவோஅப்ரூவர்களாகவோ இணைத்தால் மட்டுமே வழக்கு பலமடையும். நீதித்துறையைப் பொறுத்த மட்டில் முன்பே சொன்னது போல மடத்தின்மீது பக்தி, வெறுப்பு இரண்டும் இல்லாத ஒரு மன நிலையில் குற்றத்தை விசாரித்து நீதி வழங்கும் அணுகுமுறையே தேவை.

காஞ்சி சங்கர மடத்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பத்திரிகைகள் செயல்படுவதாக ஒருகுற்றச்சாட்டை துக்ளக் போன்ற இதழ்கள் சொல்லுவது சரியா ?

காஞ்சி மடத்தின் பெயரைக் கெடுப்பதில் அதன் மடாதிபதிகளே முனைப்பாக வேலை செய்து வந்திருக்கிறார்கள். அவர்கள் செய்தவேலைகளை அம்பலப்படுத்துவது மட்டுமே பத்திரிகைகள் செய்யும் பணி. முதலில் அது காப்பாற்றப்படவேண்டிய மடமே அல்ல.காப்பாற்ற யாரேனும் விரும்பினால் ஏன், எதற்காக என்று அவர்கள்தான் காரணம் சொல்ல வேண்டும்.

சங்கராச்சாரியின் பாலியல் குற்றச்சாட்டுகளை சரமாரியாகப் பொழியும் இந்தப் பத்திரிகைகள் பக்கத்துக்குப் பக்கம்பாலியல் உணர்வைத் தூண்டும் வக்கிரப்படங்களை வெளியிடுபவைதான். குற்றம் சாட்டப்பட்ட்வருக்கு (மீடியாவில்) அநீதிஇழைக்கப்படுவதை நீதி மன்றம் வேடிக்கை பார்க்கலாமா ? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சில உரிமைகள் உண்டல்லவா? என்று கல்கி ஆசிரியர் சொல்லுவது நியாயமாகத்தானே தெரிகிறது ?

பத்திரிகைத் துறை, டி.வி, சினிமாத்துறை எல்லாமே இங்கே வணிக நோக்குடன் வக்கிரமாக இயங்கி வருகின்றன என்பதை நாம் நீண்டகாலமாக சுட்டிக் காட்டியும் விமர்சித்தும் வருகிறோம். சாதாரண மனிதர்கள் இவற்றால் பாதிக்கப்பட்டபோது கல்கி போன்ற பத்திரிகைகள்வாயைத் திறந்தது கிடையாது. விபசார வழக்கில் பல ஏழைப் பெண்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களை அழகிகள் உல்லாசம் என்றுவர்ணித்தபோது, கல்கி அத்தகைய பெண்கள் சார்பாக ஒன்றும் எழுதியதில்லை. மறுபடியும் சொல்கிறேன். பொடாவில் கைதாகி இரண்டுஆண்டுகளாக சிறையில் இருக்கும் நக்சல்பாரி பெண் கைதிகளைப் பற்றி எந்த அக்கறையாவது காட்டியது உண்டா ? அவ்வளவு ஏன்,செரினா, ஜெயலட்சுமி போன்று அரசியல் கொள்கை ஏதுமற்ற பெண்கள் பற்றிய வழக்குகளின் போது கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களின்உரிமைகள் பற்றி எழுதியது உண்டா ?

Jayendrarவீரப்பன் வேட்டை என்ற பெயரில் பத்தாண்டுகள் சிறையில் வைக்கப்பட்டு அதன் பின்னர் குற்றம் செய்யாதவர்கள் என்று விடுவிக்கப்பட்டசத்தியமங்கல காட்டு பழங்குடியினர் 100 பேரின் உரிமைகள் பற்றி கல்கி எழுதியிருக்கிறதா ? அதிரடிப்படையினரால்பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்காமல் இருப்பது பற்றி கவலைப்பட்டதுண்டா ? ஜயேந்திரர் விஷயத்தில் மட்டும்திடீரென இந்த இயற்கை நீதி, குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை பற்றியெல்லாம் ஞானம் பிறந்தது எதனால் ? இப்போது மீடியா வாயையார் மூடுவது என்று கவலைப்படுபவர்கள் முன்பெல்லாம் திறக்க வேண்டிய நேரத்தில் மூடிக் கொண்டிருந்தது ஏன் என்றுதான் நாம்கேட்கிறோம். அதே போல திறக்க வேண்டிய இந்தத் தருணத்தில் ஏன் மூடச் சொல்லுகிறீர்கள் என்றும் கேட்கிறோம். சங்கர மடத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற ஜாதிய, வர்க்க நலன் ஆசைதானே ? தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேசப் பிரச்சினையில் காந்தியை எதிர்த்தசங்கராச்சாரியை கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் கல்கியின் பாரம்பரியம் இதுதானா ?

ஜயேந்திரர் வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி பிரேம்குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மனித உரிமைஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள். இப்போது அவற்றை பி.ஜே,பி குருமூர்த்தி போன்றோரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.இப்படிப்பட்ட அதிகாரிகள் ஜயேந்திரர் மீது சொல்லும் குற்றச்சாட்டுகளை எப்படி நம்புவது ?

பிரேம்குமாரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படும் நல்ல காமன் என்பவரே மதுரையில் இது பற்றி நிருபர்களிடம்விளக்கியிருக்கிறார். ஜயேந்திரரைக் காப்பாற்றுவதற்காக என் பிரச்சினையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பிரேம்குமார் போன்ற அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல் குற்றங்கள் இருந்தால் அவை தனியே விசாரிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டுமே தவிர, அதன் அடிப்படையில் ஜயேந்திரரைக் காப்பாற்ற முடியாது. பொது வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் அரசியலுக்குப்பொருந்துவது அதிகாரிகளுக்கும் பொருந்தும். தி.மு.க வோ, அ.தி.மு.கவோ ஒரு பிரச்சினையில் சரியாக நடந்து கொண்டால்பாராட்டுகிறோம். வேறொன்றில் தவறு செய்தால் அதைக் கண்டிக்கிறோம். இதனால் சரியாக செய்தது இல்லையென்றாகிவிடாது.

மனித உரிமை பற்றி இப்போது பேசும் குருமூர்த்தி, சோ போன்றவர்கள் வீரப்பன் பிரச்சினையிலோ, வாச்சாத்தி பிரச்சினையிலோ மனிதஉரிமைகள் பற்றி வாய் திறந்தது கிடையாது சாதாரண மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும்போது அவர்களெல்லாம் போலீசைஆதரித்துதான் எழுதி வந்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஜயேந்திரர் கைது விஷயம் பற்றி தங்கள் கருத்துக்களை எழுத்தாளர்கள் பகிரங்கமாகச் சொல்லவும் விவாதிக்கவும்முன்வரவேண்டும் என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிக்கை விட்டிருப்பது ஜயேந்திரருக்கு சாதகமானதா ? பாதகமானதா?

சுந்தர ராமசாமியின் அறிக்கையில் அவர் ஜயேந்திரரை கடுமையாகவே விமர்சித்திருக்கிறார். எனவே அவரை ஜயேந்திரரின் ஆதரவாளர்என்று கருத இயலாது. அதே சமயம் இது போன்ற ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடக்கும் ஒவ்வொரு தருணத்திலும் எழுத்தாளர் தன் கருத்தைவெளிப்படுத்த வேண்டும் என்று சரியாகவே சொல்லும் சுந்தர ராமசாமி ஏன் நெடுமாறன் பொடாவில் கைது செய்யப்பட்டது பற்றியோ,கலைஞர் கருணாநிதி இலக்கியவாதியா இல்லையா என்பது பற்றியோ தன் கருத்துக்களை பகிரங்கப்படுத்தவில்லை என்றும் நமக்கு சொல்லவேண்டும். காஞ்சி மடத்தை இனி ஆன்மிக மடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காலச்சுவடு தலையங்கம்எழுதியிருப்பது பற்றியும் கருத்து சொல்ல வேண்டும். இன்றைய சமூகத்தில் ஒரு மடம் எப்படி ஆன்மிக மடமாக இருக்க முடியும் என்பதுபற்றியும் ஆன்மிகம் என்பது என்ன என்பது பற்றியும் இதையொட்டி விவாதம் நடந்து சகல எழுத்தாளர்களும் அதில் பங்கேற்றால் மிகவும்நல்லது.

தீம்தரிகிட, டிசம்பர் 16--31 2004

- ஞாநி(dheemtharikida@hotmail.com)

இவரது முந்தைய படைப்பு:

1. சபாஷ் ஜெ!

2. சங்கராச்சாரி-யார்?

3. சங்கர மடத்தை ஏன் காப்பாற்ற வேண்டும்?

4. மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்

ஞாநியை ஆசிரியராகக் கொண்ட தீம்தரிகிட இப்போது மாதமிருமுறையாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள்பின்வரும் முகவரியில் முயலலாம்.

ஞானபாநு பதிப்பகம், 22, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை - 600 041. தொலைபேசி: 91-44-24512446.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X