தென் மாவட்ட ரயில்களில் இடமில்லை- ஸ்பெஷல் ரயில்கள் விட்டால்தான் உண்டு

Subscribe to Oneindia Tamil
Train
நெல்லை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து வழக்கமான ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. இனி ஸ்பெஷல் ரயில்கள் விட்டால்தான் உண்டு என்பதால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல உள்ள மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கோடை விடுமுறையை கழிக்க என்ன பிளான் போட்டாலும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் மக்களுக்கு ரயிலில் இடம் கிடைப்பது என்பது குதிரைகொம்புதான்.

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் முடிந்துவிட்டன. எஸ்எஸ்எல்சி தேர்வு வரும் 7ம் தேதியும், மெட்ரிக் வரும் 9ம் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

கடைக் கோடி மாவட்டமான நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களும் சென்னைக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான ரயில்களில் இப்போதே இடம் நிரம்பி விட்டது. நேற்று மாலை நிலவரப்படி பெரும்பாலான ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி, ஜூன் முதல் வாரம் வரை இல்லை. காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது. ஒரு சில நாட்களில் மட்டுமே இடம் உள்ளது.

சென்னையில் இருந்து குமரி செல்லும் 2633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் மே 25 வரை இடமில்லை. மே 25ல் ஆர்ஏசி உள்ளது. 2634 கன்னியாகுமரி-சென்னை ரயிலில் ஜூன் 3ம் தேதி வரை இடமில்லை. ஜூன் 2ல் ஆர்ஏசி உள்ளது. 4ம் தேதிக்கு பிறகு இருக்கை வசதி உள்ளது. 6123 சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மே 25ம் தேதி வரையும், 6124 சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூன் 2ம் தேதிவரையும் இடமில்லை. 6127 சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மே மாதத்தில் 19,25 தேதிகளில் மட்டும் இடம் உள்ளது. 6128 குருவாயூர் சென்னை ரயிலில் மே 19 தேதியில் ஆர்ஏசி நிலை. அதன்பின் காத்திருப்போர் பட்டியல்.

வழக்கமாக கோடையில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கும். இந்த கோடைக்கான சிறப்பு ரயில்கள் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...